நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் – ஜெயஸ்ரீ பாலாஜிநூல் பெயர்:சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள்
ஆசிரியர்: தா.சக்தி பகதூர்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்:205
விலை: ரூ.200

வணக்கம்,

நாவலின் முதல் அத்தியாயத்தில் முக்கிய கதாப்பாத்திரமான ஆயிஷா பல கேள்விக் கணைகளை தொடுத்து நாவலின் உயிரோட்டத்தை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து வரும் தாஜ், காதர், முஹமூதா, தாஜுன், ராணி என அனைவரையும் முறையாக அறிமுகம் செய்து வைக்கிறார் எழுத்தாளர். இவர்கள் அனைவரின் வசவுகளாலும் ரஷீத்தை பற்றிய குறிப்புகளும் கிடைத்து விடுகின்றன.

அடுத்து வந்த ஆடையூரார் நுங்குடன் சேர்த்து ஒரு அதிர்ச்சியையும் வாசகர்களுக்கு கடத்தி விடுகிறார். குழந்தை பறிபோன துக்கமும், இழப்பால் வருந்திய ஆயிஷாவின் மருமகனும் குழந்தைமை மாறாக இளங்கன்றாக ஆயிஷாவின் பேரன் சதாவும் ஆகிய கதாப்பாத்திரங்கள் துக்கம் குறையாமல் வெளிப்படுகின்றனர். இதன் மூலம் ஆயிஷாவின் மற்றொரு இழப்பும் அதை கடந்து வந்த விதமும் ஒருவித லேசான சோகத்தை தருகிறது.

நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடுவது நம்மையும் சிறுவயதிற்கு இட்டு செல்கிறது. செட்டியாரம்மா, நவநீதம் இருவரும் பிள்ளைகள் வளர்ப்பினை எதார்த்தமாக கூறுவது ,பாசம் என்ற பெயரில் நம் குழந்தைகளை கிணற்றுத் தவளைகளாய் விட்டுவிடக் கூடாது என குறைகளை லாவமாய் சுட்டிக்காட்டுதல் சிறப்பு. ஆறேழு பிள்ளைகளையும் உட்கார வைத்து கையில் சோற்றுருண்டைகளை வைத்து சாப்பிட வைப்பதும், தாஜ் சதாவை மடியில் வைத்து ஊட்டுவதும் இரண்டு விதமான தாய்மை பாங்கினை எழுத்தாளர் எடுத்து வைக்கிறார். ஆருடையார் எவ்விதம் ஆயிஷா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதும், ஆயிஷாவின் தன்னலமில்லாத குணமும் வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை. “ஊசி எடங் கொடுக்காம நூலு நுழையுமா… ” என நடக்கும் தவறுகளுக்கு நமக்கும் பங்கு உண்டு என பளீரென்று வார்த்தைகளை உடைக்கிறார் நவநீதம்.

உலகின் உச்சகட்ட வேதனை தரும் வார்த்தை “மலடி”. தன்னால் ஒரு வாரிசு தரும் வாய்ப்பில்லாத நிலையில் வேறொரு பெண்ணை தன் கணவர் மணக்க சம்மதிப்பது அதிர்ச்சியாக இருந்தாலும் ராஜத்தின் பக்கம் நின்று பார்க்கையில் சரியெனவே தோன்றியது. சிறுபிள்ளைகள் தங்கள் கனவு வாழ்க்கை நம்மிடமிருந்து துவங்குகிறது என்பதற்கு மிலிட்டரி – சதா இடையே நடக்கும் உரையாடல்கள் சிறந்த சான்று. எங்கிருந்தோ திடீரென்று நுழைந்து தொப்புளிக் கிழவி, வார்த்தை வஞ்சனையால் ராஜத்திற்கும் தாஜ்க்கும் இடையில் உள்ள சுமூக உறவை சுக்கு நாறாய் கிழித்துவிட்டு போகிறாள். இதற்கு நடுவில் தாஜ்ஜின் கம்மல் தொலைக்கப்படுவதும், தொலைந்த கம்மல் கொலுசாய் மாறுவதும். கம்மல் கொலுசாய் மாறிய கதை சதாவால் உடைக்கப்படுவதும் சுவாரஸ்யம். இரு மனைவிகள் மீதும் இணையான பாசம் வைக்கும் இரட்டை குழல் துப்பாக்கியோடு திறமைசாலி கணவராக மிலிட்டரி சைக்கிளில் வலம் வருகிறார்.

சதாவின் விருந்து உபசரிப்பு பலே. தனக்கு பிறவாத குழந்தையை ஒரு தாயை போல அரவணைத்து இலை நிரம்ப விருந்து வைப்பது, மனமும் கர்ப்பத்தை தாங்கும் என்றே உணர்த்தியது. உண்மையான அன்புடன் ராஜம் சதாவுக்கு விருந்து கொடுத்தாலும் அது தாஜ் கண்களுக்கு தவறாக தெரிகிறது. அதனை ஆயிஷா பலமாக சுட்டிக்காட்டுகிறார் “முதுகிற்கு பின்னால் பேசுவது முகத்திற்கு முன் வரும்” என்று.

பிரியாணி என்றாலே அசைவ உணவு விரும்பிகளுக்கு பசி வந்துவிடும் அதுவே பாய் வீட்டு பிரியாணி என்றால் தனிச்சிறப்பு. சதாவுக்கு சாதியை காரணமாக வைத்து பந்தியில் பிரியாணி கிடைக்காமல் போனது சற்று வருத்தமாகவே இருந்தது. இதே நிலை தான் சதா நோம்புக் கஞ்சி வாங்கச் சென்ற இடத்திலும். பல சுவாரஸ்மான பக்கங்களுக்கு பின்னால் கதாநாயகி நஜமுன்னிஷாவை காட்சிப்படுத்துகிறார் எழுத்தாளர். தாத்ரேயரை மணந்ததும் நஜமுன்னிஷா சாந்தியாக மாறுவதும் அதனால் ஏற்படுகிற சகல கஷ்டங்களையும் நன்கு விவரித்து விடுகிறார். கூர்க்காவை வீரம் மிகுந்த கதாப்பாத்திரமான சித்தரித்திருப்பது அவர்களின் மீது ஒரு மரியாதையை உண்டாக்குகிறது.

நஜமுன்னிஷாவின் இறப்பின் போது ஜமாத்து ஆட்களுக்கும் தாத்ரேயருக்கும் இடையே நடக்கும் சூடான விவாதங்கள் இருதரப்பு நியாயத்தையும் தராசு தட்டில் சமமாக வைக்கப்படுகிறது. ஒருவர் திருமணத்திற்காக மத மார்க்கம் மாறியது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்கும் என்பதை ஆயிஷாவின் இறுதி வாழ்க்கை கூறுகிறது.

வாசிக்கும் ஒவ்வொரு நாவலும் ஏதோ ஒரு தாக்கத்தை விட்டு விட்டு தான் செல்கிறது. அவ்வகையில் “சாந்தி என்கிற நஜமுன்னிஷா” ஒரு மெல்லிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எவர் எந்த மதத்தை மார்க்கத்தை பின்பற்றினாலும் மனிதத்தை மறக்க கூடாது. எந்த ஒரு மார்க்கமும் தன்னுடைய கோட்பாடுகளை ஆணித்தரமாய் வழிநடத்திச் செல்லுமே ஒழிய பிற மார்க்கத்தை பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதில்லை என்பதை உணர வேண்டும்.

நாவல் மொத்தம் 200 பக்கங்கள். வாரம் ஒரு அத்தியாயம் படித்து முடிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் நாவல் என்னை அப்படி விடவில்லை. அடுத்தடுத்த பக்கங்களை புரட்டியே ஆக வேண்டும் பல இரவுகள் தூங்கவிடாமல் துரத்திய எழுத்துக்கள், சம்பவங்கள் மற்றும் சற்றும் சலிப்புறாத கதாப்பாத்திரங்கள். தோழர் சக்தி பகதூரின் நல்லதோர் படைப்பிற்கு வாழ்த்துக்களும் அன்பும்.

நன்றி.
ஜெயஸ்ரீ பாலாஜி

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)