சிறுகதை: தாய் மனசு – திருமதி.சாந்தி சரவணன்

STC136995 Mother and Three Children (pencil on paper) by Burne-Jones, Sir Edward (1833-98) pencil on paper Victoria & Albert Museum, London, UK The Stapleton Collection English, out of copyright

 

குமுதா என்றால்  எங்கள் ஏரியா காசிமேடில் தெரியாதவர்கள்  யாருமே இல்லை.  எந்நேரமும் வெத்தலை பாக்கு போட்டு கொதப்பி கொண்டு வீட்டின் சுவற்றில்  அவளுடைய எச்சம் தான் முகவரையாக இருக்கும்.

வீட்டு வாசலில் நடை வண்டி கடை. முட்டை பஜ்ஜி, சிக்கன் 65,  மீன்  வருவல்  விற்பது தான் அவளுடைய வாழ்வாதாரம்.  கல்யாணம் முடிந்து‌ ஆறு மாதங்கள் மட்டுமே கூடி வாழ்ந்து அவளுக்கு பரிசாக குழந்தையை வயிற்றில் கொடுத்து விலையாக அவளின் நகைகள் மற்றும் புடவையில் அவள் சேமித்து  மடித்து வைத்து இருந்த காசுகளோடு   தலைமறைவாகி விட்டான் அவளின் கணவன்  காசி. இப்போ  எந்த கண்டத்தில் தலை மறைவாக இருக்கிறான் என யாருக்கும் தெரியாது.  அன்று அவள் அந்த நடைவண்டி கடையை ஆரம்பித்தாள். மாசமா இருக்கிற பொண்னை இப்படி ஆம்போனு விட்டுட்டு போய்டானே என குப்பத்து ஜனம் காசியை சாடி கொண்டே இருந்தது.  குமுதா பேசும் சப்தம் கூட வெளியே கேட்காது‌. ஊரே அவளை பார்த்து பரிதாப மழையில்.   ஊர்காருங்க ஒத்தாசை செஞ்சதால வீட்டிலியே சுக பிரசவம். அழகான பெண் குழந்தை பிறந்தது. மணிமேகலை என அவளுக்கு பெயர் வைத்தாள். மகள் என்றால் அத்தனை பிரியம்  மனதிற்குள்.

மணிமேகலை பிறந்த பின் அவள்  மேல் சண்டைகாரி என போர்வையை போர்த்தி கொண்டாள் குமுதா.  கிராமமே அவளை கண்டால் அஞ்சி  ஒதுங்கி செல்லும் அளவிற்கு.  எப்படி இருந்தவள். வாயில்லா பூச்சி என நினைச்சோம் இப்போ பஜாரி மாதிரி கத்தறா என்றனர் அக்கம் பக்கத்தில்.  ஆதனால் தான் காசி ஓடி போட்டான் போல. ஆத தெரியாமல் பாவம் அந்த புள்ளையை பழிச்சோமே என்று சிலர்.  எதற்கும் குமுதா அஞ்சவில்லை. சில நேரங்களில்  அவளின் கூச்சலை கேட்டு சூரியன் கூட வானத்தை  கிழித்து கொண்டு உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும்.

கணவன் விட்டு சென்று 20 வருடங்கள் கடந்து விட்டது.  மேகலையும்  வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள்.   படிப்பு ஏறவில்லை. லெதர் கம்பெனி வேலை.   

அவளுக்கு அம்மா என்றால் பிடிக்கவே பிடிக்காது.  அதுவும் அவளின் கூச்சல் இவளை கொல்லும். அவள் வாயை அடைக்க பல முறை சொல்லி பார்த்தாள், கெஞ்சி பார்த்தாள் அவள் கேட்கும் படி இல்லை.  

ஒரு பய  கடையில் ஐந்து நிமிடத்துக்கு மேல் நிற்க விட மாட்டாள் குமுதா.   சாப்பிட்டு சட்டு புட்டுன்னு  கிளம்பு எதுக்கு இங்க நிக்கிற,  இடத்தை காலி பண்ணு, என அவர்களை துறத்துவதில் கூறியாக  இருப்பாள்.  மாலை நாலு மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை ஓத்த ஆளா பொம்பரமாக சூழன்று வேலை செய்வாள். சில சமயங்களில் மணிமேகலை உதவிக்கு போகலாம் என்று சென்றால் கூப்பாடு போட்டு துறத்திவிடுவாள்.

மணிமேகலை சே உனக்கு போய் ஓத்தாசைக்கு வந்தேனே,  என்னை சொல்லனும் என தலையில் அடித்து கொண்டு சென்று விடுவாள்.

ஒருவரையும் வீட்டு பக்கம் சேர்க்க மாட்டாள் குமுதா. மேகலை  லெதர் கம்பெனிக்கு  போகும் போதும் வரும் போதும் காவலாளி போல் உடன் செல்வாள்.  கையில் தூப்பாக்கிக்கு பதில் வாயில் சொல்லோடு…  மேகலைக்கு எரிச்சல் தாங்காது.  வேறு வழியில்லாமல்  அம்மாவை  பின் தொடருவாள். அதுமட்டுமல்ல இரண்டே இரண்டு தாவணி மாத்தி மாத்தி கட்டிக் கொண்டு போக வேண்டும். புதுசு கேட்ட வாங்கி தர மாட்டாள்.  சம்பாதிக்கிற பணத்தை என்ன செய்யறாளோ என மனதில் ஆயிரம் கேள்விகள் மேகலைக்கு. தோழிகளின் நய்யாண்டி பேச்சு தவிர்க்க அதிகமாக யாருடனும் பேச மாட்டாள் மேகலை.   அம்மா எப்போது நமக்கு கல்யாணம் செய்து வைப்பாள். இவளை விட்டு போனால் போதும்.  திரும்பி பார்க்கவே கூடாது.  புருஷன் விட்டில் கஞ்சியோ கூழோ குடித்து நம் வாழ்க்கையை தொடர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு உள்ளாள்.

அரசு நிறுவனத்தில் தட்டச்சு பணியாளராக பணியாற்றி வரும் கந்தசாமி தூரத்து சொந்தம்.  எப்படியாவது அவனை தன் மாப்பிள்ளையாக  ஆக்கிவிட வேண்டும் என்பது குமுதாவுடைய நெடுநாள் கனவு. 

மத்திய வேலையில் அவன் வேலை செய்யும் அலுவலகத்திற்கு விதவிதமான உணவு வகைகள் செய்து கொண்டு போய் கொடுத்து விட்டு வருவாள். கந்தசாமி உணவு பிரியர். குமுதாவின் கைமனத்திற்கு அவன் அடிமை.

மேகலை புகைப்படத்தை அவனிடம் கொடுத்து உனக்கு பொண்ணு புடிச்சு இருந்தா அப்பா அம்மாவிடம் சொல்லி பொண்ணு  பார்க்க வா தம்பி  என  சொல்லிவிட்டு வந்தாள். புகைப்படத்தை வெட்கத்துடன் வாங்கி கொண்டான் கந்தசாமி.

ஒரு நல்ல நாள் பார்த்து குடும்பத்தோடு கந்தசாமி மேகலையை பெண் பார்க்க வருவதாக சொன்ன நிமிடம் குமுதாவிற்கு மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அன்னைக்கு நிறைஞ்ச முகர்த்த நாள்.  கந்தசாமி குடும்பத்தோடு வந்து பெண் பார்க்கும் படலம் முடிந்தது.  அனைவருக்கும் மேகலையை பிடித்து இருந்தது.  

கந்தசாமியின் மாமா மூர்த்தி என்னம்மா சந்தோஷமா.  வர தை மாசம் 15ந் தேதி கல்யாணம் வைச்சிக்கிளாம் உங்களுக்கு சம்மத என  குமுதாவை பார்த்து.

ரொம்ப சந்தோஷமுங்க. அனைக்கே வைச்சிக்கலாம் என்றாள் குமுதா.  

அம்மா மட்டும் வளர்கிற பொண்ணு. உங்களால முடிந்ததை செய்யுங்கள். எங்கள் குடும்பத்தில் கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் தான் செய்யற பழக்கம்.  மத்ததை பேசிக்கலாம் என சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

குமுதாவிற்கு மகிழ்ச்சி என்றால் மேகலைக்கு கொண்டாட்டம்.  அப்பா, இந்த பிசாசு,  கண் கொத்தி பாம்புவிடம் இருந்து தப்பிக்க வழி கிடைத்தது என.  

ஒத்த பொம்பளையா எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தாள் குமுதா. அக்கம் பக்கம் குடும்பத்தினர்கள்  ஏதாவது தேவைப்பட்ட சொல்லு குமுதா என்றாலும் புன்முறுவலோடு மறுத்து விட்டாள்.

srithar20194: திருமண முறை

அம்மா மகளிடமிருந்த இடைவெளியோடு,  தை 15 திருமணம் சிறப்பாக நடந்தது.  உணவு பிரமாதமாக இருந்தது.  அனைவருக்கும் ஆச்சரியம்.  எப்படி இந்த குமுதா தனியா செஞசாள் எனறு. குமுதா அன்று புன்னகை போர்வை போர்த்தி இருந்தாள். வந்தவர்களுக்கு ஆச்சரியம் தான். 

சாப்பாடு முடிந்து சீர் வைக்க சொன்னார்கள் மாப்பிள்ளை வீட்டார்.  மேகலை, என்னத்த வைக்க போற இந்த அம்மா. மானம் போகபோது என்ற நிலையில் கை பிசைந்து கொண்டு இருந்தவள் கண் விரித்தாள்.

கட்டில், பிரோ, வெள்ளி சாமான், பிரஜ், கிரைண்டர், வாஷிங் மிஷன், மாப்பிள்ளைக்கு பைக், 15 புடவை, ஐந்து பட்டு புடவை… பலகாரம், . என் அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள் குமுதா

வந்தவர்கள் அசந்து போனார்கள்.    மேகலையும் கூட. 

சிறிது நேரத்தில்  மினி டெம்போவில் அனைத்து பொருட்களும் ஏற்றப்பட்டது.   அனைவரும் சத்திரத்தை விட்டு கிளம்பி விட்டார்கள்.

மாப்பிள்ளை பொண்ணு கிளம்புகிற நேரம்.  மேகலை அம்மாவை பார்க்க, அம்மா இவள் கண்ணை மட்டும் பார்க்காமல் நிற்க,. அம்மா  நான் கிளம்பிறேன் என சொல்ல வாய் வராமல் அம்மாவை கட்டி அனைத்துக் கொண்டு கதறினாள் .    அம்மா  என்ற அந்த குரலில் மீண்டும் பிரசவித்தாள்  குமுதாவின் நெஞ்சில் மேகலை.

 

நன்றி 

திருமதி.சாந்தி சரவணன்