எங்கே இதயத் துடிப்பு?

 

இந்திய தேசம்

நடக்கிறது.

மூச்சு விடுகிறது.

பேசுகிறது.

அதைப் பரிசோதித்த 

மருத்துவர் அதிர்ந்தார்.

எல்லாம் செய்கிறது.

ஆனால் 

இதயத் துடிப்பு மட்டும் இல்லை.

எல்லாப் பரிசோதனைகளும் செய்தார்.

இறுதியில் கண்டறிந்தார் 

இதயம் மட்டும்

அதற்கு இல்லை.

 

நாக்கறுபட்டு

முதுகெலும்பு உடைக்கப்பட்டு

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட

பெண்ணைக் கண்டும் 

பதறாத தேசத்திற்கு

இதயம் எப்படி இருக்கும்?

 

அதை செய்த கொடியவர்களுக்கு 

இதயமோ துடிப்போ 

இருந்திருக்க முடியாது.

 

முதல் தகவலறிக்கை பதியாத 

முரட்டுக் காவல் துறைக்கு 

முறையான சிகிச்சை அளிக்காத

மருத்துவர்களுக்கு     

பாலியல் பலாத்காரம் இல்லையென்ற 

படுபாவி அதிகாரிக்கு 

இதயமோ துடிப்போ 

இருந்திருக்க முடியாது.

 

சிதைக்கப்பட்டவர் ஒரு பெண்.

வேத காலத்திலிருந்து 

விஞ்ஞான காலம் வரை

பெண்ணைப் பழிக்கும்

பேதைமை நீங்க

தேவை 

ஒரு இதயமே.

 

சிதைக்கப்பட்டவர் ஒரு தலித்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் 

ஆட்சி அதிகாரம் 

அவர்க்கு இழைத்த அநீதி 

பூட்டப்பட்ட சரித்திரத்தின்

வாயிலிருந்தும் பொங்கி வழியும்.

அவர்களும் மனிதர்கள் என்றுணர 

தேவை 

ஒரு இதயமே.

 

சிதைக்கப்பட்டவர் ஒரு தொழிலாளி.

பொருளெல்லாம் படைக்கும் 

அவர்க்கு நுகர்ச்சி உண்டோ?

அனுபவிக்கவும் நுகரவும் 

வர்க்கம் வேறு ஒன்று 

உண்டல்லோ?

கருப்பு தோலினர் 

கருத்துகள் உரையாது 

கருமம் ஒன்றே செய்ய 

கடமைப்பட்டோர்.

கருப்பு பூனை

கருப்பு வாத்து 

கருப்பு மந்திரம்

கருப்பு பணம் 

கருப்பு துரோகம் 

கருப்பு எல்லாமே 

தீயதென்று 

கட்டுரைத்தனர்.

இதெல்லாம் மாற்ற 

தேவை 

ஒரு இதயமே!

 

இதய மாற்றமடைய 

எத்தனயோ மகாத்மாக்கள் 

வந்து போனாலும் 

எந்த மாறுதலும் இல்லை.



இருந்தாலும் 

வேண்டும் ஒரு இதயம்.

மற்றவர் வலியுணர

மனிதம் புரிந்துணர 

வாழ்க்கை சிதைக்கும் 

வன் ஆட்சியதிகாரம் 

தெளிந்துணர

சமூக புனரமைக்க 

உடலை உந்தித்தள்ள 

தேவை 

ஒரு இதயமே!

 

இதயம் தேடியலைந்த மருத்துவர்

இறுதியில் கண்டார் அதை 

எல்லா அநீதிகளுக்குமெதிரான

எந்நாளும் இயக்கம் நடக்கும்  

ஜந்தர் மந்தரில்.

ஆக்ராவில் அலிகாரில் 

இன்னும் ஆயிரமாயிரம் நகரில்

தொழிலாளர் போராட்டங்களில் 

துடிக்குமிதயம் கண்டார்.

 

பஞ்சாபில்,கேரளாவில் 

மேற்கு வங்கத்தில், தமிழ்நாட்டில் 

ஆந்திராவில், கர்நாடகாவில் 

தூரத்து தோட்டங்களில் 

இதயம் துடிதுடித்தது.

ஹத்ராஸ் வீர மங்கையின் 

படுகொலைக்கெதிராய்  

மாணவர்கள், இளைஞர்கள் 

ரத்த ஓட்டத்தில் 

அட்ரீனல் பாய்ந்தது.     

 

ஆச்சர்யம்! 

அனைவரது இதயத் துடிப்பும் 

ஒன்றே!

ஆச்சர்யம்! ஆச்சர்யம்!

ஜார்ஜ் பிளாய்டுக்கு, பிரான்னா டெய்லருக்கு

நீதி கேட்ட 

அமெரிக்க இதய துடிப்பும் அதுவே!

இதுவே உயிர்த்திருப்பது.

 

(பீப்பிள்ஸ் டெமாக்கரசி இதழ் அக்டோபர் 5-11 ஜி.மம்தா அவர்களின் கட்டுரையின் கவிதையாக்கம்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *