சிறுகதை: சிலம்பின் ரகசியம் – அ.வெண்ணிலா

 

வற்றிய குளத்தின் அல்லித் தண்டைப்போல் பாடகம் அணிந்திருந்த கால்கள் துவண்டிருந்தன. அரவத்தைப் படுக்கையாகக்கொண்டு, அறிதுயில் கொண்டுள்ள நீலமணி நிறத்தையுடைய திருமாலின் கோயிலையும், ஏழு இந்திர விகாரைகளையும், அறக்கருத்துக்களைக் கூறும் சந்திரகாந்த கல்லால் செய்த மேடையிருக்கும் அருகன் கோயிலையும் வழிபட்டு, புகார் நகரைவிட்டு, வெளியேறிய கோவலனும் கண்ணகியும், சோழ மன்னனும் அவனது உரிமை மகளிரும் இளவேனில் காலத்தில் தென்றலின் இனிமையை அனுபவிப்பதற்காக இருந்த பூம்பொழிலினைக் கடந்தார்கள்.

மண்ணுலகையே வென்று, தன் குடையின்கீழ் வைத்திருந்த சோழ மன்னன், உருவமில்லாதவனாகிய காமனையும் வென்று, தன் ஆளுகையின் கீழ் வைத்திருந்தான். தோற்ற மன்னர்கள் எல்லாம் செல்வத்தைத் திறையாகச் செலுத்துகையில், காமனோ மன்னனை மகிழ்விக்க, மகிழ்ச்சிக்கு உகந்த வேனிற் காலத்தையும், வேனிற் காலத்தின் இனிமையைக் கூட்டும் பொதிய மலையின் இளந்தென்றலையும் திறையாகச் செலுத்தினான். காமனின் திறையை அனுபவிக்க, சோழ மன்னன் தேர்ந்தெடுத்த இடம் இலவந்திகை. நீர்நிலையால் சூழப்பட்ட பூம்பொழில். சோழனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடம் என்றாலும் காமனின் கொடி மேலோங்கிப் பறக்கிற இடம்.

மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியை வந்தடைந்த கோவலன் தன்னுடைய எழுநிலை மாடத்தின் நெடிய வாயிலைக் கடந்து, “இப்பொழுதே நீ இங்கிருந்து என்னோடு புறப்படுவாயாக” என்று சொன்னவுடன் மறுபேச்சின்றி, கோவலனுடன் புறப்பட்ட கண்ணகிக்கு, மதுரை என்னும் நகர் எங்கிருக்கிறது என்பது தெரியாது. கதிரவன் உதிக்கும்முன் வெளியேறிய இருவரும் வாழ்வின் புது அத்தியாயம் நோக்கிப் பயணப்பட்டனர்.

பாதங்கள் சோர்ந்து இடை துவண்டாள் கண்ணகி. மார்பில் அணியும் மலர்மாலை வாடினால்கூட முகம் வாடும் கண்ணகி, எரிக்கும் வெயிலில் கருகும் மலரானாள்.

இலவந்திகையைக் கடக்கும்போது வருத்தும் உடலுடன் உள்ளமும் சோர்ந்தது. காமன் கொடி பறக்கும் பூம்பொழில் அவள் உள்ளத்தின் துயரத்தின் சுமை கூட்டியது. இலவந்திகையின் இரு மருங்கும் தழைத்துத் தாழ்ந்த பூ மரச்சோலைகளை விரைந்து கடக்க வேண்டுமென்று கோவலனைத் துரிதப்படுத்தினாள்.

காவிரியின் வடகரையில், மேற்குத் திசையில் ஒரு காத தூரம் நடந்தார்கள். ஆற்று நீரின் குளுமையும், அடர்ந்திருந்த மரங்களின் இனிமையும் சூழலில் இருந்தாலும், இருவரின் மனத்திலும் வெப்பத்தின் அலையடித்துக் கொண்டிருந்தது. எழுநிலை மாடத்தின் நான்காவது மாடியில் காதல் வாழ்விற்கே வழிகாட்டிகள்போல் இருவரும் இன்பமுற்றிருந்த சொற்ப நாள்களை நினைத்தபடி கண்ணகி வந்தாள். தன்னுடன் விருப்பத்துடன் கூடுவதற்காக ஒப்பனையுடன் வரும் மாதவி, விரும்பிக் கூடி, கூடலில் கலையும் ஒப்பனையை, மீண்டும் தன்னைக் கவரும் வண்ணம் அழகாகத் திருத்தி, கூடுதலையும் ஊடுதலையும் மாறி மாறி அளித்த விதத்தை நினைத்தான். மாலை நேரமென்றாலே மாதவியின் நினைவும் சேர்ந்தே வருகிறது. ஆடல் மகள் அவள் என்று கசந்து, அவளைப் பிரிந்து வந்த பின்னும், மேலெழுந்த கசப்பை விழுங்கி, அடி மனத்தில் இன்பத்தின் தித்திப்பு இன்னும் மிச்சமிருப்பதை உணர்ந்தான்.

எண்ணத்தின் சுமை தாங்க முடியாத கண்ணகி, பாடகம் அணிந்த தன் கால்கள் சோர்ந்து மூச்சிறைக்க, ஒரு சோலையைப் பார்த்து இளைப்பாறலாம் என்றாள். இருவரும் சோலையின் அடர்ந்திருந்த மரத்தினடியில் அமர்ந்தார்கள்.

தனக்குள் மூழ்கியிருந்த கோவலனின் சிந்தனையைக் கலைக்க, “மூதூர் மதுரை இன்னும் எவ்வளவு தூரம்?” என்றாள்.

கோவலன் கண்ணகியின் முகத்தைப் பார்த்தான். பால்மணம் மாறாத குழந்தை முகம். மழலைச் சிரிப்பு. தன் பிரிவால் முகம் வாடியிருந்தது. வாடிய முகமென்றாலும், இதழ் விரித்துச் சிரிக்கையில் தெரியும் முல்லைப் பூ பற்கள் முகத்தின் சோபையைக் கூட்டின. அவள்மேல் இரக்கம் வந்தது. செல்வத்தின் அதிபதியின் வீட்டில் வாழ வேண்டியவளை இந்தக் கொடும் கோடையில் அல்லலுறச் செய்கிறோமே என்று வருந்தினான். “நம் சோழ நாட்டில் இருந்து ஆறைந்து காதம்தான் உள்ளது. விரைந்து செல்லலாம், கலங்காதே கண்ணகி” என்றான்.

பதில் கூறிய கோவலனை இப்போதுதான் நன்றாகப் பார்த்தாள் கண்ணகி. ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க எண்ணும்போதும் மனக்கண் முன் முழுமை பெறாத முகம். கோவலனின் சிவந்த நிற கால்கள் நினைவில் வரும். அவனின் சுருள் முடி, கண்கள், காதுகள் இப்படி வேளைக்கு ஒன்றாக நினைவுக்கு வந்திருக்கிறதே தவிர, அவனின் முழு உருவத்தைக் கொண்டுவருவதற்குள் நினைவுகள் குழம்பிக் குழம்பி மருகும். “காதலராகிய நீங்கள் இருவரும் பிரியாதிருக்கவும், உங்கள் இணைந்த கைகள் பிரியாதிருக்கவும், தீது இல்லாது வாழவும்” என்று திருமணத்தன்று சான்றோர்கள் வாழ்த்தினார்களே? புவியின் அருந்ததி என்றார்களே? சந்திரன் உரோகிணியைக் கூடும் நாளில் நீங்களும் மணப்பந்தத்தில் இணைகிறீர்கள் என்பதால், எவ்வகைத் தீங்கும் எங்கள் வாழ்வை அணுகாதென்றார்களே? சான்றோர் வாக்குப் பொய்க்குமோ? முன்பிறவியின் ஊழ்வினைத் தங்கள் வாழ்வைக் குலைக்கிறதோ? கோவலன் மாதவியிடம் இருந்த ஒவ்வொரு நாளும் இந்தக் கேள்விகளை எத்தனை முறை எனக்குள் கேட்டிருக்கிறேன்?

கோவலனுடன் கூடி மகிழ்ந்திருந்த நாள்கள் நினைவிலேயே இல்லை. கோவலன் இல்லாத நாளில்தான், காமத்தின் பொருள் புரிந்தது. மல்லிகை மலர் சூடிய கோவலன், குவளை மலர் சூடிய என்னை அணுகும்போதெல்லாம், அவனின் விருப்பத்திற்கு என்னைக் கொடுக்க வேண்டும் என்பதே சிந்தையாக இருந்தது. நிலவெழுந்து நிற்கும் மாடத்தில் கோவலன் விரும்பிய எல்லாம் கொடுத்தேன். முழுதாகக் கொடுக்கக் கொடுக்க, திகட்டிப் போகும் இனிப்புப் பண்டம்போல் காமம் தீர்ந்துபோகும் என்பதறியாதவளாக நான் இருந்தேன்.

மாதவியோ, நாட்டியத்துடன் மன்மதக் கலையையும் சேர்த்துக் கற்றறிந்தவள். ஊடல் காதலுக்கு நிறம் கூட்டி, காமத்தின் சுவை கூட்டும் என்பதறியாதவளாக நான் இருந்திருக்கிறேன். கோவலன் ஒரே ருசிக்குச் சலித்துப்போகும் ரசிகனாகப் பரத்தையைத் தேடிச் சென்றான். பரத்தையைத் தேடிப் போனது தவறில்லை. குலத்தின் முன்னோர் தேடித் தந்த மலை போன்ற பெரிய குவியலையுடைய செல்வமெல்லாம் தொலையும்வரை அவள் மயக்கம் தெளியாமல் இருந்தான். வீடு திரும்பியவனுக்கு, என்னை ஏறெடுத்தும் பார்க்க முகம் வரவில்லை. பரத்தை வீடு சென்று திரும்பிய குற்றவுணர்ச்சியினால் அல்ல. குடும்பத்தின் வறுமை அவனை நாணச் செய்ததில் அவன் தலை தாழ்ந்திருந்தான்.

மாலைத் தென்றல் சாளரத்தின் வழியாக உள்நுழைகையில் எல்லாம், மாடமெங்கும் தீயைப் பரப்பி வைத்ததுபோல், அணைத்துத் தணிக்க கோவலன் அருகில் இல்லா கவலையில் என்னுடல் எத்தனை நாள் கருகியிருக்கிறது? தனித்திருப்போரை தாக்குவதுதானே காமநோயின் இலக்கு? காமனின் ஆதிக்கத்தில் இருந்து தப்பித்தவர் யாருளர்? கடற்கரையோரம் குழந்தைகள் கட்டி விளையாடும் மணல்வீட்டினை, அலை வந்து கலைத்து விளையாடி, குழந்தைகளை அழ வைப்பதைப்போல், இந்த மாலைப் பொழுது தவறாமல் வந்து என்னை அழச் செய்கிறது. கரும்பாலான வில், மலர் அம்புகளுடன், தன் மகரக் கொடியுடன் காமன் புகார் நகரம் முழுக்க, இரவெல்லாம் ஓய்வின்றிச் சுற்றித் திரியும்போது, என்னுடைய அமைதி பூரணமாகப் பறிபோனதை, என் தனிமையைப் பகிர்ந்துகொண்ட சாளரத்து நிலவும் நட்சத்திரங்களும் மட்டுமே அறியும்.

என்னுடைய நெடும் கருங்கண்ணில் மை தீட்டி எத்தனை நாளானது? நீண்ட கூந்தல் எண்ணெய் பூசப்படுதலையே மறந்துவிட்டதே? கோவலனின் தீண்டல் இல்லாத மென்முலைகளில் குங்குமச் சாந்து குழைத்துப் பூசுவதில்லை. நெற்றியில் திலகமிடுவதில்லை. கழுத்தில் மங்கல அணியைத் தவிர வேறொரு அணிகலனை நான் அணிந்து நாளானது. அறவோர்களையும், விருந்தினர்களையும் வரவேற்று உபசரிக்கும் இல்லற நெறியை நான் சிறப்பாகச் செய்வேன் என்று நம்பியே, கோவலனின் தாயார் எங்கள் இருவரையும் தனி இல்லம் வைத்தார். கோவலன் இல்லாமல் தனித்திருந்த நிலையில், என் கடமைகளைச் செய்ய இயலாமல் போனதற்காகவும் நான் தவித்தேன்.

புகார் நகரத்தின் பெண்களுக்கு அந்தி என்பதே காமனை வரவேற்கும் நேரம். பத்து வகைப்பட்ட துவரினாலும், ஐந்து வகைப்பட்ட ஓமாலிகையிலும் ஊறிய நல்ல நீரில் வாசநெய் தேய்த்து, மணங்கமழும் தங்களின் கரிய நீண்ட கூந்தலை நன்றாகக் கழுவி நீராடுவார்கள். நீராடிய கூந்தலின் ஈரம் போக்க, அகிற்புகையைக் காட்டி உலர்த்துவார்கள். உலர்த்திய கூந்தலின் அலங்காரங்கள் நாளுக்கொரு வகை. அந்தி வந்தவுடன் உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் அணிந்திருந்த ஆபரணங்களை நீக்கி, ஒற்றை வட அணியை அணிவார்கள். பட்டாடையைக் கலைந்து, கணவனோடு கூடுவதற்கு ஏற்ற பருத்தியினாலான மென்மையான ஆடையை உடுத்துவார்கள். தத்தம் கணவருக்குப் பிடித்த மலர்களை மாலையாக்கி மார்பில் அணிந்து, தங்களை அலங்கரித்துத் தயாராவார்கள், காமனின் யுத்தத்திற்கு.

Image

ஓவியம்: ஸ்ரீரசா 

நானோ அகன்ற எம் இல்லத்தில் மலரத் துவங்கும் முல்லையின் ஒளிமிக்க அரும்புகளை, நெல்லுடன் கலந்து தூவி, பகலவன் மறையும் மாலைப் பொழுதில், விளக்கேற்றி வைத்து, இல்லத்தில் உறையும் தெய்வங்களை வணங்குவேன். இல்லத்தில் ஒளி படர்ந்தாலும் என் அகத்தில் இருளே அடர்ந்து நிற்கும். கணவனைப் பிரிந்திருக்கும் பத்தினிப் பெண்கள் எல்லோருக்குமான பொதுவான இருள் அது. பொருள் தேடிச் சென்ற கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்களைப் பசலை நோய் வருத்தினாலும், அவர்களின் காத்திருப்பில் அன்பின் பெருமிதமிருக்கும். பிரிவின் துயரத்தைத் தூண்டிவிடப் பார்க்கும் காமத்தை, அவர்கள் விரைந்து வரப்போகும் தம் தலைவனை நினைத்துத் தணித்துக் கொள்வார்கள். பரத்தை வீடுகளுக்குச் சென்ற கணவனைப் பிரிந்திருக்கும் பெண்களுக்குத்தான் காத்திருப்பின் துயரம் அதிகம்.

அவ்வளவு துயரங்களைக் கொடுத்துவிட்டுப் பிரிந்து சென்ற கோவலன், திரும்பி வந்திருக்கிறான் என்று வாயில் காவலன் வந்து சொன்னவுடன், தொடுத்து வைத்திருந்த மல்லிகை மாலையை எடுத்து முகர்ந்து பார்த்தேன். தினம் தினம் அவன் வருவான் என்று எதிர்பார்த்துத் தொடுத்து வைத்து, சூடாமல் மலர்ந்து நிற்கும் மாலையை என்ன செய்வதென்றறியாமல் மலைபோல் குவித்து வைத்திருக்கிறேனே? கசங்கி வாடாமல் வெளியில் எரியும் மாலைக்கு எத்தனைப் பொருள்? அந்த மாலையைப் பின்தொடரும் அனுமானங்களை நிறுத்த நான் எத்தனைப் பாடுபட்டிருக்கிறேன்? ஆனாலும் உனக்காகத் தினம் மல்லிகை மாலையைத் தொடுப்பதை நிறுத்தியதில்லை.

நீண்ட வாயில்களைக் கடந்து என்னை நோக்கி வந்த உன் கண்களைப் பார்க்க நான் எத்தனை ஆவலுடன் இருந்தேன் தெரியுமா? பிரிவின் கசப்புகள் எல்லாம் உன் அணைப்பில் கரைந்துபோகக் காத்திருந்தேன். தொலைந்த செல்வக் குவியலைக் கண்டெடுத்தவளைப்போல், உனக்கான மல்லிகை மாலையுடன் உன்னை எதிர்கொண்டேன். என் அன்புக்குரியவனே, நீ வந்தாய். ஆம், நீ வந்தாய். உன்னுடல் மட்டுமே வந்திருந்தது. உன் முகம் பொலிவிழந்திருந்தது. கலைந்த உன் தலைமுடியும், குலைந்திருந்த ஆடையும், சிவந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த கண்களும், நீ மாதவியின் நினைவிலிருந்து மீளவில்லையென்பதைச் சொல்லின. மாதவியின் கூடலை நினைத்திருந்தாயோ, அவளின் பிரிவுத் துயரை நினைத்திருந்தாயோ, அவளின் நினைவில் இருந்தாய் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

உன் வருகை என்னை எதிர்பாரா திகைப்பில் ஆழ்த்தியதாலும், என் மகிழ்ச்சி கூடியிருந்தது. உன் தாயும் தந்தையும் வந்திருந்து என் நிலையறிந்து நலம் விசாரித்துச் செல்கிறார்கள் என்பதால், நான் என் உள்ளக்கிடக்கையைக் காட்டிக் கொள்வதில்லை. என் சோகம் அவர்களைத் தாக்கும் என்றெண்ணி, சிறு புன்னகையுடன் அவர்களை எதிர்கொள்வேன்.

அந்தி தொடங்கி, இருள் பரவும் நேரத்திலாவது நீ என்னைப் பார்க்க வருவாயோ என்று ஒவ்வொரு நாளுமே இரவுக்கான தளர்வாடையை அணிந்து காத்திருப்பேன். தளர்வாடைகளில் உள்நுழையும் தென்றல் என்னைத் தீயாய்ச் சுடும். நீயில்லா நாள்களில் என் கரிய நெடுங்கண்களுக்கு மையிடுவதில்லை அன்பே. அவை உயிர்பெற்று உன்னைத் தேடிச் சென்று விடுமோ என்ற அச்சத்தில் தவிர்த்திருந்தேன்.

நீ இரவு திரும்பி வந்தவுடன் குடங்கையால் நீரள்ளிப் பருகுவதைப்போல், இரு கை குவித்து, என் வாடிய முகத்தை ஏந்திக் கொள்வாய் என்று என்னுடலும் உள்ளமும் தயாரானது. பசித்த நாரைகளைப்போல், உன்னிரு கண்களும் என் கயல்விழியை விழுங்கும். உன் பிரிவு துயரில் கருவிழியைச் சுற்றிய கருமையை உன் இதழ்கள் இதமாக வருடிக் கொடுக்கும். மலர்ந்தும் சோபையின்றித் துவண்டிருக்கும் அல்லி மலரை நிலவொளி ஏந்தி, மலரச் செய்வதைப்போல், உன்னிரு கண்கள் என்னை மலரச் செய்யும். ஆராதிப்பதற்கு நீ அருகில்லாததால், அணியப்படாமல் இருந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றாய் எடுத்து நீ அணிவிப்பாய் என்றெல்லாம் வாயிலில் இருந்து நீ என்னை வந்தடையவிருந்த சிறு இடைவெளியில் கற்பனைகள் செய்துகொண்டிருந்தேன்.

மாதவியின் மன்மதக் கலையில் மூழ்கி, அமிழ்ந்து வந்திருக்கும் உன்னிடம் காட்ட நானெந்த கலையும் அறிந்தவளல்ல. தினம் அந்தியில் தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்யும் முல்லை மலரைப்போல், நான் உனக்காகவே மலர்பவள். நான் வெறும் மலர்தான். அதில் மணமாக வேண்டியவன் நீயே. மயனே வந்து வடிவமைத்தது போன்றிருக்கும் மணிக்காற் கட்டிலின் அருகில் பார். நான் தினம் உனக்காகத் தொடுத்த மல்லிகை மலர் மாலைகள். நம் உடல்களின் புணர்ச்சியில் கசங்கி வாடியிருக்க வேண்டியவை. மலர்ந்த பலனுமின்றி கட்டிலுக்கருகில் கிடக்கின்றன.

விரைந்து வந்த நீயோ, மேகம் மறைத்திருக்கும் நிலவின் இயல்பென, கணவனைப் பிரிந்த மனைவியின் வாட்டமென, என் மேனியின் வாட்டத்தை உணர்ந்தாய். அப்பொழுதும் அவளின் நினைவே. அவளின் தீயொழுக்கத்தால், உன்னை வருத்தமுறச் செய்ததும், இல்லத்தின் வறுமை கூடியதும் நடந்தது என்றாய்.

என் காதலை நினைத்து நீ வரவில்லையோ என்று நான் நிதானித்தேன். உன் கைப்பொருள் தொலைந்ததால், திரும்பியிருக்கிறாய் என்றே, “என்னிரு சிலம்புகள் உள்ளன, அவற்றையும் கொண்டு செல்” என்றேன். நீயோ, “தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலையின் இதழ் விரியும் முன், இங்கிருந்து புறப்படுவாயாக” என்று சொன்னாய். இதோ, போகும் திசையறியாமல், உன் காலடித் தொடர்ந்து வருகிறேன்.

கோவலனைப் பிரிந்திருந்த நாள்களில் வெளியுலகமே அறியாமல் இருந்த நான், காலையில் கிளம்பியதில் இருந்து இந்தப் புகார் நகரின் காட்சிகளைக் கண்டு வருகிறேன். புற உலகினை என் கண்கள் கண்டறிந்து வந்தாலும், அகக் கண்கள் கோவலனின் இரு கைகளைக் கோர்த்துக்கொள்ள தவித்தபடி இருந்தன.

ஏக்கமும் அச்சமும் நிரம்பிய விழிகளோடு தன்னெதிரில் அமர்ந்திருந்த கண்ணகியைப் பார்க்கிறான் கோவலன். வேடனுக்கு அஞ்சிய சின்னஞ்சிறிய பறவையாய் அவள் உடல் குறுகி நடுங்கிக்கொண்டிருந்தது. தன்னிடம் அவள் இன்பத்தை அனுபவித்ததைவிட, பிரிவின் துயரத்தில் அல்லலுற்றதுதான் அதிகம். ஆடல் மகளிடமிருந்து மீண்டு வந்துவிட்டேன். இனியாவது இவளைப் பிரியாதிருக்க வேண்டும். கொடும்பாலையைப்போல் என் பிரிவு இவளை வருத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவளின் பதட்டம் தணிக்க வேண்டும் முதலில்.

“இனி உனக்கு அச்சமென்பது வேண்டாம் என் ஆயிழையே. நான் ஒருபோதும் உன்னைப் பிரியேன்.”

அன்பும் கனிவும் மேலோங்க கோவலன் கண்ணகியின் இருவிழி பார்த்துச் சொன்னான்.

“நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள். இனி நான் அச்சப்பட காரணமொன்றும் இல்லை அன்பே.”

“உன் கண்கள் அப்படிச் சொல்லவில்லையே.”

“அதற்கு வேறொரு காரணம்.”

“நான் அறியக்கூடாததா?”

“என் சுவாசம் அறியாததையும் தாங்கள் அறிவீர்களே?”

“எனில், சொல்வதில் என்ன தயக்கம்?”

“முதல் நாள் நான் கண்டிருந்த துர்க்கனவு.”

“துர்க்கனவா?”

“ஆம். நாமிருவரும் ஒரு பெரிய நகரத்துக்குச் செல்கிறோம். என்மேல் தேளினைப் பிடித்து விட்டதைப்போல், உங்களுக்குத் தீங்கு விளைந்ததாக அந்நகரத்து மாந்தர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். அந்நகரத்து அரசனிடம் நான் வழக்குரைக்க, அரசனுக்கும் அந்நகரத்துக்கும் தீங்கு விளைவதாக ஒரு கனவு.”

kannagi kovalan kavunthi adigal | dosa365

“நீ என்னை அணுகாது அகலாது காத்திருக்கும்போது எனக்கென்ன தீங்கு விளையும்? நம்மைச் சூழ்ந்திருந்த தீங்கிலிருந்து மீண்டுதான் நாம் புதுவாழ்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் சேயிழையே. நீ கலங்காமல் இரு.”

மிரட்சியுடன் பார்த்த கண்ணகியை அருகழைத்து அணைத்தான் கோவலன்.

“தேவந்தியிடம் எனக்கு வந்த துர்க்கனவு பற்றிச் சொன்னேன். தாழை மலர் அடர்ந்த நெய்தல் நிலத்துச் சோலையில் இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்ற இரண்டு புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி எழுந்து, அங்கிருக்கும் காமவேல் கோயிலுக்குச் சென்று அங்குள்ள காமக்கடவுளை வணங்குவோம். அக்கடவுளை வணங்கும் பெண்கள், இவ்வுலகத்தில், இப்பிறப்பில் உள்ள நாளெல்லாம் தம் கணவரோடு பிரிவின்றிப் பேரின்பம் எய்துவர் என்றாள்.”

“சென்றாயோ நீ?”

“இல்லை அன்பே. அவ்வாறு புண்ணிய தீர்த்தம் சென்று துறை மூழ்கித் தெய்வத்தைத் தொழுவது நம் குடும்ப இயல்பன்று என மறுத்துவிட்டேன். அவளிடம் மறுமொழி சொல்லிக்கொண்டிருந்த வேளையில்தான் வாயில் காவலன் தாங்கள் வந்துகொண்டிருந்த செய்தியைச் சொன்னான்.”

“இனி நீ வேறெந்த புண்ணிய தீர்த்தமும் சென்று முழுக வேண்டாம் அன்பே. நம்மின் இல்லற வாழ்வில், நம் அன்பெனும் புண்ணிய தீர்த்தத்தில் தினம் தினம் மூழ்குவோம். எல்லாப் பாவங்களும் நம்மைவிட்டு விலகுவதோடு, காமதேவனின் பூர்ண ஆசியோடு காதல் வாழ்க்கை வாழ்வோம்.”

கண்ணகியின் முகம் சிவந்தது. இள முலைகளில் செஞ்சாந்து பூசி அலங்கரித்துக் கொள்ளுதலை மலர்ந்திருந்தவளின் கண்கள் குங்குமச் சிவப்பில் சிவந்தது.

“ஓர் அய்யம் மனையாட்டியே.”

கண்ணகி ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“எல்லா ஆபரணங்களையும் தொலைத்தாய். உன்னிரு சிலம்புகளை மட்டும் எதற்காக உன்னிடத்தில் வைத்துக்கொண்டாய்?”

தன் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தைத் தன் மணவாளன் கண்டுபிடித்ததை அறிந்த கண்ணகியின் முகம் மேலும் சிவந்தது.

“சிலம்பின் பின்னால் ஏதேனும் ரகசியம் இருக்கிறதா?”

பதிலளிக்கச் சொற்களைத் தேடினாள் கண்ணகி.

“சிலம்பு மட்டுமே என் இதயம் பேச நினைப்பதைப் பேசும்.”

“புரியவில்லை உன் பதில்.”

“நம் கூடலிலும் என்னைவிட்டுப் பிரியாத ஆபரணம் சிலம்புதானே? வெட்கத்தில் நான் நாணி நிற்கும் வேளையில் என் சிணுங்கல்களைச் சொல்வது சிலம்புதானே? என் வண்ணச் சீரடிகளுக்கு அழகூட்ட மட்டுமல்ல என்னின் இந்தச் சிலம்பு. என்னின் உணர்வுகளுக்கு நாத வடிவம் தரும் ஆபரணம். நாட்டிய மங்கைகளின் ஆட்டத்தில் உடன் சேர்ந்து பேசும் சிலம்புகள், என் மென்னடைக்கும் விளக்கம் சொல்பவை.”

“உன் இதயத்தின் நாதமாய் இருந்த சிலம்புகளையா, நான் வணிகம் செய்ய வேண்டுகிறேன் என்றவுடன் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாய்?”

“நீங்களே என் இதயத்தின் நாதமாய் இருக்கப் போகிறீர்களே?”

“சிலம்பை விற்கச் சம்மதிப்பாயா?”

கண்ணகி மௌனம் காத்தாள்.

“உன் மௌனமே சொல்கிறது, உன் சம்மதமின்மையை.”

“உங்களை மிஞ்சிய செல்வம் வேறென்ன இருக்கிறது? குடும்பத்தின் செல்வமும், செல்வாக்கும் பரத்தையர் வீட்டுக்குச் சென்றபிறகு, நம் புதுவாழ்விற்கு வழிகாட்ட சிலம்பு உதவுகிறது என்பதே என் மகிழ்ச்சி. சிலம்பைப் பிரிவது என் அங்கமொன்றைப் பிரிவதுபோல் துயரம்தான். ஆனால் இதயமாய் நீங்கள் இருப்பதால் இந்தத் துயரம் கடப்பேன்.”

கோவலனின் முகத்தில் சிந்தனையின் ரேகைகள்.

“என் சொற்களில் நம்பிக்கையில்லையா?”

“என் வாழ்வின் நம்பிக்கையே நீங்கள்தானே?”

“சிலம்பை விற்கும் முடிவை கைவிடுவோமா? புகாருக்கு மீண்டும் சென்று, வேறு வழியறிந்து வருவோமா?”

“தங்களின் தெளிந்த சிந்தனையில்தான் இந்த முடிவையெடுத்திருப்பீர்கள். அதில் மறு ஆலோசனை என்ற எண்ணமே வேண்டாம். ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.”

“வேண்டுகோள் என்று சொல்லவே வேண்டியதில்லை கண்ணகி.”

“சிலம்பின் நாதமாய் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். சின்னஞ்சிறிய பெண்ணாய் இல்லறத்தில் உங்களுடன் இணைந்த எனக்கு, மனைவியின் கடமைகள் புரிந்த அளவு, நம்மிருவரின் காதல் வாழ்க்கைப் புரியவில்லை. இல்லம் உறையும் தெய்வங்களுடன், உருவமற்ற காமதேவனையும் வணங்கி வரவேற்கும் புகார் நகரத்துப் பெண்களைப்போல் நான் காமதேவனைக் கொண்டாடவில்லை. நேற்றுத் தாங்கள் திரும்பி வந்த வேளையில் இருந்து, என் மனம் உங்களுக்காக உருகுவதோடு, என் உள்ளமும் உடலும் தவித்து ஏங்குகிறது. இல்லற தெய்வங்களைப் பூஜிப்பதுபோல், காமவேளைக் கொண்டாட வேண்டும் தினந்தினம்.”

“கொடிய இந்தக் கோடையில், கடினமான இந்தப் பாதையை விரைந்து கடப்போம் அன்பே. பின் நம்மிருவரையும் மரணத்தாலும் பிரிக்க இயலாது.”

அச்சொல்லை சொல்லக் கூடாது என்பதுபோல் கண்ணகி தன் ஐவிரல் வைத்து அவன் இதழ் மூடினாள். கோவலன் அவள் கைகளைப் பிடித்து, தன் உள்ளங்கையில் பொதிந்தான்.

காமவேளின் ஆசி அல்ல, கொற்றவையின் ஆசியே தனக்குக் கிடைக்கப் போகிறது என்பதைக் கண்ணகி உணரவில்லை.