காமாட்சி காமாட்சி என பக்கத்து விட்டு மீனாட்சி அக்கா அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள்.

அடுப்படியில் இருந்து வெளியே வந்த காமாட்சி , “வாங்க அக்கா.  என்ன காலையிலே, ஏதாவது விசேஷமா” என்று கேட்டாள்.

“விசேஷம் தான். ஆனா,  எல்லாம்  உங்கள் வீட்டில் தான்” என்றாள் மீனாட்சி

“எனது எங்க வீட்டிலியா!” என்றாள் காமாட்சி ஆச்சரியத்தோடு.

காமாட்சி, ரஞ்சனைக் கரம் பிடித்து முப்பது வருடம் ஆகிவிட்டது.  பிள்ளைகள் என்றால் புத்தகங்கள் தான்.  திருமணமான புதிதில் குழந்தைக்கு ஏங்கி மனம் தவித்து கொண்டிருந்தது. அதுவும் ஒரு குடும்ப விழாவிற்கு சென்றுவிட்டால் போதும். சுற்றம் கேட்கும் கேள்விக்கு மௌனத்தை பதிலாக அளித்து சலித்துப் போகும்.  வருடங்கள் செல்லச் செல்லப் பழகி விட்டது.

ஒரு சிறு பெட்டிக்கடை தான் அவர்களின் வாழ்வின் ஆதாரம். அதுவும் எல்லாக் காலங்களிலும் நிலையான வருமானம் என கூற முடியாது. ஆனால் நட்பு, சொந்தங்களுக்கு அவர்கள் தங்களின் நிலையை வெளிக்காட்டிக் கொள்ளும் பழக்கமில்லை.

பட்டினியைப் பல நாட்கள் விரதம் என்ற பெயரில் இருந்து வந்தார்கள்.

ரஞ்சன் ஒரு சிறந்த படைப்பாளி ‌.  எழுதுவது அவருக்கு பிடித்த செயல். “நமக்குத் தொழில் கவிதை” என்பது  பாரதியின் கொள்கை. ரஞ்சனுக்கோ “நமக்குத் தொழில் கதைகள் படைப்பது”.

வாசிப்பு அவரின் உயிரில் கலந்துள்ளது.  பல விருதுகளுக்குச் சொந்தகாரர்.

“காமாட்சி என்ன ஆச்சு‌, எங்கே உங்க அய்யா, வெளியே போய் இருக்காரா?” என்ற‌ மீனாட்சியின் கேள்வி, காமாட்சியை நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது.

“ஆமாம் அக்கா,  கடை வரை சென்றுள்ளார்”.

“அவருக்கு  ரகித்ய அகாடமி விருது கிடைச்சு இருக்கு, காமாட்சி.

“அப்படியா, மகிழ்ச்சி!” அவளின் குரலில் ‌

“அவர் தொடர் முயற்சிக்கு நல்ல பலன் கிடைச்சு இருக்கு, காமாட்சி. எங்களுக்கு விருந்து எதுவுமில்லையா?”.

“கொடுத்துட்டாப்  போச்சி.  இங்க பாருங்க அக்கா,  இந்த அலமாரி முழுவதும் அவர் வாங்கின விருது தான்”.

மீனாட்சி எழுந்து அலமாரி திறந்து பார்த்தாள். எத்தனை விருதுகள்.வருடம் ஒன்று என‌ வரிசையாக விருதுகள் அலங்கரித்து கொண்டு இருந்தது. இதை மேலும் அலங்கரிக்க மற்றொரு விருதும் வர போகிறது.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில் ரஞ்சனும் முகத்தில் பெரும் மகிழ்ச்சியோடு உள்ளே நுழைகிறார்.

“காமாட்சி எனக்கு இந்த வருடம் ரகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.  நாள் விழா அறிவித்துள்ளார்கள். இரண்டு நாளில் மதுரை  செல்ல வேண்டும்.  வரும் போது  நமது பக்கத்து விட்டு சோமு அண்ணாவை பார்த்தேன். அவுங்க தம்பி மதுரையில் இருந்து வந்து இருக்காங்களாம். போகும் போது அவர்களோடு காரில் சேர்ந்து போகச் சொன்னார்”.

“நல்லதாப் போச்சி” என்றாள் காமாட்சி.



இவர்கள் ஊர் மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உள்ளே ஒரு குக்கிராமம், தென்னூர்.

“சரி நான் வரேன் காமாட்சி” என்ற மீனாட்சியை , “இருங்கள் சாப்பிட்டு விட்டு  போகலாம்” என்றார் ரஞ்சன்.

“பரவாயில்லை அய்யா.  விருது வாங்கி வந்தவுடன் விருந்தே சாப்பிடலாம்” என கிளம்பினாள்.

காமாட்சி  சாப்பாடு எடுத்து வை கை, கால் கழுவிட்டு வரேன் என்ற ரஞ்சனிடம், “இன்னிக்கு  நாம விரதம் மறந்துவிட்டீங்களா” என கேட்ட மனைவியை  அண்ணாந்து பார்த்தார், ரஞ்சன்.

“சரிம்மா ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து வை”  என்று கை கால் கழுவிட்டு வந்து ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு ஒரு பெருமூச்சு. ‌ ‘தண்ணீர் நம் வாழ்வில் எத்தனை முக்கிய பங்கு வகிக்கிறது.  உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது!’ என நினைத்து கொண்டே ஒரு  நல்ல தூக்கம்  போட்டார்.

இரண்டு நாள் எப்படி கடத்தது என்று தெரியவில்லை.

டிரங்கு பெட்டியில் இஸ்திரி போட்டு இருந்த ஒரே ஒரு வெள்ளை  வேட்டி சட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக முதல் நாள்  வாங்கி வைத்த ஒரு டஜன் பழங்களோடு சோமு வீட்டை அடைந்தார் ரஞ்சன்.

“வாங்க வாங்க.  தம்பி, அய்யா வந்து இருக்கிறார் பார்” என்றார் சோமு.

“வாங்க அய்யா, வணக்கம், உங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்” என்றார் ராஜேஷ், சோமுவின் தம்பி.

“வணக்கம் தம்பி. சோமு இந்தாங்க பழம். பசங்க கிட்ட கொடுங்க” என்றார்.

“இதெல்லாம் எதுக்கு அய்யா.  நம்ம வீடு தானே” என சிரித்துக் கொண்டே  பழத்தை  வாங்கி கொண்டார் சோமு.

சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி  மதுரையில் விருது அளிக்கும்  அரங்கம் அடைந்து விட்டார்கள்.  ராஜேஷ் விடை பெற்று கொள்ள ரஞ்சன் அரங்கம் உள்ளே நுழைந்தார்.

பல துறை கலைஞர்கள் அரங்கம் முழுவதும் அழகாக அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள்.

பத்திரிகை நிபுணர்கள் ஒரு புறம். ஊடகங்கள் இன்னொரு புறம் சூழ ஒரே பரபரப்பு.

எழுத்தாளர் ரஞ்சன் ‌எழுதிய வரலாற்று நாவல் ரகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.

ரஞ்சன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம்.



வரலாற்று நாவலை விமர்சித்து  ஒவ்வொரு ஆளுமைகளின் பேச்சு பலத்த கரகோஷத்தோடு சபை முழுவதும் ஒலித்தது.

ஊடக நிபுணர்  ஒருவர் கேட்டார்: “அய்யா, இந்த விருது தங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது?”.

ரஞ்சனுக்கு வார்த்தைகள் வரவில்லை. பேட்டி எல்லாம் அளித்து முடித்து அவர்கள் கொடுத்த சிறு சிற்றுண்டி  அட்டைப்பெட்டியை மனைவியோடு சேர்ந்து சாப்பிடலாம் என பையில் எடுத்து  வைத்து கொண்டார்.

ஒவ்வொரு முறையும் விருது வாங்கும் போது தன்னுடைய முதல் குழந்தையை  கையில் ஏந்தி அடையும் மகிழ்ச்சியாக மகிழ்வார். குழந்தை இன்பமும் இப்படித் தான் இருக்கோ. அறியாமல் பேருந்தை நோக்கி நடந்தார்.

விழா முடியவே இரவு மணி பத்து ஆகிவிட்டது.

பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் காத்திருக்க ஒரு சாதாரண பேருந்துகளும் வரவில்லை. இனி எவ்வளவு நேரம் காத்திருப்பது என யோசித்த நிலையில் அருகில் இருந்த டீ கடையில், “அய்யா, சாதாரண பேருத்து தென்னூர் செல்ல எத்தனை மணிக்கு  வரும்?” என கேட்டார்.

“பெரிசு,  விஷயம் தெரியாதா? சாதாரண வண்டியெல்லாம் நிறுத்திட்டாங்க. எல்லாம் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் தான், என்ன” சொல்லி கொண்டே கடையை சாத்தும் வேலையில் மும்முரமாக இருந்தார்.

சட்டைப் பையில் கையை விட்டுத் துழாவிப் பார்த்தார் ரஞ்சன்.  சிறப்பு பேருந்தில் டிக்கெட் எடுத்துப்  பயணம்  செல்லும் அளவிற்குத் தன்னிடம் இருக்கும் பணம் போதாது. பேருந்து நிலையத்தில் இருந்து விருது பையோடு பய்ய  நடக்க ஆரம்பித்தார்,  “ரகித்ய அகாடமி” விருது  பெற்ற நமது எழுத்தாளர் ரஞ்சன்.

**********


3 thoughts on “சிறுகதை: விருது – சாந்தி சரவணன்”
  1. மிக சிறப்பான கதை வடிவம் தோழர் 💐

  2. அருமையான சிறுகதை, ஒரு எழுத்தாளனுக்கு விருது எத்தனை உயர்ந்த ஊக்குவிப்பு ஆனால் பேருந்தில் பயணிக்க பணம் இல்லை என்னும் நிலை சற்றே வருத்தமான தருணம் தான்… நிதர்சனத்தை பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்…. தொடரட்டும் உங்களின் எழுத்து பணி 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *