சுஜாதா - கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) | Sujatha - Kanaiyazhi Kadasi Pakkangal

கணையாழி என்றொரு இலக்கிய இதழ் மாதந்தோறும் வெளிவந்தது. இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை. தரமான கவிதைகளும் கதைகளும் பிரசுரிப்பார்கள். அந்த இதழில் படைப்புகள் வெளிவந்தால் தனக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைத்ததாக எண்ணுவார்கள். அதெல்லாம் ஒரு காலம். இதழின் கடைசிப் பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு பக்க கட்டுரை எழுதுவார். வாசிக்கச் சுவாரசியமாக இருக்கும். அந்த ஒரு பக்க கட்டுரைக்காகவே இதழ் வாங்குவோரும் உண்டு. சுஜாதா கொடிகட்டி பறந்த காலம். அவரது மொழி நடை சுவாரசியமானது. வாசிப்பார் எவரையும் கவர்ந்திழுக்க கூடியது. அந்த வகையில் எழுத்துலகின் ஜனரஞ்சகராக இருந்தார் எனலாம்.

ஒரு காலத்தில் இதழ்களில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை மொத்தமாக படிப்பது என்பது பழைய காலத்திற்கே நம்மை அழைத்து செல்வது போன்றது. அது இன்றும் சுவாரசியமாக இருப்பது எழுத்தாளர் சுஜாதாவின் திறமைக்கு சான்று.

சுஜாதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தியாக நான் பார்ப்பது அவரது சொற் சிக்கனம். சின்ன சின்ன வார்த்தைகளில் பெரிய பெரிய செய்திகள். மெல்லிய சரடாய் பின்னி இழையும் நகைச்சுவை. இரண்டு பக்கத்தில் வீணான சொற்கள் ஏதுமின்றி சுவை பட செய்திகள் சொல்வது. சங்க காலம் தொடங்கி விஞ்ஞான காலம் வரை அறிவியல் பூர்வமாக முன்னெடுத்து செல்வது. என்று கட்டுரையாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள் இப்புத்தகத்தில் ஏராளமாக உள்ளது மொத்தம் 192 கட்டுரை.

செவ்வானம் என்ற நாவலை எழுதிய செ.கணேசலிங்கன் என்கிற இலங்கை இடதுசாரி எழுத்தாளரை புகழ்கிறார். புரட்சி நிச்சயம் வரும் அது எம்மாதிரியான புரட்சி என்பதில் இருக்கிறது என்று ஒரு புள்ளி வைக்கிறார். ஹைகூ கவிதைகள், புதுக்கவிதைகள், சங்ககால கவிதைகள், ஆண்டாள் பாசுரம், ஜி.நாகராஜன், பாரதிதாசன், மேலாண்மை பொன்னுசாமி, டெல்லி, அமெரிக்கா, சினிமா, கால்டுவெல், புவியரசு, சிங்கப்பூர், பெங்களூர், புத்தகச்சந்தை, தமிழ் படங்கள், இந்தி, ஆங்கிலம், கொஞ்சம் அறிவியல், என்று கலவையான பொருளில் எழுதப்பட்ட கட்டுரை.

ஆதலால் போரடிக்காமல் சுவாரசியமாக போகிறது. காலத்தே மூத்த கட்டுரைகள் பழைய வாடை அடித்தாலும், சொல்லும் திறத்தால் சுவையாகின்றன.
கட்டுரைகள் எழுதுவோர்க்கும் வாசிப்போர்க்கும் அருமையான புத்தகம். எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

நூலின் தகவல் 

நூல்                     : கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) 

ஆசிரியர்        : சுஜாதா

வெளீயீடு        : உயிர்மை பதிப்பகம்

பக்கங்கள்    : 540

விலை            : ரூ. 460/

 

எழுதியவர் 

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089
[email protected]

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *