உரைச் சித்திரக் கவிதை 22: அக்கரைச் சீமை ஒருவனின் தனிமை – ஆசுஅக்கரையை பார்க்க அழகாக தானிருக்கிறது. அதுவும் பச்சைப்
பசேல் என்று செழிப்பாக. மலையும் மேகமும் தவழ, அற்புதக் காட்சியாக.

இக்கரையில் நான்.செழிப்பற்றும்
வனப்பற்றுமுள்ள இக்கரையில் வாழ்ந்ததை திரும்பிப் பார்க்கையில், அக்கரை மிகவும் மேன்மையாக தெரிகிறது.வாழ்வின் சவால்கள் கனத்து
காயம்படும்போதெல்லாம், எதிர்கொள்ளும் சக்தியற்றது என்று இக்கரை சோர்வடைய வைக்கிறது.
இக்கரையில் எல்லாமும் இருக்கின்றன.
இருந்தும் நான் ஏன்? தனியனாக இருக்கிறேன் என்பதே மனதின் வெறுமை.

அக்கரையில், அழகான கோயில்
ஒன்று தென்படுகிறது. மணியோசைகள் கேட்கின்றன.குயில்கள்,
கானப்பறவைகள் பாடுகின்றன.
ஆனால், அக்கரையில் உள்ளதெல்லாம்
இக்கரையில், அவற்றை விடவும்
சிறப்பாக இருக்கின்றன. இவற்றை ஏற்க
மனம் கொள்ளவில்லை.

அக்கரையில் ஒருவன் தனித்து நிற்கிறான். இக்கரையில் அவன்
அநுபிவித்து, ஒன்றுமில்லாத போல
வெறுமைகொண்டு, அக்கரையே
செழிப்பென்று புலம்புகிறான்.

அக்கரையின் தனியன் ஏன்? தன்னை
இழந்து புலம்ப வேண்டும். அங்கு தனித்து புலம்புவர்கள் எல்லாம் ,
தனக்கான வளமை இழப்பாக துயருகிறார்கள். ஒன்றில் பிறிதொன்றை சுமத்தி, இந்த வாழ்க்கை ஏன்? அவலத்திற்குரியதாக ஆக்க வேண்டும்.

அக்கரை இக்கரையென வேற்றுமை எதுவுமில்லை. இக்கரையில் உள்ளதே
அக்கரையும். நெடுந்தொலைவு பார்வை
துளைத்து வசீகரம் கொள்கிறது. அருகில்
உள்ளவை எல்லாம் சீந்துவாரின்றி, கீழ்மையாக எண்ணப்படுகின்றன.

அக்கரையில் உள்ளவனின் மனசு வேகுவதும், இக்கரையின் நிழலை அவன் வெறுப்பினூடாக அணுகியதாக
இருக்கலாம்.

கரைகள் தகர்க்கையில், சமனற்று நீளும்
மனமும், ஒரு வெளியாக கலந்து கரையும்.

#ஆசு