நாம் எதைப் பேச வேண்டும்..? – *தேனி சுந்தர்*இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நமக்கென சுயமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.. மருந்து உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று கருதிய இந்திய அரசு ஒரு குழு அமைத்து பல்வேறு மேலை நாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறது.. அவர்களும் சென்று வந்து அறிக்கை அளிக்கின்றனர்..  அதன் பிறகு என்ன நினைத்ததோ 1948ல் வெளியிடப்பட்ட புதிய தொழிற் கொள்கையில் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்ய முன்வரக் கூடிய உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அதற்குச் சமமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. 1950-60 களில் பொதுவாகவே உலக அளவில் நவீன மருந்து உற்பத்தியில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டதால் வளர்ந்த நாடுகள் இங்கு வந்து உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை..
ஆயினும் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் நம் தேசத்திற்குள் படையெடுத்தன.. நீங்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக ஏன் எங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யக் கூடாது என்று அரசு அவர்களிடம் கேட்டது…
உங்கள் நாட்டின் தட்ப வெப்ப நிலை மருந்து தயாரிப்புக்கு ஏற்புடையதாக இல்லை.. அப்படியே இங்கு வந்து உற்பத்தி செய்தாலும் மருந்தின் வீரியம் குறைந்து விடும் என்று பல காரணங்கள் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டன.. எனவே இறக்குமதி தொடர்ந்தது..
மருந்தின் விலைகளோ மக்கள் மீது பெரும் சுமைகளாக இருந்தன.. உலகிலேயே மருந்துகள் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று கெபாவர் கமிட்டி கூறியது.. அதிலும் ஏமாற்றப் படுகிறோம் என்பதை நாம் கண்டுபிடிக்கவில்லை.. கெபாவர் கமிட்டி என்பது அமெரிக்க செனட் சபையால் அமைக்கப்பட்ட குழு.. அந்தக் குழுவின் அறிக்கை தான் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் இந்திய மக்களைச் சுரண்டுவதை அம்பலப்படுத்தியது… அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய அரசு அதையே ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. என்ன தான் இருந்தாலும் தன் நாட்டு நிறுவனங்களை அமெரிக்கா விட்டுக் கொடுத்து விடுமா என்ன..? ஏற்கனவே நடைமுறையில் இருந்த கிளைட்டன் சட்டத்தை திருத்தி அந்த நிறுவனத்திற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கச் செய்து காப்பாற்றியது என்பது வரலாறு..
இதிலிருந்து இந்திய அரசு மூன்று அனுபவங்களைப் பெற்றது.. முதலாவதாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்து உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை வழங்கத் தயாராக இல்லை.. இரண்டாவதாக, தங்கள் ஆலைகளை இந்தியாவில் தொடங்க அவர்கள் தயாராக இல்லை.. மூன்றாவதாக, மருந்தின் விலைகள் கட்டுபடியானதாக இல்லை.. அந்த விலைகளைக் குறைக்கவும் அவர்கள் தயாராக இல்லை…
கடந்த கால அனுபவங்கள் இப்படி இருக்கையில் இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில், முன்னுரிமை கொடுத்தும் முக்கியமாகவும் பிரதானமானதாகவும் *நாம் எதைப் பேச வேண்டும்..?*
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்… *அரசு பொதுத் துறை நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும்…! பொது சுகாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும்..!!*
*தேனி சுந்தர்*