சிங்கம்பட்டி ராஜா என அனைவராலும் பாசமுடன் அழைக்கப்பட்ட  சிங்கம்பட்டி முன்னாள் ஜமீன்தார் டீ. என் .எஸ். முருகதாஸ் தீர்த்தபதி உடனான நட்பு நாங்கள் இருவரும் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தபோது (2003-05) தொடங்கியது. அப்போது இருபத்துமூன்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டியிருந்தது. பராசக்தி மகளிர் கல்லூரி இந்து சமய அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால் கல்லூரி நிர்வாகக்குழுவின் தலைவர் இந்து சமய அறக்கட்டளையின் அன்றய ஆணையர், திரு ராமகிருஷ்ணன் (இ. அ. ப),  ராஜாவை ஆசிரியர் தேர்வுக்குழுவில் இடம்பெறுமாறு   வேண்டினார் . அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா தான் அக்குழுவில் இடம்பெற்றால் எனது  உறவினர்கள், நண்பர்கள் என்னை சிபாரிசு செய்யச்சொல்லி தொல்லை கொடுப்பார்கள். அறிவுத்திறமையின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவேண்டும் என தெரிவித்ததோடு  மட்டுமின்றி நானும் (பல்கலைக்கழக பிரதிநிதி)  அப்போது அரசு பிரதிநிதியாய் இருந்த ஆளுடைபிள்ளை (முன்னாள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) அவர்களும் தேர்வுக்குழுவாக இருந்து செயல்படட்டும் என்றார். அதன் அடிப்படையில் தேர்வுக் குழு  அமைக்கப்பட்டு இருபத்துமூன்று ஆசிரியர்கள் அமைச்சரின் தலையீட்டையும் பொருட்படுத்தாது அறிவுத்திறமையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

ஒரு சிறந்த  ஜமீன்தார் எப்படி இருக்கவேண்டும் என மகாத்மா  காந்தி விரும்பினாரோ அவ்வாறு வாழ்ந்தவர்  ராஜாவின்  தாத்தா டீ.என். எஸ் .தீர்த்தபதி. 1905 ஆம் ஆண்டு சிங்கம்பட்டியில் பள்ளிக்கூடம் துவக்கினார். 1918 இல் மருத்துவமனை கட்டினார். தன் சாதி மக்கள்   தலித்துகளை கண்ணியமாக நடத்த வேண்டினார். நீதிக்கட்சி மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின்  மேம்பாட்டிற்கான  தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ராஜா வின் தாத்தா, பொது வழி, பொதுக்கிணறு, குளம் ஆகியவற்றை பயன்படுத்த தலித்துகளை அனுமதிக்கவேண்டும் என வேண்டினார். “உங்க ஊர் குளத்தில் பன்றி, நாய் நீர் அருந்தலாம்; ஆனால் மனிதர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாதா ?” என வினவினார். நம் ராஜா முருகதாஸ் அவரது தாத்தாவின் குணங்கள் அனைத்தையும் பெற்றிருந்தவர். அவரது தார்மீக சிந்தனைகளையெல்லாம் உள் வாங்கியிருந்தவர்.

தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார் ...

தனது மூன்று வயதிலேயே சிங்கம்பட்டி ஜமீனின்  முப்பத்திரண்டாம் தலைமுறை என்ற பெருமையோடு பட்டம் சூட்டப்பட்டு, ஆள வயதில்லாததால், தாயின் பொறுப்பில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு,  இலங்கை கண்டியில் வெள்ளைக்காரர் வீட்டுப்பிள்ளைகள் படித்த டிரினிட்டி பள்ளியில் ஆங்கிலக்கல்வி பயின்று பின்னர் இந்தியா   திரும்பியபோது ஜமீன்  ஒழிப்புச்சட்டம் தான் அவரை வரவேற்றது. இதர ஜமீன்தார்கள் நீதிமன்றத்தை அணுகியபோது முற்போக்கு சிந்தனைகொண்டிருந்த ராஜா அத்தகைய நடவடிக்கை ஏதும் எடுக்காது  எதார்த்தத்தை ஏற்று பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்பணித்துக்கொண்டார். ஜமீன் ஒழிப்பிற்குபின் இருந்த நிலத்தின் மூலம் பெற்ற வருவாய்  மூலம் எளிய வாழ்க்கைக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டார்.

கடவுள் பக்தி கொண்ட ராஜா தான் சொரிமுத்து அய்யனார் கோவில் அறங்காவலராக பணியாற்றுவதை பெரும்பேறாகக் கருதினார்.  இயற்கையோடு அவருக்கிருந்த பிணைப்பு சுற்றுப்புறசூழல், மரங்கள், வனவிலங்குகள் பாதுகாப்பு இயக்கங்களில் அவரை தனிநபர் இயக்கமாக செயல் படச் செய்தது. அவர் எழுதி பின்னல் தொகுக்கப்பட்ட கடிதங்கள் (Musings from a Zamin) அதற்கு சான்று. ஆங்கிலத்தில் அவருக்கிருந்த புலமை தென் தமிழக அறிவுஜீவிகளை வியப்பிற்குள்ளாக்கியது. எனக்குத்தெரிய பல உயர் அதிகாரிகள், கல்லூரி -பல்கலை பேராசிரியர்கள் அவர் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் வரை ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடன் அவர்கள் அனைவரையும் அழைத்து அரண்மனையில் ராஜா விருந்து கொடுப்பது வழக்கம். அதுபோழ்து  ராஜா தனது பேச்சாற்றலால் அனைவரையும் மகிழ்விப்பார். மறக்கமுடியாத நாட்கள் அவை.

Image

ஆங்கிலத்தில் பெற்றிருந்த புலமை போன்றே தமிழிலும் அவர் புலமை பெற்றிருந்தார். சைவசித்தாந்தத்தில் அவர் பெற்றிருந்த அறிவு, தனது பேச்சுக்களில், எழுத்துக்களில் தேவாரம், திருமந்திரம், திருக்குறள் ஆகியவற்றிலிருந்து அவர் எடுத்துக்காட்டிய பொருத்தமான மேற்கோள்கள்   தமிழ் பேராசிரியர்களையும்  பிரமிக்கவைத்திருக்கிறது. அவரது கருத்துக்கள்  ஆங்கிலத்தில் ஸ்னிப்பெட்ஸ், தமிழில்  சிந்தனைத்துளிகள் என அவரது ரசிகர்களால் வெளியிடப்பட்டன. பல தொண்டுநிர்வனங்கள் அவர்க்கு விருதுகள் வழங்கியிருந்தபோதிலும், பொருத்தமான விருது நாகர்கோவில் பயோனியர் குமாரஸ்வாமி அறக்கட்டளை வழங்கிய ‘சித்தாந்த பேரறிஞர் விருது’ ஆகும்.

நியாய உணர்வு,நேர்மை, நாணயம், நம்பிக்கை ஆகியவற்றின் உறைவிடமாகவும்

வளரும் சந்ததியினருக்கு ஓர் உன்னத முன் உதாரணமாகவும் ஜாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடத்திலும் மனிதநேயத்துடன் பழகிய சித்தாந்த பேரறிஞர் சிங்கம்பட்டி ராஜாவின் மறைவு தென் தமிழகத்திற்கு ஓர் பேரிழப்பாகும்.

கட்டுரையாளர்: கா. அ . மணிக்குமார், முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *