“வரப்புயர நீர் உயரும் :நீர் உயர நெல் உயரும் : நெல் உயர குடிஉயரும் : குடி உயர கோன் உயரும்:கோன் உயர கோல் உயரும்.”
இது ஒளவையாரின் கூற்று. இதனைஇன்றையநவதாராளமயச்சூழலோடு ஒப்பீட்டு நோக்கும் போது, தொழில்மயமாக்கம் வேகமாக நிகழ்ந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.பெய்யும் மழைநீரின் அளவும்சரிந்து விட்டது.இதனால்,நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக்குறைந்து,கடும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக,விவசாயத்தொழில் பாதிக்கப்படுவது மட்டுமின்றி,விவசாயம் செய்வதற்கான பரப்பளவும் கூட, வெகுவாக மறைந்து வருகிறது. இப்படியான சூழலில்,விவசாயக்குடிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக அல்லலுறுகின்றனர்.போதியநீரில்லாததால் நெல்லும் :நெல்லில்லாததால் குடியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,கோனானது மேலும் வலுமிக்கதாகஉயர்ந்தும். கோலானது அடக்குமுறைக் கருவியாகவும் மாறிவிட்டிருக்கிறது..
இன்றைய நிலையில்,
- அரசு சார்ந்த துறைகள் யாவும் கார்ப்பரேட் நிறுவனங்களைப்போன்றுலாபத்துக்கு முன்னுரிமை தந்து செயல்படுவதைப்பார்க்கமுடிகிறது-
- முன்னாள்-இந்நாள் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு மளமளவென உயர்கின்றன-
- கார்ப்பரேட் நிறுவனங்கள்- வங்கிகள் லாபம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அதிகரித்து வருகின்றன-,
- படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையுங்கூட ஆண்டுக்காண்டு மளமளவென அதிகரித்து வருகின்றது-
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின்படி, இந்தியா முழுக்க உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக, பதிவு செய்துகாத்திருப்பவர்களின் எண்ணிக்கை 4.35 கோடிக்கும் அதிகமாகும். பிப்ரவரி 2020 கணக்கீட்டின்படி நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் வீதமானது 7.8 அளவுக்கு உயர்ந்திருக்கிறது..இது கடந்த 43 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் மட்டும், வேலைவாய்ப்பின்மையின் பாதிப்பை,ஒரு அளவுகோலாகக்கொண்டுபார்த்தோமேயானால்,
- சென்னையில் முதுநிலை கணிதவியல் பட்டம் பெற்ற ஒருவர், சென்னை பெருமாநகராட்சியில் துப்புரவாளராகவும்,எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர்இரயில்வேத்துறையில் கலாசியாகவும் பணியாற்றுகின்றனர்
- கோயம்புத்தூர் மாநகராட்சியில் முதுகலை உயிரித்தொழில்நுட்பம் படித்த பெண் ஒருவர் துப்புரவாளராகவும் பணியாற்றி வருகின்றார்
அரசின் நான்காம் நிலை பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களில் முனைவர்,பொறியாளர்,பட்டதாரிகள்,முதுநிலை பட்டதாரிகளின் எண்ணிக்கைஅதிகரித்து வருகின்றது அதேசமயம்,நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வாணையங்களின் வழியாக நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்தாகக்கூறி புகார்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
நவதாராளவாத காலத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களைப்போன்றுபள்ளிகளும்- கல்லூரிகளும் மாணவர்களிடையேதிறன் – போட்டி-லாபம்எனும் மந்திரத்தை உற்பத்தி செய்யும் கூடங்களாக மாறியுள்ளன.
பள்ளி, கல்லூரி அரசுத்துறை ,கார்ப்பரேட்நிறுவனங்கள் யாவுமே,தாங்கள் நடத்தும்சேர்க்கை–மேற்படிப்பு-வேலைவாய்ப்பு எதுவானாலும் தேர்வு நடத்தியே தெரிவு செய்து கொள்கின்றன.
மேற்கூறிய நான்குமே,சமூகத்தளத்தில் போட்டிஎன்பதனைஊடகங்களின் உதவியுடன் இயல்பானது எனவும்,தவிர்க்கமுடியாதது என்றும்கூறி மக்களின் மனதில் அழுத்தமாக பதியவைக்கப்பட்டிருக்கிறது.
மேற்படிப்போ அல்லது வேலைவாய்ப்போ எதுவானாலும் அதற்கேற்றபடி போட்டித்தேர்வு எழுதுவதற்கு பயிற்சிமையங்கள் அவசியம் என்றாகிவிட்ட காலமிது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் தனக்குத்தேவையான பணியாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு வகை தேர்வுகள் மற்றும் நேர்காணலை நடத்தி தெரிவு செய்து கொள்கின்றன.
மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக்கூறும் அரசுகளும் கூட, தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள தேர்வாணையத்தின் மூலம் முதல்நிலை -இரண்டாம் நிலைத்தேர்வு மற்றும் ,நேர்காணல் என த்தேர்வுகள் நடத்தி தனது பணியாளர்களை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
இப்படி,அரசால் நடத்தப்படும் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகள் நடத்திடும்போது ஆள்மாறாட்டம்மற்றும் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துகொண்டேஇருப்பதும் கவனிக்கத்தக்கது.
அரசானது,பெருகிவரும் வேலைவாய்ப்பின்மையை கவனத்தில் கொள்ளாமல், நவதாரளமயக்கருத்தியலின் அடிப்படையில்,ஒருபுறம் நிர்வாகத்தில் செலவுசிக்கனமுறையை கையாளுகிறது.மறுபுறம் அலுவலக நடைமுறைகளில் நவீனமயத்தைப்புகுத்துகிறது,
நவீனமயத்திற்கேற்றவாறு அரசானது புதிய பணியிடங்களை உருவாக்குவதுமில்லை.அதே சமயம்,காலிப்பணியிடங்கள் ஏகத்திற்கு இருந்தும் மிகக்குறைந்த அளவில் மட்டுமே பூர்த்திசெய்து கொள்கிறது.
அரசுத்துறைகள் வழியான மக்கள் சேவைகள் கூட கார்ப்பரேட் நிறுவனங்களைப்போன்று, லாப நோக்கிற்கானதாக மாற்றியமைக்கப்பட்டு வருவது கண்கூடு,உதாரணத்திற்கு வீட்டுமனை அங்கீகாரம்,பத்திரப்பதிவு,ஆவின்,டாஸ்மாக்,டாமின் இன்னும்……
முடிந்தவரையில்,கார்ப்பரேட் நிறுவனங்கள்தனது லாபவிகிதம்குறையாமல் பார்த்துக்கொள்கிறது.அவ்வாறு,லாபம் சரிந்திடும் போது பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம்,அதிகப்பணிச்சுமை,அல்லது இடம்பெயர்வு மூலம் சரிசெய்து கொள்கின்றன.
மக்களுக்கு சேவையாற்றிடும் அரசுத்துறைகளும் கூட காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருவதைப்பற்றிய கவலையின்றி. அதனை பூர்த்திசெய்ய அவுட்சோர்சிங்,அல்லது ஒப்பந்த முறையில் பணியாளர்களை தெரிவு செய்து கொள்கின்றன.
சமூக-பொருளாதார அளவில் மிகவும் பின் தங்கியமாணவர்கள்-இளைஞர்கள் அரசுப்பள்ளியில் படித்து மேற்படிப்புக்கோ,வேலைவாய்ப்பிற்கோ செல்வதற்கு,பிறருடன் சமமான நிலையிலிருந்தேபோட்டியிட வேண்டியுள்ளது.
போதிய வசதியும் பயிற்சியுமற்று விளிம்பில் வாழும் இளைஞர்கள் போட்டி எனும்போது,பின்தங்கிவிடுகின்றனர். இட ஒதுக்கீட்டைத்தவிர்த்த மேற்படிப்பு -வேலைவாய்ப்பு என்பது இவர்களில் பலருக்கு எட்டாக்கனியாகிவிடுகிறது.
வேலைவாய்ப்பின்மை அதிகளவில் இருப்பது ஒருவகையில், அரசு மற்றும் கார்ப்பரேட்களுக்கு லாபந்தரும் காரியம்தான். கார்ப்பரேட் நிறுவனங்களைப்பொருத்தவரை,வேலைவாய்ப்பின்மை அதிகளவில் பெருகியிருக்கும் போது,திறனற்றவர்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிப்பதாகக்கூறி லாபம் ஈட்டிக்கொள்கிறது.அடுத்து, குறைந்த ஊதியத்திற்கு தனக்கு தேவையான பணியாட்களை தெரிவும் செய்து கொள்கின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் யாவும், புதிய தொழில்நுட்பத்தைபுகுத்தி ஒரே சமயத்தில் உற்பத்தியையும் பெருக்கிக்கொள்கிறது.ஆட்குறைப்பையும் செய்துகொள்கிறது,ஆக, தொழில்நுட்பங்களும் ,வேலைவாய்ப்பின்மை பெருகிடுவதற்குகாரணமாகிடுகின்றன.
புதிது புதிதாய் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போது,ஒவ்வொரு,இளைஞர்களும் அதற்கேற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கல்லூரி-கார்ப்பரேட்-தொழில்நுட்பம்-இளைஞர்கள் ஒரு சேர பயணிக்கும் போது பிரச்சனை ஏதும் இருப்பதில்லை.தொழில்நுட்பம் இன்னும் மேம்பட்டநிலைக்கு மாறிடும்போது இளைஞர்கள்-கல்லூரி அதற்கேற்றவாறு தங்களை ஒப்பனை செய்து கொள்ள வேண்டியுள்ளது.இல்லையெனில்,அந்த சங்கிலி இணைப்பானதுதடுமாறிடுகிறது.
இன்றைய இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யக்கூடிய வேலைவாய்ப்பானது கார்ப்பரேட்நிறுவனங்கள் மற்றும் அரசின் கைகளில்தான் உள்ளது என்பது மட்டும்தான் நிதர்சனம்.
◄►◄►◄►◄►◄►◄►◄►◄►◄
நகரமயம்-கேளிக்கை-நுகர்வு-டிஜிட்டல்மயம்-யாவும்ஒவ்வொரு இளைஞரை சுற்றியும் இறுகப்பின்னப்ப்பட்டிருக்கிறது..இவற்றிற்குள்ளேயேசுற்றித்திரிய இவர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.மேற்கூறப்பட்ட யாவும் கார்ப்பரேட்நிறுவன ஆதிக்கத்தோடு தொடர்புடையதாகும்.
- இளைஞர்களிடம் கடந்த காலங்களில்,நிலவிவந்த சமூகப்பொறுப்பும்,கருணைஉணர்வும்கார்ப்பரேட்மய ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது-
- இளைஞர்கள் வன்மம் மிக்க அரசியல் மற்றும் சூதாட்டமிகுந்த பொருளாதாரத்திற்குள் தள்ளப்பட்டு அடமானம் வைக்கப்படுகின்றனர்-
- கல்வி-மருத்துவம் யாவும் கார்ப்பரேட்மயமாகி இவர்களின் நலனுக்கு எதிராக கட்டமைக்கப்படுகின்றன-
- நீதியும் அநீதிக்கு துணைபோவதால் வேறுவழியற்ற இளைஞர்கள் விற்பனைக்குறிய பண்டமாக ஆகிடுகின்றனர்-
இன்றைய இளைஞர்கள் நவதாராளவாதத்துடன் பிணைந்த வலதுசாரி கருத்தியல் மற்றும் செயல்பாடுகளால் பாதிக்கப்படுபவர்களாகி வருகின்றனர்.இதற்கு அடிப்படையாக இருப்பது,சீரற்ற சந்தை– தேசியவாதத்தோடு இணைந்த பெரும்பான்மைமதவாதம் – கருவியாக்கப்படும் கல்வி – இராணுவமயமாக்கப்படும் சமூகம் ஆகும்.

மேற்கூறிய நான்கு அடிப்படைகளும் சேர்ந்து இளைஞர்களுக்கு மூன்றுவித அநீதிகளை இழைக்கின்றன. அதாவது,பொருளாதார ஏற்றத்தாழ்வு,அடுத்து,கார்ப்பரேட் அதிகாரம் மற்றும்,சாதி-மத பாகுபாடு ஆகியனவாகும்.
இம்மூன்றுவித அநீதிகளும் சேர்ந்து,இளைஞர்களை ஒரே சமயத்தில் இருவகை.அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன.,
- கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படும் வேலைவாய்ப்பின்மை அதன் விளைவால்உண்டாகும் ஏழ்மை.இந்த ஏழ்மையினால் பெறப்படும் கடன் ஒருவகையாகும்.
- மறுவகையில்,பெரும்பான்மைமதமானது இளைஞர்களிடையேமதவெறி ஊட்டி,பிறர்மீதுவெறுப்பினை விதைத்து, அவர்களை பலிகடாவாக ஆக்கிடுவதாகும்.
வேலைவாய்ப்பின்மையின் கொடூரத்தால்,இளைஞர்களில் சிலர் சட்டபூர்வமற்ற அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளவும் செய்கின்றனர்..
பொருளாதார ஏற்றத்தாழ்வு உருவாகுவதற்கு –
- வேலைவாய்ப்பின்மைஒரு முக்கியக்காரணமாகும்.
- அரசும் தன்பங்கிற்கு செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பது –
- கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் நீண்ட காலமாக ஊதிய உயர்வின்றி இருந்துவருவது –
- இந்நிறுவனங்கள் யாவும் தன்பங்கிற்கு பணியாளரை அதிக நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவது -ஆகியன காரணமாகிடுகின்றன.
அரசும்-கார்ப்பரேட்நிறுவனங்களும் சேர்ந்து ஒரு பக்கம்,தங்களது நலனுக்காக, இளைஞர்களிடமுள்ள திறனைபயன்படுத்தி, மக்களாகிய நுகர்வோருக்கு துரிதமான சேவையை அளித்து அதன்மூலம்லாபத்தினை அளவற்று பெருக்கிக்கொள்வதாக இருக்கிறது. இன்னொருபக்கம்,இளைஞர்களை தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பொது மற்றும் பணியிடங்களில்கண்காணிப்புக்கும் உட்படுத்திடவும் செய்கிறது.
உலகளாவிய அளவில்,அடுத்த பதினைந்து வருடங்களில் நாற்பது சதவிகித வேலைவாய்ப்புக்கள் பறிபோவதற்கு வாய்ப்பிருப்பதாக “பார்ச்சூன்”(FORTUNE) எனும் அமெரிக்க இதழ் ஒன்று கணித்திருக்கிறது.அதே போல் மற்றொரு .”.ப்ருக்கிங் இன்ஸ்டிட்யூட்”(BROOKING INSTITUTE) நிறுவனத்தின் ஆய்வின்படி தானியங்கி(AUTOMATION),ரோபாட்டிக்ஸ்(ROBOTICS),செயற்கை நுண்ணறிவு(ARTIFICIAL INTELLIGENCE) சார்ந்த தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால்,ஒயிட் காலர்(white collar) என்று அழைக்கப்படும் பணிகள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் என்கிறது.
ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு நாளும் தன்னைச்சுற்றி நிகழும் சுற்றுச்சுழல் பாதிப்பின் கேடுகளை,பொருளாதார ஏற்றத்தாழ்வின் நெருக்கடிகளை ,தொழில்நுட்பத்தின் வீச்சினை,ஜனநாயகத்தின் மாண்புகள் சிதைவதை ,இவற்றின்காரணமாக வேலைவாய்ப்பின்மை பெருகி எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருப்பதைக்காணும்போது…….!பதற்றமே மிஞ்சுகிறது.
(குறிப்பு : இக்கட்டுரை மார்ச் 2020 முதல் வாரத்தில் எழுதியதினால்,கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பினை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.நன்றி.)
Leave a Reply
View Comments