சிறுகதை: உயிர்ப்பு – தங்கேஸ்‘’ மேடம் மேடம் ‘’ வாசலில் ஒரு பெண் குரல் கேட்டது. . தயங்கி தயங்கி நான்கைந்து முறை அழைத்துப்பார்த்து விட்டு பதிலில்லாமல் போகவே கொஞ்சம் சலித்துக்கொண்டது போல குரல் சற்று உயர்ந்து ஒலித்தது. சமையலறையில் அம்மு ஆட்டுக்கறி சமைத்துக் கொண்டிருந்தாள். அதிரும் சிம்னியின் ஓசையில் வாசலில் இருந்து அழைக்கும் குரல் திருந்ததமாக உள்ளே கேட்காது – கொரானா காலத்தில் தேவையற்ற விசாரிப்புகளுக்கு பயந்து அழைப்பு மணியின் பொத்தானை வீட்டுக்குள் நாங்கள் அணைத்து வைத்திருந்தோம்.

‘’ வாசல்ல யாரோ கூப்பிடுறமாதிரி இருக்கு ‘’ என்றான் கோகுல். அவன் கையிலும் என் கையிலும் சில்வர் தட்டின் மீது கவனமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கிண்ணத்தில் மேலே கொத்து மல்லி இலை ததும்ப மட்டன் சூப் நிறைந்திருந்து.  உள்ளே ரெண்டு மூன்று கறித்துண்டுகளோடு எப்படியும் சில மூன்று எலும்புத்துண்டுகளாவது ஒளிந்து கிடக்கும் என்று நான் ஸ்பூனை விட்டு துளாவிக் கொண்டிருந்தேன்.

‘’ ஏங்க வாசல்ல யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குன்னு தம்பி சொல்றான்ல போயி என்னான்னு பாருங்க ‘’ என்றாள் அம்மு

நான் மடியில் இரண்டாக மடித்துக் கிடந்த டர்க்கி துண்டை எடுத்து சட்டை அணியாத மார்பில் போர்த்திக் கொண்டு ஹாலுக்கு சென்று எட்டிப்பார்த்தேன்.

வாசல் கம்பி கதவுக்கு பின்னால் வெளுத்துப்போன முயல் மாதிரி ஒரு முப்பது வயது பெண்ணின் முகம் தெரிந்தது. சாயம் போன ஊதா வண்ண வாயில் சேலை தோளில் ஒரு வார் நைந்து போன பெண்களின் கைப்பை சகிதம் நின்றிருந்தாள். கைகளில் ஏதோ நிறமிழந்த ஆஸ்பத்திரி அட்டை போல இளம் பச்சை நிறத்தில் ஒன்றை வைத்திருந்தாள். முகத்திற்கு பயன்படுத்தி பயன்படுத்தி சாயம் போன ஒரு முக கவசம் . அவளது கைகள் இரும்பு கேட்டின் மேல் நீட்டிக்கொண்டிருந்த கூரான அழி கம்பிகளை உறுதியாகப்பற்றியிருந்தது

நான் என்னவென்று கேட்பதற்கும் முன்பாகவே ‘’’ சார் மேடம் இருக்குறாங்களா ? என்று கேட்டாள்.

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ‘’ காமெடிக்கு நாங்க கேரண்டி நிக்ழ்சியை ‘’ அங்கிருந்தே எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகம் கூட எனக்கு எழுந்தது..

நான் கிச்சன் பக்கம் திரும்பி ‘’ அம்மு உன்னைத்தான் கூப்பிடுறாங்க ‘ என்றேன்.

மிக்சியில் அரைத்த தேங்காய் பாலை குழம்பில் கவிழ்த்தபடி ‘’ யாரு அது ‘ என்றாள்.

‘’ யாரோ லேடிஸ் வந்திருக்காங்க வா வந்து பாரு ‘’

ஏன் யாருன்னு நிங்களே போய் கேட்க வேண்டியது தானே ?

‘’கேட்டேன் உன்னைத்தான் கூப்பிடுறாங்க , யாரோ கார்ப்பரேஷன்லயிருந்து வந்திருக்கிற மாதிரி தெரியுது, கொரொனா ஊசி போட்டுக்கிட்டீங்களா இல்லையான்னு கேட்க வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் ‘’ என்றேன்.

‘’ ஆமா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான் கார்ப்பரேஷன்லயிருந்து விசாரிக்க ஆளுங்க வர்றாங்களாக்கும் ? யாராவது ஆள் வந்தா ஒரு வீட்டுல ஆம்பளை என்ன ஏதுன்னு விசாரிக்கிறதே கிடையாது . எல்லாத்துக்கும் என்னையே அனுப்பிவிட்டடுற வேண்டியது என்ற படியே குழம்புக் கரண்டியை என் கையில் திணித்து விட்டு ‘’ கிண்டி விட்டுக்கிட்டே இருங்க ஸ்டவ் சிம்லயே இருக்கட்டும் இல்லேண்ணா அடிப்பிடிச்சிரும் ‘’ என்று சொல்லியபடியே போனாள்.‘’சூப்பை கூட சூடா குடிக்க முடியாது போல இருக்கு’’ என்றபடியே அவள் சென்றதை உறுதி செய்த படி கரண்டியை விட்டு கறிக்குழம்பை கிண்டிவிட்டுக்கொண்டே இரண்டு கறித்துண்டுகளை நைஸாக எடுத்து என் சூப் கிண்ணத்தில போட்டேன் . கோகுல் நேராக என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அவனுடைய சூப் கிண்ணத்தை எடுத்து கொண்டு என்னருகே வந்து நீட்டினான். அதிலும் இரண்டு கறித்துண்டுகளைப்போட்டேன்.

ஆனால் கிண்ணத்தை எடுத்துப்போகாமல் மறுபடியும் கிண்ணத்தை நீட்டிக்கொண்டே இருந்தான்.

‘’ கறி இன்னும் சரியா வேகலைடா ‘’

உனக்கு மட்டும் போட்டுக்கிட்ட ?

அது எலும்புடா

எலும்ப மட்டும் வேகாம சாப்பிடுவியா ? அம்மா வந்த உடனேயே போட்டுக்குடுத்துருவேன் பார்த்துக்கோ என்றான்

‘’’ அடப்பாவி நீ எங்க தாத்தன் கூடாண்டியை விட மோசமான பயலா இருப்ப போல தெரியுதே ‘’என்றேன்

ஏன் அப்படி சொல்லுற ?

எங்க ஊர் கிராமத்துல்ல நாங்கள்ளாம் சின்னப்புள்ளைகளா இருக்கும் போது எங்க வீட்ல கோழி அடிச்சு குழம்பு வச்சா எல்லோரும் சுத்தி உக்காந்திருப்போம். எங்கம்மா குழம்பு சட்டியோடு நடுவுல உக்காந்து முகம் பார்த்து பார்த்து பரிமாறும். எப்பவுமே கோழித்தலை எங்க தாத்தாவுக்குத்தான் போகும் ஆனா எங்க தாத்தா என்ன செய்வாரு தெரியுமா ?

என்ன செய்வாரு என்றான் ? கொஞ்சம் சிரிப்போடு

தலையையும் கறித்துண்டுகளையும் யாருக்கும் தெரியாம கும்பா சோத்துக்குள்ள புதைச்சு வச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி அம்மாவைப் பார்த்து மறுபடியும் கொஞ்சம் கறிச்சாறு கொடுன்னு கும்பாவ நீட்டுவாரு . எங்களுக்கெல்லாம் அந்த இரகசியம் ரொம்ப நாளுக்கப்புறம் எங்க அம்மா சொல்லித் தான் தெரியும். அதுக்கப்புறம் தாத்தா கூட கோழி கொழம்பு சாப்பிட உக்காந்தாலே விழுந்து விழுந்து சிரிபோம் .’’

ஓஹோ சரியான ஆளு தான் உங்க தாத்தா ‘ என்றான்

நீயும் கூட அப்படித்தான இருக்க , இந்த விசயத்துல எங்க தாத்தனையே தூக்கி சாப்பிட்டுருவ போல இருக்கே என்றேன்.

வெளியே அம்மு கொஞ்சம் உரத்த குரலில் பேசுவது கேட்டது.

என்னன்னு பாருடா ? என்றேன்

அம்மா அவங்களை திட்டிகிட்டு இருக்காங்க என்றான்.

நான் கையில் கரண்டியோடு இங்கிருந்தே வாசலை எட்டிப்பார்த்தேன்.

அந்தப் பெண் அந்த சாயம் போன அட்டையை இவளிடம் நீட்டிக்கொண்டே ‘ ப்ளீஸ் மேடம் இதை பாருங்க ‘’ என்று கெஞ்சிக்கொண்டிருப்பது தெரிந்தது.

‘’ நான் எதுக்கு அதப்பாக்கணும்மா ? கொரானா காலத்துல எதையும் தொடக்கூடாது போங்க போங்க என்று அம்மு விரட்டிக்கொண்டிருந்தாள்.

மேடம் பாவம் குழந்தைங்க ……..பெரியவங்க…. அநாதை இல்லத்துக்கு மேடம்….

அப்டின்னா கார்டை உள்ள போட்டுட்டு போங்க சானிடைசர் அடிச்சு எடுத்து அதை படிச்சி பார்த்துட்டு உண்மையா இருந்தா பணத்தை ஆன்லைன்ல அனுப்பி வைக்கிறோம் என்றாள்.

‘’ மேடம் நம்பி வந்திருக்கேன் மேடம் ‘’என்று கெஞ்சும் குரலில் இரைந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண். வெளியில் நல்ல வெய்யில் தெரிந்தது, அவளது காதோரம் வியர்வை துளிகள் மினு மினுவென இறங்கிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

இனி இவளோடு பேசிப்பயனில்லை என்ற எண்ணத்தில் ‘’ எனக்கு நிறைய வேலை இருக்கும்மா கௌம்பு’’ என்றபடியே அம்மு உள்ளே வந்தாள்.

அந்தப் பெண் நகர்ந்து விடாமல் அங்கே நின்றபடியே பரிதாபமாகப் பார்த்து கொண்டிருந்தாள்.

வீட்டுக்குள் வந்ததும் ‘அத்தனையும் பிராடு என்றாள் அம்மு

அப்படியா ?

ஆமா பிறகென்ன ? அந்தக்கார்டை தொடாமலே வாசிச்சுப்பார்த்தேன். ஆர் எம் அநாதை இல்லம் வேலூர்ன்னு போட்டிருக்கு

வேலூர்ல இருந்தா இங்க வந்திருக்கா ?

அட நீங்க ஒண்ணு வேலூர்ல இருந்து இங்க வர்றாளாக்கும். ? இங்க தான் எங்கயாவது தேனி பஸ்ஸ்டான்ட் பக்கமா இருப்பா, போன வருசம் கூட இதே மாதிரி ஒரு கார்டை வச்சிக்கிட்டு இங்க வந்தது இவதான்னு நெனக்கறேன். வந்து ஒரு நூறு ரூபா வாங்கிட்டுப்போனாளே ஞாபகமிருக்கா ?

தெரியலை என்றேன் பொதுவாக

தெரிஞ்சாத்தான ஆச்சரியம் என்றாள் கொஞ்சம் மிளகுதூளை கொதிக்கும் குழம்பு மேலே உதிர்த்து விட்டடபடி

அப்ப பிராடுதான் .போல இருக்கு என்றேன்.

ஆமா சாயங்காலம் போனா ஓட்டல் பக்கம் எங்கயாவத சாப்பிட்டுக்கிட்டு இருப்பாளுக பாருங்க என்றாள்.மறுபடியும் ‘’’சார் ‘’ என்று அதே பெண்ணின் குரல் கேட்டது

தம்பி டிவியை ஆப் பண்ணு, டிவி சத்தத்திலயும் சிம்னி சத்தத்திலயும் கூப்பிடறது ஒண்ணுமே கேட்க மாட்டேங்குது என்றேன்

போன வேகத்திலேயே திரும்பி வந்த கோகுல் அம்மா இன்னும் அவ அங்கனயே தான் நிக்குறியா என்றான்.

அவ இவன்னெல்லாம் சொல்லக்கூடாதுடா ..

நான் அப்பொழுது தான் சூப்பை எடுத்து ஒரு மிடறு விழுங்கிக் கொண்டிருந்தேன்

‘’ஏங்க உங்களைத்தான் கூப்பிடுறாளாம் போய் பார்த்து அனுப்பி விட்டுட்டு வாங்க ‘’என்றாள்

‘’இன்னிக்கு சூப் சாப்பிட்ட மாதிரி தான் போ’’ என்றேன்

ஒண்ணும் சரியில்லை என்றாள்

அதைத்தான் நானும் சொல்றேன் செக்கா முக்கு சலீம் கடையில வாங்கியிருந்தா கறி இவ்வளவு முத்தலா இருந்திக்காது. நமக்கு லேட்டானதுனால தேரடி கோழிக்கடை தெருவுல ஹக்கிம் பாய் கடைல வாங்கினது இது ‘’

நான் சரியில்லைன்னு சொன்னது உங்களைத்தான் கறியை இல்ல என்றாள்

நான் மறுபடி துண்டை போர்த்திக் கொண்டு கடப்பா கல்லில் மீதிக்காசை போட்டு வைக்கும் சம்படத்திலிருந்து இரண்டு இருபது ரூபாய் தாளும் ஒரு பத்து ரூபாய் தாளுமாக மொத்தம் ஐம்பது ரூபாயை எடுத்து கையில் சுருட்டி வைத்துக் கொண்டு கிளம்பினேன்.

‘’ இது தான் அனுப்பி விடுறதா ? என்றாள்

வேற என்ன செய்யச் சொல்ற ?

அது தான சின்னப்பயல்கள் கூட ஓம் சக்தி கோயிலுக்கு கூழு ஊத்துறோம்ன்னு சொல்லி ஏமாத்தி உங்ககிட்ட இருந்து காசை வாங்கிட்டு போறாங்க என்றாள்.

நான் கொஞ்சம் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு நிலைக்கதவுக்கு அருகே நின்றபடி என்னம்மா வேணும்? என்றேன்.

சட்டையில்லாத என் மேனியை கொஞ்சம் அவள் அசூசையாக பார்த்தது எனக்கு உரைத்தது.

சார் நான் ஒரு ஆர்ப்பனே’ஜ்லயிருந்து வந்திருக்கிறேன் . என்று கார்டை நீட்டினாள்

நான் அதை வாங்காமல் ஒரு நான்கு வரிகளை உற்றுப்பார்த்தேன் .’’

சார் / மேடம் என்று ஆரம்பித்து அநாதை குழந்தைகளுக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கும் உதவுமாறு நீண்டுகொண்டே சென்றது.. பல கை ரேகைகளின் அழுக்குகள் அதில் உறைந்து போய் இருந்தது தெரிந்தது.

இந்த கார்டுல போன் நம்பர் இருக்குதா ?

இருக்குது சார்

போன் பண்ணி கேட்கவா ?

அவள் அமைதியாக இருந்தாள்.

சரி உங்க ஆர்ப்பனேஜோட அக்கவுண்ட் நம்பர் ஐஎப்சி கோட் எல்லாம் குடுங்க நெட் பேங்கிங்

மூலமாவோ இல்லைன்னா போன் பே மூலமாவோ பணத்தை அனுப்புறோம். ‘ என்றேன்.

அந்தப் பெண் அதற்கும் ஒரு பதிலும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.

எனக்குள் கொஞ்சம் எரிச்சல் படர்ந்தது.. எதற்கு டென்சன் பேசாமல் கையில் சுருட்டி வைத்திருந்த ஐம்பது ரூபாயை கொடுத்து அனுப்பி விடலாம் என்று நான் கை உயர்த்திய போது அம்மு குரல் ஒலித்தது.

‘’ஏங்க சும்மா என்ன பேச்சு ஆள அனுப்பிட்டு சட்டுன்னு உள்ள வாங்க நோய் நொடிக்காலத்துல’’

சட்டென்று என்ன நினைத்தேனோ அல்லது எது ஒன்று என்னைத்தடுத்ததோ பணத்தை கொடுக்காமல் சர சரவென்று உள்ளே திரும்பினேன்..

‘’ சார் ப்ளீஸ் சார் ‘ என்று அதிர்ந்த பலவீனமான அந்தப் பெண்ணின் குரல் ஒலித்தது.

நான் சட்டென்று திரும்பி ஏம்மா லஜ்ஜையை கெடுக்குற ? ஒரு தரம் சொன்னா கேட்க மாட்டியா கௌம்புமா என்று …ஏறத்தாழ கத்தினேன்

அந்த நேரத்திலும் அவள் முகத்தில் ஒரு சொல்ல முடியாத வேதனை படர்ந்ததை கவனித்தேன். வாசல் கேட்டின் இரும்புக்கம்பிகளை இறுகப்ப பற்றியிருந்த அவள் விரல்கள் நடுங்குவதையும் கவனித்தேன். பிறகு சிரமப்பட்டு கைகளை அதிலிருந்து பிரித்துக் கொண்டு மிகவும் தளர்வாக நடந்து சென்றாள். தெருமுக்கில் இருந்த ஒரு வேப்பமரத்தின் கீழ் நின்று வெறித்து வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.நான் வீட்டுக்குள் திரும்பி வந்தபோது ‘’எதுக்கு அவவ்ளவு நேரம் அவகூட பேசிக்கிட்டிருக்கீங்க ‘’ அவளை வீட்டை நோட்டம் பார்க்க விடுறதுக்கா ? என்றாள் அம்மு

இல்ல…

இப்படி ஆளுகளையெல்லாம் நம்ப முடியாது என்றவள் சட்டென்று என் கையிலிருந்த பணத்தை பார்த்துவிட்டு இதை குடுக்கலியா ? என்றாள் ஆச்சர்யமாக

ம்கூம் என்றேன்

குடுக்கறேன்னு சொல்லிட்டுததான்ன போனீங்க

‘’ என்னன்னு தெரியலை கடைசி நேரத்துல குடுக்க மனசு வரலை’’ என்றேன்

நீங்க எப்பவுமே இப்படித்தான கடைசி நேரத்துல குழப்பம் பண்ணுவீங்க என்றாள்

தெரியலையே என்றேன்

‘’சரி குடுக்கனும்னு எடுத்த காசை குடுக்கல அதை சாமி உண்டியல்ல போட்டுட்டு வந்து முதல்ல கையை கழுவுங்க ‘’ என்றாள்

நான் சட்டைப்பையில் அந்தப்பணத்தை போட்டுக் கொண்டேன்.

‘’ சூப் ஆறுது சீக்கிரம் வாங்க’’

ஸ்பூன் கரண்டியால் எடுத்து ஒரு மிடறு விழுங்கினேன் .உள்ளே இறங்கவில்லை

‘’சரியாவே அரைக்கலை இஞ்சி பூண்டு கொத்த மல்லியெல்லாம் அப்படியே கிடக்குது ‘’என்றான் கோகுல்

‘’ஆமா உனக்கு அநேகம் தெரியும் சூப்புக்கு அப்படி பத்தா பறக்கத்தான் அரைக்கனும் ‘’என்றாள்.

அப்பா அந்த ஐம்பது ரூபாய்க்கு நைட்டுல எனக்கு புரோட்டா வாங்கிட்டு வாங்க என்றான் கோகுல்

நைட்லயெல்லாம் ஹோட்டல் கடை இருக்காது என்றேன்

நாளைக்கு இருந்து தான் முழு லாக்டவுன் இன்னிக்கு இருக்கும் என்றான்.

நைட் புரோட்டா சாப்பிடக்கூடாது தெரியுமா ?

அப்ப லஞ்ச்ஹோம்ல இடியாப்பம் வாங்கிட்டு வாங்க என்றாள்.அம்மு.

மாலையில் லஞ்ச் ஹோமில் கூட்டம் குறைவாக இருந்தது- வழக்கமாக இங்கு கிடைக்கும் பில்டர் காபியின் சுவையை விட முடியாத நாலைந்து பெருசுகள் வாசலில் வலதுபுறமிருந்த பாய்லரை சுற்றி நின்று கொண்டு ‘’ கெட்ட கழுதையால்ல இருக்குது இந்த நோயி ‘’ என்று கொரானாவைப்பற்றி பிரஸ்தாபித்த்துக் கொண்டிருந்தார்கள்.

பார்ச்ல் அறையில் பில்லை கொடுத்து விட்டு காந்திருந்த போது பார்சல் கட்டும் முத்து ’ சார் ஆள் குறைவு கொஞ்சம் பொறுக்கணும் ‘’ என்றார்

ஏண்ணே இந்த இந்திக்காரப்பயல்கள்லாம் உள்ள இருப்பாங்களே அவங்களை எங்கே ?என்று கேட்டேன் லைனுக்கு .ஒரு கப் சாம்பார் எடுத்துக்கொண்டு சென்ற சோணை ‘’ அவங்களைத்தான் லாக்டவுன் வரப்போகுதுன்னு தெரிஞ்சவுடனே முதலாளிவாள் நேத்தே மூட்டை கட்டி ஊருக்கு ட்ரெயின் ஏத்தி விட்டுட்டாரே’’என்றான்

சரி சரி ஆதாயமில்லாமயா செட்டியாரு ஆத்தை கட்டி அழுவாரு ?

‘’தொலைஞ்சது பீடைன்னு விடுங்க சார் இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் .எந்நேரம் பார்த்தாலும் புறாக்குஞ்சு மாதிரி க்கியா க்கியா கத்தி தொலையுவாய்ங்க ‘’ என்றார் முத்து.‘’வாஸ்தவம் தான்னே எனக்கே ஸ்பெசலுக்கு நாளைஞ்சு தடவை புரோட்டா குருமாவை கட்டி குடுத்திருக்காய்ங்க வந்து கேட்டம்னா அவன் பேசுறது நமக்கு ஒரு எழவும் புரியாது நம்மளா கத்திகிட்டு கெடக்க வேண்டியதுதான் என்றபடி பார்சல் பில்லை அவரிடம் கொடுத்து விட்டு வாசலில் இடது ஓரத்தில் கிடந்த சேரில் உட்கார்ந்து முககவசத்தை அணிந்து கொண்டேன்.

ஏதேச்சையாக உள் வாசலில் தலைக்கு மேல் இருந்த நிலைக்கண்ணாடியை பார்தத போது காலையில் வீட்டுக்கு வந்திருந்த அந்த வாயில் சேலை பெண்ணும் அவளுக்கு எதிராக இன்னொரு பெண்ணும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்த இன்னொரு பெண் இவளை விடவும் வெளுத்துப்போன வெள்ளெலி போல தெரிந்தாள். .சூடான இரண்டு காபி கோப்பைகளை அவர்களுக்கு முன்னால் வைத்து விட்டு மேடம் வேறெதுவும் வேணுமா என்று சோணை கேட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது..

பார்சல் ரூமுக்குச் சென்று நான் அயிட்டங்களை சரி பார்த்து வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது சோணை இந்தப் பெண்களின் டிபனுக்கு பில் கணக்கு சொல்லிக்கொண்டிருந்தார்

முதலாளி லைனுக்கு ‘’ ரெண்டு பெசலு பூரி செட் ஒண்ணு ஸ்ட்ராங்க காபி ரெண்டு மேல பார்சலு ரெண்டு செட்டுபுரோட்டா ‘’ பில்லு குடுங்க

நான் சோணையை தனியாக அழைத்து டிப்ஸ் தட்டிலிருந்து பில்லை எடுத்தபடி எவ்வளவு என்று கேட்டேன்

நூத்தி எம்பது சொச்சம் சார்வாள்

‘’ அதை நானே குடுத்திர்றேன் இந்தா என்று இரண்டு நூறுரூபாய் நோட்டுக்களை எடுத்து பில்லோடு சேர்த்து அந்த தட்டில் வைத்து விட்டு. நகர்ந்தேன்.

சார் மீதிச்சில்லறை ?

நீயே வச்சுக்கோ என்றேன்

சார்க்கு அவங்களை தெரியுமா ?

தெரியாது ..

பிறகு ஏன் நீங்க அவுகளுக்கு பில்லு குடுக்குறீங்க

‘’அது தான் ஏன்னு தெரியலை சோணை’’ என்ற படி வேகமாக வெளியில் வந்து பைக்கை உதைத்து கிளப்பினேன்.

 

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்.