உரைச் சித்திரத் தொடர் 7: எழுதத் தோன்றிய தருணம் – கவிஞர் ஆசுஎதை எழுதுவது, ஒன்றும் புலப்படவில்லை. கைகள் எழுதுகோல் எடுக்கையில் மூளை யோசிக்கிறது. இதயம் நடுங்குகிறது. உட்கார்ந்திருக்கும்
சாய்வு நாற்காலி கால் ஒன்று பிசகி தாங்க முடியாமல் தவிக்கிறது.

தெருவிலே பெண்மணி ஒருத்தி, கையிலே மந்திரக்கோல் வைத்துக் கொண்டு “குறிச்சொல்லுவன், நடந்தது நடக்கப் போவது எல்லாவற்றையும் சொல்லட்டுமா” என்று குரல் கொடுத்து
படலைத் திறந்து வருகிறாள் அருகினிலே உட்காருகிறாள்.

தாள்கள் படபடக்கின்றன.
எழுதுகோல் குறிச்சொல்கிறவளை பார்த்து நிமிர்கிறது.

“நல்லாச் சொல்வன் சாமீயோய்” என்கிறாள். கச்சிதமான மேல் கச்சு, கண்டாங்கி, கூந்தலை அள்ளிச் சொருகியிருக்கிறாள். நேர்வகிடிலும்,
நெற்றியிலும் குங்குமப் பொட்டுத் துலங்குகிறது. அவளை பார்த்தால்
மைக்குறத்தி மாதிரி இருக்கிறாள்.

“சொல்லாத சேதி ஒன்னு
சொல்லப் போறன் சாமீ
சொல் விளங்குது
சோதி ஒளிருது
காலம் கனியுது
கண்ணீர் தொலையிது சாமீ”

மைக்குறத்தி மந்திரக்கோலை உள்ளங்கை ரேகையில் தட்டி குறிச் சொல்லிப் பாடுகிறாள். அவள் பாட்டிலே கவிதை தெறிக்கிறது.அவள் சொல்வது
பலிக்க வேண்டும்.

தன்னை மறந்து, எழுதுகோல் தாளில்
எழுதுகிறது.

“காலம் கனியுது
கண்ணீர் தொலையிது சாமீ”

கண்களாக ஈரமாக அவளை பார்த்தேன்
அவள் எப்போதே சென்றுவிட்டிருந்தாள்.

“சாமீயோய்”
அவள் குரல் காற்றில் கரைந்து
காதில் ஒலிக்கிறது.

ஆசு