நூலின் பெயர் உதிர்ந்தும் உதிராத
ஆசிரியர் : எஸ்.வி.வேணுகோபாலன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 136
விலை : ரூ.135

பல துறைகளில் பரிணமித்து இயற்கையோடு இரண்டறக்கலந்த 24 முக்கிய
நபர்களுக்கு அஞ்சலியாக அமைந்துள்ள கட்டுரைகளைக் கொண்டது
எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களின் உதிர்ந்தும் உதிராத நூல். இலக்கியவாதிகள்,
கலைஞர்கள், நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற
அந்தப் பட்டியலில் உள்ளோர் நாம் அறிந்தவர்களே. ஆனால் அவர்களைப் பற்றி
நாம் அறியாதனவற்றைத் தந்து அவர்களின் பெருமைகளை எழுத்தில் கொணர்ந்துள்ள
ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

“எளிமையும் அசத்தலும் ஒருசேரக் கலந்த சாதனையாளர்தான் தென்கச்சி
சுவாமிநாதன்” (ப.18)

“கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் குட்டிப் பெண்ணுக்கு கண்ணாடியே
போட்டுக்கொள்ளாத பாட்டி அனாயாசமாக ஊசியில் நூல் கோத்துக் கொடுத்து உதவும்
துணுக்கைப் பாருங்களேன், அதில் வேறு எத்தனை பாத்திரங்கள் எவ்வளவு
முகபாவமும், உடல்மொழியும் காட்டுகின்றனர்!” (ஓவியர் கோபுலு, ப.21)

“திருவாளர் பொதுஜனத்தை கார்ட்டூனில் 1957ல் உருவாக்கிக் கொடுத்து அரசியல்
அபத்தங்களை, அத்து மீறல்களை, சமூக அவலங்களை அவரது தூரிகை வரைந்து தள்ளிக்
கொண்டிருந்தது.” (ஆர்.கே.லட்சுமண், ப.25)

“பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ, ஒரு முதியவரின்
பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது
வியப்புக்குரிய விஷயம்.” (பி.பி. ஸ்ரீநிவாஸ், ப.60)

“வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில்
அபாரமன கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள்
ஒன்று.” (கிரேசி மோகன், ப.68)

“கேலிச் சித்திரக்காரர்களுக்கு வரைவதற்குக் கொண்டாட்டமான
பாங்கில் அப்படி ஒரு முகவாகு. பருத்த உடல். அதைவிடக் கனத்த உடல் மொழி.
வசனத்தை உச்சரிப்பதில் ஒரு தனித்துவ ரசனையோடு ஒலிக்கும் ஒரு பாணி.”
(நீலு, ப.71)

ஊர் அடங்காது | கவிதை | எஸ் வி வேணுகோபாலன் - YouTube
எஸ்.வி.வேணுகோபாலன்

          “கருத்துச் சுதந்திரம் என்பது அவரைப் பொறுத்தமட்டில் வெற்று
முழக்கமோ, முணுமுணுப்போ அல்ல. அது ஒரு போர்க்கொடி! ஜனநாயகத்தின் உயிர்!
…..துணிச்சலின் பெயர்களில் ஒன்றாக இருந்தது அவர் பெயர்.” (கிரீஷ்
கர்னாட், ப.102)

“மக்கள் இதயத்தை தொட நினைக்கும் கலைஞர்களுக்கு ருத்ரய்யாவின் பெயர்
நிச்சயம் ஓர் உந்துவிசையாகவே இருக்கும்.” (ப.107)

“குடியரசுத் தலைவர்கள் எல்லோரும் நினைவில் நிற்பதில்லை. இப்போது
இருப்பவர் யார், முந்தைய குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டுப்
பாருங்கள், முப்பது விழுக்காட்டுக்கு மேல் எனக்குத்தெரியாது என்று
சொல்லிவிட்டுப் போவார்கள். கலாம் எப்படி நினைவில் நின்றுவிட முடிந்தது?”
(ப.115)

மனோரமா, நா.முத்துக்குமார், டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம், மிருணாளினி
சாராபாய், பாலு மகேந்திரா, டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, மணிவண்ணன்,
வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், வையம்பட்டி முத்துசாமி, டி.எம்.சவுந்திரராஜன்,
எஸ்.விசுவநாதன், கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ், கிருஷ்ணா டா வின்சி
என்று பலருக்கு அஞ்சலி  செலுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரையும் பற்றிய ஒரு பறவைப்பார்வையை ஆசிரியர் தந்துள்ளதைப்
படிப்பவர்கள் அவருடைய நினைவாற்றலைக் கண்டு பிரமிப்பர். ஒவ்வொருவரின்
மேதைமைத் தன்மை, குணம், சாதனை போன்றவற்றை அலசி ஆராய்ந்து திரட்டித்
தந்துள்ளார். இவர்களில், நேரில் சந்தித்தவர்களைப் பற்றிப் பகிரும்போது
மேலும் நெகிழ்ந்துவிடுகிறார். சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் அவர்களை
நினைவுகூர்ந்த வகையில் அப்பெருமக்களை நம் மனதில் இடம் பிடிக்க
வைத்துவிட்டார் ஆசிரியர்.

வாசிப்போம் வாசிப்போம்: 2019

ஆசிரியர் : எஸ்.வி.வேணுகோபாலன் (94452 59691)
நூல் : உதிர்ந்தும் உதிராத
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை
600 018 (044-24332424, 24332924, 24356935, [email protected])
பதிப்பாண்டு : டிசம்பர் 2019
விலை ரூ.135

முனைவர் பா.ஜம்புலிங்கம், தஞ்சாவூர்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *