சம்பங்கிநாராயணன் என்று நாமகரணம் சூட்டப்பட்ட சம்பு என்ற விடலையின் இல்லறவாழ்க்கை கனஜோராக நடந்தது. நீள்சதுரவடிவிலான ஜாதிக்காப்பெட்டியின் உள்கூடுதான் அவன்வீடு. ஒருவேட்டியைப் பாதியாய்க்கிழிது விரித்தால் மூலைவாங்கில் மடித்துவிடவேண்டிய அளவுக்கு அதன் விஸ்தீர்ணம் இருந்தது. அவன்மனைவி பச்சைநதி இரவில் கண்ணயர்ந்து தூங்கிக்கொள்வாள். அவன் உள்ளேபோய் கொஞ்சநேரம் அவள்மீது படுத்து எழுந்துவிட்டு, வெளியில் வந்துவிடுவான். பிறகு அந்தப்பலகைமேல் வாழைப்பழம் அடுக்கப்படும் சமதளத்தில் கால்நீட்டிப்படுப்பான். பச்சைநதி பாவம். கால்நீட்டமுடியாது. குறுகித்தான் படுக்கமுடியும். அப்படியும் இப்படியும் உருண்டுபுரண்டு படுத்துக்காலத்தை ஒப்பேத்துவாள். தன்மீது கிடக்கும் கணவனை சீக்கிரமே வெளியேறும்ப்படி செய்வாள். தாலிகட்டாத கணவன் அவன். விலக்குகாலத்தில் கிட்ட அண்டவிடமாட்டாள்.

“மூணுநாள்மட்டும்தான: ஒரேயடியா ஒதுக்குறியே.”

“அதெல்லாம் முடியாது: அஞ்சுநாள்.”

அவன் முனங்கிக்கொண்டே மேல்தட்டில் ஏறிப்படுத்துக்கொள்வான். காலை எழுந்ததும் அவள் மந்தைக்குப்போய்விட்டு, சித்தணைக்குச்சென்று குளித்துவிட்டுவருவாள். அதன்பிறகு இவன்போவான். இருவரும் ஈர உடுப்புக்களையே உடுத்தி வெயில்காய்வர். மழைக்காலம் என்றால் உலர ரெம்பநேரம் ஆகும். இரவுமுழுதும்; உறவுகொண்டு காலையில் குளிக்காமல் இருக்க முடியாதே. அதன்பிறகு வியாபாரம் தொடங்கிவிடும். வாழைப்பழவியாபாரம். அஞ்சுபத்துக்கு விற்றபின் தாயமக்காவிடம் சென்று இட்டிலிவாங்கிவருவாள் பச்சைநதி. ராஜாலைன் என்ற சின்னவீதியில் இட்டலியும் பணியாரமும் சுட்டுவிற்கிறார் தாயமக்கா. குறைந்தவிலை: நிறைந்தபயன்: அதாவது பெரிதாகவும் சுவையாகவும் இருக்கும். ஒருவர்பின் ஒருவராய்ச் சாப்பிட்டு முடித்துபின் கல்லாவை எண்ணிப்பார்த்தால் ஒருநல்ல தொகை சேர்ந்த்திருக்கும் சாப்பிடும்போதே வியாபாரம் நடந்தபடியிருக்கும். அந்தத் தொகையைப்பார்த்து இருவர் முகமும் பூத்துக்குலுங்கும். பச்சைநதியும் ஜம்புவும் தரைக்கடை வியாபாரிகள்.

வியாபாரி என்பதைவிட விற்பனைக்கூலி என்றுதான் எப்போதும் தன்னைச் சொல்லிக்கொள்வான். “தெனக்யும் நூறு எரநூறு சம்பாதிச்சா அது கூலிக்காரனோட வருமாத்தவிட கொறச்சல்தான?” ஒவ்வொருசீப்பு வாழைப்பழம் விற்றபின் ரூபாயை எண்ணிப்பார்த்து மகிழ்வான். எந்தநேரமும் கை எண்ணிக்கொண்டே இருக்கும். “இருக்கது இருக்குமுல்ல: ஓடியாபோகுது” என்பாள் பச்சைநதி.

“ஓடிப்போகாது: நல்லத வச்சுக்கிட்டு அழுக்குநோட்டுகளத் தள்ளிவிட்டுரலாம்ல.”

“ஆமா! அலமாரியில பூட்டிவக்யப்போறீக.”

அவன் லேசாக சிரித்துக்கொள்வான். சம்பங்கிநாராயணன் என்ற சம்பு வணங்காமுடியாய் ஊர் சுற்றித்திரிந்தான். அவன் அப்பா கோயில்கடையில் பூஜைப்பொருள் விற்கும் கூலிப்பணிசெய்தார். நெற்றி நிறைய விபூதிப்பட்டையும் மையத்தில் சந்தனப்பொட்டின்மேல் ஏறிய குங்குமமுமாய் தெய்வீக கடாட்சம்பொருந்தியவராய்க் காட்சியளிப்பார். கோயில் நுழைவாயிலில்தான் அந்த பூஜைப்பொருள் அங்காடி. கோயிலுக்குள் புகும் பக்தர்களில் அவரைக் கையெடுத்துக்கும்பிடாதவர்கள் குறைவு.

“கூலிக்காரனுக்கு இம்புட்டு மருவாதியா?” என்று முதலாளியே சிலநேரம் நினைத்துக்கொள்வார். கடைக்குவருபவர்களை “வாருங்கோ” என்ற ஒற்றைச்சொல்லால் வரவேற்று அவர்கள் மனம் குளிரும்படியாய்ப் பொருள் தருவார்.

ஒற்றைத் தேங்காயா, இரண்டா எனக்கேட்டுத தெரிந்துகொண்டு ஒற்றைக்காய் என்றால் ஐந்து வாழைப்பழங்களும் இரண்டுகாய் என்றால் ஒன்பது பழங்களும் வைத்து, சூடம் சாம்பிராணி, இலைபாக்கு, ஒருமுழப்பூவோடு தட்டை நீட்டினார் என்றால் அந்த சிவபெருமானே வந்து கையேந்தித் தருவதுபோல இருக்கும். பிராமணப்பெண்கள் வந்தால் ஒருதேங்காய், இரண்டு பழங்கள் மட்டும் வைப்பார். மற்றபொருட்களும் சேர்த்து தலைகுனிந்து வலதுகை நீட்டித்தருவார். பிராமணர்கள் கடவுளுக்குச்சமம் என்பது அவர் ஐதீகம். அவருடைய பவ்வியத்துக்காகவே அந்தக்கடைக்கு அதிகம்பேர் வந்தார்கள். அப்பேர்ப்பட்ட உத்தமனுக்கு மகனாகப்பிறந்தவன்தான் சம்பங்கிநாராயணன். அவன் பிறக்கும்போதே கைச்சக்கரத்தோடு பிறந்ததாய்ப் பலரிடமும் சொல்லிமகிழ்ந்தார். அதனால்தான் நாராயணமூர்த்தியின் பெயரைவைத்தார். வித்தியாசமாக இருக்கட்டும் என்று “சம்பங்கிநாராயணன்” என நாமகரணம் சூட்டினார்.

மூன்று வயசிலேயே நன்கு பேச ஆரம்பித்தான் சம்பங்கிநாராயணன். பிசிறுதட்டாத வார்த்தைகளால் அவன் பேச்சுமொழி மெருகேறியிருந்தது. பக்கத்து வீட்டுப்பெண்கள் எல்லாம் அவனைக் கொஞ்சிமகிழ்ந்தனர். கனகக்கா அவனைத் தூக்கிச்சென்று பாலும் சோறும் ஊட்டி, விளையாடி, தூங்கவைத்து, பலமணிநேரம் கழித்து வீட்டில் கொண்டு வந்து விட்டுச்செல்வாள்.

சில வாலிபர்களும் கூட அவனோடு வம்பிழுத்து மகிழ்ந்தனர். இப்படியாக அவன் குழந்தைப்பருவம் குதூகலத்தோடு நடந்துகொண்டிருந்தபோது திடீரென அவன் தந்தை இறந்துபோனார். அவர் மரணம் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. கடையும் கோயிலுமாக அலைந்தபடியிருந்ததால் தந்தை முகம் பார்க்காமலேயே வளர்ந்தான். பதினாறுநாள் காரியம் முடிந்தபிறகு முதலாளி வீட்டுக்குவந்தார். “சிவபெருமான் மாதிரி மனுஷன்: குடுத்துவக்யலியே.” முதலாளியின் கரிசனம் கண்டு உருகினாள் அம்மா.

செலவுக்குப்பணம் தந்துவிட்டு, வாய்ப்பிருந்தா அவருக்குப்பதிலா நீயே வந்து கடையக் கவனிச்சுக்கோ: அவருக்குத் தந்த அதே சம்பளத்த ஒனக்குந்தாரேன்.” என்றார். காலம் கணவனை மறக்கடித்தது. சிலநாட்களில் சோகம் தணிந்தபோது முதலாளியின் வார்த்தைக்கு அடிபணிந்து கடைப்பணிக்குச் சென்றாள். ஒரு வெள்ளிக்கிழமை வளர்பிறைநாளில் சீவி சிங்காரித்து கடைக்குப்போனாள். சாட்சாத் பார்வதி தேவியாகவே தோற்றம் தந்தாள். என்று முதலாளி புகழ்ந்து பேசினார். கடைப்பணியில் மட்டுமா? இரவுகளில் வீட்டுக்குவந்து  அவளோடு படுத்திருந்துவிட்டுப் போவார். பக்கத்து வீடுகளில் அவளைப் பற்றி வேறுவேறு வார்த்தைகள் புரண்டன. ஐந்து வயது நிரம்பிய போது பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அவள் கடைப்பணிக்குச் சென்றுவிட்டதால் நாராயணன் பள்ளிக்கூடம் போவதைக் கண்காணிக்க முடியவில்லை. நண்பன் மாரியப்பனோடு சேர்ந்து ஊர்சுற்றினான்.

Sea, Sand and Sky: July 2018

கூட்டாத்துக்குப் போய் நண்டு நத்தை பிடித்து விளையாடினான். ஆற்று வெள்ளமும் அதன்கரையில் வாழ்ந்த ஜீவராசிகளும் இவனுக்கு இணக்கமாய் இருந்தன. பாம்பு, பல்லி, நண்டு எது கிடைத்தாலும் பிடித்துச் சுட்டுத் தின்றான். அம்மா வாங்கித் திங்க்ய காசுகொடுத்தபோது தீப்பெட்டி வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். எந்தப்பூச்சி கிடைத்தாலும் சுட்டுத்தின்பதை வாடிக்கையாக்கினான். அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்பதாய் இல்லை. இரண்டாவது கணவனுக்குக் கருத்தரித்தபோது ‘’எக்கேடும் கெட்டுப்போ’ என்று விட்டுவிட்டாள். காலப்போக்கில் அம்மா கண்டுகொள்ளவில்லை எனத் தெரிந்தபோது மேலும் சுதந்திரமானவனாய் அலைந்தான் சம்பு.. இரவில் மட்டும் வந்து போகும் முதலாளி இப்போது வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிட்டார். சம்பு இப்போது வீதிவீதியாய்ச் சுற்றித் திரிந்தான். அம்மாவுக்குத் தம்பி பிறந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. முதலாளி அம்மாவைவிட்டு விலகிச் சென்று விட்டார் என்று கேள்விப்பட்டு வீட்டுக்குவந்தான் சம்பு. அம்மா முதலாளி வீட்டுக்குப்போய் சண்டை போடவில்லை.

“மூத்தபொண்டாட்டிக்கி அவர் துரோகம் செஞ்சாரோ இல்லையோ, நான் துரோகம்
செஞ்சுட்டேன்” என்று புலம்பினாள்.

சம்பு வழக்கம் போல் ஆற்றங்கரைகளில் அலைந்து திரிந்தான். தூண்டி முள் வாங்கி மீன் பிடித்தான். தண்ணிப் பாம்புகளைப் பிடித்து உரித்துக் கறியாக்கினான். நண்டுபிடித்து கொடுக்குநீக்கி சதைப்பகதியைப் பாம்புக்கறியோடு கலந்து அம்மாவிடம் கொண்டுவந்து தந்தான். பாம்புக்கறி என்று தெரியாமலே அம்மாவும் சமைத்துச்சாப்பிட்டாள். சம்பு அம்மா வீட்டில் அதிகம் சாப்பிடுவதில்லை. சுட்டுச்சாப்பிடுவதில் உள்ள ருசி சமைத்துச் சாப்பிடுவதில் இல்லையே.. ஒரு நாள் கூட்டாத்துக்குப் போகாமல் குளித்துத்து வைத்து வரலாம் என்று முல்லையாத்துக்குப் போனான்.

முல்லையாறும் கொட்டகுடியாறும் கலக்குமிடம் கூட்டாறு: அதற்கு மேல்புறத்தில் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது முல்லையாற்றுப் பகுதி. அங்கு ஆறு கட்டுக்கடங்காத வேகத்தில் பாய்ந்தது. மதம்பிடித்த யானையைப்போல பிளிறிக்கொண்டு ஓடியது. அங்கு இரண்டு இளம்பெண்கள் குளித்தபடி இருந்தனர். வேறு யாரும் காணப்படவில்லை. அவர்கள் ஒன்றும் செல்வச்செழிப்பான மேனியைக் கொண்டவர்களாய் இல்லை. அதற்காக வற்றிப்போன உடம்பு என்றும் சொல்ல முடியவில்லை. உருண்டை முகத்தடியில் நெஞ்சுமேடு சிறுக்காமலும் பெருக்காமலும் இருந்தது. வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டே இருந்தான். ஏற்றிக்கட்டிய பாவாடை அடிக்கடி அவிழ்ந்தது. அவர்கள் மேனியெங்கும் விழிகளை ஓடவிட்டான். ஒருத்தி உம்மணா மூஞ்சியாகவும் இன்னொருத்தி சிரிப்பை உதிர்த்தவளாகவும் இருந்தனர்.

“என்னய்யா அப்படிப்பாக்குற?” என்றாள் சிரிப்புக்காரி.

“தண்ணிப்பாம்புமாதிரி அழகா இருக்கியே: அதான்….”

“என்னா சொன்ன? நான் தண்ணிப்பாம்பா? எங்களப்பாத்தா எளக்காரமா இருக்காக்கும்?”

“பாம்புகள்லயே ரெம்ப அழகானது தண்ணிப்பாம்புதான? சிக்குன்னு சின்ன ஒடம்பு.”

சிரிப்புக்காரி மேலும் சிரித்தாள். “தண்ணிப்பாம்புதானைன்னு நெனச்சு
பிடிக்யவராத: இறுக்கிச் சுத்தி முறுக்கிரும். ஒடம்பு அப்பளமா சப்பளிஞ்சுபோகும்.” சொல்லிவிட்டுக் கெக்கெகெ என்று சிரித்தாள். உம்மணாமூஞ்சிக் குளித்துமுடித்து மேடேறிக். கூந்தலை உதறி உலரவிட்டாள். சிரிப்புக்காரியைப் பார்த்து அவள் சொன்னாள். “வாக்குடுக்காதடி:
தண்ணிக்குள்ள அமுக்கினாலும் அமுக்கிருவாரு.”

“என்னய எதுக்கு அமுக்குறாரு: ஒனக்கு ஆசையா இருந்தா தொறந்துகிட்டு வா:
அவளப்பிடிச்சு அமுக்குங்க.”

“அய்யய்யோ, அதுபாவம்; தாங்காது. நீவேண்ணா வா.”

“வம்புபண்ணாதீங்க: உண்மையாலுமே வந்துருவேன்.”

அவள் முகத்தில் நாணம் படர்ந்த்து. உம்மணாமூஞ்சி அவன் முகத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். பிறகு நாணல் புதருக்கு அருகில் சென்று அந்தப்பக்கமாய்த் திரும்பிப் பாவாடையை இறக்கி, சாயம்போன தாவணியைக் கட்டினாள். இரண்டு அழகிகளையும் விடாமல் ரசித்தான்.

“எங்கிட்ட வந்திருவியா?” என்றான் நாராயணன்.

“கிட்ட வாரதென்ன: வீட்டுக்கே வந்திருவேன்.”

“எனக்குத்தான் வீடு இல்லையே.”

“அப்ப நீங்களும் பொறம்போக்குத்தானா?”

“அடிப்பாவி! பொறம்போக்கா?”

“பின்ன” நாங்தான் சந்தமடத்துல ஜாகபோட்டுருக்கோம்: நானும் இவளும் சந்தக்கி
வார யாவாரிக கிட்ட ஏண்டவேல எடுப்புவேல செஞ்சு குடுக்குற
கூலியவாங்கிக்காலத்த ஒப்பேத்துறோம்.”

“பரவால்லயே: நீங்களாவது வேலவெட்டிசெஞ்சு சீவிக்கிறீக: நான் வெறுங்கட்ட:
மீன்பிடிச்சு வித்துக் காலத்த ஓட்டுறேன்:”

“நல்லதாப்போச்சு: நீங்களும் எங்ககூட வந்திருங்க: ஒண்ணுமண்ணாக் கெடப்போம்.” நல்ல யோசனையாய்த் தோன்றியது நாராயணனுக்கு. தீண்டினால் சம்மதித்தாலும் சம்மதிப்பார்கள். அவன் செய்யவில்லை. மறுநாள் சந்தைவெளிக்குப் போனான். பத்துக்குப்பத்து அளவில் காட்சியளித்தன வியாபாரக் கிட்டங்கிகள். வாரம் ஓருமுறைவந்து வியாபாரம் விற்று விட்டுச் சென்று விடுவபர்கள். அதில் தங்கிக் காலம் கடத்தும் அநாதைகள் கூட்டிப்பெருக்கி சுத்தப்படுத்தி வைப்பார்கள். வியாபாரிகளுக்கு விற்பனைக்கு ஒத்தாசையும் செய்வார்கள். அவர்கள் கொடுக்கும் காசு போதாதபோது பிச்சையெடுத்தோ, பெரும்பெரும் கடைகளுக்குக் காலையில் சாணித்தண்ணீர் தெளித்தோ, ஒரு சிலர் தேடிவருபவர்க்கு முந்தானை விரித்தோ பிழைப்பு நடத்தினர்.

நாராயணன் வருவதை உம்மணாம் மூஞ்சிதான் முதலில் பார்த்தாள். “அங்கபாருடி, தண்ணிப்பாம்புக்காரன்.”

ஏறிட்டுப்பார்த்தான். இருவரும் கலயத்தில் வைத்துக் கஞ்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். வாசலில் மூன்றுகல் அடுப்பு கிடந்தது. அவர்களே சமைத்துக்கொள்வார்கள் போலும். அடுப்பில் தீ அமத்தப்பட்டு கரிக்கட்டை அடுப்புக்குவெவளியில் பின்னரித்துக்கிடந்தது. ஒவ்வொரு கிட்டங்கிக்கு முன்னாலும் இதே தோரணையில்தான் சமயல்பணி நடந்திருந்தது.

“ஏ தண்ணிப்பாம்புகளா! இங்கதான் இருக்கீகளா?”

“பெறகு? நாங்க என்ன சொந்தவீட்டுக்காரிகளா?” உம்மணாமூஞ்சி பதில்சொன்னபோது சிரிப்புக்காரி அமைதியாய் இருந்தாள். ஆற்றில் அப்படி வாயடித்தவள் இங்கு மௌனமாய் இருக்கிறாளே. அருகில்போய் அமர்ந்து கலயத்துக்கஞ்சியை ஆள்காட்டிவிரலால் அளைந்தான். உம்மணாம்மூஞ்சி அவன் விரலைத் தீண்டினாள். சிரிப்புக்காரி தலையால் அவன் தோளில் இடித்தாள்.

“ஒம்பேரென்ன?”

“பச்சநதி” என்றாள் உம்மணாம் மூஞ்சி.

“நிய்யி?”

“சொல்லித்தான் ஆகணுமா?”

“ஒன் இஷ்டம்.”

“பேர்சொன்னா என்ன தருவீக?”

“எதுகேட்டாலும் தாரேன்.”

“ஒங்க கிட்ட சிவிங்கி இருக்கா?”

“சிவிங்கியா, எதுக்கு?”

“சப்புறதுக்குத்தான்.”

நாராயணன் ஏதும் புரியாதவனாய் இருந்தபோது இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். பச்சைநதி சோற்றுக்கையோடு இவன் கன்னத்தில் இடித்தாள்.

Ananda Vikatan - 11 October 2017 - ஃபாதியா - சிறுகதை ...

“சப்பி ஓட்டசாட்டைய அடைக்யலாமுல்ல.” நாராயணனுக்கு ஏதோ புரிவதுபோல் தோன்றியது. மளிச்செனத் தவ்விப் பச்சைநதியை அணைத்துக்கொண்டான். வெளியில் நடந்துகொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி,

“ஒதுக்கஞ்சதுக்கத்துக்குப் போங்களா” என்றாள்.

“மூடிக்கிட்டுப்போ” என்றாள் சிரிப்புக்காரி. மூதாட்டி நின்று ஏறிட்டுப்பார்த்தாள். “நாங்க தொறந்து தொறந்து காட்டித்தான் இப்படி வங்குவிழுந்து கெடக்கோம்: நீங்களாச்சும்; நல்லாருக்கட்டும்னு சொன்னா…. கேட்டாக்கேளு, கேகாட்டி ….ளு” என்றாள். இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர். நாராயண்னுக்குச் சிரிப்புவரவில்லை. அவர்களின் கஞ்சியிலிருந்து கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக்கொண்டான். அமுதமாய் இருந்தது. சிரிப்புக்காரி தன்பெயரைச் சொன்னாள். “முத்துமீனா.”

“நாளக்கி வாரேன்” என்று சொல்லிவிட்டு நேராக முல்லையாற்றுக்குப் போனான். இன்றும் இரண்டு பெண்கள் குளித்தனர். வத்தலும் தொத்தலுமாய் இல்லாமல் செழித்தமேனியராய் இருந்தனர். ஏனோ அவர்களை ஏறிட்டுப் பார்க்கப்பிடிக்கவில்லை. குதித்தோடியவெள்ளத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்தான். அந்த இருவரும் ஏடாசியாய்ப்பேசிச் சிரித்தனர். எந்த ஏடாசியும் இவன் மனசுக்கு நெருக்கமாய் வரவில்லை. அந்த இருவருக்குள்ளும் பச்சநதியும் முத்துமீனாவும்தான் தோன்றினார்கள். இருவரில் ஒருத்தி இவனைக்கூப்பிட்டாள்.

“என்ன?” என்றான்.

“எம்புட்டுவச்சிருக்க?”

கையைவிரித்து ‘இல்லை’ என்றான்.

“தூத்தறி: துட்டுதுக்காணி இல்லாம எதுக்கு பொம்பளைக குளிக்கிற எடத்துக்கு வார?” என்றாள்.

ஓடிச்சென்று அவளைத் தண்ணிக்குள் தள்ளிமுக்கி…. என்று நினைத்தான். இன்னொருத்தி எதிர்க்கரையில் இருந்த ஓர் ஆண்மகனோடு சைகையில் ஏதோ பேசினாள். இருவரும் விரல் நீட்டி விரல்நீட்டிப் பேசினர். பேச்சுவார்த்தை முடிந்ததும் சரேலெனத் தண்ணிக்குள் குதித்து நீச்சலடித்து எதிர்க்கரைக்குப்போனாள்.

என்ன அழகான நீச்சல்! ஜட்டியும் ஏற்றிக்கட்டிய பாவாடையும் நீரோட்டத்தில் அலைந்தன. முன்நீண்ட கைகள் தண்ணீரை விலக்கி முன்னேறின. வலதுகையால் தண்ணீரை  அமுக்கியபோது இடதுபுறமும் இடதுகையை அமுக்கியபோது வலதுபுறமும் முகம் திரும்பியது. மூச்சுத்திணறலில் இருந்து மூக்கை விலக்கிவைப்பதற்கான உத்தி. எதிர்க்கரையில் ஏறியதும் ஜட்டியைக் கழற்றி மேனியைத் துடைத்தாள். கூப்பிட்டவன் சிரித்தமுகத்தோடு அவள் கையைப்பற்றினான். தோளை அணைத்தபடி ஒரு பாரைப்பொடவுக்குள் இழுத்துப்போனான். இக்கரையில் இருந்தவள் இவனைக் கேலியாய்ப்பார்த்துச்சிரித்தாள்.

“ஒனக்கெல்லாம் என்னவயசிருக்கும்? அவம்பாரு: கெழட்டுநாயி:
எம்புட்டுப்பதனமா இழுத்துட்டுப்போறான்: ஒனக்கென்ன மாடு
மிதிச்ச்சிருச்சா?”

அலாதியாய்க்கிடந்த கல்லில் துவைத்துக் காயப்போட்டுவிட்டுக் குளித்துக் கரையேறினான் நாராயணன். எதிர்க்கரைக்குப்போனவள் திரும்பவும் நீச்சலடித்துத் திரும்பினாள். துண்டெடுத்துத் துடைத்தவள் “இவங்கிட்ட ஒண்ணும் படியலியா?” என்றாள்.

“அவனா………..”

“அப்படித் தெரியலியே: காசில்லையோ என்னமோ?”

முத்துமீனா, பச்சநதியுடனான பழக்கம் பலநாட்கள் நீண்டது. மீன்பிடித்துவந்து இருவருக்கும் தந்தான். பாம்புக்கறி என்று தெரிந்தே அவர்கள் சாப்பிட்டார்கள். கல்லடுப்பில் கறிவெந்தபோது குடியிருப்புக்காரிகள் பொறாமையோடு பார்த்தனர். காலப்போக்கில் அந்த இருவரோடும் தங்க ஆரம்பித்தான். அவர்கள் உள்ளேயும் இவன் வாசப்படியை ஒட்டிய பகுதியிலும் படுத்துக்கொண்டனர்.

ஒருநாள் மழை பொதுபொதுவெனப் பொழிந்து தள்ளியது. கூதலில் நடுக்கம் உண்டானது. பெண்கள் இருவரும் சேலையைப் போர்வையாக்கியபோது இவன் வேட்டியை அவிழ்த்துப் போர்த்திக்கொண்டான். முன்பகுதியில் சாரசல் தெறித்தது. உள்ளே தள்ளிப்படுத்தான். இன்னும் உள்ளே உள்ளே போனபோது பச்சைநதியின் மேனி உரசியது. அவளும் முழித்தே இருந்தாள்.

“ரெம்பக்குளுருதா?”

“ஆமா புள்ள.”

“நாங்க இப்படியே பழகிட்டோம். நீங்க வீட்டுக்குப் போகவேண்டியதுதான.”

“இச்! இனிமே நமக்கு வீடு ஒத்துவராது. எவனாச்சும் வீட்டுக்கு வருவான்:
அம்மாவுக்கு எடஞ்சலா இருக்கும்.”

பிடித்த கதைகள்.. - Google Groups

பச்சைநதி இவன்மேல் கைபோட்டு இதமான உஷ்ணத்தைப்பரப்பிவிட்டாள். சிறிதுநேரத்தில் இவனும் அவள்மேல் கைபோட்டான். பிறகு இறுக்கி அணைத்துக்கொண்டார்கள். குளிரிலிருந்து முழுமையான விடுதலை. நிறைவாக அவர்களின் வெற்றுமேனிகள் உரசிக்கொண்டன. காலை விழித்தபோது சம்பு விலகி வழக்கமான இடத்தில் படுத்திருந்தான். பச்சைநதியின் முகத்தில் சந்தோஷக்களை படர்ந்திருந்தது. குண்டாச்சட்டியை எடுத்துப்போய்க் கோயில் கிணற்றில் தண்ணீர் இரைத்துவந்தாள். எழுந்து உட்கார்ந்திருந்தாள் முத்துமீனா. பச்சைநதியைப்பார்த்து “நீமட்டும் சாப்பிட்டாப்போதுமா?” என்றாள். “நீயும் பங்குக்கு வந்திருக்கவேண்டியதுதான?” “நீயாக்கூப்பிடுவைன்னு பாத்தேன்.” அந்தப்பக்கம் திரும்பி வெட்கமாய்ச்சிரித்தாள் பச்சைநதி.

“ஒடம்பு வலிக்கிதுடி.” “இன்னக்கி நாஞ்சாப்பிடுவேன்: நீ பங்குக்கு வரக்கூடாது.” எதுவும் பேசாமல்
அமைதியாய் இருந்தாள் பச்சைநதி. சம்பு வருகைக்காகக் காத்திருந்தாள் முத்துமீனா. இரவு பத்துமணியாகியும் அவன் வரக்காணோம். இருவருமே எதிர்பார்த்து சாப்பிடாமல் வீதியை எட்டியெட்டிப்பார்த்தபடி இருந்தனர். முத்துமீனாவுக்குச் சந்தேகம்: தான் சாப்பிடுவதை விரும்பாமல் பச்சைநதி அவன் வருவதைத் தடுத்திருக்கக்கூடுமோ

ஆனால் அவளுந்தானே எதிர்பார்க்கிறாள். சுகம் கண்டவள் விடுவாளா? காத்திருந்தவர்கள் சோர்ந்துபோய்ப்படுத்தனர். முத்துமீனாவுக்கு ஒருபொட்டுத் தூக்கம் வரவில்லை. மழையும் வராமல் அவனும் வராமல் வியர்த்துக்கிடந்தது. மழைவந்திருந்தால் அவன் வந்திருக்கக்கூடும். பலநாட்கள் கடந்தன. பச்சைநதியோடு மட்டும்தான் அவன் உறவுகொண்டான். முத்துமீனா ஏக்கப் பெருமூச்சு விட்டபடி இருந்தாள். இருவருக்கும் உரசல் உண்டானது. பச்சைநதியைத் தேவடியா என்று திட்டினாள் முத்துமீனா. வாய்ச்சண்டை வலுத்துமுற்றியபோது பச்சைனதி ஜம்புவிடம் சொன்னாள்.

“நாம வேற எங்கயாச்சும்  போயிருவோம். தெருப்பொறுக்கி முண்டைக கண்ணுப்பட்டே நாம
நெலகொலஞ்ஞ்சிடுவோம்.” வேண்டாம் என்று தோன்றியது சம்புவுக்கு. ஒற்றுமையாய் வாழ்ந்தவர்களைத் தனது வருகை சிதைத்துவிட்டது. வருத்தப்படமுடிந்ததே தவிர நிவாரணம் தேடமுடியவில்லை. பச்சைநதியை எங்கேபோய்க் குடிவைப்பது.

“இங்கயே இருக்கலாம்” என்றான் சம்பு. “என்னோட வீட்டுக்குப்போகமுடியாது.”

“ரோட்டோரத்துல படுத்து எந்திரிப்போம்: எத்தனையோபேரு சாக்கடை கிட்ட
படுத்துக்கெடக்காக: இந்த சந்தைக்குள்ளயே போய்ப்பாருங்க: பலஜோடிக
புழுதிக்குள்ள மொடங்கிக் கெடக்குக.”

கூரைக்கடியில்தான் குடும்பம் நடத்தமுடியும். என்பது யதார்த்தமல்ல என்பதை
விளக்கமாகச் சொன்னாள். வானத்துக்குக்ழேயும் வாழமுடியும்.

“அப்ப ஒரு ஓசனசொல்லு.”

“கிட்டங்கிக்கிப்பின்னாடி இருக்குற வாழக்காக்கொடோனுல வாழப்பழம் வாங்கி
ரோட்டோரம் போட்டுவிப்போம்: அங்கனயே படுத்துக்கிருவோம்.”

புதுவிதமான யோசனையாய் இருந்த்தது. இப்படியும் கூட வாழமுடியுமா? அரைமனசோடு
சம்மதித்தான். வாழைக்காய் வியாபாரி மாரிச்சாமி பச்சைநதியைப் பாராட்டினார். “தொழில் செஞ்சு பொழக்யணும்னு நெனச்சபாரு: ஒனக்கு எம்புட்டுவேணும்னாலும் கடந்தாரேன்: வித்துவித்துக்காசு தந்தாப்போதும்.”. முதலில் நூறுபழம் மட்டும் வாங்கிவிற்றார்கள். அன்ன்றைக்கெ விற்றுத்தீர்ந்த்து. அளவான சம்பளம் கிடைத்தது. பரவாயில்லை. இதுவரை சின்னச்சின்ன வேலை செய்து வாழ்ந்ததைவிட இது மேம்பட்டதுதான்.

அன்றைக்கும் சந்தை மடத்தில் தான் படுத்தார்கள். முத்துமீனா முனங்கிளனாள். ‘தட்டுவானி’ என்று திட்டினாள். அவளும் தானும் வேறுவேறு கிராமங்களிலிருந்து தேனிக்குவந்து பழகி எப்படியெல்லாம் வாழ்ந்தோம். அடுத்தவனுக்கு முந்திவிரிக்காமல் கூலிக்குப்போய் சாப்பிட்டோம். தான் அவளுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறேன். சாகக்கிடந்தவளை பெரியாஸ்பத்திரிக்கிக்கூப்பிட்டுப்போய் குணப்படுத்தியதை மறந்துவிட்டாளே. ஒரு ஆம்பள கெடச்சதும் பழச மறந்துட்டாளே: நன்றிகெட்ட முண்ட.’ கடைவீதியில் பாப்பாராவுத்தர் டீக்கடை நடத்திக்கொண்டிருந்த்தார். அவர்கடைமுன் ஜாதிக்காப் பெட்டிபோட்டு அதன்மேல் பழங்களை அடுக்கிவிற்றனர். நாளுக்குநாள் வியாபாரம் கூடியது. ஒரு முகூர்த்தநாளில் விற்பனை சள்ளைபரிந்தது. சாப்பாடுபோக சேர்த்துவைக்கும் அளவுக்குக் காசு கிடைத்தது.

“வாடகவீடு பாக்கலாம்ல” என்றாள் பச்சைநதி.

“பாப்போம்” என்றான்.

மாரிச்சாமி உயரமான ஜாதிக்காப்பெட்டியைத் தந்து “இதுமேலவச்சு வில்லுங்க:
இன்னுங்கூடுதலா விக்யும்.” என்றார். அப்படியே நடந்தது. இன்னெருவசதி,

இருவரும் ஒருசேர உள்ளேயே படுத்துக்கொள்ளவும் முடிந்தது. பாப்பாராவுத்தர்
விற்காத பழங்களைத் தன்கடைக்குள் வைத்துக்கொள்ள அனுமதித்தார். மிச்சமான
காசுகளையும் அவரிடமே கொடுத்துவைத்தார்கள். இப்படியே வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தபோது தன் தாயார் குடியிருக்கும் வீதியில் அவள் உதவியால் ஒருகுடிசைவீடு வாடகைக்குக்கிடைத்தது. அடிமட்டத்தில் கிடந்த வாழ்க்கை முகடுநோக்கி நகர்வதை உணர்ந்து பூரித்துப்போனாள் பச்சைநதி. சம்புவுக்கும் பெருத்த சந்தோஷம். கூரைக்கடியில் படுத்துக் கொள்ளக்காலம் ஆகிவிட்டது. வீட்டுக்குக்குடியேறியபோது முத்துமீனாவை அழைத்திருந்தான். ஏழு கன்னிமார்கள் குடியிருந்த சாமி படம் ஒன்றைவாங்கிவந்து ஈசானிமூலையில் ஆணியடித்து மாட்டிவிட்டாள். சம்புவின் காலைத்தாட்டுக்கும்பிட்டாள்.

“நீங்கதான் ஆம்பள.”

மாலைவரை அங்கேயே இருந்து இரவு உணவைமுடித்தாள். முத்துமீனா. சம்புவின்
அம்மாவோடு கலகலப்பாகப் பேசினாள். அம்மா, தம்பி, பக்கத்துவீட்டுப்
பெண்களிடமும் எளிதாய்ப் பழகினாள்.

விடைபெற்றபோது பச்சைநதியைத் தனியாக அழைத்து “ஓகக்காரிநீ” என்றாள்.
“சந்தமடத்துக்குள்ள ஆம்பளைக…..ஆம்பளைக இருப்பாகள்ல?” தயக்கத்தோடு
கட்டாள் பச்சநதி.

கரகரவெனக் கண்ணீர் சிந்தியது. மலை உச்சியிலிருந்து மடமடவென இறங்கிவரும்
ஊற்றுநீர்போல கன்னத்தின் வழியே இறங்கியது. “ஆம்பளையா முக்கியம்? புருஷன்:
நல்லபுருஷன்: குடும்பமா வாழ விரும்புற உண்மையான ஆம்பளதான் எனக்குவேணும்.”
அவள் வீதியில் இறங்கிநடப்பதை அனுதாபத்தோடு பார்த்தாள் பச்சைநதி.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

2 thoughts on “சிறுகதை: குடும்பம்! – தேனி சீருடையான்”
  1. நிம்மதியான வாழ்க்கைக்காக ஏங்கும் நேர்மையான பெண் மனதினை பளிச்சென வரைந்துள்ளார் சீருடையான். சிறந்த இலக்கியம் படைத்துள்ளார். சபைக் காரர்களையும் நல் வழிப்படுத்தும் எழுத்து.

    ரவிசங்கர்.

  2. சபலக்காரர்களையும் நல் வழிப்படுதும் எழுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *