நான் இமையத்தோடு எப்போதும் பேச விழைகிறேன். காரணம் அவர் எப்போதும் சாகசங்களை கதையாக்குவதில்லை. மாறாக என்னை பற்றியும் , என் தூரத்து கிராம நண்பர்களை பற்றியும் , சொந்தங்கள் பற்றியும் பேசுகிறார். அதனால்தான் , சாகசக்கதைகளை விட இமையத்தின் எதார்த்த கதைகள் என்னை வசியம் செய்கிறது. தான் வாழும் சமகால அரசியல் சூழலை, சாதிய அழுக்குகளை, பெண்ணடிமை குரூரங்களை அந்த அரசியல் நேரடியாக யாரை காவு வாங்குகிறதோ அவர்களிடமிருந்து சொல்ல விழைகிறார். அப்படியான குறுநாவல்தான் வாழ்க வாழ்க..
இவ்விரு வார்த்தைகளை கேட்டவுடனோ,  இந்நாவலைப் படிக்கும்போதோ தமிழகத்தின் பிரதான கட்சிகள் உங்கள் நினைவுகளில்  ஊசலாடினால் நிர்வாகம் பொறுப்பல்ல.. நான் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது தமிழகத்தின் பிரதான கட்சிகள் தங்கள் வெகுதூர பொதுக்கூட்டங்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து மாணவர்களை வேனில் கொத்துக்கொத்தாய் அழைத்துச் செல்வதை பார்த்துள்ளேன். சமீபத்தில் ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கூட அது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். ஆனால் , இமையம் ஒரு படி மேலே போய் அதன் பின்னாலுள்ள வலிகளை , ஏமாற்றங்களை ஏமாற்றுபவர்களை, ஏமாற்றபடுபவர்களை சமூக அரசியலை, அழுக்குகளை எதார்த்தமான வாழ்வியலின் வாயிலாக வாழ்க! வாழ்க!! வாக வடிவமைத்திருக்கிறார்..
சமஸ்: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் ...
 குடும்பத் தேவைகளுக்காக உள்ளூர் கட்சி பிரமுகர் வெங்கடேச பெருமாளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆண்டாள், கண்ணகி,சொர்ணம் என தெரு மக்கள் புறப்பட்டு பிரதான கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு செல்கின்றனர்.. அங்கு திரண்டிருக்கும் பெரும் கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை அரசியல் பின்னணியோடு, அவர்க்கே உரித்தான காத்திரமான மொழிநடையோடு அற்புதமாக எடுத்துரைத்துள்ளார் இமையம்.. குறிப்பாக ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் அப்பெரும் கூட்டத்தில் சேரில் அமர்ந்து இருப்பதை கண்ட மூன்று உயர் சாதி பெண்கள் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த  முயன்றபோது, அப்பெண் கூட்டத்திற்கு நான் வேணும்!? ஓட்டு போட நான் வேணும்!? சேர்ல மட்டும் உட்காரக்கூடாதா?? என்று கேட்கும் கேள்விகள் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடக்கப்பட்ட குரலாய் “பளாரென்று” ஓங்கி ஒலிக்கிறது அந்தக் குரல்.. மற்றுமொரு இடத்தில் சொர்ணத்தின் பேத்தி  காயத்ரி மூத்திரம் போகவேண்டும் என்று கேட்கும்போது கூட்டத்தில் போகவும் வழியில்லாமல், ஒதுங்க  கழிவறையும் இல்லாமல் தவிக்கும் போது, “காலத்துக்கும் நடுத்தெருவில் நாய் மூத்திரம் வுடுற மாதிரி கண்ட  இடத்தில் வேட்டிய தூக்கி வுட்டுட்டு போற பயலுவதான!? அவனுவளுக்கு எப்படி தெரியும் பொட்டச்சியோட கஷ்டம்?? என்று மூத்திரத்தில் கூட உள்ள பாலின பாகுபாட்டை அப்பட்டமாக எடுத்துரைத்துள்ளார்..
மற்றுமொரு இடத்தில் வெகு நேரம் சிறுநீர் கழிக்க இயலாமல் “நீர் சுலுக்கு” ஏற்பட்டு பெண்கள் வேறுவழியின்றி இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பதை படிக்கும்போது நமக்கே நெஞ்சில் நெறி கட்டுகிறது.. இறுதியாக கட்சித் தலைவி ஹெலிகாப்டரில் வரும்போது லட்சோபலட்ச மக்களும் வானைப் பார்த்துக்  கும்பிட்டதெல்லாம் நிகழ்காலத்தில் பல அரசியல் தலைவர்களின் டயர் பழுதுபார்க்கும் வரலாறுகளை நமக்கு நினைவூட்டுகிறது.. என்னதான் நிகழ்கால அரசியலை யதார்த்த உண்மைகளை பேசியிருந்தாலும் குறிப்பிட்ட கட்சியை சத்தமாகவும், சார்ந்த கட்சியை சாதுர்யமாகவும் ஆசிரியர் விமர்சித்து இருப்பதாகவே தோன்றுகிறது.. “ஒரு கூட்டம் குழுவாகவும், ஒருவர் தனியாகவும் திருடியதுதான் இரு பெரும் கட்சிகளின் சாதனையேயன்றி    வேறு வித்தியாசம் இல்லை.. ஆக மாங்காயோ , தாமரையோ , இலையோ, சூரியனோ மக்கள் பாடு என்றும் திண்டாட்டம்தான்.. அத்திண்டாட்டத்தை சமூக வாழ்வியல் அரசியலோடு, சமூக அழுக்குகளோடு எடுத்துரைத்த இமையத்தின்எழுத்துக்கள் என்றும் வாழ்க வாழ்க…
எழுத்தாளர் இமையத்தின் கட்டுரை ...
வாழ்க வாழ்க
இமையம்
முதல்பதிப்பு : ஜீன் 2020
க்ரியா பதிப்பகம்
விலை : 125
சுபாஷ் 
இந்திய மாணவர் சங்கம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *