ஒவ்வொருவரும் பெருங்கூட்டத்தில் ஒருவராக இருக்கின்றனர்.
தனித்து தான் மட்டுமே என்று புலம்புவதில்லை. ஒவ்வொருவரும் தனித்து இயங்குதல், பெருங்கூட்டத்தின் தனித்துவம்.
எதிரே மிகப்பெரிய ஆளுமைகள் நிறைந்த மேடையில் வீற்றிருப்பவர்கள்
எல்லோரும், தனக்கு எதிரேயுள்ள பார்வையாளர்கள், தனித்த இருக்கையில் தனித்த ஆளுமையோடு தான் இருக்கிறார்கள். ஆனால் மேடை உரைகள் அவர்களின் குரலில் கலந்தாலும், தனித்துவமாய் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர் அவரவர் குரலில்.
பெருங்கூட்டம் காடுகளின் பச்சையம்.
காய் கனிகளின் அற்புத சுவை. விண் மேவுமோர் அகன்ற வெளிச்சம்.மனம்
சிறகடிக்கும் காற்றின் மெல்லிதயம்.
ஆனால், பெருங்கூட்டத்தின் நிழலில் அவனும் ஒரு நிழல், இந்த நிழல் அவனுக்கான நேசத்தை உருவாக்கி
எல்லோர்க்குமான நிழலாக உருமாறுகிறது.
வீதியெல்லாம் நகரும் ஊர்வலத்தில்,
கோரிக்கை முழக்கம் விண்ணைப் பிளந்தாலும், எழுப்பப்பட்ட கோரிக்கைகள் பதராக, பூமியில் முளைத்து எழவே இல்லை என்பது ஆகப்பெரிய துயரமானாலும் –
இந்த துயரம் நிறைந்த வீதியில், என்றேனும் முளைப்பதற்காய் ஒரு விதை இருக்கையில், இந்த பெருங்கூட்டத்தின்
கோரிக்கைகள் நிமிர்ந்து எழும் எனும் நம்பிக்கையில், நெஞ்சு நிமிர்ந்து நிற்கிறான் பெருங் கூட்டத்தில் ஒருவன்.
ஆசு