கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய “வேர்களின் உயிர்” கவிதை நூல் வாசிப்பு அனுபவம்.

இந்த நூலைப் பொருத்தவரை, இது அவரின் வாழ்வியல் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வியல், மனிதர்களின் அடிப்படை தேவை உணவு, அதை இந்த இயற்கை நமக்கு கொடையாக கொடுத்திருக்கிறது. ஆயினும் அதனை விளைவிக்க தன் வாழ்நாளெல்லாம் வியர்வை சிந்துகிறவன் விவசாயி. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றாலும் அதனை கண்டு கொள்ளாத அரசியல் அமைப்புகளும், பொதுமக்களும், விவசாயத்தின் மீது நம்பிக்கையே இல்லாத விவசாயிகளும், காலம் தாழ்த்தி பெய்யும் மழையும் ,விலை பொருள்களுக்கான சரியான விலையை நிர்ணயிக்கத் தவறும் பேராசை மனங்களும், இடைத்தரகர்களும், இன்னும் இன்னும் விவசாயிகளின் முதுகெலும்பின் மேல் ஈட்டியை பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்..

வறண்ட நிலத்தின் மீது அவரின் கண்ணீர் துளிகள் விழுகிறது. இந்த தொகுப்பில் பல இடங்களில் அந்த ஈரத்தின் உப்பு கரிக்கிறது. இயலாமையின் கரங்களில் கதறிக் கொண்டிருக்கும் விவசாயின் புலம்பல் எல்லோர் மீதும் படிகிறது. எப்படி நியாயப்படுத்துவதென எல்லோரிடமும் கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறார்.. மனதில் ஈரம் உள்ள அத்தனை பேரையும் இந்த நூல் சற்று உலுக்கும்.

“மரபணு விதைகளால்
விளைந்த அத்தனையிலும் அடிபட்டுச் சாகிறது
ஆண்மையும் பெண்மையும்”

என்ற வரிகளில் மரபணு விதைகளை குறித்தும் அதை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய தீமை குறித்தும் பேசுகிறார், ஆண் பெண் மலட்டுத்தன்மைக்கு மரபணு விதைகள் ஒரு காரணி என அறிந்தும், இன்று லாப நோக்கத்தை மட்டுமே கணக்கில் கொண்டு போட்டி போடும் உலகில் உயிர்களின் மீதான அக்கறையை இந்த வரிகளில் கடத்துகிறார். விவசாயம் என்பது தொழில் அல்ல அது ஒரு சேவை. உயிர்களை காக்கும் கடவுளுக்கு ஒப்பாய் கருதும் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வரிகள் சாட்சி .

“எங்காவது ஓரிடத்தில்
சுவைத்த கனிகளின் விதைகளையாவது வீசியிருந்தால் உயிர்கள் எதுவும் பசிக்காக கையேந்தி இருக்காது” என்கிறார்

எல்லா உயிருக்குமான பசியை போக்கக்கூடிய விவசாய மனம் இதுதான்..

“மழை என்ன கடனா
வாங்கியிருக்கிறது
தவணை முறையில்
தூறியே அழிக்கிறது
பயிரையும்”

இது மழை மீதான வருத்தம் மட்டுமல்ல கடன் தவணை மீதான வருத்தமும் கூட. கடன் மெல்ல மெல்ல உயிரை அழிக்கும். பயிரை மழை அழிப்பது போல..

“வேலியோர கள்ளிச்செடிகளில் பழுத்துச் சிவந்த பழங்கள் பசியிலிருந்த பிள்ளைகளின் உதடுகளில் சாயமாய் ஒட்டி வறுமையின் நிறத்தையே காட்டியது”.

வறுமையை இதைவிட வேறு எப்படி ஒரு விவசாயி மொழிபெயர்க்க முடியும்?

“நிவாரணங்களைப் பெற விண்ணப்பித்தவைகள் இன்னும் இழுபறியிலேயே கிடப்பது, அதிகார அழுத்தத்தினால் கூன் விழுந்த முதுகுகளில் சவாரி செய்தவர்களாலோ”

இந்த வரிகள் அதிகாரிகளின் சாயங்களை வெளுக்கிறது. நிவாரணங்களெனும் மேல் பூச்சு விவாசாயிகளுக்கு ஏற்படுத்தும் ஒவ்வாமையை இன்னும் பல கவிதைகளில் இந்தத் தொகுப்பில் சாடுகிறார்..

“காலம் சூரையாடிய
உழைப்பினைப் பறிகொடுத்த பின்பும்
பின்வாங்காமல்
ஏர்க்கலப்பையோடு போகும் மாடாகவே முன்னோக்கிப் போகிறது மனசும்”

எத்தனை கடினங்களுக்கு பின்பும், வாழ்வின் சவால்களுக்கு பின்பும் ,குடும்ப வறுமைக்கு பின்பும் ,விவசாயின் மனம் ,அந்த மண் மீதும், அந்த பயிர்கள் மீதும், உலக உயிர்கள் மீதும் தான் பற்றோடு இருக்கிறது.

“ஓய்ந்த புயலுக்குப் பின்பும் வானையே வெறுத்துப் பார்க்கும் கண்கள் விழுந்திடும் உணவு பொட்டலம்”

என்ற வரிகளில் பெரும் இயற்கைச் சீரழிவுகளுக்கு பின்பும் ,உணவின் தேவை குறித்தும். அதற்காக மக்கள் பட்ட வேதனையை குறித்தும். சமகால பதிவினை இந்த நூலில் பதிந்திருக்கிறார்.

” அழுக்கு வேட்டிகளை அலட்சியப்படுத்தும் அதிகாரங்கள் “என்கிறபோது ஆமென்றே தலையசைக்க வேண்டி இருக்கிறது.

” எந்த மண்ணிலும் ஈரம் இல்லை என்னிடம் இருக்கும் கைப்பிடி அளவு விதைகளை ,கடைசி விதைகளை எங்கு விதைப்பது” என்கிறார்.

இப்படி இந்த நூல் முழுக்க விவசாயிகளின் துயரங்களை, சமகாலத்திய அரசியலை, அதிகாரங்களின் கோர பிடிகளை ,மிக வெள்ளந்தியாக எந்த சொற்பூச்சும் அற்று, இப்படித்தான் எங்கள் வாழ்வென உறுதியாக பல கவிதைகளில் பட்டியலிடுகிறார் .

எங்கிருந்த போதும், எத்தனை உயர்வான பதவியிலிருந்த போதும், உணவு என்பது மிக மிக அத்தியாவசியமானது .

இன்றைய நவீன காலகட்டத்தில் கார்ப்பரேட்கள் வசம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு மிகச் சொற்ப வருமானத்திற்கு இரவையும் பகலையும் கூட உழைப்புக்கு ஒதுக்கிக் கொண்டிருக்கிறோம் .

உண்மையில் விவசாயம் என்பது மிக முக்கிய தொழில். ஒரு விதையில் பல உயிர்களின் பசியாற்றக்கூடிய விவசாயத்தை, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கமும் சரி, பொதுமக்களும் சரி கைவிட்டு விட்டோம்.

நிர்வாணமாய் நின்று அவர்களை போராட விட்டோம் .பதியப்பட்ட அவலங்களைக் கடந்து ,பதியப்படாத எண்ணற்ற அவலங்கள் விவசாயிகள் வாழ்வில் தினம் தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு உயிருக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவனின் வாழ்வில் எந்த ஏற்றமும் இன்றி இது நாள் வரை விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இந்தத் தொகுப்பிலுள்ள சொற்களில் இருக்கும் வலி அத்தனை ஆழமானது, அழுத்தமானது.

விவசாய பின்னணி பெரிதாக எனக்கு இல்லாத போதும் என்னை வருத்திய இந்தத் தொகுப்பை ,உங்கள் முன் வைக்கிறேன் .வாசித்து விட்டு உங்களின் அழுத்தங்களை பதியுங்கள்.

வறண்ட நிலங்களைப் போல வறண்ட மனங்களால் இந்தத் தொகுப்பு கண்டு கொள்ளப்படாமல் போய் விடக்கூடாது. ஒரு விவசாயின் கண்ணீரை சற்று ஒத்தி எடுக்கட்டும் உங்களுடைய சொற்கள்.

நூல் : வேர்களின் உயிர்
ஆசிரியர் : கோவை ஆனந்தன்,
பதிப்பகம் : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பக்கம் : 112
விலை : 150
தொடர்புக்கு : 9003677002.

முகில் நிலா தமிழ்

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *