Poet Theni Thanges Four Title Poems in Tamil Language. Book Day Website is Branch Of Bharathi Puthakalayam.



கவிதை 1: நான் ஒரு எளிய கதை சொல்லி

நான் ஒரு எளிய கதை சொல்லி
உனக்கொரு சிறிய கதை சொல்வேன்
துயரத்தில் சாளரத்தில் தென்படும்
மங்கலான முகம்
என்றும் உன் பார்வைக்கு தெரியாது
தவிரவும் உன் போல்சாயம் பூசிய
உதடுகளால் கவர்ச்சிகரமாக
எனக்கு முத்தமிடவும் தெரியாது
பண்டமாற்று போல் விருப்பங்களை
முகநூலில் பரிமாறிக்கொள்ளும்
சூட்சுமத்தில் நான் பூஜ்யம்
பசிய மலைநெல்லியையும்
எளிய வேலியோரப்பூக்களையும்
யார் சந்தைப்படுத்தக்கூடும்?
கடவுளே தான்…
ஒரு புன்னகைக்கும் சற்று அதிகமாக விரியும்
உதடுகளை சபித்துவிட்டு
மூடிக்கொள்வாய் நீ
ஒரு எளிய கதைசொல்லிக்கு
சமய சந்தர்ப்பம் தெரியாது
ஒரு இளம் பச்சை மரம் முழுவதும்
கொத்து மஞ்சள் அரளிப்பூக்கள்
அதில் அதனதன் இயல்புக்கு
குதித்து தாவும் அணில்கள்
புத்தம் புது மலர்கள் உதிர்வiதை
அறியாததால் பாவத்தில்
அவைகளின் பங்கு ஏதுமில்லை
காற்று அதை வாஞ்சையாக
தன் உருவமற்ற கரங்களில்
ஏந்திச்செல்கிறது என்பது உனfக்கொரு விசயமில்லை
மேலும் நான் ஒரு எளிய கதை சொல்லி என்பதும்



கவிதை 2: பறவையின் சாம்பல்

இந்தக் கவிதையை நீ எரிக்கும் நன்னாளில்
சிதையிலிருந்து எழும் சாம்பல் நிறப்புகை
பறவையாய் மாறி சென்று கொண்டிருக்கும்

ஒரு வில்வ மரத்தின் கூட்டிற்குள்
குருவிக்குஞ்சு வாய்திறந்தபடி
வரும் இரைக்காக காத்திருக்கும்

இருட்டு சந்துகளில்
உலகின் புராதான தொழில்
கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும்

கைபேசியில் படம் எடுத்து சீரழித்தவன்
சிரித்தபடி பத்திரிகைகளுக்கு
முகம் காட்டிக்கொண்டிருப்பான்

வழங்கப்படாத பொருட்களுக்கான
குருஞ்செய்தி பெற்றவன்
கைபேசியோடு
நியாய விலை கடை நோக்கி
படையெடுத்துக்கொண்டிருப்பான்

விசம் குடித்த சாக்ரடீஸ்கள்
வீதிவழியே சிரித்தபடி நடந்து
போய்கொண்டிருப்பார்கள்

மிசல் பூக்கோ
அறிவு அதிகாரத்தை இணைக்கும்
விடுபட்ட சொல்லொன்றை
தேடி கொண்டிருப்பார்

எடிட்டர்களின் மேசையின் மீது
காலி தேநீர் கோப்பைகளின் அருகில்
தீய்ந்து போன பறவையின் சாம்பல்
பொட்டலமாய் கட்டி மடித்து வைக்கப்பட்டிருக்கும்



கவிதை 3: கவிதையும் ஆன்மாவும்

தொடங்கும் இடத்தில் முடிவதும்
முடியும் இடத்தில் தொடங்குவதுமாக
இருக்கின்றன
மகா கவிதைகள்

ஒரு கவிதை பிறந்ததும்
ஒரு பூ திறந்து கொள்கிறது
ஒரு சிட்டுக்குருவியின் சிறகில்
புதிதாய் ஒரு இறகு முளைக்கிறது
முள்காடுகளாய் மூடியிருந்த உதடுகளுக்குள்
அனிச்சையாய் ஒரு பூ மலர்கிறது

உலகில் எங்கோ ஒரு மூலையில்
ஒரு துப்பாக்கி சத்தம்
கொஞ்சம் மௌனிக்கிறது

ஒரு மெல்லிய கொடியைப்போல
படரும் இந்த கவிதைதான்
அன்று அன்பெனும் கயிறாய் மாறி
இறைவனையே கட்டி
இழுத்து வந்திருக்கிறது

திருவாசகங்களை கேட்பதற்கே
இறைவன்
மாணிக்க வாசகர்களைப்படைக்கிறார்

அழகு தமிழை கேட்பதற்கே
பித்தா என்று அழைக்கும்போதும்
சுந்தரரைப்பார்த்து சிரிக்கிறார்

அணையாத சோதிக்குள்
இன்னும் கணன்று கொண்டிருப்பது
வள்ளலாரும் இறைவனும் மட்டுமல்ல
ஒரு கவிதையும் தான்



கவிதை 4: தொற்றுகள் காட்சிகள்

நிராகரிக்கும் கருப்பு வானத்தை
கசப்பு முத்தங்களால் உமிழ்ந்து விட்டு
இலக்கின்றி பயணிக்கின்றன
புலம் பெயர்ந்த பறவையின்
வலி அறியும் சிறகுகள்

இரயில் தண்டவாளங்களின் ஓரம்
இணுங்கி எறியப்பட்ட
இறகுகளிலிருந்து
பழக்க தோசத்தில்
முளைத்தெழும் மனித உடலங்கள்
இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு
மீண்டும் மண்ணில் சரிகின்றன

பற்சக்கரங்களில் அரைபட்டும்
நசுங்காத ஆத்மாக்கள்
நோய் தொற்றை லவட்டி
சரளைக்கற்களின் மீது
களி நடனம் புரிவன

அமிர்த சஞ்சீவி இருக்கிறதா ?
அமிர்த சஞ்சீவி
குரல்கள் குரல்கள்
அனுமனை கேளுங்கள்
அனுமன் யாரிடம் கேட்பான்
மேலிடத்திலா
மேலிடம் என்பது கடவுளா ?
கம்பன் மட்டும் இருந்திருந்தால்
எதற்கும் அவசியமில்லாமல் செய்திருப்பான்
அதாவது யுத்த காண்டத்தை
தொற்று காண்டமென்று
சுருக்கமாக பெயர் மாற்றியிருப்பான்
ஊமைச்சிலைகளுக்கு
வலிக்குமோ வலிக்காதோ ?

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *