நூல் அறிமுகம்: அணங்கு நாவல் – கருப்பு அன்பரசன்
அணங்கு நாவல்
அருண்பாண்டியன் மனோகரன்
எதிர் வெளியீடு
பள்ளிக்குழந்தைகளின் அன்பு! கபடமில்லாத.. கள்ளம் அறியாத வஞ்சகத்தின் கொடூரம் தெரியாத பேரன்பு அது.. அந்த பேரன்பு.. பாலின பேதம் அறியாதது.. இருப்பதை பகிர்ந்துண்ணும் அழகு ததும்பியது. வெடிச் சிரிப்பிலும்.. மெல்லிய புன்னகையிலும் பிச்சி பூவின் சுகந்தத்தை மனிதம் பேசிடும் உள்ளங்களெங்கும் மொத்தமாய் கொட்டிச் செல்லும். சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும் புணர்ந்து வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் பால்யத்தின் நினைவுகளை கிளர்ந்து எழும் சூழல் உருவாகிவிடும் பொழுதில் அப்படியே வாழ்ந்து உயிர் அழிந்திருக்கக் கூடாதா என்கிற எண்ணம் நிகழ்காலத்தின் தகிப்பில் கருகிச் சாம்பலாகும். அப்படியான ஒரு சாம்பல் மேட்டினை பெரும் மலையாக குவித்து விட்டது எனக்குள் இந்தப் புதினத்தை வாசிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் பால்யகால பனித்துளியின் தூய்மையை ஒத்த அழுக்கில்லாத நினைவுகள்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் சோமாசிபாடி என்கிற கிராமம்.. அந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய திருமலை சோடா ஃபேக்டரி தயாரித்து அளிக்கும் பன்னீர் சோடாவினை குடிப்பதற்காகவே திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும்,சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் அங்கே நின்று பன்னீர் சோடாவை குடித்து தன் தாக்கத்தை தனித்துச் செல்லும். ருசி மிகுந்த குடிநீரும் நல்ல பதத்தோடு பன்னீர் திரவத்தை கலந்து அளவான கேஸ் ஏற்றப்பட்டு வெளிவரும் கோலி சோடா பாட்டில் பிரசித்தம் பெற்றவை அங்கு. சோமாசிபாடி பன்னீர் சோடா என்றால் அருகில் இருக்கும் அத்தனை கிராமங்களுக்கும் ருசி மிகுந்தது. சோமாசிபாடி வந்து பன்னீர் சோடா குடிக்காமல் போவோர்கள், பழனி வந்து பஞ்சாமிர்தம் வாங்கி செல்லாமல் போவது போன்று. சோமாசிபாடி மலைமீது இருக்கும் அந்த தமிழ் கடவுளும் கூட நடக்கும் சக்தி இருந்தால் வந்து தினம் ஒரு பன்னீர் சோடா குடித்துப் போவார்.
அப்படியான கிராமமதில் ஐங்குணம் சாலையில் இருக்கக்கூடிய அரசு ஆரம்பப்பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பின் இறுதி ஆண்டு வரை படித்து வந்தேன்.. பள்ளிக்கு அருகாமையிலேயே பெரிய ஏரி ஒன்று.. ஏரிக்கரைக்கு அருகாமையிலேயே மிகப்பெரிய அரசமரம் ஒன்று.. விளையாட்டுப் பொழுதுகளில்
அந்த அரசமரத்தின் கீழ் அத்தனை பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து அவரவர்களுக்கு பிடித்த மாணவர்களோடு விளையாடி கழித்த காலம் அது. பிள்ளைகள் குழுவாக பிரித்து விளையாடும் விளையாட்டுகளில் எப்பொழுதுமே என்னோடு இருப்பவள் விஜயா. ரோட்டுத் தெருவில் எங்கள் வீடும் சாவடித் தெருவில் அவள் விடும்.. இருந்தாலும் ஒருவருக்கொருவர் காத்திருந்து பள்ளிக்கூடத்தில் ஒன்றாகவே நுழைவோம்.
வீட்டில் இருந்து எவ்வளவு தின்பண்டங்கள் கொண்டு வந்தாலும் முதலில் நாங்கள் இருவர் பரிமாறிக்கொண்டே மற்றவர்களுக்கு கொடுப்போம்.. அப்படியான ஒரு நேசமும் பிரியமும் எங்கள் இருவருக்குள்ளும். குழந்தைச் சண்டைகள் இல்லாத விளையாட்டு ஏது..?! அப்படி குழந்தைகளுக்குள் விளையாட்டுச் சண்டை வந்துவிடும் பொழுது நாங்கள் இருவருமே ஒருவருக்கு ஆதரவாக ஒருவர் என்று எங்களுக்குள் எப்பொழுதும்.
அடர் கருப்பு நிறத்தில் நானும் அடர் சந்தன நிறத்தில் அவளுமாக இருக்கும் நாங்கள் எப்போதும் பிரியங்களுடன் சுற்றி திரிவோம் பள்ளிக்குள்ளும் பள்ளியின் அரசமரத்தின் நிழலிலும்.. வலப்புற உதட்டின் மேல் இருக்கும் சின்னதொரு மச்சம் அவளை இன்னும் செழிப்பாக்கி அவள் கை கொட்டி சிரித்திடும் பொழுதினில் எதிரில் இருப்பவர்கள் அனைவரையும் அள்ளிக் கொள்ளும்..
தும்பைப் பூவின் வெண்மையானது எங்கள் இருவரின் பேரன்பும்..
ஒரு நாள் மதியவேளை.. இருவரும் அவரவர் வீட்டிற்கு போய் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுகிறோம்.. அந்த மாதத்தில் மழை பொழிந்து ஏரி முழுவதுமாய் நிரம்பி இருக்கிறது.. பள்ளி மாணவர்கள் யாரும் ஏரிப்பாக்கம் செல்லக்கூடாது என்று ஆசிரியர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சீக்கிரம் வந்து விட்டதால் நாங்கள் “இருவரும் ஏரியில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்று போய் பார்க்கலாம் வாடா” என்று விஜயா கூப்பிட.. நானும் செல்கிறேன். இருவரும் ஆசிரியர் யாரும் பார்த்துவிடக்கூடாது என்கிற பயத்தோடே. ஏரிக்கரை மேல் ஏறி நின்று பார்க்கும் பொழுது கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் வெறும் தண்ணீர் மட்டுமே. “சரி இந்த தண்ணீர் எங்கு முடிகிறது என்று பார்ப்போம் வா விஜயா” என்று அவள் சட்டையை பிடித்து இழுக்க.. ஏரிக்கரை மீது இருவரும் சென்று கொண்டே இருக்கிறோம்.. அப்படி சென்று கொண்டிருக்கும் பொழுது நன்றாக ஞாபகம் இருக்கிறது அவள் கத்தரி பூப்போட்ட பாவாடை சட்டை அணிந்து இருந்தாள்.. அவளின் கைகளில் சாக்லேட் டப்பி ஒன்று தகரத்தால் ஆனது.. அந்த டப்யின் மேல்புறத்தில் வரையப்பட்டிருக்கும் படத்தில் மலைகள் சூழ்ந்த பச்சை பசேலென்று இருக்கும் நிலம்.. கூட்டமாக இருக்கும் செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் படம் வரையப்பட்டிருக்கிறது.. பெண்ணின் வலது கையில் நீண்ட குச்சி ஒன்று இருக்கிறது..
அந்த பெட்டியை திறந்து “அன்பு இந்தாடா” இன்று கொஞ்சம் அள்ளிக் கொடுக்கிறா..
அவள் கைகளுக்குள் இருந்தது வறுத்த அரிசியும்.. வறுத்த மல்லாக்கொட்டையும்
வறுத்த காரம் போட்ட அரிசி அது.
இருவரும் தின்று கொண்டே செல்கிறோம்.. அரிசியும் மல்லாக் கொட்டையும் முடிந்து டப்பி காலியானது.. தண்ணீர் எல்லையோ இன்னும் முடியவில்லை. இருவருக்குள்ளும் பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது.. மதியம் வகுப்பிற்கு லேட்டானால் என்ன செய்வது என்று யோசித்து சரி இன்னொரு நாள் வருவோம் என்று இருவரும் பேசிக்கொண்டு திரும்ப பள்ளிக்கு வேகமாக ஓடி வருகிறோம். தின்ற அரிசியின் காரத்தோடு தாகமும் சேர்ந்து கொள்கிறது.. வகுப்பு ஆரம்பித்துவிட்டார்கள். ஏரிக்கரையின் மேல் நாங்கள் இருந்தது யாரோ ஒருவர் பார்த்துவிட்டு டீச்சரிடம் சொல்லிவிட்டு இருக்கிறார்கள். அத்தனை சொல்லியும் நீங்கள் ஏன் இருவரும் ஏரிக்கரைக்கு சென்றீர்கள் என்று வகுப்பு டீச்சர் சரோஜா எங்கள் இருவரையும் பள்ளிக்கு வெளியே முட்டி போட வைக்கிறார். மூச்சு இரைப்பதைப் பார்த்து நாங்கள் குடிக்க தண்ணீரும் கொடுக்கிறார். தண்ணீர் குடித்து நாங்கள் இருவரும் முட்டிபோட்டுக்கொண்டு சிரிக்கிறோம். அதன் பிறகு வீட்டில் அப்பாவிடம் எனக்கும் அவர் அண்ணனிடம் அவளுக்கும் அடி கிடைத்தது வேறு விஷயம்.
இந்த மொத்த நினைவுகளையும் “அணங்கு” இழுத்துப் போட்டு என்னை ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது எனக்குள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் முட்டி போட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவள் சட்டைப்பையில் வைத்திருந்த அரசம் பழத்திலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்தாள் சிரித்துக்கொண்டே “டீச்சர் பாக்காம தின்னுடா” என்று. பள்ளி மாணவர்களுக்குள் எந்த பேதத்தையும் வளர்க்காத ஆசிரியர்களும்.. அன்பு.. பிரியம் ஒன்றை தவிர்த்து ஏதுமறியாத குழந்தை மனங்களுக்குள்ளும் சாதிவெறி ஏற்றத்தாழ்வுகள்.. வன்மம் என்கிற நஞ்சு காலப்போக்கில் பெற்றோர்களால் தூவப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்.. விளைவு தூய்மையான அன்பிற்குள்ளும் காரணம் தெரியாத துவேஷம் முளைவிடத் தொடங்குகிறது கொஞ்சம் கொஞ்சமாக.
அப்படித்தான் “அணங்கு”வில் ஏரிக்கரையின் கீழ்ப்பகுதியில், எதையெல்லாம் நம் சமூகம் அசிங்கமாக கேவலமாக.. தொடுவதற்கும் தகுதி இல்லாத மனிதர்கள் வாழும் இடமாக பேசப்பட்டு; அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்காமல் ஒதுக்கியே வாழும் உழைக்கும் மக்களுள் ஓரளவு பொருளாதார தளத்தில் முன்னேறி மாடி வீட்டில் இருந்து வரக்கூடிய கவிதாவுக்கும், ஏரிக்கரையின் மேல்புறத்தில் தினம் உழைத்தால் தான் கூலி என வாழ்வை நகர்த்தி வரும்
சாதாரண நெசவு தொழிலாளியின் பிள்ளையாய்
மதிய உணவிற்கும் பள்ளியில் வழங்கிடும்
சோற்றை மட்டுமே நம்பி வாழும் எத்தனையோ எளிய குடும்பங்களின்
அடையாளமாய்.. சுற்றி வாழும் வசதி படைத்தவர்களின் சாதி வன்மத்திற்க்கும் சாதி வெறிக்கும் சாதிக் கட்டுப்பாடிற்கும் தன்னையும் வலுக்கட்டாயமாக உட்படுத்திக் கொண்டு வாழும் எண்ணற்ற குடும்பங்களின் ஒரு குடும்பமாக வாழ்ந்து வரும் சுந்தரத்தின் மகள் வள்ளிக்குமான அன்பின் போராட்டமே
இந்தப் புதினம்.
இறுக்கிக் கட்டப்பட்ட சாதியக் கோட்டையில் செங்கல்லின் விரிசலாக.
வள்ளிக்கும் கவிதாவுக்குமான நேசம்..
வேலை செய்வதற்கென்று பிறப்பெடுத்த ஒரு பெரும் மனிதர் கூட்டம்.. அவர்களின் உழைப்பால் மட்டுமே தங்கள் வாழ்க்கையினை மேம்படுத்தி கயமை மிகுந்து மனித மிருகங்களாகவும் ரத்தம் கேட்கும் மனித சதைகளை தின்னத் துடிக்கும் வேட்டை நாய்களை வளர்த்து, வேட்டை நாய்களாகவே தங்களையும் வாழப் பழக்கப் படுத்திக் கொள்ளும் ஒரு கூட்டம்..
இந்த இரண்டு கூட்டங்களும் ஏரியின் நேர் எதிர்ப்புறத்தில் வாசம் புரிந்து வருகிறார்கள்.
இந்த மனித மிருகங்களுக்கு இடையே
சிக்கிக்கொண்ட புள்ளிமான்களாக
கவிதாவும் வள்ளியும்.
பிள்ளைப் பிராயத்தில் தன் கைப்பிடித்து கவிதா விளையாடும் பொழுது தனக்கு நோய் வந்துவிடும் என்று பொய்யை சாதி நோய் பிடித்த அப்பா சுந்தரம் சொல்லப்போக
அதை உண்மை என நினைத்து பாசம் கொண்ட கவிதாவை ஒதுக்கித் தள்ள..
வயதும் அறிவும் பழக்கவழக்கங்களும்
வள்ளிக்கு அது பொய் எனப் புரியவைக்க.. வள்ளி தன் உயிர் நட்பு கவிதாவைத் தேடி ஏரியின் கீழ்ப் புறத்திற்கு செல்ல..
அங்கிருந்து “அணங்கு” வேகம் எடுக்கிறது..
முதல் ஆறு பாகத்தில் அன்பின் நேசத்தை பிரியத்தை முழுவதுமாய் தன்னுடைய எளிமையான வார்த்தைகளில் வடிவாக கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். பிரிவின் கொடூரத்தையும் அது எதிர்கொள்ளும் தந்திரத்தையும், அதனால் சந்திக்கும் பெரும் துயரங்களையும், அர்த்தம் மிகுந்த எளிய மக்கள் பேசக்கூடிய வார்த்தைகளால் எந்தவிதமான தடையும் இல்லாமல் அப்படியே நகர்த்தி நம்மை நிலைகுலையச் செய்கிறார் புதினத்தின் ஆசிரியர் அருண்பாண்டியன் மனோகரன்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்.. ஆனால் அந்த கிராமங்களுக்குள் சாதி வெறியின், சாதி துவேசத்தின், சாதி வன்மத்தின் கொடூரம் இன்றளவும் எப்படி இருக்கிறது..
சாதி வெறியின் ஊர் கட்டுப்பாடு எப்படி கொலைகளை சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறது என்பதினை கிராமத்தின் பொது இடமான பாவடியில் ஊர் தலையாரியும், நாட்ராயன் மற்றும் செம்புராசுவும் சேர்ந்து முடிவு எடுக்கும் முடிவினை போன்றே இன்றும் பல கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது நிஜமான உண்மை. நம் எவராலும் மறுக்க முடியாது.
பிள்ளைகளுக்கு நல்லதை.. நிஜங்களை.. உண்மைகளை பேசி பழக்கப்படுத்திவிடும்.. அன்பை போற்றிப் பாடச் சொல்லும் குடும்பமாக கவிதாவின் அப்பாவும் அம்மாவும்.. அருவருக்கத்தக்க புறச்சூழலில் சுகாதாரமான வாழ்வினை வாழ முடியாத மக்கள் வாழும் பகுதியில் மனது முழுவதும் அழுக்கற்று அன்பினை கொண்ட குடும்பமாக கவிதாவின் குடும்பம்.. மனிதர்கள் வாழும் கிராமமாக நம்முடைய கிராமமும் இருக்க வேண்டும் என்ற ஆவல் பெருகிய குடும்பம் கவிதாவின் குடும்பம்.
தன்மீது பிரியம் கொண்ட வள்ளியினை செம்புராசுவின் தோட்டத்தில் வளர்த்திடும் வேட்டை நாய்களிடமிருந்து எப்படிக் காப்பாற்றினாள்.. அதே வேட்டை நாய்களுக்கு கவிதாவின் சதை தீனியாக மாற்றப்பட்டு எலும்புகள் அடங்கிய மூட்டையாக கட்டி வீசி எறியப்பட்ட ஆதிக்கசாதி வெறிக் கொடூரம்..
தான் நேசித்த கவிதா ஊரில் இருக்கக்கூடிய மாலா கோவிலில் அன்பின் அடையாளமாக.. கல்லாக நிறுத்தப்பட்டு இருக்கிறாள் என்பதை வெகு நாள் கழித்து அறிந்த வள்ளி.. அந்தச் சாமியைப் பார்ப்பதற்கு தொடர்ந்து நடத்தும் அன்பின் போராட்டம் . அதற்கு எதிராக அவரின் குடும்பம் முழுவதும்.. குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் வள்ளிக்கு ஆதரவாக அவளின் அம்மா ஒருத்தி மட்டுமே..
இவர்கள் இருவருமே
கட்டப்பட்டிருக்கும் சாதி வெறி கோட்டைக்கு
எதிராக அன்பின் ஆயுதங்களைக் கையில் ஏந்தி கல்லாக இருக்கும் கவிதாவை காண ஏரிக்கரை நோக்கி செல்கிறார்கள்..
என்னவானார்கள் வள்ளியும் வள்ளியின் அம்மாவும்.. வள்ளியின் அம்மா தன்னுடைய மகளுக்கு வள்ளி என்று ஏன் பெயர் வைத்தார்..
அணங்கு நீங்கள் அவசியம் வாசியுங்கள்.
காரணத்தை அறிவீர்கள்.
எழுத்தாளர் அருண்பாண்டியன் மனோகரன் எளிய மக்கள் தங்கள் வாழ்வியலில் புழக்கத்தில் கொண்டுள்ள வார்த்தைகளை நாவலாக இங்கே கொடுத்திருக்கிறார். எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் புதினம் களத்தில் வேகமாக முன்னேறி வருகிறது.. கிராமத்தில் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வரும் சாதிய வன்மங்களை.. ஆதிக்க சாதி வெறி எப்படி எளிய மக்களிடம் விரவிக் கிடக்கிறது என்பதை பேசியிருக்கிறது.
நாவலை வாசித்து விடும்பொழுது எனக்கு ஏற்பட்ட ஏரிக்கரை அனுபவம் உங்களுக்கும் எங்கேயாவது ஏற்பட்டிருக்கலாம்..
அதை உங்களுக்குள் அசைபோட வைக்கும்..
மகிழ்வின் உச்சத்திற்கு அது இழுத்துப் போகும்.
நாவலை அழகாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் தமிழ் சமூகத்திற்கு எதிர் வெளியீடு நிறுவனம். நாவலின் அட்டைப்பட வடிவமைப்பே பார்க்கும் வாசகனை வாசிக்கத் தூண்டும்.
என்னுடைய பள்ளி பேரன்பின் விஜயா..
அதே அந்த கருப்பு ஒற்றை மச்சத்தை தன்
வலப்புற உதட்டின் மேல்புறத்தில் தாங்கி
உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
சோமாசிபாடி எப்பொழுது போனாலும்
என்னையும் அறியாமல் அவள் வீட்டினை பார்த்து போவேன்.. வெளியே வந்துவிட்டால்
அவள் கண்களில் பாசம் இன்னும் அப்படியே இருக்கும். அந்த பேரன்பின் காரணம் இன்னும் எங்களுக்கு விளங்கவில்லை.
நீ சந்தோசமாய் இருக்கணும் விஜயா.!
சந்தோசமாய் இருப்பாய்.
கருப்பு அன்பரசன்.
“வேலை செஞ்சு குடுக்க மட்டும் சனங்க இருந்தா போதும்னு நினைக்காமல் இருக்கனும்.. அப்பதான் எல்லாம் சரியாகும்”
“ஞாபகம் வச்சுக்கோ, நமக்கு பிடிச்சவங்க நம்மள ரொம்ப கஷ்டப் படுத்திட்டா
அவங்க செஞ்ச நல்லது எல்லாத்தையும் நினைச்சு பார்த்துடு, அப்பதான் அவங்க மேல நமக்கு கோபமே வராது. அப்பதான் நாம அவங்கள கஷ்டப்படுத்தனும்ன்னு நினைக்க மாட்டோம்,
இரண்டாவது நம்மள தேடி பிடிச்சு பாசத்த காட்டுனா உட்டுடாதே.. நீயும் போட்டி போட்டுக்கிட்டு அவங்கள பாசம் காட்டி அனுசரிச்சுடு புரியுதா..?”
கவிதாவின் அப்பா.