We always had the hope that justice would be established - JNU Student Activist Devangana Kalita The Hindu Interview in Tamil Translation

நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதுமே இருந்தது: தேவங்கனா கலிதா



[“நாங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையிலிருந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், இறுதியில் நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரும், பிஞ்சா டோட் செயற்பாட்டாளருமான தேவங்கனா கலிதா ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளார். வடகிழக்கு தில்லியில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட ஜேஎன்யு மாணவர்களின் முன்னணி ஊழியர்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிடும் தில்லிக் காவல்துறை, கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. சுமார் ஓராண்டு காலம் சிறையிலிருந்த அவர்களை இப்போது தில்லி உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: நீங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கும் மேலாகிறது. கடைசியாக இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக எப்படி உங்கள் உணர்வுகள் இருக்கின்றன?

தேவங்கனா கலிதா: இவ்வாறு நாங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது நிச்சயமாக ஒரு பெரிய நிவாரணமாகும். நடாஷாவிற்கும் எனக்கும் மட்டுமல்ல, கடந்த ஓராண்டு காலமாக எங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இது ஒரு நிவாரணமாகும். இதேபோன்று எண்ணற்ற நண்பர்கள் பலர் இன்னமும் சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்த குற்றம் என்ன என்று எதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் எந்தக் குற்றத்தையுமே அவர்கள் செய்திடவில்லை. எங்கள் நண்பர் குல்ஃபி ஷா போன்று எண்ணற்றவர்கள் இதே கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்துவரும் வரையில், நாங்கள் பிணையில் வந்திருந்தாலும்கூட எங்களால் முழுமையாக விடுதலை பெற்றுவிட்டோம் என்ற உணர்வைப் பெறமுடியவில்லை.

கேள்வி: தில்லி உயர்நீதிமன்றம் உங்களை பிணையில் விட ஆணை பிறப்பித்தபின்பு, நீங்கள் வெளிவருவதற்கு சுமார் 36 மணி நேரம் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் உங்கள் மனவோட்டம் எப்படியெல்லாம் இருந்தன?

தேவங்கனா கலிதா: அந்த 36 மணி நேரமும் மிகவும் பதற்றமாகத்தான் இருந்தது. ஆனாலும், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், பிணையில் வெளியே வருவது என்பத அவ்வளவு எளிதாக இருக்காது என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் தான்தோன்றித்தனமாகவும் தெளிவற்றும் இருக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் இடித்து உரைத்துவிட்டு எங்களுக்கு பிணையில் செல்வதற்கு உத்தரவு பிறப்பித்திருந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். எனினும், அடுத்த நாள், தில்லிக் காவல்துறை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததைக் கேள்விப்பட்டோம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் எளிதாகப் பிணை உத்தரவு பெற முடியாது என்பதை நன்கறிந்திருந்த நாங்கள் நீண்ட கால சிறைவாசத்திற்கும் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திய நிலையிலேயே இருந்தோம். ஆனாலும் திடீரென்று நாங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதால், எங்களுடன் சிறையில் இருந்துவரும் இதர சக நண்பர்களுக்கு முறையாக பிரியாவிடை கொடுக்க முடியவில்லை.



கேள்வி: சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் உங்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையிலிருந்தீர்கள். கடந்த ஓராண்டுகாலமாக எவருடைய உதவியும் கிடைக்காது கையறு நிலையிலிருந்ததைப்போன்று உணர்வுகள் ஏற்பட்டிருந்ததா?

தேவங்கனா கலிதா: ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும், அடித்தட்டு சமூகத்திலிருந்து வரும் மக்களையும் நீண்ட காலத்திற்குப் பிணையில் வரமுடியாத அளவிற்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் எப்படியெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று வரலாற்றுரீதியாக ஒருவர் பார்க்க வேண்டும். இந்தச் சட்டங்களின் மீது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இச்சட்டங்களின் மூலமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளே ஒருவிதமான தண்டனையாகும். கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக சிறைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமே ஒருவரின் சுகாதாரம் மீது கவனத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் நிச்சயமற்ற கணங்கள் ஏராளமாகவே இருந்தன. எனினும், கிளர்ச்சியாளர்களின் குரல்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருந்ததன் விளைவாக நீதிமன்றத்தின் மூலமாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீதி கிடைத்திடும் என்ற நம்பிக்கை எப்போதுமே எங்களிடம் இருந்தது.

கேள்வி: திகார் சிறையில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது, அது உங்களிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

தேவங்கனா கலிதா: சிறை என்பது மனிதாபிமானமற்ற நடைமுறைகளின்மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றேயாகும். சிறை அதிகாரிகள் அங்கே சிறைப்படத்தப்பட்டிருப்போரின் உயிர் மற்றும் அவர்களுடைய இயக்கத்தின் மீது முழு அதிகாரம் செலுத்துவார்கள். சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளை மறுத்திட தங்கள் அதிகாரங்களைத் அடாவடித்தனமாகப் பிரயோகிப்பார்கள். இத்துடன் அங்கேயிருந்திடும் கட்டமைப்பு வசதிகளின்மையும் சேர்ந்துகொள்கின்றன. இந்த நிலைமைகள் எல்லாம் என்னிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தின என்று முழுமையாக என்னால் விவரிக்கமுடியாது போகலாம். எனினும், நான் அங்கே பார்த்த விஷயங்கள் பலவற்றை என்னால் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.

நாங்கள் சிறைக்குள் சென்றவுடனேயே எங்களால் உணரப்பட்ட முதல் விஷயம், சிறைகள் நம் சமூகத்தில் மிகவும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள சமூகத்தாரால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன என்பதாகும். இவர்களில் அநேகம்பேர் தொழிலாளர் வர்க்கம், தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மக்களாகும். ஆட்சியாளர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்கள்மீது ஏவப்படும் தாக்குதல்கள் சிறைக்குள் மேலும் உக்கிரத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. சிறைக்குள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக வெளியில் பெரிய அளவிற்குத் தெரிவதில்லை. இதனால் இவற்றுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் அநேகமாக வெளியில் மேற்கொள்ளப்படுவதில்லை. இவற்றை நீதித்துறையின் வளையத்திற்குள் கொண்டுவந்து நீதி கிடைத்திட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுமில்லை.



கேள்வி: உங்களைப் போன்றே பல அறிஞர் பெருமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் உங்கள் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போலவே சுமத்தப்பட்டு சிறைகளில் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பாக உங்கள் கருத்துக்கள் என்ன? அவர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை எங்ஙனம் இருந்திடும் என எண்ணுகிறீர்கள்?

தேவங்கனா கலிதா: இது மிகவும் கொடூரமான எதார்த்த நிலையாகும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும் என்றும், எல்லோரும் சமமாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்றும், எல்லோரையும் அனைத்துவிதமான அடக்குமுறையிலிருந்தும் விடுவித்திட வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருந்தவர்களையும், குறிப்பாக நாட்டின் விளிம்புநிலை மக்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் தேச விரோதிகள் என முத்திரை குத்தி, சிறைகளில் அடைத்திருக்கிறார்கள். இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மீதும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிப்பது பனிமலையின் ஒரு துளியாக (just tip of the ice berg) இருக்கக்கூடிய அதே சமயத்தில், சிறைகளில் விசாரணைக் கைதிகள் எண்ணற்றவர்கள் நாட்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் விதிகளையும் மீறி சட்டவிரோதமான முறையில் பல ஆண்டுகாலம் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி: அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

தேவங்கனா கலிதா: இது தொடர்பாக உடனடியாக எதுவும் என்னால் கூற முடியாது என்ற போதிலும், எதிர்காலத்தில் நாட்டில் சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என நம்புகிறோம். உடனடியாக நான் என் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சில காலம் செலவழிக்க இருக்கிறேன். அத்துடன் என் எம்.பில். படிப்பை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

(நன்றி: தி இந்து, 21.06.2021)

தமிழில்: ச. வீரமணி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *