சிறுகதை: சிங்கப் பெண்ணே – சாந்தி சரவணன்“என்  ஃபிரண்ட்டா நீ. நான் சொல்வதை கொஞ்சம் கேளுடா. உனக்கு ஒரு பிரச்சினை  என்னும் போது, எப்படி மா  நான் சும்மா இருப்பது. எனக்கு என்னமோ குழப்பமாக உள்ளது”, என்றாள் குந்தவை.  

சற்றும் சலனமில்லாமல் கேட்டு கொண்டு இருந்த யாழிசை,  ” இப்ப என்னை என்னடீ பண்ணச்  சொல்ற?”

“இல்லப்பா நீங்க காதலிக்க ஆரம்பித்து  கிட்டத்தட்ட   ஏழு வருடங்கள் கடந்துவிட்டது‌. பள்ளிக் காலத்தில் ஆரம்பித்த காதல்,  கல்லூரியில் தொடர்ந்தது.  இப்போ நாம் வேலைக்கு போக ஆரம்பித்து இரண்டு வருடம்  கடந்துவிட்டது. பணி நிமித்தமாக அமெரிக்கா சென்று இருக்கும்  இனியன்  இன்னும் ஒரு வருடம்  பணி நீடிக்கப் போகிறான்  என்று சொன்னால்,   நீ  அதற்கு எப்படி  அனுமதிப்பாய்?” என தொடர்ந்து குந்தவை  பேசிக்கொண்டு இருக்க…….. 

இனியன் என்ற பெயர் கேட்டவுடன் குந்தவை பேசியது எதுவும் யாழிசையின் காதுக்குள் செல்லவில்லை, நினைவுகள் யாழ் இசையாய்  பின்னோக்கி இசைத்தன ….

ன்னிரெண்டாம் வகுப்பு பிரிவு உபச்சார விழா. தோழர்கள் அனைவரும்  தேர்வு முடித்து  மிகவும் மகிழ்ச்சியிலும், அதே சமயம்  தோழர்களின் பிரிவு என்ற  வருத்தத்திலும் இருந்த தருணம். பக்கத்து வகுப்பு செழியன், குந்தவையின் அண்ணன்.  இருவரும் இரட்டையர்கள்,  “குந்தவை வெளியே வா”, என்றான்,  தங்கையைப் பார்த்து.

அவனோடு இனியனும் ஒருவித பரவசத்தோடு நின்றுகொண்டு இருந்தான். செழியனும், இனியனும் இணை பிரியா தோழர்கள்.

“என்னடா?” என்றாள் குந்தவை

“யாழிசையைக்  கூப்பிடு” என்றான்

இனியனைக்  கண்டவுடன் அவளால் யூகிக்க முடிந்தது.  இருந்தாலும், “எதுக்கு டா…” என்றாள்.

“அண்ணான்னு  சொல்லுனு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், போ யாழிசையைக்  கூப்பிடு” என்றான்.

“சரி, எதுக்கு அண்ணா யாழிசை” என சிரித்துக்கொண்டே கேட்ட தங்கையின் தலையில் தட்டி “கூப்பிடு   டீ” என்றவனிடம் “சரி, இரு” என வகுப்பின் உள்ளே சென்று யாழிசையை அழைத்து வந்தாள்.

யாழிசை குந்தவை பின்னே தயங்கியவாறு வந்தாள். இனியனைக் கண்டவுடன் பதற்றம் கூடியது.இனியன் ஒரு கவிதையை அழகான வண்ண காகிதத்தில் எழுதி, ஒரு ரோஜாவோடு அவன்  அன்பைக்  காதலாக யாழிசையிடம் வெளிப்படுத்திய அந்த நொடி, யாழிசைக்கு,  இனியன்  ராஜாவாகவே  தோன்றினான். வெட்கத்தில் முகம் சிவக்க அதை வாங்கிக்  கொண்டு வகுப்பிற்குள் ஓடினாள். 

அவள் பின் தொடர்ந்து வகுப்புக்குள் நுழைந்த  தோழி குந்தவையைக்   கட்டிப்  பிடித்து முத்தம் கொடுத்தாள்.

யாழிசைக்கு,   இனியனை மிகவும் பிடிக்கும். இருவரும் கண்களால் பேசிக் கொண்டதன் தொடர்ச்சிதான் இந்த இனிய நாளில் காதல் பரிமாற்றமாக உருமாறியுள்ளது.  அன்று முதல் அவர்கள் இருவரது காதல் பயணம் தோழி குந்தவை, இனியன் தோழன் செழியன்  துணையோடு இனிதாகச் சென்று கொண்டு இருந்தது.

அதன் பின் யாழிசையும் குந்தவையும் பி ஏ தமிழ் இளநிலை பட்டப்  படிப்புக்கு இராணி மேரி கலைக்  கல்லூரி சென்னையில் சேர்ந்தார்கள். விடுதி வாழ்க்கை.  மதுரையை விட சென்னை அவர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. முக்கியமாக இனியன் பி எஸ்சி  கம்ப்யூட்டர் சயன்ஸ், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜில்  சேர்ந்தது தான் காரணம். இனியன் எவ்விதமோ செழியனும் அவ்விதமே.  அதே கல்லூரி அதே துறை.   சினிமா,  கடற்கரை… தோழர்களோடும், காதலனோடும் இனிதாய் கழிந்தது நாட்கள்..  ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இரயில் பயணம். சென்னையிலிருந்து மதுரை ஏன் இவ்வளவு அருகில் உள்ளது என தோன்றும் யாழிசைக்கு. ஒவ்வொரு முறையும் இன்னும் பயணம் நீடிக்காதா, இனியனோடு  சேர்ந்து பயணிக்கும் பயணம் நெடுந்தூரம் போகாதா  என ஓவ்வொரு முறையும்  யாழிசைக்குத் தோன்றும். அவர்கள் இருவரும் பேசாத விஷயம் இல்லை. அவனோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. அப்பாவின் அன்பு அவனிடம் தெரியும்.  

நண்பர்கள் நால்வரும் சுற்றாத இடம் இல்லை. கல்லூரி கட் அடித்து விட்டு மாமல்லபுரம் செல்வது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் மாமல்லபுரம் கடற்கரையில் அமர்ந்து கொண்டு அலைகளின் ஓசையை இளையராஜாவின் பாடலோடு கேட்கும் போது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.   குந்தவையும்,  செழியனும்  அவர்களின் காதலுக்கு சங்க காலத்தில் தோழர்கள் காதலருக்கு உதவியது போலவே உடன் இருந்தார்கள்.

யாழிசையின் தந்தை தமிழ் ஆசிரியர். அவரின் தமிழ்ப் பற்றுதான் அவளை பி ஏ தமிழ் தேர்வு செய்யத் தூண்டியது. தொல்லியல் துறையில் யாழிசைக்கு ஈடுபாடு அதிகம். கல்வெட்டியல் பட்டயம் தமிழ் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தாள். அதற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியில் கோயில் கோயிலாக இனியனோடு  சுற்றியதுதான் அதிகம்.  இதே நேரத்தில் கீழடி தொல்லியல் ஆராய்ச்சி நடந்து கொண்டு இருந்தது. தமிழரின் பெருமையைச் சான்றுகளோடு அறிவிக்க நமது மதுரை அருகில் கீழடியில் கிடைக்கிறது என்பதைவிட வேறு என்ன ஆனந்தம் வேண்டும் நமக்கு ‌ கல்வெட்டியல் பட்டயம் படிப்பும் கல்லூரி படிப்போடு முடித்தாகி விட்டது.  

கல்லூரிப் படிப்பு முடித்து தோழிகள் இருவரும் லேடி விலிங்டன் கல்லூரியில் பி எட் முடித்து மதுரையில்  ஒரே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். இனியனும் செழியனும்  சென்னை  சோழிங்கநல்லூர் டிசிஎஸ் நிறுவனத்தில் பிராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் வேலை.

இனியனிடம் திருமணத்தைப்  பற்றிப்   பேச ஆரம்பிப்பாள் “இனியா, இந்த வருடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் பா. “

இனியன்,  “யாழிசை   எனக்கு ஒரு கனவு மா, வெளிநாட்டுப் பயணம் அவசியம் போக வேண்டும்.  நல்லா சம்பாதிக்க வேண்டும். வீடு கட்ட வேண்டும். அதன்பின் திருமணம் செய்து கொண்டு அந்தப் புது வீட்டில் என் யாழிசையை  அமர வைத்து அழகு பார்க்க வேண்டும்” என்றான்.

யாழிசைக்கு அவன் சொல்லும் அழகே அவள் அந்த வீட்டில் அமர்ந்து இருப்பது போல் தோன்றும். அதுவும் இல்லாமல் தனது காதல் அவன் கனவைக்  கலைத்து  விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

அவன் கனவு கண்டபடி அவனுக்கு அவன் அலுவலகத்தில்  பணி நிமித்தமாக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. யாழிசைக்கு  மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் பிரிவை எண்ணி வருத்தமாக இருந்தாள். ஆனால்  அது இனியனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாள்.இதற்கு ‌இடையில் யாழிசை  வீட்டில் சொந்தங்கள் தொல்லை அதிகமாகத் துளிர்விட்டது. ஒரே ஒரு பெண். வயதும் ஆகிக்  கொண்டு இருக்கிறது. ‘ஏன் அண்ணா, இன்னும் யாழிசைக்கு  திருமண ஏற்பாட்டை செய்ய மாட்டேன் என்கிறாய்?’ என்று மாதத்திற்கு ஒரு முறை அத்தை வெண்மதி அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்து விடுவாள்.  அத்தைக்கு யாழிசையைத் தன் மகனுக்கு மணம் முடிக்க விருப்பம். ஆனால் அப்பா சொந்தத்தில் கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதுவும் இல்லாமல் இவர்கள் காதலும் அப்பாவிற்கு அரசல் புரசலாகத் தெரியும். அதுவும் இனியன் நம்ம ஊர்க்காரப் பையன். நல்ல படிப்பு, நல்ல வேலை என்பதால் யாழிசையை அப்பா கண்டிக்கவில்லை.

இனியன் நாள் தவறாமல் யாழிசையோடு பேசுவான்.  அவளுக்குப் பிடித்த பொருட்கள் இனியனிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்.  இதற்கிடையில் மதுரையில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி பத்திரப் பதிவும் முடித்து, வீடு கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. யாழிசையின்  விருப்பம் போல் அந்த வீட்டின் வாசல் முதல் முற்றம் வரை அமையும் படி பார்த்துக் கொண்டான். யாழிசைக்கு அதில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருவரும்  இணைந்து இருப்பது போலவே அவளுக்கு தோன்றும்

இரண்டு வருடங்கள் நகர்ந்துவிட்டது…. மார்ச் 2020 திட்டமிட்டபடி இனியனும், செழியனும் மதுரை வரவேண்டியது   உலகமே எதிர்பாராத ‌கொரோனா‌ பேரிடரால் அந்தப் பயணம் ரத்து ஆனது.. 

இந்த ஒரு வருடம் உலகத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் புரட்டிப் போட்டது இயற்கை பேரிடர். ஊடகங்கள் அச்சுறுத்தல் ஒருபுறம், வாழ்வாதாரம் பாதிப்பு, பட்டினி சாவு ….. எல்லாவற்றையும் கடந்து வந்தவர்கள் மன உறுதியான நபர்களே.

இந்த வருடம் மார்ச் மாதம் வர வேண்டியவன் இன்னும் ஒரு வருடம் நீடிக்கும் என்ற செய்தி தான் குந்தவையின் பரிவிப்புக்குக் காரணம்.

குந்தவை திருமணம்  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று நடந்தது.   தேன்நிலவு, சுற்றத்தார் விருந்து என  எல்லாம்  முடித்துவிட்டு இன்றுதான் பள்ளிக்கு  வந்து இருக்கிறாள். தமையன் செழியன் கலந்து கொள்ள முடியாதது வருத்தமே. ஆனால் இயற்கை நமக்கு ஒரு சக்தி அளித்து இருக்கிறது. தகவமைத்துக் கொள்ளுதல்.  அதை இந்த மனித இனம் பின்பற்றிக் கொண்டது.

ஒரு வருட காலம் முடங்கிக் கிடந்து போனாலும் முடங்கிப் போன பல உறவுகள் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்பது நிதர்சனம்.

குந்தவைக்கு காலையில் இருந்து யாழிசையோடு  தனியாக பேச நேரம் அமையவில்லை. வழக்கம் போல பள்ளி முடிந்தவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முடித்து புளியோதரை சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.  பேச ஆரம்பித்தவுடன்  இதே புராணம் தான். இனியனிடம் கேள். எப்போது திருமணம் என்று.  இந்த மார்ச் மாதம் செழியனோடு இனியனும் வருவதாக தான் அவர்களின் திட்டம். 

ஆனால் அலுவகத்தில் ஏதோ பணி நிமித்தமாக இனியன் இந்த வருடம் வரவில்லை, ஒரு ஆண்டு கழித்து வருவதாக சொன்னதால் தான் இப்போது பிரச்சினை.

செழியன் இன்று மாலை வந்துவிடுவான் இருவரும் ஒரே அலுவலகம் தானே! நீ கட்டாயப் படுத்தி இருந்தால் நிச்சயமாக அவன் வந்து இருப்பான். ஏன் மற்றோரு வருட நீடிப்புக்கு  நீ ஓத்துக் கொண்டாய் என்பதுதான் அவள் பரிதவிப்புக்கு காரணம்.

“என்னடீ நான் பேசி கொண்டே இருக்கிறேன் இப்படி கல்லு மாதிரி  உட்கார்ந்து இருக்கியே” என்றவுடன் நினைவுக்குத் திரும்பினாள் யாழிசை. 

“குந்தவை, அவனோடு நான் பேசியே ஒரு வருடம் ஆகிறது.  உனக்கே நன்றாகத் தெரியும்.   போன ஏப்ரல் மாதம் முதல் அவன் வெறும் மெஸேஞ் மட்டுமே அனுப்புகிறான்.  எப்போதாவது பேசினால் அவன் குரல் மாதிரியே தெரியவில்லை. செழியனின் குரல் நன்றாக கேட்கிறது.  ஏதோ சூழலியல் சரியில்லாததால் குரலில் சில‌ மாற்றம் ‌என்று சொல்கிறான்”.“அதற்கு இல்லம்மா, இன்னும் எத்தனை நாள் அப்பா அம்மாவிடம் திருமணத்தைத் தள்ளிப் போட முடியும்.  இன்று எது ஒன்றும் பேசுடீ” என்றாள்.

கலங்கி நிற்கும் தோழியைப் பார்த்து, “குந்தவை,  நான் இனியன் மேல் வைத்து உள்ள காதல் அவன் என் மேல் வைத்துள்ள காதல் ஆழமானது. எத்தனை வருடம் கழித்து வந்தாலும் அவன் என்னை விட்டு வேறு ஒரு பெண்ணை மனதால் கூட நினைக்க மாட்டான்.   கவலைப்படாதே டா” என்று சொன்னாள்.

“நீ  எதற்கும் எனக்கு ஒரு உதவி செய் குந்தவை” என்ற யாழிசையை நிமிர்ந்து பார்த்தாள் குந்தவை.

“சொல்லு மா”

“செழியன்  வந்தவுடன் முதலில் எனக்காக அவனிடம் இனியனைப்  பற்றி விசாரி.   அதை மறைக்காமல் என்னிடம் சொல்” என்றாள்.

“ஆகட்டும் பா”.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஏனோ யாழிசைக்கு  மாலை நேரம்  மிகவும் மெதுவாகக் கழிந்தது.  

அலைபேசியை எதிர்பார்த்துக் காத்து இருந்தாள் யாழிசை.

அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியம் செழியன், குந்தவை இருவரின் வருகை.

ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் பதட்டம்…

“வாங்கண்ணே … எப்படி இருக்கீங்க”.

“அப்பா, செழியன் அண்ணா குந்தவை வந்து இருக்காங்க..” என்று உள்ளே குரல் கொடுத்தாள்.

அப்பா அம்மா அவர்களை உபசரிக்க ..

கண்களில் ஏக்கத்துடன் நிற்கும் யாழிசையை நிமிர்ந்து பார்க்க செழியனுக்கு திராணியில்லை.

மெதுவாக யாழிசை, “அண்ணா, இனியன் எப்படி இருக்கிறார்?” என கேட்டதுதான் தாமதம், உடைந்து அழுது விட்டான்.

இனியன் போன ஏப்ரல் மாதமே பயணம் ஏற்பாடு செய்து வருவதாக இருந்தான்.  

ஆனால் பயண ஏற்பாடுகளில் பல விதிமுறைகள் தடைகள் இருந்ததால் அவன்   ஆகாய மார்க்கமாக வர முடியாததால் கடல் பயணமாக வர திட்டமிட்டு கிளம்பினான். ஆனால் கொரோனா அனைவரையும் விழி பிதுங்க வைத்து விட்டது. அவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டானா இல்லை  பயணப் பட்டானா என எந்த ஒரு தகவலையும் என்னால் அறிய முடியவில்லை. ஒரு வருடமாக நான் முயற்சி செய்யாத வழியில்லை.  அரசும் பல நபர்கள் காணவில்லை என‌ தேடிக் கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது தகவல் கிடைத்திடும் என நான்தான் அவனைப் போல் பேச முயற்சி செய்து உன்னிடம் ‌தோற்றுப் போய் மெஸேஜ் அனுப்பி வைத்தேன்.

“என்னை மன்னித்துவிடு ” என்று சொல்லி அழும் செழியனின் வாய்மொழியைக் கேட்டுக்கொண்டு இருந்த யாழிசைக்கு இரண்டு காதும் அடைத்து விட்டது.

ஒரு வினாடி தான்,  தன்னை சுதாரித்து  கொண்ட யாழிசை   “இனியன் என்னை விட்டு எங்கு போய் விடுவான் குந்தவை. எல்லைவிட்டு எல்லை அனுப்ப முடியாது என்று அரசாங்கம்  சொன்ன போதும் எனக்காக கிளம்பி வந்தவன் இனியன், நிச்சயம் என்னை வந்து கைப்பிடிப்பான்”. 

“அப்பா, நான் அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் எடுத்துத் தாருங்கள்” என  எந்த ஒரு கலக்கம் இல்லாமல் கேட்ட மகள் யாழிசையை  வியந்து பார்க்க..

குந்தவை “என்னடீ உனக்கு பித்து பிடித்து விட்டதா.  எங்கேயென்று போய் தேடுவ?” என்று கேட்கவும்,

“என்னடி குந்தவை, காணாமல் போனது என்னுடைய இனியன்.  ஏதோ ஒரு மார்கமாக  அமெரிக்கா சென்று ஊர் ஊராகத்  தெருத்தெருவாக மருத்துவமனை மருத்துவமனையாக தேடிக்  கண்டுபிடித்து வரலாம்.  என் காதல் ஜெயிக்கும் டீ” என்ற யாழிசையின் உறுதியான  பதில் கேட்டு  குந்தவை வாய் அடைந்து நின்றாள். 

அவள் மனத்தில் அவள் படித்த குறுந்தொகை வெள்ளிவீதியார் பாடல் நினைவில் வந்தது. அந்தப் பாடலில் வருகின்ற “சிங்கப் பெண்”தான் ஏன் தோழி யாழிசை  என்ற நினைவோடு “நிச்சயம் உன் காதல் வெல்லும் டீ” என மனத்தில் நினைததவாறே பிரமித்து நின்றாள் குந்தவை. அதே நிலையில் செழியனும் அவளின் தந்தையும்.

***********