ஃப்ளோரென்ஸ்(இத்தாலி): இத்தாலி முழுவதும் குரானோ வைரஸ் தொற்றால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, ஏராளமானவர்கள் இறந்துள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் மட்டும் எவ்விதப் பாதிப்பும் இல்லாது பிராடோ (Prato) நகரில் வாழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, இத்தாலி சீனர்களைக் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது. அவர்கள்தான் இத்தாலிக்குள் கொரானா வைரஸைப் பரப்பியவர்கள் என்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனலும், அந்நாட்டு மக்களும் சீன சமூகத்தினரை அவமானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இத்தாலியின் பெரிய நகரமும், சீனர்கள் மட்டுமே வாழும் நகரமுமான பிராடோவில் சீனர்கள் கொரானா வைரசுக்கு எதிராக மிகவும் கட்டுப்பாடான முறைகளைப் பின்பற்றியதன் விளைவாக ஒருவர் கூட அந்நோய்க்கு ஆளாகவில்லை. இதனை சுகாதாரத் துறை அதிகாரிகள் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். நாட்டிற்கு ‘முன்மாதிரியாக சீனர்கள் திகழ்கிறார்கள்’ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.

“பிராடோவில் உள்ள சீனர்கள் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பார்கள் என்று நாங்கள் பயந்தோம். மாறாக, அவர்கள் எங்களைவிட மிகச் சிறந்தமுறையில் இருந்தார்கள்,” என்று அப்பகுதியின் உயர்மட்ட மாநில சுகாதார அதிகாரியான  ரென்சோ பெர்டி (Renzo Berti) கூறியுள்ளார்.

Italy's coronavirus disaster: At first, officials urged people to ...

“உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு, இத்தாலியில் 12 ஆயிரம் பேர் கொரானா வைரஸ் நோய்க்கு ஆளாகிக் கொல்லப்பட்டுள்ள நிலையில், பிராடோவில் உள்ள சீன சமூகத்தினரில் ஒருவர் கூட இந்நோய்க்கு ஆளாகவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

பிராடோ நகரில் சீன சமூகத்தினர், அங்கேயுள்ள ஜவுளித் தொழிற்சாலைகளைச் சுற்றி வசித்து வருகின்றனர். கொரானா வைரஸ் தொற்று தொடர்பாக ஜனவரி இறுதியிலேயே சமூக முடக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அதன் பின்னர் மூன்று வாரங்கள் கழித்துத்தான் இத்தாலியில் கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளான முதல் நபர் குறித்துப் பதிவு செய்யப்பட்டது.

கொரானா வைரஸின் மையப்பகுதியாக சீனாவிற்குச் சென்று, புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடிவிட்டு, பல சீனர்கள் அங்கிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். எத்தகைய மோசமான தொற்று வந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் பரப்பிய வார்த்தைகள்: ‘வீட்டில் தங்குக’ (Stay Home).

இத்தாலியர்கள் உணவு விடுதிகளிலும், பார்களிலும் வழக்கமாக ஆடிப்பாடிக்கொண்டிருந்த அதே சமயத்தில், பிராடோவிலிருந்த சீன சமூகத்தினரை மட்டும் எங்கும் பார்க்க முடியவில்லை. அநேகமாக அவர்கள் வாழ்ந்துவரும் பகுதிகளில் இப்போதும் சீனப் புத்தாண்டு அலங்காரங்கள் காணப்பட்டபோதிலும், வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

பிராடோவிலிருந்த சீனர்கள் மட்டுமல்ல, இத்தாலியின் பிற பகுதிகளிலிருந்தவர்களும் இதே கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தனர்.

இத்தாலிய வர்த்தகர் குழுவில் பிரதிநிதியாக இருக்கும் சீனரான பிரான்செஸ்கோ வு (Francesco Wu), இதர வர்த்தகப் பிரதிநிதிகளிடம் தான் செய்திருப்பதைப்போல ‘நீங்களும் கடைகளை மூடிவிடுங்கள்’ என்று வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் “அவர்கள் அனைவருமே என்னை ஏளனமாகப் பார்த்தார்கள். இப்போது நிலைமைகள் மிகவும் மோசமாகிவிட்டன. நாங்கள் அனைவரும் கடைகளை பூட்டிவிட்டு உள்ளே இருக்கிறோம்,” என்றார்.

Image

(படத்திலிருக்கும் லூகா சௌ முகக் கவசத்துடன் வீதியில் நின்றுகொண்டிருக்கும் காட்சி.)

மற்றொரு சீன வர்த்தகரான லுகா சௌ (Luca Zhou) சீனா சென்றுவிட்டு, பிப்ரவரி 4 அன்று பிராடோவில் உள்ள தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் திரும்பி வந்து சேர்ந்துகொண்டபோது, தன்னுடைய படுக்கை அறைக்குள் சென்று, மனைவி, மகனிடமிருந்து தாமாகவே 14 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இவர் சீனாவிற்கு இத்தாலிய ஒயின் ஏற்றுமதி செய்திடும் வர்த்தகர். 56 வயதாகும் இவர், “சீனாவில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று நாங்கள் பார்த்தோம். இங்கேயுள்ள எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும், எங்கள் நண்பர்களுக்கும் அவ்வாறு வந்துவிடக் கூடாது என்று பயந்தோம்,” என்று கூறினார்.

14 நாட்கள் கழித்து அவர் வெளியே வந்தபின்பும், உரிய முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டுதான் வெளியே வந்தார். வெளியே பார்த்த மற்ற சீனர்களையும் அவ்வாறு இருக்குமாறு அறிவுறுத்தி அவர்களை அவ்வாறே அணியவும் செய்தார்.

“என் இத்தாலி நண்பர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் எவ்வளவோ அவர்களுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்ளவில்லை,” என்றார்.

“நான் சீனாவிலிருந்து பிராடோவுக்குத் திரும்பி வந்தபோது, எந்தவொரு இத்தாலி அதிகாரியும் எவ்விதமான எச்சரிக்கையையும் எனக்குக் கூறவில்லை. நாங்களாகத்தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டோம். இவற்றை நாங்கள் செய்யாமல் இருந்திருந்தால், நான் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்போம்,” என்றார்.

இதேபோன்று சியாரா செங் (Chiara Zheng) என்ற 23 வயது மாணவர், சீனாவிலிருந்து திரும்பி வந்தவர், தாமாகவே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இதன் மோசமான விளைவுகள் என்ன என்பது குறித்து எனக்கு நன்கு தெரியும். எனவே என்னைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றிட இதனைச் செய்ய வேண்டியது என் கடமை என்று நான் உணர்ந்தேன்,” என்று கூறினார்.

(ராய்டார் இந்தியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி.)

(தமிழில்: ச.வீரமணி)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *