நூல் அறிமுகம்: கயிறு – இ.பா.சிந்தன்
நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – விஷ்ணுபுரம் சரவணன்
நூல் : ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹240/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
தோழர் ச.தமிழ்ச்செல்வனின் கதைகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கிய வெளியில் சர்யலிசம், மேஜிக் ரியலியசக் கதைகள் அதிகம் புழக்கத்தில் இருந்த சூழலில் அவர் தொடர்ந்து யதார்த்தக் கதைகளையே எழுதினார். எளிய மனிதர்களின் வாழ்வின் வலிய பாடுகளை சிடுக்கற்ற எளிய மொழிநடையில் பகிர்ந்தது அவரது பலம்.
அவரின் வெயிலோடு போய், வாளின் தனிமை போன்ற சில கதைகள் பலராலும் சிலாகிக்கப்பட்டவை. அவை எனக்கும் பிடிக்கும். இப்போது வாசிக்கும்போது ’அவரவர் தரப்பு’ யை கதை என்று எளிதில் கடக்க முடியாத உணர்வைத் தருகிறது.
சிகரெட் எனும் ஒரு விஷயத்தை இழக்க முடியாத ஒருவனுக்கும் அவனது மனைவிக்குமான இணக்க விலகலை விவரிக்கிறது இக்கதை. பேருந்து உணவுக்காக நிறுத்தப்படும் இடத்தில் தொடங்கும் கதை. அதேபோன்ற இன்னொரு சூழலில் முடிகிறது. இரண்டுக்கும் இடையிலான காலம் என்பது இருவருக்கும் இடையே எத்தனை விலக்கத்தைத் தந்துள்ளது. அதேநேரம் அந்த விலக்கம் கோர்த்திருக்கும் கைகளுக்குள் இருக்கும் விலக்கம்தான் என்பதையும் சொல்லத் தவறவில்லை.
தனக்களித்த வாக்கை மீறி புகைக்கும் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டான் எனத் தெரிந்தபிறகு கதையில் வரும் வரிகள் அவ்வளவு நுட்பம்; அவ்வளவு கச்சிதம்; அவ்வளவு நேர்த்தி.
“அன்று ஒரு இடைவெளி அவள் மனதில் உருவாகிவிட்டது. வெளியே யாருக்கும் தெரியாத இடைவெளி. உற்றுப்பார்த்தால் அவள் முகத்திலிருந்து ஏதோ ஒன்று விடைபெற்றுப் போயிருப்பது தெரியும். ஒரு பெருமித உணர்வு. அவன் முழுக்க முழுக்க தன் ஆளுமைக்குல் இருக்கிறான் என்கிற கர்வம். இவையெல்லாம் கொண்டு வந்து சேர்த்திருக்கிற ஒரு ஒளிமிக்க சிரிப்பு. இதெல்லாம் காணமல் போனது. அந்த இடத்தில் ஒரு சிறு இருள் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது’
இந்தப் பழக்கம் மாபெரும் தவறா என்று அவன் நினைக்க, இதைக்கூட விட முடியாதா என அவள் தவிக்க… இந்த இரண்டும் சந்தித்து அப்பழக்கத்தை விட்டொழிக்க முடியா நிலையை காலமும் வாழ்க்கையும் தந்துகொண்டிருக்க… இந்த வாழ்க்கையில்தான் எத்தனை எளிய விஷயங்கள் அழுத்தமான அழுத்தங்களைக் கொண்டிருக்கிறது.
பதில் இதுவாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் சொடுக்கும் ஆணுடைய கேள்விகள் பொய்க்கையில் புழுவெனச் சுருளும் ஆண் மனச் சிக்கல்களை, எதிர்பார்ப்புகள் மீது ஊற்றப்படும் கொதிநீரை எதிர்கொள்ள முடியாது தவிக்கும் பெண் மனச் சித்திரங்களையும் நுணுக்கமாக பதிவு செய்ய எளிமையான மொழியாடலைத் தேர்ந்தெடுத்தது இன்னும் கதையின் வாழ்வை இன்னும் நெருக்கமாக்குகிறது.
பன்முகத்தன்மை என்றவுடனே தேசத்திற்கான, சமூகத்திற்கான சொல்லாடலாகப் பார்க்கும் எழுத்துலகில், குடும்பம் எனும் ஒரு குடையில் இணையில் பல்வேறு உறவுகளின் பன்முகத்தன்மையைப் பற்றி நுட்பமாகப் பேசுபவை இவரின் கதைகள். அவற்றில் இக்கதை மிகவும் முக்கியமான ஒன்று. அதற்கு, கதையில் கடைசி சில வரிகளே சாட்சி.
‘தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற பெண்ணைவிட தன்னைத்தன் தவறுகள் குறைகளோடு (தன் அம்மாவைப் போல) அப்படியே ஏற்றுக்கொள்கிற பெண்ணைத்தான் ஆண்மனம் காலகாலமாக விரும்புகிறது என்பதை அவள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை. பெண்ணின் பயங்கள் சந்தேகங்கள் மனநிலைகள் இவற்றுக்கெல்லாம் அவள் பொறுப்பல்ல என்பதை அவனும் புரிந்துகொள்ள வில்லை. முந்தைய பல்லாயிரம் தலைமுறை ஆண்களைப் போல.’
வீட்டுக்கு வெளியே மட்டுமே பேசிவரும் பன்மைத்தன்மை உரையாடலை குடும்ப உறவுகளில் எப்போது கையாளப்போகிறோம் எனும் கேள்வியை எழுப்பியுள்ளது கதை. கதையின் கருவை அல்ல, கதை எழுதப்பட்டிருக்கும் மனப்போக்கின் மையத்தைச் சுட்டும் விதமாகவே ’அவரவர் தரப்பு’ தலைப்பிடப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
‘தோழர் தமிழ்ச்செல்வனின் இந்தப் பன்முகத்தன்மை அவரின் கதைகளில் மட்டுமல்லாது, அபுனைவு, பேச்சு, உரையாடல் உள்ளிட்டவற்றிலும் முந்தி நிற்கிறது. அதற்கு சரியான உதாரணம், வெண்மணி குறித்து வெளியான இலக்கியப் பதிவுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரை.
இக்கதையை ஏற்கெனவே வாசித்திருந்தபோது, வாசிப்பும் வாழ்வனுபவங்களும் புத்தொளியை இக்கதையில் வீசுகிறது. அற்புதமான படைப்புகளை மீள் வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும் எனும் எண்ணத்தை விதைத்துள்ளது அவரவர் தரப்பு. தோழருக்கு எனதன்பும் நன்றியும்.
– விஷ்ணுபுரம் சரவணன்