கவிதை 1
இஸங்களற்ற கவிதைகள்

உங்கள் பார்வையில் படும் அடுத்த கணம்
இந்தக் கவிதை குப்பைக்கூடைக்கு சென்று விடும்
என்று எனக்குத் தெரியும்
கொஞ்சம் விட்டு வைத்தாலும்
உங்கள் சட்டைக்காலரை பிடித்துக் கொண்டு
உலுக்கு உலுக்கென்று உலுக்கிவிடும் என்று
உங்களுக்கும் தெரியும் தான்

இதில் நீங்கள் தேடும் எந்த இஸங்களும்
இல்லையென்றாலும்
பச்சைக்குருதியின் காய்ந்த வாசம்
நிச்சயம் உங்கள் மூச்சை திணறடிக்க கூடும்

நீங்கள் நாற்காலியில் அமரும் போது
பட படவென்று கீறீச்சிடும் சப்தம்
நாற்காலியினுடையது என்று
நீங்கள் நினைக்கும் போது
அது உங்கள் காலடியில் புதைக்கப்பட்டுள்ள
சகமனிதர்களின் எலும்புக்கூடுகள்
முறியும் சத்தமென்று
இது உங்களுக்கு சத்தியம் செய்யும்

சுற்றுப்புறச் சுவர் இல்லாத எங்கள் வீடுகளில்
கவளம் சோற்றுக்கு
நாக்கினை தொங்கப்போட்டு
எச்சில் ஒழுக நிற்கும் எங்கள் தெரு நாய்கள்
ஒரு கவளமாவது வாங்கி கொண்டு சென்று விடும்

ஆனால் உங்கள் வீட்டு இரும்புக் கதவின் இடுக்குவழியே
நீங்கள் உங்கள் வீட்டு விலை உயர்ந்த நாய்களுக்கு
உப்பு பிஸ்கெட் விட்டெறிவதை
வாயில் எச்சில் ஒழுக நோக்கும்
எங்கள் வீட்டு குழந்தைகள்
உங்களிடம் திட்டு வாங்கி கொண்டோ
நாயிடம் கடி வாங்கி கொண்டோ வெறியேறுவதை
இந்தக் கவிதை அநாவசியமாய் கேள்வி கேட்கும்
உங்களுப் பிடிக்காத வகையில்

எங்கள் மூச்சுக்காற்றின் நெடியில்
எங்கள் சாதிகளை சடுதியில் கண்டறியும்
உங்களால்
நீங்கள் உண்ணும் உணவு நெடுக பரவியிருக்கும்
எங்கள் குருதியின் நெடியில்
ஏன் எங்கள் சாதிகளை அடையாளம்
காண முடிவதில்லை என்று
இந்தக் கவிதை உங்களை கேள்வி கேட்கும்

மண்புழுக்களாய் வயலில் நெளியும் அவர்களுக்கு
வெறும் சாவியை கொடுத்து விட்டு
கதிரை மட்டும் நீங்கள் அறுத்துக்கொண்டு
செல்வது ஏன் என்று
உங்கள் மனச்சாட்சிகளை
தட்டிக்கேட்கும்

கடைசியாய் கால காலத்திற்கும்
நீங்கள் பதில் சொல்லவே முடியாத
ஒரு கேள்வி   அது
இந்த கவிதை பிறந்த போது கூட
இப்படி  தானொரு கேள்வி கேட்போம்
என்று அறிந்திருக்காது

நாங்கள் பரம்பரையாய் எங்கள் குலதெய்வங்களாய்
கும்பிட்டு வந்த எங்கள் பாட்டன் முப்பாட்டன்களை
உங்கள் பெரிய பெரிய சாமிகளுக்கு
காவல் தெய்வங்களாய்
நீங்கள் சுவீகரித்துக்கொண்டது ஏன்
சொல்லுங்கள்
இரத்தமும் சதையுமாய்  பின்னியிருக்கும்
எங்கள் ஆன்மீகத்தைக் காயடிக்கவா?

நீங்கள் இரத்தம் கொதிக்க வாசித்து முடித்த
இந்த நொடி  அநேகமாக இந்தக் கவிதை
குப்பைக்கூடைக்குப் போயிருக்கும் தான்
என்ன செய்வது?
குப்பைத் தொட்டியில் பிரசவங்கள் நிகழும்
இந்த நாட்டில்
குப்பைக்கூடையில் தானே பிரசுரங்கள்
நிகழும்
அதற்காக எழுதாமல் இருக்க முடிகிறதா
இப்படி இஸங்களற்ற கவிதைளை?

கவிதை 2

பாங்கோதும் ஓசையும்
தேவாலய மணிச்சத்தமும்
கோவிலின் காண்டாமணிச்சத்மும்
ஒட்டு மொத்தமாய்  கேட்க
சிதறிப்பறக்கின்றன கோபுர புறாக்கள்

அது கண்டு
சிலையாகிப்போய்ச்  சொல்கிறேன்
அப்பாடா இப்பவாவது என் கடவுளுக்கு
என்னை விட்டு சிறிது நேரம்
ஓய்வெடுக்க  தோன்றியதே
அது போதும் எனக்கு

 கவிதை 3
என் இனிய பிசாசே!
மாமா என்ன இருந்தாலும் தேதிக்குள் மறுபடியும் கொடுத்து
என் ஒவ்வொரு செல்லையும்
எனக்கு எதிராகத் திருப்பிவிடும் மாயாவி அல்லவா நீ
இரவுகளை வழிபடும் பழக்கத்தில்
இமைப்பற்ற சுவர்ப்பல்லியும்
சபிக்கப்பட்ட நானும்
சிநேகிதமாயிருக்கிறோம்
இன்றிரவு நான் வசிக்கப்போகும் இடத்தை
அது மட்டுமே அறியும்
திறந்த விழியில் விழும்
ஒரு துளி மழையே
நான் என் சுவாசத்தையே நம்புவதில்லை
உன்னை நம்பினால் கடலின்
அந்தகார ஆழத்திற்குள் சென்று
கரைய வேண்டியது தான்
அட என் இனிய பிசாசே
இன்று நான் தோற்று விடுபவளாக இருக்கிறேன்
ஆனாலும் உன்னை கடுங்குளிரிலும்
கொடும் பாலையிலும்
அலைய விட்டு ஆனந்தித்தே
தோற்றுப்போவேன்
என் நாசியைப் புல்லாங்குழலாக்கி
மூச்சுக்காற்றை கீதங்களாய் இசைப்பேன்
விழிகள் இரண்டிலும் தீப்பந்தம் ஏந்துவேன்
ஆனாலும்
கொடும்புயலிலும் கொட்டும் மழையிலும்
உன்னை அலையவிட்டு ஆனந்திப்பேன்
கவிதை 4

ஒரு வார்த்தை
அன்பு ததும்பும் கடலாய் இருக்கிறது

வெகுளி மீன்கள் செதில்களுக்குள்
குளிர்ந்த இசையாக
தண்ணீரை நிரப்பிக்கொள்ள
சுடுமணலில் சா நடனமிட்டுக்கொண்டிருக்கின்றன

ஒரு வார்த்தை
திறந்த வானத்தை
உள்ளங்கைகளுக்குள் மூடி வைத்திருக்கும் சிறுவனாய்
குறுகுறுத்துக் கொண்டிருக்கிறது
பூமலர்வது போல விரியும் விரல்களின் வழியே
ஆகாயத்தில் சிறகடிக்க
வெண்புறாக்கள் தயாராக இருக்கின்றன
ஒரு வார்த்தை
கடைவிழியோரம்
முட்டிக்கொண்டிருக்கும் கார்மேகமாய் தளும்பி நிற்கிறது
ஒரு குளிர்காற்றின் சீண்டலுக்காக
பரிவின் விரல்கள்  அதை சுண்டிவிட
காத்துக்கொண்டிருக்கின்றன

ஒரு வார்த்தை  பிரபஞ்சத்தை விழுங்கும் கருங்குழியாய்
வாய் திறந்திருக்கிறது.
அதில் குதித்து குதித்து
காணமல் போவதற்கு
எண்ணிறந்த கோள்கள்
வெறுமையின் சிறு மனப்பிறழ்வுக்காக மட்டுமே
காத்துக் கொண்டிருக்கின்றன

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *