பெரியாரின் கனவு: ஜுயோ பேபி இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஒரு பார்வை – எஸ். சிந்துதி கிரேட் இந்தியன் கிச்சன் படம் மிக மோசமான ஆணாதிக்கத்தையும், மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குநர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தில், அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் ஒரு பார்வை : ஆணாதிக்கமும், தான் சார்ந்த மதமும், பெண்களுக்கு எப்படியான உலகத்தையும் தருகிறது என்பதைத் துளியும் குறைவில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்படம்.

எப்போதும் இந்திய சினிமாவில் மலையாளத்திற்கு என்று என் திரைப்பட்டியலில் தனியிடம் உண்டு. இயல்பையும், இயல்பான மனிதர்களின் உணர்ச்சிகளையும், அவர்கள் அரசியலையும், காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமாவிற்கு தனியிடம் உண்டு.

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்றவுடன் சமையலையும், சுவையையும் தரும் படம் என்றுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் அது சுவையைத் தாண்டி பெண்ணின் சுமையையும், எந்தவித வன்முறையின்றி ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க வன்மத்தையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.

படத்தின் துவக்கம் சமையலறையில் குக்கரின் விசிலும், காய்கறி துண்டுகளை நறுக்கல், இனிப்பு பண்டங்கள் எனத் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. கேரளத்தில் பெண் காணும் முறையைக் காட்டி அதன் பின் அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறார் . இன்னொரு பக்கம் ஒரு பெண் அவளின் விருப்பமான நடனத்தை ரசித்து ஆடிக்கொண்டியிருக்கிறார் . பெண் காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாப்பிள்ளையும் பெண்ணை பேசச் சொல்ல, என்ன பேசுவது என்று தொடங்கும் முன் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.

வீட்டில் பார்க்கும் பல திருமணங்கள் இப்படிதான் முடிகிறது. நாம் யார் என்பதைக் கூட அறியாமல் உடன் பயணிக்க ஒருவர்; அதுவும் அதற்கு இருமணம் இணையும் விழாவென்று பெயர். திருமணம் முடிந்து முதல் நாள் காலை அவளின் கணவர் யோகா செய்து மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். அந்த பெண்ணின் மாமனார் பேப்பர் படித்துக் கொண்டே தனது மனைவி பேஸ்ட் தடவிய பிரஷ் எடுத்து வருவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆங்கிலத்தில் ஆர்தோடக்ஸ் குடும்பம் என்று பெயருமுண்டு.அந்த பெண்ணோ கணவர் யோகா செய்யும் நேரத்தில் குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்து, குளித்து விட்டு விளக்கு வைத்து, பின் காலை உணவைச் செய்ய ஆயத்தம் ஆகிறார். காலையில் முதலில் எழுந்து பின் இரவு கடைசியாகப் படுக்கைக்குச் செல்வது, இதுதான் அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கை.

“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை” என்று கவிஞர் கந்தர்வன் தனது கவிதையில் அழகாகச் சொல்லியிருப்பார்.

வீட்டில் சுவையாக உணவு செய்யும் அம்மாவைப் பலமுறை புகழ்ந்து இருப்போம். ஆனால் சில சமயம் சரியாகச் செய்யாத ஒன்றைப் பலமுறை சுட்டிக் காட்டியபடியே அந்த உணவை நாம் சுவைத்திருக்கிறோம். அங்கு அவர்களுக்குத் தேவை புகழ்ச்சியல்ல, புரிதல் என்பதைப் புரிய வைத்திருக்கிறது இந்தப் படம்.

அந்த பெண்ணின் மாமனார் விறகு அடுப்பில் வைத்த சாதம், அம்மியில் அரைத்த சட்னி, கையால் துவைத்த உடுப்பு எனக் கேட்கிறார். சட்னி கையால் அரைக்கும் பக்குவம் தனிச் சுவைதான். அதற்காக அவர்களின் விருப்பத்தையும் அம்மியில் வைத்து நசுக்குவதற்குப் பெயர் என்ன? மின் சாதனங்கள் பெருகிய இக்காலத்திலும் விருப்பம் என்ற பெயரில் பிறரைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைப்பது எது?

அதே சமயம் சமையலறை பைப்பில் தண்ணீர் கசிவால் தினந்தோறும் மன்றாடும் அந்த பெண்ணின் குரல் அவரின் கணவரின் காதுக்கு எட்டாது இருப்பதன் காரணம் என்ன? பிறர் வலியைத் தான் உணராதது மட்டுமல்ல, தண்ணீர் கசிவடைவதால் தனக்கு பெரும் பாதிப்பு ஏதும் இல்லாததாக நினைப்பது போலவே, தன் மனைவியின் வீட்டு வேலை இடர்பாடுகளை தனக்கான பாதிப்பாகக் கருதுவதில்லை.

யாரேனும் சாப்பிட்டுவிட்டு, மிச்ச எச்சத்தை அப்படியே சாப்பிட்ட தட்டிலேயே விட்டுச் சென்றால் அதை எடுக்க, பெற்ற தாயாக இருப்பினும் ஒருவித சங்கடம் இருக்கும். ஆனால் அதை பெரும்பாலான ஆண்கள் மனதில் கொள்வதில்லை. அவர்களுக்கு அது தங்களது வேலையல்ல என்பதாகவும், தனது தாயின் / மனைவியின் / சகோதரியின் வேலை என்பதாகவுமே மனதில் படுகிறதே ஏன்? ஒரு ஆண் தான் சாப்பிட்ட இடத்தையோ அல்லது சாப்பிட்ட தட்டையோ சுத்தம் செய்ய ஏன் துணிவதில்லை? சமையல் முதல் எச்சில் தட்டில் கழுவுவது வரை பெண்களின் வேலையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான்.

சமையலறை வேலை தொடங்கி கழிவறை சுத்தம் செய்யும் வேலை வரை முடித்துவிட்டு, படுக்கையறை சென்றாலும் அங்கும் பல பெண்கள் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு அவர்களின் ஓய்வுகூட காணாமல் போகிறது.

The Great Indian Kitchen' teaser: 'The Great Indian Kitchen' teaser: Sweet, savory, and bitter, this kitchen cooks it all! | Malayalam Movie News - Times of India

காமமும் கூட காதலோடு சேரும் போது தான் முழுமையடைகிறது. ஆனால் வீட்டிலிருக்கும் பெண்களுக்குப் பல சமயங்களில் விருப்பமின்றி தீண்டுதலும், தனது விருப்பங்களைக் கூடச் சொல்ல முடியாத நிலைதான் நீடிக்கிறது. காமம் மெல்லியது. அதைக் கட்டாயத்தில் கட்டிலில் கிடத்துவது, எது போன்றது? அதுவும் ஒரு வன்முறையே.

ஆண்களுடைய தேவையின் நீட்சி மட்டுமே பெண் என்பதுபோல் இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது. இங்குப் பாலியில் விருப்பம் பற்றி யார் பேச வேண்டும்? யார் கேட்க வேண்டும்? என்பதும் கூட ஆண்தான் நிர்ணயிக்கிறான்.

இங்கு ஆண் தனது தேவையையும் விருப்பத்தையும் பேச இடமிருக்கிறது. ஆனால் அதையே ஒரு பெண் பேசினால் அது வேறுவிதமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அந்தப் பெண் மட்டுமல்ல, பெரும்பாலான இல்லத்தரசிகளின் நாட்கள் இப்படித்தான் கழிகிறது.

இந்தப் படம் இந்தியக் குடும்பங்களின் பிரதிபலிப்பு என்பதால்தானோ என்னவோ, இந்த கதாபாத்திரங்களின் இடத்தில் எந்தக் குடும்பத்தையும் வைத்துப் பார்த்து இந்தக் காட்சிகளை நம் அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்க முடியும்.

குடும்பத்தின் அனைத்துப் பணிகளையும் செய்யும் பெண்ணுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் வரும் மாதவிடாயைத் தீட்டாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். அதையும் கூட அந்த வேலைக்காரப் பெண், “அது தீட்டு என்றால் என் குழந்தைகளுக்கு யார் உணவளிப்பது?” என்று கேட்கும் கேள்வியே உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையின் நிதர்சனம்.

அந்தப் பெண் அந்த மூன்று நாட்கள் தனிமையில் இருப்பது எப்படியான அசோகரியங்களை தருகிறது என்பதைக் கடந்து அது ஏதோ பெண்களுக்கான இழுக்காக பார்க்கும் ‘தீட்டு’ எனும் பார்வை அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது.நம் நாட்டில் அசாமில் உள்ள காமக்கியதேவி கோவிலில் ரத்தப்போக்குடன் பெண் கடவுள் காட்சியளிக்கிறார். ஆனால் சபரிமலை கடவுள் மாதவிடாயைத் தீட்டாகப் பார்க்கிறது. பெண்களைச் சபரி மலைக் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்துப் போடும் ஒரு முகநூல் பதிவுகூட, அந்தப் பெண்ணின் கணவரின் விருப்பத்தோடு மட்டுமே தான் பதிவிட முடிகிறது.

சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைத் தெரிவிக்கும் அடிப்படை உரிமையை முடக்குவது முதல், தான் கற்ற கலையைப் பிறருக்குக் கற்றுத்தர விருப்பமிருந்தும் பிறரது கௌரவம் என்ற பெயரில் பெண்கள் மீது ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் வரை அனைத்தையும் மொழி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த பெண்ணின் குரலாய் இயக்குநர் ஜூயோ பேபி படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

நிமிஷா சஜ்யன் இங்கே தனது நடிப்பை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மெருகேற்றியிருக்கிறார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, அவரது நரம்புகள் வழியாகப் பாய்ந்து பெயரிடப்படாத மனைவியின் ஒவ்வொரு களத்திலும் சுவாசிக்கிறார் நிமிஷா.

அவர் நடித்த முதல் படமான ”தோண்டிமுதலம் டிரிக்சஷிய”த்தின் மூத்த துணை நடிகரான சூரஜ் வெஞ்சராமுடு, “தி கிரேட் இந்தியன் கிச்சனி”ல் கணவராய் தனது நடிப்பின் மூலம் சிறப்பான கலை நுண்ணறிவைக் காட்டியிருக்கிறார்.

வெளிப்படையாக வெறுக்கத்தக்க மனிதராக அல்லாமல், ஒரு வித்தியாசமான – எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல நடத்தை கொண்ட வில்லன்கள் இருப்பதை அவரது கதாபாத்திரம் வலியுறுத்துகிறது. அது நமது பக்கத்து வீட்டு வழக்கமான அத்தியாயமாகக் கூட இருக்கலாம்.தி கிரேட் இந்தியன் கிச்சன், பாதிக்கப்பட்ட பெண்கள் முதல் பாதிப்பை உணராமல் இருக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் மாமியாராக வரும் கதாபாத்திரத்துக்குத் தனி பாராட்டு. தான் முதுகலை படிப்பு படித்தும்கூட, “ஆடை, ஆண் கொடுத்த சுதந்திரம்” என்பதன் மூலம் எதார்த்தத்தைக் காட்டியிருப்பார். எனினும் மருமகளின் வலியை ஒரு சகமனிதியாக பார்ப்பதுதான் தேவை என்ற அவரது கதாபாத்திரம், சமூக மற்றும் சினிமா ஸ்டீரியோடைப்களுக்கு மாறாக, மாமியாரும் ஒரு பெண் என்ற பார்வையை மனதில் பதிய வைத்திருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் – ஒலி வடிவமைப்பாளரான டோனி பாபுவின் ஸ்விஷ், ட்ரிக்கிள்ஸ், கடுகின் கடுகல், எண்ணெய் குமிழியின் சிரிப்பு, பாத்திரங்களின் பீயோனா, உணவைச் சுவைக்கும் இசை என எல்லாம் நம்மைப் படத்தோடு அழைத்துச் செல்கிறது.

ஒளி வடிவமைப்பில் டிஓபி சலு கே தாமஸ், அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையை மங்கலான ஒளியுடன் பயணிப்பது போன்று காட்சிப்படுத்தி, பின் படத்தின் முடிவில் ஒளியை அதிகரித்து திருமண வாழ்க்கை என்ற சிறைச்சாலையிலிருந்து அவளை சிறகசைத்த பறவையைப்போல் காட்டுவதில் தொழில்நுட்ப யுத்தியை அழகாகக் கையாண்டுள்ளார்.

பெண்களைக் கடவுளாகப் பார்க்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் பெண்ணை ‘தேவி’ என்று சொல்லி தியாகம், வலி, பெருமை, கௌரவம் எல்லாம் அவளின் அங்கம் முழுக்க அணிகலன்களைப் பூட்டுவது விருப்பமற்ற வெற்று ஜோடனைப் பேச்சாகவே இருக்குமே ஒழிய, உள்ளார்ந்த பொருளில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

இங்கே ஆண்கள் பற்றி எதிர்மறையான கருத்துகளை மட்டும் முன் வைப்பது எனது விருப்பமல்ல. அதைச் செய்யவும் இல்லை. ஏனெனில் என்னை வளர்த்தெடுத்த சமூகத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற தோழர்களால் பெண் விடுதலை சாத்தியமானது என்பதை என் நினைவில் கொள்கிறேன்.

இப்போது எல்லாம் ஆண்கள் இப்படியில்லை என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், சேர்ந்து உணவு சமைப்பது, வேலைகளைப் பகிர்ந்து செய்வது, வரதட்சணை வேண்டாம் எனக் கூறுவதெல்லாம், லட்சத்தில் ஒரு பகுதியே. அதுவும் கூட தேவையைச் சார்ந்து மட்டுமே இயக்கு விக்கப்படுகிறது. அதுவே ஆண்களின் புரிதலின் அடிப்படையில் இயங்குமாயின், கட்டாயம் அவர்களுக்கு எனது பாராட்டுகள். எனது பார்வையில் தவறு இருப்பின் உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள். கட்டாயம் பரிசீலிக்கிறேன். ஆனால் ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

“மாற வேண்டியது மனம் மட்டுமே… மாறக்கூடாது என்று தடுப்பது எதுவோ அதைத் தகர்த்து எறி ..”

தி கிரேட் இந்தியன் கிச்சன் என்பது ஒரு மிக மோசமான, ஆணாதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக விளங்கும் மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குநர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தால், அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம் வாழ்நாள் முழுவதும் எங்கோ ஏதோ ஒன்றில் அனுபவித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் உணரும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது !