உரையாடல்

*************

நீயும் நானும் உரையாடிக்

கொண்டிருக்கிறோம்.

எப்போதும் நம் உரையாடல்கள் 

சொற்களாய் 

ஒலிப்பவையல்ல.

பன்முகத்துவத் தன்மையுடனான 

செய்திகள்

அணிசேர்க்கும் போதும்

விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதல்லவதன்

பிரதானம்.

எளிதானவொன்றை மேற்கோளாக்கி

எப்படி மீள்வதென்பதை

எனக்கு எத்தனை முறை கூறியிருக்கிறாய்.

சிக்கலான சூழ்நிலையெதையும் 

உன்னிடம் சொன்னபோது,

கால்பந்தாட்டத்தில் பந்தைக் கைகளில் தொட்டால் பிழை. ஆயினும்

பிழைக்க வேண்டிய இக்கட்டில்

பிழையும் சரியே கோல் கீப்பருக்கு.

இயல்பான விதிகள் யாவும்

இக்கட்டான தருணத்தில் மீறுவது 

அவசியம் மட்டுமல்ல.

அனுமதிக்கவும் படுவதுதானே விதி“.

மனமயக்கத்தில் கிறங்கிச் சோர்ந்த பலசமயம்

சுவாசமாய் மாறியிருக்கின்றனவுன்

வார்த்தைகள்

இப்போதைய 

உரையாடலில் மகிழ்ந்து 

பேசுவதற்கான முகாந்திரமேதுமில்லை யென்றபோதிலும்

எப்போதோ அவ்விதம் உரையாடியதன் நினைவுகள்

நாவின் சுவை மொட்டுகளை 

வருடுகின்றன.

சொற்கள் மறந்து போகலாம்

சுவைகள் மறக்கப் படுவதே யில்லை.



பயணம்

***********

 

உங்களிடம் அந்தப் பயணம் குறித்துச்

சொல்ல வேண்டும் என்பதேயென்

விருப்பம்.

பயண அனுபவங்கள் வித்தியாசமானவையாய் இருக்கின்றன

ஒவ்வொரு முறையும்

சந்தோஷங்களால் மட்டுமே நீள்வதில்லை

பலசமயம் பாதைகள்

விழுங்கிய இரையுடன் மதர்ந்து கிடக்கும்

மலைப்பாம்பென பிரஞ்கையற்று

வழுக்கும் வழியைக்

கெட்டியாய் பற்றிக் கொள்வதெல்லாம்

கலைடாஸ்கோப்பில் சிதறும்

வண்ணவடிவமென நிலையின்மையாய்

பிடிக்கவும் நழுவமுமாய்

பயணம் பற்றி எழுதுவதென்பது

பார்த்ததை எழுதுவதா?

சமபவங்களை எழுதுவதா?

பயணம் என்பது 

பகலில் இருந்து இரவு நோக்கி

அந்தி வழி செல்வதல்ல

பகலில் இருந்து பகலைக் கடக்க எண்ணி

பகலில் பயணிப்பது

என்பதைப் பற்றி எழுதுவது இல்லையா?

அந்தப் பயணம்

காலத்தையும் வெளியையும் தாண்டி

அவ்வாறெனில்

அது நகர்தலற்ற சாத்தியமாய்

நிலையான பயணமென்று

எளிமைப் படுத்தி விடவியலாத

நிலைத்த பயணம்

அது.

–தமிழ்மணவாளன்



One thought on “தமிழ்மணவாளன் கவிதைகள்…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *