மைசூரு:
கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்தவர் சையது ஈசாக். 62 வயதாகும் கூலித் தொழிலாளியான இவர், மக்கள் மீதான அக்கறையால், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொது நூலகம் ஒன்றை நடத்தி வந்தார்.

11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட நூல்கள், இவரது நூலகத்தில் இருந்த நிலையில், பொதுமக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அவரது நூலகத்தை மர்ம நபர்கள்சிலர் தீயிட்டு கொளுத்தி நாசம் செய்துள்ளனர்.

“அனைத்து மதங்களையும் சார்ந்த புத்தகங்களும், இதழ்களும் நூலகத்தில் இருந்தன. எல்லாமே தீயில் எரிந்து நாசமாகி விட்டன” என்று முதியவர் ஈசாக் வேதனை தெரிவித்துள்ளார்.“கன்னடத்தை வெறுப்பவர்கள்தான் இச்செயலை செய்துள்ளனர்” என்று கூறியிருக்கும் அவர், கல்வியில் பின்தங்கிய இப்பகுதியில் நூலகம் வேண்டும் என்றதனது கனவு சிதைக்கப்பட்டு உள்ளதாகவும் கண்ணீர் விட்டுள்ளார்.

இதனிடையே, ஈசாக்கின் நூலகம் எரிக்கப்பட்டதை சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவர்கள், ஈசாக் மீண்டும் இந்தபகுதியில் நூலகம் அமைக்க சுமார் ரூ. 13 லட்சத்தை நன்கொடையாக அள்ளிக் கொடுத்துள்ளனர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ் 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *