நிழல்கள்

என்னைப் பிரியாமல்
சுற்றி வருபவை
என் நிழலும்
என் சிம்மி நாய்குட்டியும் தான்
அவற்றைப் பிரியாமல் சுற்றி வருபவை
என் நினைவுகள்
என் நினைவுகள் என் நிஜங்களின்
நிழல்கள்
என் நினைவாகாத நிஜங்கள்
சங்குப் பூனையின் அடிவயிற்றில்
அடர்ந்த மென் ரோமங்களுக்கு இடையில்
வெள்ளைத் தழும்புகளாக மறைந்திருக்கின்றன
மறைந்திருக்கும் தழும்புகளுக்கு நிழல்கள் இல்லையென்பதால்
ஆறாத புண்களாகவும் இருக்கின்றன
நள்ளிரவில் பிரேதம் போல் வெளுத்துக் கிடக்கும்
அந்த மங்கிய நிலவின் மூர்ச்சையுற்ற
ஒளியில்
ஆறாத புண்களின் நிழலாகி இருக்கும்
என் விழிகள்




நீங்க என்ன ஆளுக ?

நீங்க என்ன ஆளுங்க என
ஒருவனை
கேட்ட நொடியில்
ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப்
புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான்
ஒரு வேசை காசு தராத வாடிக்கையாளின் பரம்பரைப் பெண்களை
அவளின் தொழிலுக்குப் போகச் சொல்லி சபிக்கிறாள்

குப்பைத் தொட்டியின் அருகில் கிடந்த
சாக்கு மூட்டை அசைந்து அசைந்து
மனித உடலம் தலை நீட்டுகிறது
முழுப் போதையில் போகும் டாஸ்மாக் குடிமகன்
தெருவை ஆபாச வசவுகளால் நெய்தபடி போகிறான்
தெரு நாய்களுக்குள் எலும்பு யாருக்கு என்ற சண்டை மறுபடி ஆரம்பமாகிறது
அன்பான கடவுள் மீது அநாவசியமாக கோபம் வருகிறது
வாலில்லாத குரங்குக்கு
மறுபடியும் வால் முளைத்ததும்
கிளைக்கு கிளை தாவுகிறது




கரைவது

இருள் தூரிகை வரையும்
ஓவியங்கள்
மெல்ல உயிர் பெற்று
நடமாடும் போது
பாதாதி கேசம் வருடும்
கருமைச் சிறகுகளினால்
உயிர் மெய் சிலிர்க்கின்றது
என்னைக் கடந்து போகிறவன்
எனக்கொரு நிழலோவியம்
அவனுக்கு நான் அசையும்
அ௹வச் சிற்பம்
எதிர்பாரா நொடியில்
அசைந்தாடும் திரைச்சீலை
சற்று விலக
என் ஆதிப்புள்ளியில்
முகிழ்த்த கருமலர்
தழும்பும் தெப்பத்தில்
களிக்கூத்தாட காண்கிறேன
கற்றை ஒளியில் அகத் தரிசனம்
இனி பேசுவதற்கு எதுவுமில்லை
பெம்மானே!
வா நீ நான் உலகம்
கருங்கற் சிற்பங்கள்
யாவும் இந்த மோனத் தெப்பத்தில் குதித்து
இப்போதே கரைந்து போய்விடலாம்.

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *