ஒரு பழைய கதை.ஒருவன் ஒரு இளம்பெண்ணைக் கண்டு மோகம் கொண்டானாம்.அவளை எப்படியும் அடைவது என்ற முடிவுடன் அவளிடம் வேண்டினானாம்.அதற்கு அவள் உன் தாயின் இதயத்தை எனக்குப் பரிசாக தருவாயா என்று கேட்டாளாம்.அவன் மோகவெறியில் தாயைக் கொன்று துடிக்கும் இதயத்தை ஒரு தட்டில் ஏந்தியபடி அவளை நோக்கி ஓடினானாம்.வழியிலிருந்த ஒரு கல் தடுக்கித் தடுமாறினான்.அப்போதும் அந்தத் தாயின் இதயம் மகனே பார்த்துப் போ என்று பரிவுடன் கூறியதாம்.இயற்கையை அழிக்கும் வளர்ச்சி மோகம் மனிதகுலத்தை இன்றும் ஆட்டிக் கொண்டுதான் உள்ளது.

கொரோனா பாதிப்பில் நாடே கதிகலங்கிப் போய் முடங்கிக் கிடுக்கும் இந்த இருட்காலத்தில், இந்திய அரசு இயற்கையை அழிக்கும், வளர்ச்சி மோகத்தில் எஞ்சியுள்ள இயற்கைப் பல்லுயிரினம் மண்டிய காடுகளை அழிக்கும் 30 வளர்ச்சித் திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், விவாதிக்காமல், இணையதள ஒப்புதலைத் தந்துள்ளது. இது மோகவெறி கொண்ட மகனின் கதையின் புதிய வடிவமன்றி வேறு என்ன என்று சொல்ல. எரிகிற வீட்டிலும் பிடுங்கியது லாபம் எனும் அப்பட்டமான பேராசை மனப்போக்கின்றி வேறென்ன.

நமது மருத்துவ அறிவியல் கடந்த காலத்தில் பல ஆட்கொல்லி தொற்று நோய்களுக்குக் மருந்து கண்டுபிடித்து ஒழித்து விட்டது.21ம் நூற்றாண்டில் மனிதச் செயல்பாட்டால், வாழ்வுமுறைக் கேடுகளால் உண்டாகும் நோய்களே மனிதகுலத்திற்கான பெரும் சவால். கடந்த பத்தாண்டுகளில் ஒன்று மாற்றி ஒன்றாக ப்ளு,டெங்கு, எபோலோ, N1H1, எனக் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்ங்கள் மனிதகுலத்தை அச்சுறுத்தி வருகின்றன. இன்று கோவிட் -19 வைரஸ் இதுவரை இல்லாத வகையில் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது.வளர்ச்சி முழுமை பெறாத அவசர வைரசின் தாக்குதலே கொரோனா என்கின்றனர்.இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்குமான ஒரு வாழ்விடத்தை, சூழலைத் தந்துள்ளது.அவை அழிக்கப்படும் போது அவை நம்மைத் தாக்கி தமது வாழ்விடத்தை மீட்டு வாழ முயல்கின்றன.யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் தமது வாழ்விடத்தை அழித்து உருவாக்கிய நகரங்களை மீட்டெடுக்க வருகின்றன.இதை காட்டு விலங்குகளின் அட்டகாசம் என ஆணவத் தலைப்பிடுகின்றன அறிவுசார் ஊடகங்கள்.கோவிட்-19 ஒரு புதிய யானை புதிய சிறுத்தை அவ்வளவே.

மனிதரின் வளர்ச்சிமோகம் இயற்கையின் எந்த எச்சரிக்கையையும் ஏற்காமல் நுனிக் கொம்பேறிக் கொண்டுள்ளான் என்பதற்கு ஒரு நல்ல முன்மாதிரி, அரசு நிறைவேற்றியுள்ள இந்த அவசரச் சட்டம். வழி தவறிய முட்டாள் மன்னனைத் தடுப்பதும், ராஜா நிர்வாணமாக உள்ளார் எனத் துணிவுடன் சொல்வதும் பொறுப்புள்ள மனிதர்களின் கடமையே.

After the Deaths of Two Monks in Police Firing, NAPM Demands a ...
The dense forests of Tawang in Arunachal Pradesh dam

அருணாசலப் பிரதேசத்தின் டிபாங் அடர்ந்த காடுகள், அழிந்து வரும் ஆட்டின மான்கள் (GOAT AUTOLOPE), ஒளிரும் கண்கள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் (CALLEREBIIA DIBANGENSIS), மிஸ்மி வாலாட்டும் குருவி (MISMI WABBLERS), ஆகியவற்றின் இறுதி வாழ்விடம். இவற்றை அங்கு வாழும் காட்டு மனிதர்கள் வேட்டையாடி அழிக்காமல் காத்து வருகின்றனர்.டிபாங் பள்ளத்தாக்கு அருணாசலப் பிரதேசத்திலேயே அதிகமான புலிகள் வாழும் காடு.இபூ மிஷ்மி பழங்குடிகள் இறந்தாலும் விதைகளுடன் புதைக்கும் இயற்கைநேய மரபு கொண்டவர்கள்.வானகம் செல்லும் போது அவை அவர்களுக்கு உணவு தருமாம்.அந்தக் காட்டு மனிதர்கள் தமக்கு வாழ்வு தரும் இயற்கையை அழிக்கும் ஆடம்பர நகர்ப்புற நாகரீகம் அறியாதவர்கள்.

இதை அழித்து காட்டின் இதயத்தில் 3097 மெகாவாட் மின் உற்பத்திக்காக இடாலின் அணையை கட்ட  திட்டமிடுகிறது அரசு.. மின் உற்பத்திக்கான இரு அணைகள், சுரங்க நீர்ப்பாதை, குழாய்கள், மின் உற்பத்தி நிலையம், சாலைகள், காடுகள், விலங்குகளின் வாழ்விடங்களை, மலைகளை, 3லட்சம் மரங்களை ஏழாண்டுகளில் அழித்து எங்கோ உள்ள ஆலைகளை இயக்கி, யாரோ சிலரின் கஜானாக்களை நிரப்புமாம். மீட்டெடுக்க முடியாத இந்தக் கன்னிக்காடுகளை அழித்து எந்த வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என 2017லேயே வனச்சட்டம் தடுத்து விட்டது.இடாலின், டீபாங் திட்டங்களை நிறுத்து, அருணாசலாக் காட்டைக் காப்பாற்று என பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர்.இவர்களின் பாடல்கள், வீதி நாடகங்கள், குறும்படங்கள், போராட்டங்கள் எதுவும் அரசின் வளர்ச்சி மோகச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இப்படியாக 30 அசுரச் சட்டங்களுடன் அரசு அழிவு நடனமாடிக் கொண்டுள்ளது. இந்த அழிவு வளர்ச்சித் திட்டங்கள் 15 புலிகள் காப்பிடங்களை, சரணாலயங்களை, கானுயிர் காப்பிடங்களை, காடுகளை, சிற்றருவிகளை, பறவைகளை அழித்து அணைகளும், நிலக்கரிச் சுரங்களும், சாலைகளும், கட்டிடங்களும் எழப் போகின்றன.

வானெலி வாயிலாக நாட்டு மக்களுடன் ...
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

அஸ்ஸாமின் யானைகள் காப்பிடமான டிஹின்பட்கையை அழித்து நிலக்கரிச் சுரங்கம், மகாவீர் கானுயிர் பூங்காவை வகிர்ந்து போடப்படும் கோவா நெடுஞ்சாலை, கிர் சிங்கங்கள் வாழ்விடத்தைத் தோண்டிச் சுண்ணாம்பு சுரங்கம், கர்நாடகத்தின் சாராவதி வனத்தின் சிங்கவால் குரங்குகளை விரட்டி எழும் ஆய்வுக் கூடம் என அனைத்துமே எந்த விவாதமும், கேள்வியும், ஆராய்ச்சியுமின்றி இரண்டே மணி நேரத்தில் அவசர அவசரமாக அங்கிகரிக்கப்பட்டன. மரண வேகத்தில் காரியங்கள் நடக்கின்றன. ஏன் இந்த அவசரம் ?யாருக்காக இந்த அவசரம் என்பதுதான் புரியவில்லை.

ஜனநாயகமற்ற அரசின் முடிவை எதிர்த்து நாட்டின் 291 முதன்மை இயற்கை அறிஞர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, அரசின் முடிவு தவறு என்பதை உணர்த்தும் கடிதத்தை எழுதினர். வனங்களைக் காக்க வேண்டிய அமைச்சகம், அதிவிரைவாக அழிவுக்குத் துணை போவது சரியா என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.கொரோனா நெருக்கடிநிலையில் ஆலோசனைக் கூட்டமின்றி தரப்பட்ட அனுமதி உச்சநீதின்றத் தீர்ப்பை அவமதிப்பது என்று கண்டித்துள்ளனர்.மக்கள் தமது உணர்வுகளை, எதிர்ப்பை, பாதிப்புகளைத் தெரிவிக்கவும் வழியற்ற சூழலில் எடுக்கப்பட்ட இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.காணொலி கருத்தரங்கின் மூலம் வாழ்வு தரும் இயற்கைக்கு எழுதப்பட்ட இறுதி சாசனம் இது என எச்சரித்தனர்.

ஒருமணிநேர அவசர ஆலோசனைக் கூட்டத்தில் காடுகளைப் பிளந்து ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், உயர்மின்னழுத்த கோபுரங்கள், சுரங்கங்கள், அணைகள் பற்றிய முடிவு கையெழுத்திடப்படுவது என்ன ஜனநாயகம்? தென்னகத்தின் வாழ்வாதாரமான மேற்குத் தொடர்ச்சிமலையை வகிர்ந்து சாலைகளும், மின் கம்பங்களும், இருப்புப்பாதைகளும் போடப்படுவது இயற்கைக்கு அடிக்கும் இறுதி மணியாகவே இருக்கும். தமது பாரம்பரியமான வலசைப் பாதைகளை இழந்த காட்டுயிர்கள் எங்கே போகும்? இன்னும் பெயர் கூட இடப்படாத, பயன் கூட அறியப்படாத மூலிகைகள், மரங்கள், மலர்களின் எதிர்காலம் என்ன ஆகும் ?

Lockdown will remain, hints PM Modi after video conferencing with ...

மனிதகுலத்தின் இறுதி ஆதாரமான மேற்குமலைத் தொடரை,அஸ்ஸாம் சோலைக் காடுகளை, அழகிய தூஞ்சாகர் நீர் வீழ்ச்சியை, யானைகளின் வலசைப் பாதைகளை, புலிகள்,காண்டாமிருகங்களின் வாழ்விடங்களை அழித்த பின் மனிதன் பெறக்கூடியது என்ன ?

மரபுகளைப் போற்றி, தொன்மையைக் காத்து, சுதேசியத்தை வளர்த்தும் தேசபக்திமிக்க அரசின் இந்த கோவிட்-30 திட்டங்கள் மக்களுக்கும், இயற்கை அன்னைக்கும் நமது மரபணு உறவுகளான பிற உயிரினங்களுக்கும், நம் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதராமான நீருக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், அடிக்கும் சாவு மணியாகவே இருக்கும்.

நம்மை வாட்டும் ஒரு கோவிட்-19 போதும், கோவிட் 20,30 என அழிவுகளை அரசே ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டாமென இறைஞ்சுவோம். மனிதனின்றி இயற்கை இருந்தது, இயற்கையை அழித்த மானுடம் வாழ முடியாது. உணர்வோம்,தடுப்போம்………

 (The Hindu -24-05-2020 நந்தினி வேல்வோ,MINISTRY OF FOREST CLEARANCE, கட்டுரையின் அடிப்படையில் தமிழில் டாக்டர்.வெ.ஜீவானந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *