கவிதை முன்னோட்டம்: இருண்ட முகம் -கலையரசி புதிய பெண்குரல்: கலையரசி கவிதைகள்
ஒரு புதைகுழிபோல் நம்மை உள்வாங்கும் வார்த்தைச் சித்திரங்களை ஒரு நவீன ஓவியக் கண்காட்சிபோல நடத்திக் காட்டுகிறது கலையரசியின் கவிதை உலகம்.படிமங்கள், உவமைகள் தேடாத எளிமையான கவிமொழி சுத்தமான காற்றைச் சுவாசிப்பதுபோல் ஆரோக்கியமளிக்கிறது.
நேரிடையான, பிழையற்ற தமிழில், சுய அனுபவங்களை விமர்சனப் பூர்வமாக அணுகும் கலையரசி நம்பிக்கை தரும் ஒரு புதிய பெண்குரல்.
இதோ அவரது கவிதை ஒன்று:
————————————————-
கறுத்துப் போன சாமியின்
பித்தளைச் சிலையைக்
கைவலிக்க விளக்கித் தந்து விட்டுப்
போகிறாள்
வீட்டு வேலைக்காரி.
மீண்டும் ஒருமுறை அதை
நீரில் கழுவிவிட்டு தீட்டினைக்
கழிக்கிறாள் எஜமானியம்மாள்.
நகநகவெனச் சிரித்திருந்த
கடவுளின் முகம்
இருண்டு போயிருக்கிறது
இப்போது.
Image