செயலை விட சிறந்த சொல் வேறில்லை… பேரா. எ. பாவலன்
செயலை விட சிறந்த சொல் வேறில்லை…
(கவிஞர் இன்குலாபின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவத்தை முன்வைத்து)
“நான் எழுதத் தொடங்கியதற்கு எங்கள் வீட்டுச் சூழலும் ஒரு காரணம் இஸ்லாமிய சமூகம் வாய்கிழிய பேசினாலும் எங்களை ஒரு தனி சாதியாக தான் கருதுகிறது” இப்படித்தான் தனக்கும் எழுத்துக்குமான உறவு என்கிறார் கவிஞர் இன்குலாப்.
சாகுல் அமீது என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் இன்குலாப் அவர்கள், ஏப்ரல் 4 1944க்கும், டிசம்பர் 1, 2016க்கும் இடைப்பட்ட காலவெளியில் 72 ஆண்டுகள் ஏழு மாதங்கள் இருபத்தி நான்கு நாட்கள் என்று இந்தப் பூமிப்பந்தில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த போதும் வாழ்க்கைக்கு பிறகும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் மிக நேர்மையாக வாழ்ந்தவர்… வரலாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் சான்று தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசாங்கம் இரட்டைவேடம் போடுகிறது என்று திருப்பி அளித்தவர். அதேபோன்று இன்குலாப் இறந்த பிறகு 2017ஆம் ஆண்டு காந்தல் நாட்கள் என்கின்ற கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோது அவர் குடும்பத்தை சேர்ந்த மனைவி மக்கள் அனைவரும் ஏற்க மறுத்ததோடு நிராகரித்தனர்
கவிஞர் இன்குலாப் எப்பொழுதும் சமரசமின்றி வாழ்ந்த ஒரு நேர்மையான மனிதர். அன்று அரசாங்கத்தை எதிர்த்து கவிதை எழுதிய காரணத்திற்காக நடு சாமத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கைது செய்து தீவிரவாதியைப் போல நிர்வாணப்படுத்தி கடுமையாகத் தாக்கப்பட்டார். அதிகாரத்தால் எந்த விடுதலையும் கொடுக்க முடியாது. விடுதலை என்பது மற்றவர்கள் கொடுக்கப் படுவதில்லை மாறாக எடுத்துக் கொள்வது. மறுபடி…. மறுபடியும் ஆட்சியாளர்களையும் அதிகாரத்தையும் எதிர்த்துக் கொண்டே இருந்தார். அதனால் தான் அவரை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் டிசம்பர்1, 2016 அன்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து இறுதியாக அவரின் உடலை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுவாஞ்சேரிக்கு அடுத்து மூன்று மைல் தூரத்திலுள்ள அய்யன், சேரிக்கு சென்றிருந்தேன். என் கிராமத்திற்கு பக்கத்து ஊரைச் சர்ந்த என் வயதை ஒட்டிய இளைஞர் ஒருவர், பத்து இருபது பேர்களுமான கூட்டத்தில் சிவப்பு கொடியைக் பிடித்துக் கொண்டு இன்குலாப் ஜிந்தாபாத் இன்குலாப் ஜிந்தாபாத் என்று பெருங்குரலெடுத்து கோஷம் போட்டு சென்றார். அன்று கடுமையான மழை கூட. அந்த மழையிலும் ஓரமாக ஒதுங்காலாம் என்று எண்ணாமல் அணிவகுத்துச் சென்றனர். அந்த இளைஞரை பார்த்ததும் இந்த ஆப்பை எப்படி தெரியும் என்று அறிந்து கொள்ள வேண்டும் முனைப்பில் பொறுமை காத்து இருந்தேன்.
பின்னர் அவருடைய சவத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய பின்னர் அவரிடம் வினவினேன். அப்பொழுது எங்கள் கிராமத்திற்கும் அவருடைய கிராமத்திற்கும் இடையில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவுகளை அகற்ற சொல்லி போராட்ட களத்தில் நின்றவர் என்று கூறினார். அதன் பிறகு கவிஞரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. கருங்குழி மதுராந்தகம் அருகில் இருந்த அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடும் பொழுது தவறாமல் கவிஞர் கலந்து கொள்வார். இனிமேல் அவர் இல்லாமல் எப்படி எங்களால் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராட முடியும் என்று தன் சோகத்தை வெளிப்படுத்தினார். அக்கூட்டத்தில் இருந்த மற்றொரு தோழர் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதாகக் கூறினார். அந்த மாவட்ட தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடியபோது அப்போராட்டத்தில் தோழர் இன்குலாப் தான் தலைமை தாங்கினார் இவ்வாறு கூறினார். இந்த போராட்டக் களங்களுக்கு செல்லும்பொழுது அவர் ஒரு பேராசிரியர். அவர் பணி புரியும் நிர்வாகத்தை குறித்து துளியளவும் அச்சம் கொள்ளாமல் துணிச்சலோடு களத்தில் நின்றவர். அதேபோன்று கல்லூரி நிர்வாகத்திற்கும் விடுதி மாணவர்களுக்கும் நடந்த பிரச்சனைக்காக மாணவர்கள் பக்கம் இருந்த நியாயத்திற்காக கல்லூரி நிர்வாகத்தையும் எதிர்த்தவர். மட்டுமல்ல அந்த பிரச்சனையை முன்வைத்து அன்று குரல்கள் என்ற நாடகத்தின் மூலமாக வெளிக் கொணர்ந்தவர். நிருவாகம் அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திட்டமிட்டது. ஆனாலும் அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை இப்படி நூற்றுக்கணக்கான சான்றுகளைக் கூறமுடியும்.
கவிஞர் இன்குலாப் அவர்கள் நேர்மையாகவும் துணிவாகவும் மானுட விடுதலையை விரும்பியவர். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் கடுமையாக யுத்தம் நடைபெறுவது வாடிக்கையாகியிருந்து. அப்பொழுது இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை எதிர்த்து அறச்சீற்றம் கொண்டவர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்ட களத்தில் நின்றவர். போலித்தனமான இந்திய தேசியத்தை பேசியவர்களுக்கு மத்தியில் நேர்மையான தேசியத்தை முன்னெடுத்தவர். இந்திய தேசியம் என்பது தமிழர்களின் உணர்வுகளையும் உள்ளடக்கியது. கவிஞர் இன்குலாப் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஊன்றி கவனித்து கொண்டிருந்தார். அவர் போராடிய போராட்டத்தின் வலிமையை அறிந்து நேரில் பார்க்க முயன்றார். அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், நேரில் அழைத்து பாராட்டிய கவிஞர் இன்குலாப் அவர்கள்.
இன்குலாப் தான் வாழ்ந்த போது சமூகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து களமாடினார். சாதி மதம் ஆணாதிக்கம் உள்ளிட்டவற்றை வேரறுக்க புறப்பட்ட வேங்கையின் மைந்தன் அவர். பார்ப்பனியத்தையும் பாசத்தையும் சாதனத்தையும் தன் இறுதி மூச்சு வரை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பொதுவுடைமை சிந்தனையாளர் என பல முகங்கள் இருந்தாலும் அவரிடம் போர் குணமே உயர்ந்து இருந்தது.
தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவராக அறியப்பட்டவர். 1968 டிசம்பர் 25 பிறகு கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 அப்பாவி தலித் மக்களை உயிரோடு ஒரு குடிசையில் பூட்டி எரித்தனர். அந்தப் படுகொலைக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முன்னெடுப்பில் உண்மையை அறிந்து அக்கட்சியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர்தான் மார்க்சியத்தை விரும்பி ஏற்றுக்கண்டார். ஆனாலும் போலியே மார்க்சியவாதிகளாலும் அவரைப் பற்றி உண்மையாக தெரிந்து கொள்ளவில்லை. எதைப் பேசக்கூடாது தவிர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள் அவற்றையெல்லாம் எதிர்த்தார். எதிர் வாதம் செய்ய துணிவில்லாத போலி மார்க்சியவாதிகள் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கினார். அந்த அடிப்படையில் அவரை முதலாளித்துவ கவிஞர் என்று வசைபாடினர். என்னதான் அவர்கள் பொதுவுடமை பேசினாலும் அவர்களும் ஒரு சாதி இந்துக்கள் என்று கடக்க வேண்டி உள்ளது.
நகரசுத்தி தொழிலாளர்கள் மலத்தை கையால் அள்ளும் இழி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர் அப்பொழுது திரு. எரிமலை இரத்தினம், திரு. எக்ஸ்ரே மாணிக்கம் உள்ளிட்டவர்களோடு இணைந்து போராட்டக் களம் கண்டவர். திருச்சி மாவட்டம் குளப்பாடி கிராமத்தில் ஆதிக்க சாதியின் ஒருவரின் கிணற்றில் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் குளித்தார்கள் என்பதற்காக மின்சாரம் வைத்து அக்குழந்தைகளை கொல்லப்பட்டார். அந்தப் படுகொலைக்கு பின்னர் ஒரு கவிதையை இத்தனை மூர்க்கமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றவர் கவிஞர் இன்குலாப். அப்படி அந்த படுகொலைக்காக அவர் எழுதியதுதான் “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல். இப்படி எங்கெல்லாம் சாதி ஆதிக்கம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஐயா இன்குலாப்பின் கால்கள் களத்தில் நிற்கும் அவருடைய எழுதுகோல் புரட்சி செய்யும்.
கவிஞர் இன்குலாப் மிகச் சிறந்த படைப்பாளி. அவர் எழுதிய அல்லது படைத்த ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு உண்டு. தொடக்கத்தில் கவிதையால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அந்த வகையில் இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, சூரியனை சுமப்பவர்கள், கிழக்கும் பின்தொடரும் குரல், இன்குலாப் கவிதைகள் தொகுதி-2, ஒவ்வொரு புல்லையும் போன்ற கவிதை நூல்களையும், பாலையில் ஒரு சுனை என்னும் சிறுகதையையும், துப்பாக்கிகள் பூவாளிகள், நமது மானுடம், யுகாக்கினி, மூன்றாவது உலகம், யாருடைய கண்களால், ஆனால்…, எதிர்ச்சொல் என்னும் கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். அவ்வை குறிஞ்சிப்பாட்டு மணிமேகலை குரல்கள் தடி மீட்சி உள்ளிட்ட நாடகங்களையும் உருவாக்கியுள்ளார்.
கவிஞர் இன்குலாப் படைத்த அனைத்து படைப்புகளும் மானுட விடுதலைக்கு உண்டானவை ஆதிக்கசாதியை எதிர்த்தும் அதிகார வர்க்கத்தை எதிர்த்தும் போராடிய போராளி அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூட கடைசி நேரத்தில் விமர்சனம் என்ற பெயரில் அபாண்டமாக வசை சொற்களால் குற்றம் சுமத்தினார்கள் அவை எல்லாவற்றையும் எளிமையாக கடந்தவர் அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை போல உயிரோடு இருக்கும்போது தன்னுடைய உடலை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்து விட்டார்.
அன்று டிசம்பர் 1 2016 மழை கண்ணீர் வடிக்கிறது வீட்டு வாசலில் ஆயிரம் ஜோடி செருப்புகள் இடம் மாறிக் கிடக்கின்றன பெரிய பந்தற்கீழ் பெரிய பெரிய ஆளுமைகள் அமர்ந்திருக்கிறார்கள். அதில் பலரும் இன்குலாபின் நினைவுகளை குறித்து பகிர்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அணுகுகிறார்கள். அவை அனைத்தும் மற்றவர்களுக்கு மாறுபட்ட கோணம்.
மாலை 5 க்கும் 6 க்கும் இடைப்பட்ட நேரம். ஆம்புலன்ஸ் ஒன்று அந்த தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது அவரை எடுத்துச் செல்ல. அய்யன்சேரி கிராமமே ஆம்புலன்ஸ் வாகனத்தையும், வீட்டையும், தெருவையும் சூழ்ந்துகொண்டனர். இப்பொழுது உடலை மருத்துவர்கள் கொண்டு வந்த பேழைக்கு மாற்றப்படுகிறது. நிலம் அதிர பெரும் குரல் எழுகிறது. “இன்குலாப் ஜிந்தாபாத்…. இன்குலாப் ஜிந்தாபாத்…. வீரவணக்கம்…. வீரவணக்கம்…. கவிஞருக்கு வீரவணக்கம்” மற்ற எல்லோருடைய கண்களில் இருந்து அவர்களே அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது. சிலருக்கு உடல் ரோமம் சிலிர்க்கிறது. அந்த ஆம்புலன்ஸ் வாகனம் தெரியும் தெருவின் கடைக்கோடி வரை ஒரு கூட்டம் ஆர்ப்பரிக்க ஓடுகிறது. ஒரு கூட்டம் அமைதி காத்து நிற்கிறது. இன்குலாப் என்ற ஒற்றைச் சொலில் இன்னும் ஒளிர்கிறார்.
சிறகு விரித்து
விதை ஒன்று அலையும்
முளைக்க ஒரு பிடி மண் தேடி
முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி
சென்னை – 34
[email protected]
அறம் பதிப்பகமும் இலயோலா கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் இந்திய பொருளாதார உருவாக்கத்தில் அம்பேத்கர் – ஜே.சி. குமரப்பா- செலிக்மேன் ஆகியோரின் பங்களிப்பு பன்னாட்டு ஆய்வரங்கு.-
19.12.2022 திங்களன்று அறம் பதிப்பகமும், இலயோலா கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் இந்தியப் பொருளாதார உருவாக்கத்தில் அம்பேத்கர் – ஜே.சி. குமரப்பா – செலிக்மேன் ஆகியோரின் பங்களிப்பு என்னும் தலைப்பில் பன்னாட்டு ஆய்வரங்கம் இனிதே நடைபெற்றது.
வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு செய்த கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்முதல்வன் அவர்கள் அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ். மஸ்தான் கல்லூரி செயலர், முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், அமர்வுத் தலைவர்கள், அனைவரையும் முறையாக வரவேற்பு செய்தார்.
நோக்கவுரை மா. அமரேசன், அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கத்தைச் சொல்லி, இந்தக் கருத்தரங்கம் ஜே. சி. குமரப்பாவின் நீடித்தப் பொருளாதாரம் என்ற புத்தகத்தைப் படிக்கும் பொழுது, அதில் பாமையன் ஒரு முன்னுரை எழுதியிருந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஜே.சி. குமரப்பாவும், டாக்டர் அம்பேத்கரும் பொருளாதாரம் படிக்கும் பொழுது இருவருக்கும் நெறியாளராக இருந்தவர் பேராசிரியர் செலிக்மேன். அந்த வரிதான் என்னை தொடர்ந்து சிந்திக்கத் தோன்றியது. அதன் செயல் வடிவம் தான் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்தது.
இதுவரை இந்தியாவிலிருந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் Ph.D., படித்தவர்கள் ஐந்து பேர்கள்தான். ஒன்று டாக்டர் அம்பேத்கர், இரண்டு ஜே. சி.குமரப்பா, மூன்று டாக்டர் கே.ஆர். நாராயணன், நான்கு டாக்டர் மன்மோகன் சிங், ஐந்து அமிர்தியாசென் போன்றோர் இந்தியாவிலிருந்து சென்று பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை, ஐந்து நபர்கள் மட்டும்தான் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் படிக்கக் கூடாது என்று புறம் தள்ளப்பட்ட மக்களே அதிகம். அந்தப் புள்ளியிலிருந்து நாம் இங்கு சிந்திக்கும் பொழுது, இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டமைத்தவர்கள் இவர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்களில் கிராமப்புற பொருளாதாரத்தை ஜே.சி. குமரப்பாவும், நகர்புற பொருளாதாரத்தை டாக்டர் அம்பேத்கரும் கட்டமைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வேறு எங்காவது சந்தித்துக் கொண்டார்களா? அவர்களுக்குள் வேறு ஏதாவது உரையாடல் நடந்து இருக்கிறதா? என்று பார்த்தால் அந்தப் பதிவு எங்கும் இல்லை. ஒரே பேராசிரியரிடம் படித்த இருபெரும் ஆளுமையைப் பற்றிப் பதிவு எங்கும் இல்லை என்பதை விட அந்தப் பதிவை திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கருத்தரங்கத்தின் நீட்சியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது புத்த சமய பொருளாதாரத்தை கட்டமைத்த டாக்டர் அம்பேத்கர், புத்தசமயத்தைச் சார்ந்தவர். அவரை வழிநடத்திய பேராசிரியர் செலிக்மேனும் புத்தசமய ஆதரவாளர்.
கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து பௌத்த நூல்களை அனைத்தையும் படித்தவர் பேராசிரியர் செலிக்மேன். அவர் புத்தரை social reformer என்று முதன் முதலில் சொல்லியவர். அவருடைய முயற்சியில்தான் இரு பெரும் ஆளுமைகளாக உருவாகி இருக்கிறார்கள்.
உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு சம்பளம் தருபவர் யார் என்பது நன்கு தெரியும். ஆனால் உங்கள் பாக்கெட்டில் உள்ள சம்பளம் எங்க போகிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு சம்பளம் கொடுப்பது அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் பாக்கெட்டில் சம்பளத்தை எடுப்பது மல்டி நேஷனல் கம்பெனி.
இன்றைக்கு தொலைக்காட்சியில் கார் விளம்பரம் வருகிறது. அந்தக் கார் விளம்பரம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் வரும். ஏனென்றால் தமிழ் பேசுபவர்கள் ஏழைகள். ஆங்கிலம் பேசுபவர்கள் தான் பணக்காரர்கள். அந்த அளவிற்கு இந்த விளம்பரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு கார் உற்பத்தி செய்வதற்கு நான்கரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்தத் தண்ணீர் இந்தியாவில் களவாடப்பட்டு கொரியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு செல்கிறது.
20 மில்லி லிட்டர் டீ குடிக்க நான்கரை லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இந்த டீ தூள்கூட நல்ல தரமானது என்று சொல்ல முடியாது. நாம் குடிப்பது எல்லாம் டஸ்ட் டீ. நல்ல டீ தூள்களை எல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டு, கடைசியாக எஞ்சிய டஸ்ட் டீயை தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று தன் நோக்கவுரையை நிறைவு செய்தார்.
அருள்முனைவர் ஜேக்கப் அவர்கள் இந்தியப் பொருளாதார உருவாக்கத்தில் அம்பேத்கர், ஜே.சி.குமரப்பா, செலிக்மேன் ஆகியோரின் பங்களிப்பு பற்றி பன்னாட்டு ஆய்வரங்கத்தில் நம் கல்லூரி அருள்முனைவர் செயலர் தந்தை சார்பாகவும், கல்லூரியின் முதல்வர் சார்பாகவும், அறம் பதிப்பகத்தையும், தமிழ்த்துறையையும் மனதாரப் பாராட்டுகிறேன். இந்தக் கருத்தரங்கம் டாக்டர் அம்பேத்கர், ஜே.சி. குமரப்பா ஆகியோர் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுடைய சிந்தனை எந்தளவிற்கு பயனுடையதாக இருந்தது என்பதை நம் கல்லூரி மாணவர்களுக்கு இந்த கருத்தரங்கம் பெரும் உதவிபுரியும் என்று நம்புகிறேன். இத்தகைய சிறந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பவர் மாண்புமிகு அமைச்சர். சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் அமைச்சர் கே. எஸ். மஸ்தான் அவர்கள் வந்திருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி. மற்றும் மேடையில் வீற்றிருக்கும் அனைத்துச் சான்றோர் பெருமக்களையும் வருக வருகவென வரவேற்று மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாம் வத்திக்கான் ஏடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலியைப் பகிர்ந்து அளித்ததைப் பற்றி ஒரு பதிவு உள்ளது. அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூலி அவருக்கு மட்டும் போதுமானதாக இல்லாமல், குடும்பத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இதை நானும் அடித்தட்டு மக்களுக்கான பொருளாதார சிந்தனையாக பார்க்கிறேன்.
இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்கும் பொழுது, அடித்தட்டு மக்களின் பார்வையில் இருந்து உருவாக்க நினைத்த டாக்டர் அம்பேத்கர், ஜே.சி.குமரப்பா, செலிக்மேன் அவர்களின் சிந்தனைகளை நாம் கற்றுக்கொள்வது, அதிலும் குறிப்பாக இன்றைய இளையத் தலைமுறை மாணவர்கள் அதிகம் அறிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அறிவு சார்ந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்று எண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அதே சமயத்தில் தமிழ்த்துறை பல ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இது சாட்சியாகத் திகழ்கிறது. தமிழ்த்துறை தங்கள் மாணவர்களுக்கு இலக்கியத்தையும் தாண்டி, பொருளாதாரச் சிந்தனை உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்து வருகிறது. இப்படிப்பட்ட இந்த அறிவுசார் செயலைக் கண்டு மீண்டும் மகிழ்கிறேன். தமிழ்த்துறையையும், அறம் பதிப்பகத்தையும் மீண்டும் ஒருமுறை பாராட்டி, வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறேன் என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துகொண்டார்
தமிழ்த்துறைத் தலைவர் சூ. அமல்ராஜ் அவர்கள், தன்னுடைய வாழ்த்துரையில் மேடையில் வீற்றிருக்கும் சான்றோர் பெருமக்களை வரவேற்று மகிழ்ந்தார். தமிழ்த்துறையில் பொருளாதாரக் கருத்தரங்கம் ஏன்? என்ற கேள்வி இன்றுவரை, இப்பொழுது வரை பலருடைய மனதில் இருந்து கொண்டிருக்கிறது. இலக்கியம், பொருளாதாரத்தைத் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக திகழ்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவை காலம் தோறும் இலக்கியத்தைப் பாதித்தும், இலக்கியத்தில் தாக்கத்தை செலுத்தியும் உள்ளன என்பதை நாம் அறிவோம். மேலைநாட்டுப் பொருளாதார கருத்துக்களை, ஆசிய நாடுகளில் அல்லது இந்தியாவில் அப்படியே பொருத்திப் பார்ப்பது நல்லதல்ல என்ற கருத்தும் கூட நம்மிடையே உண்டு. தமிழ் இலக்கியங்களில் வினையே ஆடவர்க்கு உயிரே … உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார். வேலை செய்வது ஆண்களின் கடமை. பெண்களின் கடமை அந்த ஆண்களைச் சார்ந்து இருப்பது. இந்தப் பொருளாதாரச் சிந்தனையில் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தக்கூடியது. உலக அளவில் 40 சதவீத விழுக்காடு பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் அப்பொழுதும் பெண்களுக்கு பொருளாதாரத்தில் பங்கு இல்லை என்று கூறுகின்ற கருத்தையும் நாம் பார்க்கிறோம்.
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் தான் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததாகவும், சிதைக்கப்பட்டதாகவும் ஒரு மாயை ஏற்பட்டது. ஆனால் சாதியக் கட்டமைப்பு, அதற்கு ஒரு முக்கியமான காரணம் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவும், இக்கருத்தரங்கம் அமைகிறது. பண்டைய இலக்கியங்களில் விவசாயம், தொழில்கள் வியாபாரம் பற்றிய பல செய்திகள் பேசப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்திலும், சங்க இலக்கியத்திலும் நாம் பார்க்க முடியும், மேலை நாட்டவர்கள் வணிகம் செய்த வரலாற்றையும், இங்கு வந்து தங்கியிருந்து வணிகத்தில் ஈடுபட்ட செய்திகளையும் இலக்கியங்களின் வாயிலாக அறிய முடியும். உலகில் பொருளாதாரத்தில் உயர்ந்த சக்தியாக அன்றைக்கு இருந்ததைப் பல ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக நாம் அறியலாம்.
அரசுடைய வரிகளுக்கு எதிராகவும், உயர்சாதியினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் எழுப்புவதாக இன்றைய கருத்தரங்கம் அமைகிறது என்று கூறலாம். பொருளாதார முன்னேற்றம் என்பது ஏதோ பண்டம் விற்பனை என்று மட்டுமல்லாமல் மனிதர்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பாமையன் குறிப்பிட்டதைப் போல மனிதர்களையே ஒரு நுகர்வு பொருளாக, வணிகப் பொருளாக பார்க்கின்ற அந்த மனநிலையை மாற்ற வேண்டும் என்று அருட்தந்தை குறிப்பிட்டதைப்போல அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து இந்தப் பொருளாதாரப் பார்வை அமைய வேண்டும். சமூக மாற்றத்திற்கு கல்வியும் பொருளாதாரம் மட்டும் தான் முக்கியக் காரணமாக இருக்கும் என்று தமிழ்த்துறை கருத்தரங்கத்தை முன்னெடுத்துள்ளது. சமூகத்தில் இருக்கக்கூடிய சாதியக் கட்டமைப்பை முற்றிலும் ஒழிக்க கூடிய முக்கியமாக கல்வியும், பொருளாதாரமும் அமையும் என்பதனால் தான் இந்த பொருளாதார கருத்தரங்கத்தைத் தமிழ்த்துறை முன்னெடுத்து இருக்கிறது.
இந்த மண்ணில் இந்து தத்துவமும், பிராமணிய கருத்தியலும் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை பார்க்கிறோம். எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்ற மானுடச் சிந்தனை இங்கு வளர்க்க வேண்டும். சோசியலிசை எதார்த்த வாதம் என்ற இலக்கை, என்ற பார்வையை உருவாக்க வேண்டும். மாணவர்கள் இங்கு இருக்கக்கூடிய இளைய தலைமுறையினர், இங்கு இருக்கக்கூடிய இசங்களை புரிந்துககொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகளை அவர்கள் பெற வேண்டும். முற்போக்கு சிந்தனையாளர்களாக பிற்போக்கு தனங்களில் இருந்து வெளிவந்து முற்போக்காளர்களாக இந்த மாணவர்களை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அடிப்படை நோக்கத்தில் தான் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் இந்த கருத்தரங்கத்திற்கு துணை நிற்கும் அனைவரையும் மனதாரப்பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தன்னுடைய வாழ்த்துறையில் துறைத்தலைவர் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து பேசியிருந்தார்.
கௌதமசன்னா அவர்கள் அறம் பதிப்பகமும், இலயோலா கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து மிகச்சிறப்பாக ஒரு வரலாற்று முக்கியத்துவத்தோடு ஏற்பாடு செய்து கொண்டிருக்கக் கூடிய இந்த கருத்தரங்கம் என்பது மிக முக்கியமானது. இந்தக் கருத்தரங்கத்திற்கு வருகை தந்து தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உள்ளிட்ட அனைத்து சான்றோர்களையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்… பொதுவாக கல்லூரிகளில் மாணவர்களிடையே உரையாற்றுவது என்பது கொஞ்சம் சவாலான நிகழ்வு தான். ஆனால் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் முக்கியமானது.
இந்தியப் பொருளாதார உருவாக்கத்தில் டாக்டர் அம்பேத்கர், ஜே.சி. குமரப்பா பேராசிரியர் செலிக்மேன் ஆகியோர்களின் பங்களிப்பைப் பற்றி நாம்பேசிக்கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் செலிக்மேன் என்கின்ற பேராசிரியரிடம் அம்பேத்கர் படித்தது M.A., மட்டும் தான். M. A., பட்டத்திற்காக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை. இந்தக் கட்டுரைதான் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஒரு M.A., மாணவர் எழுதிய ஆய்வு கட்டுரைதான் பிற்காலத்தில் இந்திய பொருளாதாரத்தை மாற்றி இருக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இளங்கலை முடித்த பிறகு, முதுகலை படித்த ஒரு மாணவருக்கு எப்படி இப்படி ஒரு சிந்தனை வந்திருக்கிறது என்று என்பதை நீங்கள் கவனமாக பார்க்க வேண்டும். அவருடைய பொருளாதாரப் கருத்துக்கள் தான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக இருந்தது. என்பதை மாணவர்கள் பருவத்தில் உருவாகின்ற சிந்தனை என்பது எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காரல் மார்க்ஸ் ஒரு மனிதனின் சிந்தனை எந்த வயதிற்குள் மோல்டு செய்யப்படுகிறது என்றால் 24 வயதுக்குள் என்று கூறியிருக்கிறார். 24 வயதுக்குள் ஒரு மனிதனுக்கு எந்த வகையான சிந்தனை உள்ளே நுழைகிறதோ? அதுதான் கடைசிகாலம் வரைக்கும் இருக்கும். 24 வயதுக்கு மேலாக ஒரு மனிதனின் சிந்தனைப் போக்கை மாற்றுவது கடினம். அதனால்தான் மாணவர் பருவத்தில் முடிந்தவரை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை சிந்தனையை சீர்தூக்கிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அம்பேத்கர் பேராசிரியர் செலிக்மேனிடம் படித்து அந்தக் கட்டுரையை எழுதிய போது அவருக்கு 24 வயது தான். அந்த 24 வயதில் உருவான பொருளாதார சிந்தனை தான் இன்றைக்கான இந்தியா உலகத்திலுள்ள மிகப்பெரிய பெரும்பான்மையான சிந்தனையாளர்கள் எல்லாம் இந்த குறிப்பிட்ட வயதுகுள் தான் தங்கள் சிந்தனையை வடிவமைத்து இருக்கிறார்கள். ஆகமாணவர் பருவத்தில் இருக்கக்கூடிய நீங்கள் பொருளாதார கருத்துக்களையும், சமூகக் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் யார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு குறிப்பிட்ட சமூக தலைவர் என்பதையும் தாண்டி இந்தியாவிற்கு பொருளாதாரத்தை அறிமுகம் செய்த ஒரு இந்தியர். அன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் அவர் மட்டும்தான்.
நிறைய பேர் பொருளாதாரத்தைப் பற்றி பேசினார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் மட்டும்தான் அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை அறிந்து ஆய்வு செய்து அதில் ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர். மட்டுமல்ல முதல் இந்தியர். அதனால்தான் அமர்த்தியாசென் சொல்கிறார் Father of the Indian economy என்றால் அவர் டாக்டர் அம்பேத்கர். அந்த அளவிற்கு இருந்த அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அவருடைய சிலையையும் கூட பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறையில் அடைக்கப்பட்டு கூண்டுக்குள் இருக்கிறது. இப்படிதான் அவரை இந்தியாவில் உருவாக்கி வைத்துள்ளனர்.
உலகத்தில் பல நாடுகளில் அம்பேத்கருக்கு சிலைகள் இருக்கின்றன. ஆய்வு இருக்கைகள் இருக்கின்றன. இன்றும் ஐரோப்பாவில் பல நாடுகளில் அவரைப் பற்றியும், அவர் சிந்தனைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஜெர்மனியில் பல இடங்களில் அவரைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அடையாளமாகப் பார்க்கும் எண்ணம் உருவாகியுள்ளது. மாணவர்கள் அம்பேத்கர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் அவரைப் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் படிக்க வேண்டும். இந்த வயதில் படிக்கவில்லை என்றால் வேறு எந்த வயதிலும் படிக்க முடியாது.
நான் மாணவர் பருவத்தில் இருந்து பல நூலகங்களுக்கு சென்று இருக்கிறேன். இன்று சென்னையில் இருக்கும் எல்லா நூலகங்களிலும் நான் சென்று படித்திருக்கிறேன். அந்தவகையில் ஒருநாள் அம்பேத்கர் நூலைப் படித்தேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை மாறியது. அம்பேத்கரைப் படித்து இந்த சமூகத்தைப் புரிந்து கொண்டேன். பிறகு நம் செயல்பாடுகளில் உருவாகின்ற மாற்றம், பணிகளில் உருவாகின்ற மாற்றம், நம் சிந்தனைகளில் உருவாகின்ற மாற்றம் இவை எல்லாம் பெரிய அளவிற்கு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் மாணவர்களே நீங்கள் அதிகமாக படிக்கப் வேண்டும். அம்பேத்கரையும் படிக்க வேண்டும். இந்த அமர்வில் உங்களை வாழ்த்துவதிலும் கலந்து கொண்டதிலும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியை பதிவு செய்தார்.
இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் அவர்கள் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஜே.சி. குமரப்பா பேராசிரியர் செலிக்மேன் பங்களிப்பில் உருவான இந்தியப் பொருளாதாரத்தை பற்றிய இந்த அற்புதமான கருத்தரங்கிற்கு தலைமை ஏற்று இருக்கும் சிறுபான்மை துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் உள்ளிட்ட இந்த அரங்கத்தில் பங்கெடுத்துள்ள சான்றோர் பெருமக்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் பொருளாதாரத்தை நகரமயமாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார். அரசியலமைப்பு சட்டத்தில் இந்த ஒரு வார்த்தையை சேர்த்தார். இந்த ஒரு வார்த்தைக்காக caste less, colour less, class less இது கம்யூனிஸ்ட்களுக்கான வழித்தடம். சாதிபேதமற்ற நாட்டை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிக்கிறோம்.
பேராசிரியர் செலிக்மேன் சொன்னார் குமரப்பாவின் பொருளாதாரம் என்பது கிராமப்புற பொருளாதாரம். அம்பேத்கரின் பொருளாதாரம் என்பது கலப்பு பொருளாதாரம். இந்த நாட்டின் பொருளாதாரத்தில் 30 சதவீதம் அரசாங்கம் செயல்பட வேண்டும் 30% தனியார் செயல்படட்டும் 40% பொது நிறுவனமாக இருக்க வேண்டும் அதாவது அரசாங்கமும் தனியாகவும் இணைந்து நடத்தும் தொழிற்சாலைகள். இதுதான் இந்தியாவிற்கு பொருத்தமான ஒன்று. ஆனால் இப்பொழுது என்ன நடக்கிறது எவ்வளவு பொதுத்துறை நிறுவனங்கள் தாரைவார்த்து தருவதற்கே தனித்துறை உருவாக்க வேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளது. அதற்கு ஒரு தனி அமைச்சர் இன்றைக்கு இருக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. பொது நிறுவனங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களாக மாறி உள்ளது. cast less, colour less, Class less என்ற வார்த்தையை விட நிர்வாகத்தில் தொழிலாளருக்கு பங்கு Diversity Principles அதை நோக்கிப் போக வேண்டும். நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு என்பது எவ்வளவு உயரிய கொள்கை. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்ற முழக்கத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உழைப்பிற்கு மதிப்பேது என்று கேட்டவர். ஆகவே அவர் சொன்ன வார்த்தை தேவைக்கேற்ற ஊதியம். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது வேறு. தேவைக்கேற்ற ஊதியம் என்பது வேறு.
உலக அரங்கில் இந்தியா எப்பொழுதும் ஒரு விவசாய நாடு. இந்தியா விவசாய நாடு என்றால் விவசாயத்திற்கு தொழில் மதிப்பு தரவேண்டும் என்பவர் டாக்டர் அம்பேத்கர். ஒரு மெக்கானிக் வங்கியில் தொழில் தொடங்குவதற்கு கடன் கேட்டால் கொடுப்பதை போன்று விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில்லை அதற்கு industry status கிடையாது. முதன் முதலில் agricultureக்கு industry status கொடுக்க வேண்டும் என்பவர் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் உள்ள நதிகள் எல்லாம் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்று கூறினார். ஒரு பக்கம் வெள்ளம் பாயும் இன்னொரு பக்கம் காய்ந்து போகும். இன்னும் காவிரி நதிக்காக வழக்கு நடந்து கொண்டுள்ளது. எனக்குத் தெரிந்து நானே 20 முறைக்கு மேலாக அரசாங்க செலவில் டெல்லிக்கு சென்று வந்துள்ளேன்.
டாக்டர் அம்பேத்கர் இதற்கு மேலாக ஒன்று சொன்னார். ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயிரம் ஏக்கராவில் நிலத்தை எடுப்போம். அன்றைக்கு எடுக்க முடியும். ஆனால் இன்றைக்கு ஒரு ஏக்கர் கூட எடுக்க முடியாது. தரிசாக கிடைக்கும் அரசு நிலங்களை எடுத்து கூட்டுறவு பண்ணை அமைத்து ஏர் ஓட்டுகிறவர்களுக்கு, நாற்றுநடுபவர்களுக்கு, விவசாயம் செய்பவர்களுக்கு அரசாங்கத்தில் சம்பளம் கொடுக்க இந்தத் தொழிலை அரசாங்க சம்பளமாக்கு என்றவர். எவ்வளவு பெரிய சிந்தனை. இங்கு வர்க்க உணர்வை விட சாதிய உணர்வே மேலோங்கி உள்ளது. ஒருவன் தன்னை வர்க்கத்தால் அழைத்துக் கொள்வதை விட, சாதிய உணர்வு அவனுள் மேலோங்கி சாதியாலும் மதத்தாலும் தன்னை இணைத்து கொள்பவனிடம் வர்க்க உணர்வு இல்லை.
75 ஆண்டுகால இந்தியாவின் சுதந்திர வளர்ச்சி என்பது வெறும் பத்து சதவீத மக்களிடம் 90% சொத்து உள்ளது. இந்தப் பத்து சதவீதம் மக்களிடம் தான் 90 சதவீத மக்கள் அவர்களிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதுதான் வளர்ச்சி என்றால் இதுதடை செய்ய வேண்டிய வளர்ச்சி.
சட்டமன்றத்தில் சுவாமி சகஜானந்தா தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அதிகமாக பேசியவர். அவருக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையைப் பற்றி பேசியவன் நான்தான் என்று தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார்.
தலைமை உரை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான். இரண்டாம் உலகப்போரின் பின்னர் பின் காலனிய சிந்தனையாளர்கள் செலிக்மேன் அவர்களின் சிந்தனையில் வளர்ந்த திரு. குமரப்பா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரத்திற்கு வித்திட்டவர்கள் என்ற பெருமையோடு இந்த தலைப்பை நாம் அறிகின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறோம். அதன் விளைவாகவே சமத்துவம், சகோதரத்துவம், சுயமரியாதை, பொருளாதார சமத்துவம் ஆகியவை நாம் பெற்றிருக்கின்ற சிந்தனைக்கு அவருடைய பங்களிப்பு என்பதை நாம் அறிவோம். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக புத்தர் வழி பொருளாதாரத்தை கையாண்டவர்கள் என்ற வழியில் அந்த சிந்தனைகளை எல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் தான் இதனுடைய தலைப்பாக நான் அறிய முடிகிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் ஜே.சி. குமரப்பா அவர்களையும் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் செலிக்மேன் அவர்களை சந்தித்து இருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை இங்கும் புத்தகத்தின் வாயிலாகவும் பேசிய ஆய்வாளர்களின் பேச்சுக்களின் மூலமாகவும் ஒரு வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இப்படிப்பட்ட பொருளாதாரச் சிந்தனை இந்திய நாட்டுக்கு எவ்வளவு பெரிய பங்களிப்பு செய்து இருக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
பாபுசசிதரன், பொருளாதாரச் சிந்தனை என்பது ஆதிமனிதனின் பொருளாதார சிந்தனையில் இருந்து பார்க்க வேண்டும். அப்படி பார்த்தோமேயானால் அவனிடம் தான் முதன் முதலில் உணவு பொருளாதாரம் இருந்தது. அவனுக்கு கிடைத்த உணவுகளை தேக்கி வைத்திருக்கிறான். சேப்பியன்ஸ் என்கின்ற நூலில் குறிப்பிடுவது போல எல்லோரும் குழுக்களாக ஒரு குழுவுக்காக சேமித்து சேகரித்து வைத்த உணவை கைப்பற்றுவதற்காக வேறொரு குழு வருகிறது. அப்பொழுது அவர்களுக்குள் சண்டை உருவாகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதம் தேவைப்படுகிறது. அதனால் ஆயுதப் பொருளாதரமும் உள்ளே நுழைகிறது. ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நகரும் பொழுது அவர்களுக்கு கால்நடை பொருளாதார தேவைப்படுகிறது. உணவு ஆயுதம் கால்நடை இந்த மூன்று தான் அடிப்படை பொருளாதாரமாக இருந்தது. இந்த மூன்று தான் இன்றைக்கும் எல்லா நாடுகளிலும் அடிப்படை தேவையாக இருந்து வருகிறது.
இன்றைக்கு ரஷ்யாவிற்கும் உக்கிரேனுக்கும் நடைபெறும் போரில் ஆயுதம் முன்னிறுத்தப்படுகிறது. ஆட்டோ மொபைல்ஸ் இண்டஸ்ட்ரி இன்று உச்சத்தில் இருக்கிறது. அடுத்து பேட்டரி சிஸ்டம் வந்துவிட்டது. இது போன்ற சூழலில் டாக்டர் அம்பேத்கர், டாக்டர் ஜே.சி.குமரப்பா, பேராசிரியர் செலிக்மேன் ஆகியோரின் பங்களிப்பு எப்படி வந்தது என்பது தான் முக்கியமான கருத்து. இங்க பொருளாதாரம் பற்றி ஒரு கதையைச் சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு தட்டில் பத்து இட்லி இருக்கிறது. அதை ஒருவன் சாம்பாரும் நான்கு வகையான சட்னியும் வைத்து சாப்பிடுகிறான். அவனுக்குத் தேவையானது வெறும் நான்கு இட்டிலி போதுமானது. ஆனால் அவனுடைய தட்டில் உள்ள 10 இட்டிலிகளில் நான்கைந்து சாப்பிட்டு முடிக்கிறான். மீதி உள்ள ஆறு இட்லியை அடுத்த வேலை உணவிற்காக பதுக்கி வைக்கிறான். இதுதான் ஆரம்பக் காலங்களில் நிலவிய பொருளாதாரம். யாரிடம் வலிமையும் அதிகாரமும் இருக்கிறதோ அவனே உணவை தேக்கி வைத்துக் கொள்வான். இது சர்வதிகார பொருளாதாரம்..
டாக்டர் அம்பேத்கர் பேசிய பொருளாதாரம் ஏன் இங்கு தேவைப்படுகிறது என்றால் முதலில் நீங்கள் இட்லியே சாப்பிடுவதற்கு தகுதி இல்லாதவர்கள். அதுவும் தட்டில் சாப்பிடுவதற்கு தகுதியற்றவர்கள். அதன்பிறகு நான்கு சட்டினியை வைத்துக் கொண்டு சாப்பிட கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் யாருடைய உழைப்பில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருள் மறுக்கப்படுகிறது. இந்த இடத்தில் தான் டாக்டர் அம்பேத்கர் எல்லோரையும் ஒன்றிணைத்து பௌத்த பொருளாதார திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் கம்யூனிச பொருளாதாரத்தில் இருந்து கூட வேறுபடுகிறார்.
இந்த இடத்தில் ஜே.சி. குமரப்பா இயற்கை பொருளாதாரத்தை முன்னிறுத்துகிறார். ஒரு பொருளை பயன்படுத்த அது குறைய தொடங்கும். இது அடுத்த சந்ததியினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கும் இந்த பொருளாதாரத்தில் தேவை இருக்கிறது. அதனால் அவர்களுக்கு அது தேவைப்படுகிறது. இயற்கையையும், இயற்கை சார்ந்த கனிம வளங்களையும், பாதுகாக்க வேண்டும். அதனால் மறு சுழற்சியில் வருகின்ற பொருட்களை பொருளாதாரத்திற்கு கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தேவையை காலத்திற்கும் அழிந்து போகாமல் மனித இனத்தை தீமைகள் இல்லாமல் வாழ முடியும். இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் காந்தி அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் காந்திய வழியில் ஜே.சி. குமரப்பா இயற்கை பொருளாதாரத்தைக் கொண்டு வந்தார். இந்த அற்புதமான பொருளாதாரம் கொள்கையை இன்று வரை யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை. வெளியில் கொண்டு வரவும் இல்லை. எந்த இடத்தில் நல்ல சிந்தனை இருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்வது நாட்டினுடைய கடமை. சமூகத்தினுடைய கடமை ஆனால் இந்த இடத்தில் அப்படி இல்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் புறம் தள்ளப்படுகிறார்கள்.
தொடக்க உரையில் நண்பர் அமரேசன் சொன்னதைப் போன்று, பொருளாதாரம் படிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் சென்றவர்கள் ஜே. சி .குமரப்பா. அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கச்செல்லும் பொழுது ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தேவாலயத்தில் ஒரு சிற்றுரை கொடுக்கிறார். இந்தியா ஏன் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளது என்பதைப் பற்றிய உரை. அந்தச் சின்ன உரைதான் அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
காலையிலிருந்து டாக்டர் அம்பேத்கரைப் பற்றி அதிகமாக பேசிவிட்டனர். ஆனால் அவரைப் பேசுவதை விட குமரப்பாவைப் பற்றி பேசுவது தான் என்னுடைய நோக்கம். அவர் கொடுத்த அந்த உரை தான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியானது. அந்தச் செய்தியை அன்றைய நாளில் அனைவரும் மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். அதில் ஒருவர் பேராசிரியர் செலிக்மேன். அவர் குமரப்பாவை அழைத்து பாராட்டுகிறார். உன்னுடைய இந்த உரையிலிருந்து ஒரு ஆய்வாக எடுத்து ஏன் செய்யக்கூடாது?. இந்த தலைப்பிலேயே நீங்கள் ஆராய்ச்சி செய்யுங்கள் என்று கருத்துரை வழங்கினார். அதன் பிறகு தான் உலகப் பொருளாதாரச் சிந்தனைகளை மாற்றிப் போட்டவராக வலம் வருகிறார்.
டாக்டர் அமர்த்தியாசன், அவருடைய பொருளாதாரக் கொள்கையை எடுத்து சில இடங்களில் கையாண்டு உள்ளார். இந்தியா சுதந்திர காலகட்டத்தில் பூமி வெப்பமயமாதல் பற்றி பேசியுள்ளார். கனிம வளங்களைப் பற்றி பேசியுள்ளார். எல்லோருக்கும் சமமான கிராம வாழ்வியல் பொருளாதாரம் பற்றிப் பேசியுள்ளார். மரபுசாரா எரிசக்தி குறித்து பேசியுள்ளார். இவருக்கு இப்படிப்பட்ட ஞானம் எப்படி கிடைத்தது. ஆகவே மாணவர்களே இந்த மாணவப் பருவத்தில் நீங்கள் சிந்திக்கும் சிந்தனைதான் இந்த உலகத்தைப் புரட்டிப் போடும். ஒவ்வொரு முறை வாழ்க்கை குறித்தும், சமூகம் குறித்தும், இங்கு நடக்கும் அரசியல் குறித்தும், சிந்தித்துக் கொண்டே இருங்கள். அது குறித்து உங்கள் கருத்துகளை…. அது குறித்து உங்கள் கட்டுரைகளை… தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு எழுதி அனுப்புங்கள். அது தவறோ? சரியோ? சமூகம் தீர்மானிக்கட்டும். சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற துறை சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் தீர்மானிக்கட்டும். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு தோன்றும் சிந்தனைகளை ஆவணப்படுத்துதல். நிச்சயமாக என்றாவது ஒருநாள் டாக்டர் அம்பேத்கர் போன்றவர், டாக்டர் ஜே.சி. குமரப்பா போன்றவர், டாக்டர் செலிக்மேன் போன்றவர்களைப் போல் நீங்களும் இந்தக் கல்லூரிக்கும், இந்த சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
தமிழ்இயலன் அவர்கள், தமிழுக்கும் பொருளாதாரத்திற்கும் மிக நெருங்கிய தொடரபு இருக்கிறது. திருவள்ளுவரே மிகச்சரியான பொருளாதார கருத்துக்களை எல்லாம் சொல்லி விட்டு போயிருக்கிறார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரிவிதித்தல் பற்றிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் சான்றுடன் கூறியிருந்தார்.
யானைக்கு கவளம் கவளமாக உணவை உருட்டிக் கொடுத்தால் அது பல நாட்களுக்கு பயன் படும் அந்த யானையைக் களத்தில் இறக்கி விட்டால் வாய்ப்புகுவதைக் காட்டிலும் அது காலால் மிதிப்பட்டு பயனற்று போவது தான் அதிகம்.
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
இந்தியப் பெருங் கண்டத்தின் பேரறிவாளன் என்று சொன்னால் அது அம்பேத்கரை தான் சொல்ல முடியும். ஜே.சி.குமரப்பாவும், அம்பேத்கரும் செலிக்மேனிடத்திலே பொருளாதாரம் பயின்றவர் என்ற மையப் புள்ளியில் இருந்துதான் இந்த கருத்தரங்கம் தொடங்குகிறது. அறம் பதிப்பகத்தின் அமரேசனின் கருத்து ஒரே பேராசிரியரிடம் படித்த அம்பேத்கரும் ஜே. சி. குமரப்பாவும் இந்தியாவிற்கு வந்து பொருளாதார தளத்தில் இரு பிரிவுகளில் இயங்கி இருக்கிறார்கள். அன்பிற்குரிய அம்பேத்கர், ஜவஹர்லால் நேருவிடத்திலேயே தொடர்பில் இருக்கிறார். காந்தி இடத்திலே ஜே. சி.குமரப்பா பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் தொடர்பில் இருக்கிறார். இருவரும் வேறு வேறு நிலைகளில் இயங்குவதாக தெரிகிறது. ஆனால் ஒரு மையப்புள்ளியில் இருவரும் சந்திக்கிறார்கள். இந்தக் கருத்தரங்கத்தில் வாயிலாக அவர் சொல்ல விரும்பிய செய்தி இருவருக்குமான பொருளாதார சிந்தனை குறித்து சிந்திக்கும்போது ஜே. சி. குமரப்பா காந்தியடிகளுடன் கிராமிய பொருளாதாரம், டாக்டர் அம்பேத்கர் நகர்புற பொருளாதாரத்தையும் குறித்துப் பேசினார்.
அடிப்படையில் என்னவென்றால் கிராமங்களில் சாதி இருக்கிறது. நகரங்களில் சாதிமுறை குறைய வாய்ப்பு இருக்கிறது எனவே நான் நகர்புற பொருளாதாரத்தை வளர்க்கிறேன் என்ற நிலையிலேயே அம்பேத்கர் செயல்பட்டிருக்கிறார். தனி மனிதனை முன்னிறுத்தும், தனி மனிதனை முன்னிறுத்தாத பொருளாதாரத்திற்கும் இடையே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது.
அம்பேத்கரின் கருத்தியல் பௌத்தத்தில் மையம் கொண்டிருக்கிறது. அவரது பொருளாதாரமும் அங்கிருந்து தொடங்கியது. காந்தியடிகளுடைய தத்துவம் இந்துத்துவத்திலே இருந்தது. அதான் அமரேசன் கொண்டுவந்து முடியுமா என்பதை செய்துள்ளார். இந்த இருவருக்குமான ஒரு ஒற்றைப் புள்ளி இருக்கிறது.
இன்றுள்ள நுகர் பசியில் நாம் எவ்வாறு இயற்கையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு இயற்கையின் நலத்தை விட்டுச் செல்கிறோமா என்ற கேள்வியை இருவரும். தங்க சிந்தனையில் வைத்துள்ளனர்.
இந்தியாவிற்கு முதன்முறையாக டிராக்டர் வருகிறது அப்பொழுது ஜே. சி. குமரப்பா ஒரே ஒரு கேள்வியைக் கேட்றோர். டிராக்டர் சாணி போடுமா? அது எவ்வளவு முக்கியமான கேள்வி என்பதைக் கவனிக்கவேண்டும். மாடு உழுகிற இடத்தில் டிராக்டரைக் கொண்டுவந்து நிறுத்தினால் மாடு உழேவதற்கு மட்டும் பயன்படவில்லை. அது சாணி போடுகிறது. அது எருவாகப் பயன்படுகிறது. இயற்கை மறுசுழற்யிலே பயன்படுகிறது. ஆனால் டிராக்டர் சாணி போடுமா? என்ற கேள்வி அவருடைய சிந்தனைக்கு வித்திட்டது. அப்போது பொது நிலையில் இருந்து பார்க்கும் பொழுது அம்பேக்கரிய பொருளாதாரமும், ஜே.சி. குமரப்பா பொருளாதாரமும் வேறு வேறு செய்திகளாக இருந்தாலும் இருவரும் அடித்தட்டு மக்களை நோக்கியே, இயற்கை வளத்தை அழகாக பயன்படுத்த வேண்டிய நாம் வாழ்கின்ற இந்த உலகத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிற பொருளாதாரக் கோட்பாட்டை செலிக்மேனிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்.
நோக்கவுரை ஆற்றிய அமரேசன் குறிப்பிட்டதைப்போல கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பெளத்த நூல்களை அனைத்தையும் படித்துள்ளார். இரண்டு பேருக்கும் சொல்லித்தந்த அவர், இருவருக்கும் வெவ்வேறு செய்தியைச் சொல்லி இருக்கமாட்டார். டிஸ்கவரி சேனலில் ஒரு விளம்பரம் வரும் let’s leave over child living planet அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதி வாய்ந்த ஒரு உலகத்தை விட்டுச் செல்வோம் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களும் ஜே. சி. குமரப்பா அவர்களும் சிந்திக்கிறார்கள் என்று சொன்னால் பௌத்த சிந்தனைகளை உள்வாங்கி கொண்ட செலிக்மேன் அதற்கு ஆதாரமாக இருக்கிறோர் என்று சொல்லி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்,
அ.மார்க்ஸ் அவர்கள் குறிப்பாக இந்தத் தலைப்பில் பேசுவது முக்கியமான ஒன்று. அதுவும் டாக்டர் அம்பேத்கரைப் பற்றியாவது இங்கே சமீப காலமாக நிறைய புத்தகங்கள், நிறைய விவாகங்கள் நடந்திருப்பதால் சற்று அவரைப் பற்றி புரிந்து வைத்து கொண்டுள்ளோம். ஆனால் மற்ற இருவரை குறித்தும் குறிப்பாக ஜே.சி. குமரப்பா செலிக்மேன் இருவருடைய நூல்களையும் சுருத்துக்களும் இங்குதான் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த முழுநாள் கருத்தரங்கத்தில் இவர்களைப் பற்றி பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டை அறம் பதிப்பகம் மற்றும் இலயோலா கல்லூரியில் இணைந்து செய்வது வரவேற்கத்தக்கது.
நான் ஜே.சி. குமரப்பாவை பற்றி பேசுவதற்கு ஒப்புக்கொண்டேன். காரணம் ஜே.சி.குமரப்பா தமிழ் நாட்டைச் சார்ந்தவர் என்று நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு எளிய குடும்பத்தைச் பிறந்தவர். அவருடைய கருத்துக்கள் வித்தியாசமானதாகவும் மகாத்மா காந்திக்கு நெருக்கமாகவும் இருந்தவர். அவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இருந்தாலும் இந்தியா சுதந்திரம் பெற்று சுயமாக ஆட்சி நடத்தும் பொழுது அவருடைய கருத்து எங்கும் செயல்படுத்தப்படவில்லை.
திட்டமிட்டப் பொருளாதா பொருளாதாரம் என்பது அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஒன்று. அதனால் திட்டமிட்ட பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு எங்கும் திட்டமிட்ட பொருளாதாரம் மாறாத சந்தைப் பொருளாதாரம் தான் நடக்கிறது. எல்லாவற்றையும் சந்தைப்படுத்தும் நோக்கத்தில் தான் இன்றைய அரசாங்கம் செயல்படுகிறது. கடந்தப் பத்து ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதிலிருந்து புரியும். நீதித்துறையிலும் அவர்களின் தலையீடு, பொதுத்துறையிலும் அவர்களின் தலையீடு என்று தலையிட்டு தவறான வழிக்கு அழைத்து செல்கிறது.
நேரு கொண்டு வந்த பல திட்டங்களை எல்லாம் வீணடிக்கப்பட்டு விட்டன. ஜே.சி. குமரப்பா காந்தியடிகளின் பார்வையில் இருந்தாலும் அல்லது காந்திக்கு நெருக்கமாக இருந்தாலும் கூட அவருடைய பொருளாதார கொள்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். எது தேவை என்பதை மட்டுமே தீர்மானித்து அந்த திட்டங்களை எல்லாம் நடைமுறையில் கொண்டு வந்தனர். இதுபோன்று அரிய பல தகவல்களை எல்லாம் சான்றுடன் எடுத்துக்காட்டி தன்னுடைய கருத்தை நிறைவு செய்தார்.
நிறைவு விழாவின்போது கல்லூரி முதல்வர் அருள்முனைவர் தாமஸ் அமிர்தம் அவர்கள் கலந்து கொண்டார்கள். காலையிலிருந்து நடந்த கருத்தரங்கத்தில் செயல்பாடுகளை எல்லாம் நன்கு அறிந்து இந்த கருத்தரங்கத்தினுடைய தேவையும் அதன் நோக்கத்தையும் முன்வைத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்கள். இது கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட சான்றோர் பெருமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்த நிகழ்வில் முதுகலை பொருளாதாரத்துறை மாணவர்கள், இளங்கலை தமிழ் துறை மாணவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து வந்த சான்றோர்கள், அறிஞர் பெருமக்கள், அறம் பதிப்பகத்தின் நிர்வாகிகள் இப்படி பல பேர் கலந்து கொண்டு ஊர்கூடி தேர் இழுத்து இந்த விழாவை நிறைவு செய்தனர்.
பேரா. எ பாவலன்
drpavalan@gmail
கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்
அந்த உலகம்
அவ்வளவு அழகாக இருந்தது.
எனக்கானவற்றை நானே
உருவாக்கிக் கொள்கிறேன்.
ஒருநாளும்
அந்த வாழ்க்கையை
நான் வெறுக்கவில்லை.
அச்சம்
பயம்
கிஞ்சித்த
அளவேனும் இல்லை.
எனக்கு வாழ பிடித்திருந்தது
நிறவேற்றுமை
சாதிப் பாகுபாடு
பெண்ணடிமை
வன்புணர்வு
வன்கொடுமை
தீட்டு
குடிநீரில் மலம் கலப்பது
இரட்டைக் குவளை
மலச்சட்டி தூக்கிச் சுமப்பது
சாணிப்பால்
சவுக்கடி
ஊர் சேரி என்று
எந்த கொடுமையும்
நடந்ததாக வரலாறு இல்லை.
கடவுளைப் பற்றிய
தேவை எழவில்லை
அதனால் மதச் சண்டை
அங்கு இல்லை.
குரோதமான
வன்மம் நிறைந்த
மனிதர்களை
அங்கு
நான் கண்டதே இல்லை.
பெண்கள்
அவர்கள் விரும்பியவரை
காதலித்தனர்.
அவர்கள் காதலுக்கு ஒருநாளும்
ஒருவரும் யாரும் தடையாக
இருந்தது இல்லை
குழந்தைகளை
குழந்தைகளாகவே
பார்க்கிறார்கள்.
மறந்தும் ஒரு நாளும்
பாலுணர்வுக்கு
துன்புறுத்தப்படவில்லை.
பாலின வேறுபாடும்
வயது வித்தியாசமின்றி
அனைவரும் அனைவரிடமும்
நட்புக் கொண்டிருந்தனர்.
யாரும்
ஒதுக்கப்பட்டவர்கள்
ஓரம் கட்டப்பட்டவர்கள்
ஒடுக்கப்பட்டவர்கள்
என்ற சொற்களை
அறிந்ததில்லை.
நாங்கள்
நினைத்த இடங்களுக்கு
சுதந்திரமாகச் சென்று வந்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது
அன்பு பாராட்டி
ஆறத்தழுவிக் கொண்டோம்.
எதிர்காலம் குறித்த
எந்தக் கவலையும் இல்லை.
ஆனால்
எங்களுக்கான கடமை
இருப்பதை உணர்ந்தோம்.
நாங்கள்
ஒவ்வொரு நாளும்
விடியலுக்குப் பிறகு
உயிருடன் தான் இருக்கிறோம்
என்ற எந்த நிர்பந்தத்திற்கும்
ஆளாக்கப்படவில்லை.
நான்கு வர்ணங்களைப் பற்றி
நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
அதனால்… அதனால்…
பிரம்மா
விஷ்ணு
சிவன்
போன்ற கடவுளர்களும்
புத்தன்
இயேசு
நபி
போன்ற போராளிகளையும்
நாங்கள் அறிந்திருக்கவில்லை
நாங்கள்
விரும்பிய
கல்வியை
கற்றோம்
நாங்கள்
விரும்பிய
உணவை
உட்க்கொண்டோம்.
எங்கள்
கரங்களிலிருந்து
புத்தகங்கள்
களவாடப்படவில்லை.
எழுதுகோல்
சுதந்திரமாக
எங்கள்
கரங்களில்
தவழ்ந்து விளையாடியது.
உழைப்பு மீது
அத்தனை மதிப்பு
மிக்கவர்களாக இருந்தனர்.
உழைப்புக்கேற்ற
ஊதியம் கிடைத்தது.
எந்த சுரண்டலுக்கும்
உள்ளாக்கப்படவில்லை.
எங்களுக்குள்
எந்த வர்க்க பேதமும்
உண்டாகவில்லை.
என்
புல்லாங்குழலிருந்து
வரும் இசையைப் போலவே
எல்லா திசைகளிலும்
நீக்கமர கலந்திருந்தோம்.
மானுட தத்துவத்தின்
அடையாளமாகவே
மட்டும் இருந்தோம்.
சொல்லப்போனால்
போலி தேசபக்தர்களின்
பாரத மாதாவுக்கு ஜே!
என்கின்ற வெற்றுகோசம்
இல்லாமல் இருந்தது.
பேரா. எ. பாவலன்
[email protected]