டெர்ராரியம் லாக்கர் ரூம்
(Terrarium Locker Room)
(ஜப்பானியக் குறும்படம்/30 நிமிடங்கள்)

சிறிய அளவிலான தாவரத்தை வளர்க்கப் பயன்படும் கண்ணாடி அல்லது அதுபோன்ற ஒரு சிறு தொட்டியை டெர்ராரியம் என்ற ஆஙகிலச் சொல் குறிப்பிடுகிறது.

வழக்கத்துக்கு மாறான (Unusual) ஒரு குறும்படம் இது.

உறவுகள் என்றாலே ஆண் பெண் உறவுகள்தான் நம் கண்ணுக்கு முன் வந்து நிற்கிறது.  அதனால் ஏற்படும் மகிழ்ச்சி, துயரம் அல்லது அதன் வெற்றிகள் அல்லது சிக்கல்கள்தான் மனித சமூகத்தின் முன்னுரிமை பெற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது. மனிதனுக்கும் தாவரங்களுக்குமான உறவு, மனிதர்களுக்குண்டான உணர்வுகளைப் போல தாவரங்களுக்குண்டான உணர்வுகள் என நாம் மறந்துவிட்ட இயற்கையின் விசித்திரங்களைப் பேசுகிறது இக்குறும்படம்.

Terrarium Locker Room (2018) - MyDramaList
ஒகோமாதோ ஓர் அழகிய இளம் பெண்.  தாவரங்கள் மீது ஈடுபாடு கொண்டவள். நிர்வாக அலுவலகம் ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிகிறாள்.  நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், சிரித்த முகத்தோடும் வேலை செய்ய வேண்டுமென்று அவளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  அப்படியாகவே சிரித்த முகத்தோடு இருக்கிறாள்.  அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட லாக்கரில் யாருக்கும் தெரியாமல்  தொட்டித் தாவரம் ஒன்றை வைத்து வளர்க்கிறாள்.  அலுவலகத்துக்கு முதலாவதாக வந்து கடைசியாகச் செல்பவள் அவள்தான்.  வருகையில், போகையில், மற்றும் ஓய்வு நேரங்களில் சென்று அதைப் பார்த்து மகிழ்வது, அதனோடு பேசுவது என்றிருக்கிறாள்.

அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கும் செகவா என்ற இளைஞன், அவளால் கவரப்படுகிறான்.  அவளது சிரித்த முகம் அவனைப் பெரிதும் ஈர்க்கிறது. அவளுக்குத் தெரியாமலேயே, அவளைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறான்.

அவளைத் தன்னோடு உணவருந்த வெளியில் அழைக்கிறான்.  அவள் சிரித்தவாறே மறுக்கிறாள்.  ஒரு நாள் லாக்கரில் அவள் வளர்த்து வரும் செடியைப் பார்த்து விடுகிறான்.  இதை வெளியில் யாருக்கும் சொல்லி விடவேண்டாமென்று அவள் கேட்டுக்கொள்கிறாள்.   அவன் சொல்லிவிட்டால் எங்கே தனக்கு வேலை போய் விடுமோ எனப் பயந்து அவனோடு வெளியில் சென்று உணவருந்தச் சம்மதிக்கிறாள் ஒகோமாதோ.

ஒரு நாள், தனது அலுவலகக் கட்டிடத்துக்குக் கீழே சாலையோர நடைமேடையில் சிறு தோட்டம் போடும் ஒரு இளைஞனைச் சந்திக்கிறாள் ஒகோமாதோ.  தாவரங்களின் மீதான ப்ரியம் காரணமாக அவனோடு வலிந்து பேசி உறவாடுகிறாள்.  எல்லோரும் சென்ற பின்னர் அவனை அழைத்துச் சென்று தனது லாக்கரில் வளர்க்கும் செடியை அவனுக்கு காட்டுகிறாள்.  அதற்கு சூரிய ஒளி தேவை என்கிறான் அவன்.  ஒரு விளக்கை ஏற்பாடு செய்கிறாள் அவள்.  இருவருக்குமிடையே தாவரங்கள் குறித்த பேச்சும், ஆர்வமும்  நல்ல நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.  அவளுக்கு ஒரு அழகிய தொட்டிச் செடியைப் பரிசாக வழங்குகிறான் அந்த தோட்டக்காரன்.  மெத்த மகிழவோடு அதனைப் பெறுகிறாள் அவள்.

Terrarium Locker Room Japanese Romantic Comedy Movie [ENG SUB ...

ஒரு நாள் செகவா அவளிடம் வந்து உன்னைக் காதலிக்கிறேன் என்கிறான். அவள் அதனை ஏற்க மறுக்கிறாள்.  எனக்கு என்ன பிடிக்கும் அல்லது பிடிக்காது என்று உனக்குத் தெரியுமா எனக் கேட்கிறாள்.  நன்கு கவனித்துக்கொள்வேன், நான் உன்னைத் தாங்குவேன் என்கிறான்.  முடியாது என்று மறுத்துவிடுகிறாள் ஒகோமாதோ. .  அலுவலக் கூட்டம் ஒன்றின் போது தனது மேஜையில் தொட்டிச் செடி வைத்துக்கொள்ள அனுமதி வாங்குகிறாள்.  லாக்கரிலிருந்த செடி, பரிசாகக் கிடைத்த செடி இரண்டும் இப்போது அவள் மேசையில்.  அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.  என் பிற வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  ஆனால் இந்தச் செடி வளர்ப்பை என்னால் மட்டுமே செய்ய முடியும் என்பது ஒகோமாதோவின் தத்துவம்.

மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கிற பலவற்றுள் தாவரங்களுக்கு முக்கிய இடமுண்டு.  செடி, கொடி, மரங்கள் இல்லாத ஒரு பூமியை நம்மால் கற்பனை செய்ய இயலுமா?  அப்படிப்பட்ட ஒரு பூமி இருக்க முடியுமா? அதில் மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியுமா?

ஆழ்ந்த அர்த்தம் தொனிக்கும் ஒர் இனிய பாடலோடு நிறைவடையும் இக்குறும்படம், மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஓர் அங்கம் என்று மண்டையில் அடித்துச் சொல்கிறது.  ஓடிப்போய் ஒரு செடியை காதலுடன் வருடச் செய்கிறது இக்குறும்படம்.

(Film Courtesy: MOOSIC LAB – Online Japanese Film Festival)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *