“என்னை அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க சார்”

“உங்கள அப்படி கூப்பிடரதனால தப்பெல்லாம் ஒன்னும் இல்லையே சார்”

“அதா மறுபடியும் சார் சொல்லியே கூப்பிடுறீங்களே சார்” முனியனின் முகத்தில் கூச்சம் தெரிந்தது.

“சார்ன்னு கூப்பிடரது உங்களுக்கு பிடிக்கலைன்னா ஐயான்னு கூப்பிடலாமா” என்று நகைத்தார் அந்த மேலதிகாரி.

“என்னை நீ வா போன்னே கூப்பிடுங்க சார்” என்றார் துப்புரவு தொழிலாளியான முனியன். தம்மை சார் சொல்லி கூப்பிட்டதால் வந்த கூச்சத்தை மறைக்கவும், நின்று கொண்டே இருந்தால் மேலும் ஏதாவது அவர் பேசுவார் தாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என நினைத்ததாலும் அவரது பதிலுக்கு காத்திருக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் முனியன்.

சுமார் நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் மதிய உணவு நேரம் நெருங்கி கொண்டிருந்த தருணம் அது. ஒரு சிலர்தான் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவார்கள். மீதி பேர் எல்லோரும் அலுவலகத்திலுள்ள கேண்டீனில்தான் சாப்பிடுவார்கள். முனியனின் வயிறு காலையிலிருந்து மந்தமாகவே இருந்ததால் கேண்டீனுக்கு போகாமல்  அலுவலகத்தை விட்டு வெளியே வந்து சாலையை ஒட்டியிருந்த மரவள்ளி மரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்துகொண்டார்.

மரத்தடியில் உட்கார்ந்த முனியனுக்கு மீண்டும் அந்த சார் ஞாபகம் வந்தது. புதுசா வந்திருக்கும் அந்த அதிகாரி தன்னையும் சார் சொல்லி கூப்பிடுகிறாரே. ஆரம்பத்தில் விளையாட்டுக்கோ அல்லது ஏளனமாகவோ தான் அதிகாரிகள் தன்னை சார் சொல்லி கூப்பிடுகிறார்கள் என நினைத்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் போக போக அலுவலகத்தில் உடன் பழகும் எல்லோருமே இதைப்பத்தி பேச ஆரம்பித்த பிறகு தான் அது உண்மை என்று புரிந்தது.

கம்பெனியில் தொழிலாளர், சூப்பர்வைசர், இன்ஜினியர், மேனேஜர் என பல அடுக்குகள் இருக்கு. புதுசா வந்திருக்கிற எக்ஸிக்யூடிவ் டைரக்டர் தொழிலாளிகள் எப்படி சூப்பர்வைசரையோ என்ஜினீயரையோ சார்ன்னு கூப்பிடுறாங்களோ அதே மாதிரி அதிகாரிங்களும் தங்களுக்கு கீழே வேலை பார்க்கிற தொழிலாளர்களையும் சார்ன்னு தான் கூப்பிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார். இத்தனை நாட்கள் தங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை நீ, வா, போ, இந்தா என்றும் அழைத்து வேலை வாங்கினர். சில அதிகாரிகள் தொழிலாளர்களை ஆடு மாடுகளாக கருதி கைதட்டி அழைத்தும் வேலை வாங்கி கொண்டிருந்தனர். தொழிலாளர்களை சார் என்று அழைக்க வேண்டுமென்ற மேலிட உத்தரவைக் கண்டு சில
அதிகாரிகள் உள்ளுக்குள்ளே பொங்கினாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டு கீழே வேலை செய்பவர்களை சார் என்று வேண்டா வெறுப்பாக கூப்பிட தொடங்கியிருந்தார்கள். மனசுக்குள்ளே நமு நமுத்தும் பல்லைக் கடித்துக் கொண்டும் தான் சார் சொல்லி அழைக்கிறார்கள் என்பதை அவர்கள் முக பாவமே காட்டிக்கொடுத்தது.

இதில் தொழிலாளர்களுக்கு தான் ஏகப்பட்ட குஷி. இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு அச்சம் இருந்தது. நம்மையும் சார் என்று அழைக்கத் தொடங்கி இருக்கிறார்களே இந்த அதிகாரிகள். பின்னாடி ஏதாவது கொய்யா கட்டையை சொருகுவார்களோ என்று கூட சிலர் பேசிக்கொண்டனர்.

வியர்வை சிந்தி உழைக்கிறவர்களுக்கும் மனதளவில் கொஞ்சம் மரியாதை கொடுத்தால் அவர்களும் சந்தோஷப்பட்டு அவர்களின் வேலையை இன்னும் சிறப்பாக செய்வார்கள் தானே. இந்த சூட்சுமத்தை எல்லாம் அந்த எக்ஸிகுட்டிவ் டைரக்டர் தெரிந்து வைத்துக்கொண்டு தான் இந்த மாதிரி எல்லோரையும் சார்ன்னு கூப்பிட சொன்னாரா என தெரியவில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களை தான் சார் சொல்லி கூப்பிட்டிருக்கிறார் முனியன். அரசு அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் ஐயான்னு கூப்பிடுவது தான் முனியனுக்கு வழக்கம். இந்த கம்பெனிக்கு வந்த பிறகுதான் தன்னைவிட ரொம்ப சின்ன பையனா இருக்கிற அதிகாரிகளையும் சார்ன்னு கூப்பிட தொடங்கியிருந்தார் முனியன். ஆங்கிலேயன் கீழே அன்று வேலை செய்தவர்கள் எல்லாம் துரை துரைன்னு சுத்தி சுத்தி வந்த மாதிரி இன்னைக்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களையே சார் சார்ன்னு சுத்தி வருகிறோமே என நினைத்து பெருமூச்சொன்றை விட்டார் முனியன்.

முனியனுக்கு நில புலம் ஒன்றும் கிடையாது. அரசு அமைத்துக் கொடுத்த திடீர் நகரில் தான் வீடு. பெயருக்கேற்றவாறு திடீரென்று உருவாக்கப்பட்டதுதான் திடீர்நகர். மூணு வருஷத்துக்கு முன்னாடி முனியன் கூவம் நதிக்கரையோரம் குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்தபோது பெரிய வெள்ளம் வந்தது. அந்த வெள்ளத்தோடு முனியனோட குடிசையும் அதிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்களும் ரேஷன் கார்டும் ஓட்டு அட்டையும் இலவசமா பயணம் செய்து வங்காள விரிகுடாவில் கலந்து விட்டது. பிறகு அரசாங்கம் நகரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி திடீர்நகர் குடியிருப்பை ஏற்படுத்தித் தந்தது. திடீர் நகரிலிருந்து பயணம் செய்து நகரத்திற்கு கூலி வேலைக்கு சென்றால் கூலி கட்டுப்படியாவதில்லை. போக்குவரத்து செலவும் பேருந்து வசதியும் பயண நேரமும் ஒத்துவருவவில்லை. அதுமட்டுமில்லாமல் கூலி வேலைக்குப் போனால் ஒரு நாளைக்கு வேலை இருக்கு ஒரு நாளைக்கு வேலை இல்லை. எனவே ஏழாயிரம் சம்பளம் கிடைத்தாலும் மாதம் முழுக்க வேலை கிடைக்குமென்று தான் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேயே இருக்கும் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார் முனியன். இந்த வேலைக்கு வந்த புதிசில் மனம் ஒப்பவில்லை முனியனுக்கு. கூட்டுகிற பெருக்குற கழுவுற வேலைய அதுவும் ஆம்பளைங்க யாரு தான் மனம் ஒப்பி செய்வாங்க. காலங்காலமா பொம்பளைங்கதலையிலேயே இந்த வேலைகளை கட்டி வந்ததால் முனியனும் அதே மனநிலையில்தான் இருந்தான். நாளாக நாளாக இந்த வேலை பழகிவிட்டது. பிடித்த வேலையை செய்கிறவர்களை விட வயித்துக்காக கிடைத்த வேலையை செய்யறவங்க தான் அதிகம். பெரிதாக சொல்லிக்கொள்கிற அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும் குடும்பத்திற்கு கூழ் ஊற்றும் பொருட்டு இந்த வேலையை செய்ய வேண்டியிருந்தது அவனுக்கு.. இரண்டு வேலை டீயும் காலை மதியம் சாப்பாடும் இங்கேயே கிடைத்துவிடுகிறது. கூலி வேலைக்கு போனால் நாம் தான் சோறு எடுத்துக் கொண்டு போகணும். இது கூடுதல் செலவு தான். அதனால இந்த துப்புரவு வேலை தோதாகவேப்பட்டது முனியனுக்கு.

Without safety equipment Sewer collection workers || பாதுகாப்பு உபகரணங்கள்  இன்றி சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் நோய் தாக்கும் அபாயம்
ஆயுத பூஜைக்கு தோசை கல்லு, இட்லி சட்டி, முலாம் பூசிய பாத்திரங்கள் என ஏதாச்சும் ஒன்று கம்பெனியில் பரிசு கொடுப்பார்கள். இந்த பரிசை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால் முனியனோட மனைவி ரொம்ப சந்தோசமாயிடுவாள். வருஷம் ஒரு முறை கிடைக்கிற இந்த ஏதாச்சும் ஒரு பொருளுக்காகவே வருஷம் முழுசும் முனியன் அங்கே வேலை பார்க்கணும்னு முத்து கோவில் மாரியம்மாவிடம் வேண்டி கொள்வாள். அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கு சொலையா ரெண்டாயிரம் போனஸ் கொடுக்கிறார்கள்.

மாச கடைசியில் நூறு இருநூறுன்னு பற்றாக்குறை ஏற்பட்டால் ஊர்ல சொந்தக்காரங்க பழகினவங்கனு யார்கிட்ட கேட்டாலும் கிடைக்கிறது கொஞ்சம் சிரமம்தான். அவிங்க மட்டும் என்ன டாட்டா பிர்லாவா? கையில இருந்தா தானே கொடுப்பாங்க. இங்க வேலை பார்க்குற இடத்தில் பழகிய பர்மனன்ட் எம்ளாயிங்ககிட்ட கேட்டா இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. அடுத்த மாசம் சம்பளம் வாங்கியவுடன் வாங்கிய மாதிரியே முனியன் திருப்பித் தந்து விடுவார். அதனால் முனியன் கடன் கேட்டு யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ஆத்திர அவசரத்திற்கு உதவர மக்கள் கூட இருந்தாலே தனி தெம்பு தான்.

இங்க வேலை செய்கிற பர்மனன்ட் எம்ளாய்ங்க அவர்களுக்குள்ள பணம் வசூல் செஞ்சு வருஷா வருஷம் பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னாடி துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வேட்டி சட்டை எடுத்துக் கொடுப்பார்கள். எவ்வளவு சிறிய பரிசாக இருந்தாலும் அன்பாக கொடுக்கையில் அதை வாங்கும் போது முனியனுக்கு ஒரு சின்ன சந்தோஷம் ஏற்படத்தான் செய்தது. அப்போது அவர்களின் குழுவுடன் முனியனையும் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அந்த படத்தை பேஸ்புக்லயும் வாட்ஸ் அப்லயும் போடுவாங்க. பேஸ்புக்கில் தெரியும் அந்தப்படத்தை அதிகாரிகளின் போனில் பார்க்கும்போது முனியனின் முகத்தில் சித்திரை பாதியில் பூத்து தொங்கும் கொன்றை பூங்கொத்தை போல புன்னகை உதிக்கும்.

இதெல்லாம் பழகி நாலைந்து வருடங்கள் ஆகிவிட்டதால் முனியனுக்கு வேறெங்கும் வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றியது இல்லை. இதைவிட கூடுதலாக ஆயிரம் ரூபாய் தருவதாக பக்கத்து வீட்டு ராமையா வேலை செய்யும் கம்பெனிக்கு அழைத்தும் கூட முனியன் மறுத்துவிட்டார்.

வேலைக்கு சேர்ந்ததிலிருந்து இதுவரை ஒருத்தரும் முனியனை சார் சொல்லி கூப்பிட்டதில்லை. அதுக்கும் முன்னாடி மட்டும் சார் சார்ன்னு நாலு பேர் கூப்பிட்டுகிட்டு சுத்தி சுத்தி வந்தாங்களா என்ன? இன்னைக்கு ரவுன்ஸ் வந்த அந்த அதிகாரி நேரில் முனியனை சார்ன்னு கூப்பிட்டது ஆரம்பத்துல ஒரு மாதிரியா இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம் ஏற்படத்தான் செய்தது. எந்த தேசத்தில் எந்த காலத்தில் யார் வந்து நம்மை போய் ஒருவர் சார் சொல்லி கூப்பிட போறாங்க என நினைத்துக்கொண்டார். பணம் நிறைய வைத்துக்கொண்டு இருப்பவர்களையும் பதவியில் இருப்பவர்களையும் மட்டும் தான் சார்ன்னு கூப்பிட தகுதியா வச்சிருக்கிற இந்த உலகத்தில் தம்மை கூட சார்ன்னு கூப்பிட வைத்த அந்த அதிகாரி ஒரு கடவுள் அவதாரமா இருப்பாரோ என்னு கூட முனியன் நினைத்தார்.

கேண்டீனுக்கு சாப்பிட சென்றவர்கள் ஓரிருவராக திரும்பி வரத்தொடங்கினார்கள். முனியனின் சூப்பர்வைசர் நான்காவது ஆளாக தனியாக வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

“யோவ் முனியா… சாரி சாரி. முனியன் சார் எக்ஸிக்யூட்டிவ் ரூமில் இருந்து போன் வந்தது. காலையிலிருந்து அந்த பக்கம் போகவே இல்லையா?”

“இல்ல சார் இன்னைக்கு காலைல இருந்து இங்கே வேலை சரியா போயிடுச்சு. சாப்பாட்டுக்கு அப்புறம் தான் போலாம்னு இருந்தேன்”

“சீக்கிரம் போங்க சா…ர், மத்த வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” விரட்டினார் சூப்பர்வைசர். முனியனை சூபர்வைசர் சா…ர் என்று இழுத்து அழைத்ததில் இழையோடிய
ஏளனத்தை முனியன் உணராமலில்லை. முனியனின் மகிழ்ச்சி மனநிலையில் ஒரு கீரல் விழுந்தது போல் இருந்தது.

அதை வெளிக்காட்டி கொள்ளாமல் வேகவேகமாக நடந்து சென்று கழிவறை சுத்தம் செய்யும் வாளியை எடுத்துக் கொண்டு எக்ஸிக்யூட்டிவ் அறையை நோக்கி நடக்கலானார் முனியன்.

ந.ஜெகதீஷ்
பூவிருந்தவல்லி
([email protected])

7 thoughts on “சிறுகதை: திருமுனியன் – ந.ஜெகதீஷ்”
  1. விளிம்புநிலை மக்கள் பற்றி அக்கறை இல்லாத அரசு, செய்யும் பணியின் தன்மையை வைத்து ஒருவரை மதிக்கவும் மிதிக்கவும் பழகிய சமூகம், சுரண்டப்படும் தொழிலாளர்கள், நிரந்தர/ நிரந்தரமற்ற ஊழியர்கள் என பிரித்தாளும் முதலாளித்துவம்…இப்படி பல வகைப்பட்ட சமூக அவலங்களை பேசுகிற, உணர்த்துகின்ற கதையாக உள்ளது. வாழ்த்துகள் தோழர்!

  2. முனியன் போல் எத்தனை எத்தனை மனிதர்கள். நாம் அவர்களை மனிதனாகவே பார்ப்பதில்லை. அருமையான கதை. ஒருவரை மரியாதையாக அழைப்பதை கூட மறந்து விட்டோம் என உணர்த்தும் கதை. வாழ்த்துகள் தோழர்

  3. செய்யும் வேலை, பதவி,ஸ்டேட்டஸ் பார்க்காமல் சக மனிதருக்கு மரியாதையை வலியுறுத்தும் அருமையான கதை.வாழ்த்துக்கள் தோழர்.

  4. மனிதனை, பொருள், சாதி, பதவி, வசதி வாய்ப்பு பார்த்து மதிக்கும் காலத்தில், சக மனிதனாக, தோழனாக நினைக்கவாவது வேண்டும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் அருமையான சிறுகதை ‌ வாழ்த்துகள் தோழர்.

  5. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என மனித தன்மையுள்ள மேலதிகாரியின் முன்னெடுப்பு சிறப்பு.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அந்நிலையிலேயே இருக்க வேண்டும் என எண்ணும் அதிகார வர்க்கத்தின் மனநிலையை எடுத்துக்காட்டும் கதை அமைப்பு.அருமையான சிறுகதை.

    விளிம்புநிலை மக்கள் ஏன் அந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதை விளக்கும் சிறுகதை.எளிமையான எழுத்து நடை வாசிப்பை எளிதாக்குகிறது.

    சிறப்பான சிறுகதை.வாழ்த்துகள் தோழர்👍👍👏👏👌👌🙏😍🤝

  6. “அவ’ர்’, நடந்தா’ர்’,” என்று முனியனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை எழுத்தாளரும் கொடுத்திருப்பது சிறப்பான செயலாகும். வாழ்த்துகள் தோழர்.

  7. சிறப்பானதொரு கதை களம். அதிகாரத்தில் இருக்கும் எல்லோரும் தனக்கு கீழ் பணி செய்பவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை திரு. முனியனின் மூலம் புரியவைத்துள்ள கதை. முனியன் மனதில் தோன்றிய சந்தோசம் நம்மையும் மகிழ செய்துள்ளது.
    எழுத்தாளருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *