குதிக்கால் இட்டு உட்கார்ந்தான்.
சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தான்.
ஒரு காலை சப்பணமிட்டு, ஒரு காலை நீட்டி இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தான்.
ம்கூம்… எப்படி உட்கார்ந்தாலும் – பசித்தது…
ச. தமிழ்ச்செல்வன், பாவனைகள் சிறுகதையில்.
பட்டினிக் குறியீட்டுத் தர வரிசையில், இந்தியா உலக அளவில் 116 நாடுகளில் 101ம் இடத்தில் இருக்கிறது. விரக்தியில் சிரிப்பதற்கு நல்ல வேளையாக யாரும் அளவீடுகள் எடுப்பதில்லை, ஆனால், மகிழ்ச்சிக் குறியீட்டு வரிசை என்று எடுத்துத் தொலைத்து விடுகிறார்கள், அதில் நமக்கு 136வது இடம். நமக்கும் கீழே இன்னும் பத்து நாடுகள் இருப்பது கூட ஆட்சியாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கக் கூடும்.
5 டிரில்லியன் பொருளாதாரத்தைக் கனவு காணும் நிர்மலா சீதாராமன் வழி நடத்தும் தேசத்தில் நாம் மிக நீண்ட தொலைவு நடக்க வேண்டும். (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி! ). அதாவது, கொரோனா கொடுந்தொற்று நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பல்லாயிரம் மைல்கள் நடக்க விட்டார்களே அதைப் போல் பன்மடங்கு நெடிய நடை!
மக்களின் மறதியைப் போல் அதிகார பீடங்களில் இருப்போர்க்குக் கொண்டாட்டம் வேறொன்று இல்லை, 2016 நவம்பர் எட்டாம் தேதி இரவு என்ன சொல்லப்பட்டது, ஏன் பத்தாம் தேதியில் இருந்து நாம் மணிக்கணக்கில் வங்கிக் கிளைகளின் வாசல்களில் செல்லாது போன நோட்டுக்களை மாற்றிக்கொள்ள வரிசையில் போய் நின்றோம், நின்றதில் திரும்ப வீடு திரும்பாதவர்கள் எத்தனை பேர், ஆனாலும் கள்ளப்பணமோ, கறுப்புப் பணமோ, தீவிர வாதமோ ஏன் உறுதியளிக்கப்பட்டதற்கு மாறாக ஒழிக்கப்படவே இல்லை, மறந்து தான் போய்விட்டோம் போலிருக்கிறது! ஆனால், அந்த நாட்களில் ஊதியம் கிடைக்காமல் போனவர்கள், வேலை இழந்தவர்கள் எங்கோ இன்னும் சுவர்களைப் பார்த்துப் பேசிக்கொண்டோ, புலம்பிக் கொண்டோ தான் இருப்பார்கள்.
அது, பணம் அழித்தல் திட்டம், இப்போது, பணமாக்கல் திட்டம்! உண்மையில் வைத்திருக்க வேண்டிய பெயர், சொத்து அழித்தல் திட்டம், பொதுத் துறைகளை, தேசத்தின் நிதி ஆதாரங்களை வாய்க்கு வந்த விலைக்கு விற்றுக் காசாக்குவதை வேறு எப்படி அழைக்க முடியும்? இப்போது சொல்லப்படும் உறுதி மொழிகளையும், நமது மறதியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் அறிவிக்கின்றனர் ஆட்சியாளர்கள், ஆனால், கடுமையாக இழப்பைத் தான் சந்திக்கப் போகிறது நாடு, இந்த முறையும்!
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பாஜக ஆட்கள் எதிர்க்கட்சியாக இருக்கையில் மாட்டு வண்டி ஓட்டி அடித்த கூத்துகள் நாம் மறந்து தானே போனோம், கடந்த எட்டு ஆண்டுகளில் ஏதேனும் கணக்கு வழக்கு உண்டா, பெட்ரோலியம் பொருள்களில் செய்யப்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு? அதன் சங்கிலித் தொடராக, மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படை பொருள்கள் பலவற்றின் விலைகளும் தாறுமாறாக ஏறிப்போய்க் கொண்டிருக்கிறதே, ஒற்றைக் கவலை ரேகை ஓடுகிறதா, ஒன்றிய அரசில் உட்கார்ந்து இருப்போருக்கு?
ஒரு கொடுந்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் சமூகத்தைத் தற்காத்து, வழி நடத்தவோ, பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ, காப்பாற்ற முடியாமல் பறி போன உயிர்களின் நினைவில் கதியற்றுக் கதறிக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கவோ சக்தியற்றுப் போயிருந்தால் கூட இவர்களை மன்னிக்கலாம், ஆனால், இதே இரண்டு ஆண்டுக் காலத்தில், எல்லோரும் முடங்கிக் கிடந்த நாட்களில் கூட, கண்கள் கூசும் ஒளிவெள்ளத்தில் கார்பொரேட் உலகம் மட்டும் எப்படி கொள்ளை லாபம் சம்பாதிக்க முடிந்தது? அப்படியானால், அம்பானிகள், அதானிகள் கும்பல்களின் அதிரடி லாப வேட்டைக்குத் தானா, நாம் பால்கனியில் நின்று கைகள் தட்டவும், தட்டுகளில் ஒலியெழுப்பவும், மணிகளை இசைக்கவும் செய்தது?
அதிகபட்ச காண்டிராக்டு, காசுவல், தற்காலிகப் பணியாளர்கள், ஆனால் குறைந்த பட்சக் கூலி கூட இல்லாமல் சுரண்டப்படும் அநியாயம், முறை சாராத தொழில்களில் கூலியும் நிரந்தரம் கிடையாது, உழைத்துத் தேய்ந்து ஓய்ந்து வந்து விழும் வயதில் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள சமூக பாதுகாப்பு கிடையாது. செல்வத்தை உருவாக்குவோர் கார்பொரேட்கள் என்றால், உழைப்பாளிகள் எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனரா?
தொழிலாளருக்கு எதிராகத் தொழிலாளர் சட்டத் தொகுப்பு. விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்கள். மக்களுக்கு எதிராகச் சட்டமியற்ற ஒரு நாடாளுமன்றம். இந்தக் கொடுமைகளை அம்பலப்படுத்துவோர், கேள்விகளை எழுப்புவோர், தட்டிக் கேட்போர் எல்லோரையும் அடக்கி ஒடுக்கவும் சட்டங்கள்.எதிர்ப்பே கூடாது என்பது ஜனநாயகத்தை அரித்தெடுப்பது ஆகாதா? பொய்கள், அரைகுறை உண்மைகள், அவதூறுகள், வதந்திகள் இவற்றை ஆட்சியாளர்களே பரப்பும் கொடுமை என்று முடிவுக்கு வரும்?
370 நாள் தலைநகரில் முற்றுகையிட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை, அரசு காற்றில் பறக்க விட்டால் விட்டு விடமாட்டார்கள் விவசாயிகள், கிராமப்புறங்களில் பந்த் அறிவித்துள்ளது சம்யுக்த விவசாயிகள் போர்ப்படை. மார்ச் 28-29 இரு நாள் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் இப்படி எல்லாத் தரப்பினராலும் முன்னெடுக்கப் படுகிறது. இதில் நான் எங்கே இருக்கிறேன்?
இதில் நான் எங்கே இருக்கிறேன்? இதெல்லாம் அரசியல், எனக்கு நேரடி பாதிப்பில்லை என்று கைகழுவும் இடத்திலா, எனக்கும் தொடர்புண்டு நானும் குரல் கொடுக்கிறேன் என்று குரலெழுப்பும் இடத்திலா? எங்கோ எதுவோ சரியில்லை என்று தெரிந்தாலும், என் வரைக்கும் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் என்று தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும்…..
ஆட்டோக்காரரிடம் பேரம் பேசுகிறேன், பெட்ரோல் பங்க்கில் முழித்து முழித்துப் பார்க்கிறேன், திடீர் என அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் திக்கு முக்காடி நின்றிருக்கிறேன். வீடு கட்ட போட்டுவைத்த எஸ்டிமேட் எகிறிப் போன போதும், பிள்ளைகள் படிப்புக்கு ஓரிரவில் நண்பரிடம் தயங்கித் தயங்கிக் கடன் கேட்ட தருணத்திலும் எனக்கு எதற்கு அரசியல் என்று யோசித்தது இல்லை. அருகே இருக்கும் குடிசைப் பகுதியில் மாதம் இரண்டு முறையாவது அடுத்தடுத்துக் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் பார்க்க நேரும் சமயங்களில், அறிமுகமான முகங்களுக்காகக் கொஞ்சம் கலங்க முடியாத அளவு நான் கல் நெஞ்சக்காரன் இல்லை.
மெல்ல யோசித்தால், என் வேலையும், ஊதியமும், வாழ்க்கையும் கூட நெருக்கடிக்கு ஒரு நாள் உள்ளாக்கப்படும் என்று சில நேரம் உள்ளிருந்து ஒரு குரல் எச்சரிக்கத் தான் செய்கிறது. எல்லாம் தனியாருக்குப் போனால் சமூக நீதியின் கதி என்ன என்று பதறுகிறது. இத்தனை பற்றி எரிகிற பிரச்சனைகளுக்கு நடுவே காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எதற்காகத் திரையிடப்படுகிறது என்றும் சிலபோது உறைக்கத் தான் செய்கிறது.
இப்போது மிகப் பெரிய போராட்டம் எதற்காக நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது கூட வெட்டி வேலை, வீண் அரசியல் என்று ஒதுங்கி நிற்கப் போகிறேனா, காதுகொடுத்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேனா? அடுத்த தெருவில் மழை வெள்ளம் சூழ்கிற போதே எங்கள் தெருவைப் பற்றி எச்சரிக்கை கொள்ளப் போகிறேனா, வந்ததற்குப் பிறகு அதிர்ச்சியில் நிற்பேனா?
இது எனக்குமான போராட்டம், நானும் இணைய வேண்டிய வேலை நிறுத்தம் என்று உரத்துச் சொல்லிக் கொள்வோம்! நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆவேசத்தோடு திரண்டெழும் கரங்களோடு சேர்த்து உயரட்டும் என்று முஷ்டி உயர்த்துவோம்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தனி ஒரு நபரரைக்காப்பாற்ற ஜூன் 24/25,1975 ல் திடீரென எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.அது இன்னும் நினைவில் இருக்கிறது.ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சி யில் கடன் வாங்க வில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.ஒரு விஷயம் மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் ஆட்சி காலத்தில் தான்.மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர் களுக்கு ஐடி கம்பெனி ஊழியர் போல் சம்பளம் கூடுதலாக வழங்கப் பட்டது.
இந்த அரசு மடியும் போது தான் விடியும்.காத்திருக்கிறேன் உங்களோடு நானும்.நான் மறியலில் கலந்து கொண்டேன்.
மகிழ்ச்சி தோழர். தாங்களும் கட்டுரை அனுப்பினால் பதிவேற்றம் செய்யலாம்.
போராடுபவர்களோடு இணைந்து கொள்ள வேண்டும் என்பதை இதைவிட வலிமையாக சொல்ல முடியாது..
நல்ல ஒரு மேற்கோளுடன் கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது.
Business is not Government’s business என்று சொல்லி நலிவடைந்த பொதுத்துறைகளை விற்கிறோம் என ஆரம்பித்து இன்று பட்ஜெட்டிற்கு பலகோடிகள் தரும், தனியார் வங்கிகள் விழுந்தபோது தூக்கி நிறுத்தும் லாபகரமான பொதுத்துறைகளை ஏன் விற்கிறார்கள் என யோசிக்கச் சொன்னால்
ஏதோ சம்பளத்திற்காக மட்டுமே போராடுவதாகக் கூச்சல் போடுபவர்கள் தங்கள் வாதங்களைத் தாங்களே சீர்தூக்கிப் பார்த்து தான் பேசுகிறார்களா? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுவது இவர்களுக்கு உறுத்துவதுபோல் ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளைகளாக இருக்கும் சிலருடைய சொத்துக்கள் disproportionate விகிதத்தில் ஏறிக்கொண்டே போகின்றதே அது ஏன் இவர்கள் கண்ணில் உறுத்த மாட்டேன் என்கிறது?
இந்த வேலை நிறுத்தங்களில்
முறைசாரா தொழிலாளர்கள்/ மக்கள் வாழ்க்கைத்தரம் குறித்த கோரிக்கைகள் இவர்கள் கண்ணில் படுவது இல்லையா?
என்றால் இவர்கள் யார்? இந்த நாட்டு மக்கள் மீது உண்மையில் கரிசனம் உடையவர்கள்தானா? என்ற கேள்விகள் நமக்கு எழுகிறது
👍💐
கண்டிப்பாக நடுநிலையோடு யோசிக்க வைக்கும் உங்கள் கட்டுரையை வாசிக்கும் அன்பர்கள் அனைவரையும்.வாழ்த்துக்கள் அன்பு தோழரே
கண்டிப்பாக நடுநிலையோடு யோசிக்க வைக்கும் உங்கள் கட்டுரையை வாசிக்கும் அன்பர்கள் அனைவரையும்.வாழ்த்துக்கள் அன்பு தோழரே