எதிர்வரும் காலங்களில் தண்ணீருக்காக தான் உலக நாடுகளுக்கு இடையே, பல்வேறு இன குழுக்களுக்கு இடையே, நம்ம நாட்டை பொறுத்தவரை மாநிலங்களுக்கு இடையே மிகபெரிய போர்களும், வன்முறை கலவரங்களும் (காவேரி நதி நீர், முல்லை பெரியாறு அணை நீர்) நிகழப்போகிறது. அதற்கு ஒரு முத்தாய்ப்பு தான், தற்போது இந்தியாவின் மிக முக்கிய நகரமான பெங்களுரு கோடை வெயிலை எதிர்கொள்ளும் முன்பே கடும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அங்கு காசு உள்ளவன், காசு இல்லாதவன் என எந்த பாகுப்பாடுமின்றி அனைவரும் தண்ணீருக்காக அனைவரும் காலியான பாட்டில் மற்றும் குடங்களுடன் நீண்ட நெடிய வரிசையில் காத்திருக்கும் அவலம், செய்தி காணொளிகளிலும் செய்தித்தாளிலும் இப்போது வெளிவருவது, நமது பகுதியில் எப்போது வருமோ என்னும் அச்சத்தோடு பார்த்திருப்போம், வாசித்திருப்போம்.
இம்மாதிரியான குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன? சுத்தமான குடிநீர் வழங்குவது அரசுகளின் பொறுப்பல்லவா? மற்றும் நமது முன்னோர் ஏற்படுத்தி வைத்த குட்டை, குளம், ஏரி, ஆறு, நதி உள்ளிட்டவற்றை இயற்கையான முறையில் மேலாண்மை செய்வதன் அவசியத்தை பிரச்சாரம் செய்யும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக (World Water Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களிடையே செய்திகளை, சமூக பொறுப்புடன் கூடிய கருத்துக்களை எடுத்து செல்லும் மிக சக்திவாய்ந்த ஊடகமான திரைத்துறையில் தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படங்கள் குறித்து பார்ப்போம்.
தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர் – தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசியல் நாடகக் கதை. கோமல் சுவாமிநாதன் எழுதிய இந்த நாடக கதையை அதன் சாராம்சம், கருப்பொருள் சிதையாமல் 1981 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அதே பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது தண்ணீர் தண்ணீர். எஸ்.லோக்நாத் ஒளிப்பதிவில் அழகாக காட்சிப்படுத்தப்பட்ட இத்திரைப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருக்கிறார். நடிகை சரிதா முக்கிய வேடத்தில் நடித்த இத்திரைப்படம் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. மேலும் இது சினிமாவின் மீது மோகம் கொண்டுள்ள பலருக்கும், இயக்குனராகும் ஆசையில் உள்ள சிலருக்கும் மிக உன்னதமான திரைப்படமாக இத்திரைப்படம் கருதப்படுகிறது. மதுரை அருகே உள்ள அத்திப்பட்டி என்னும் கிராமம் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தில் வசித்த மக்கள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர பல்வேறு கட்ட முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொண்டு அம்மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு.
கானா கண்டேன்
ஒளிப்பதிவாளராக இருந்து வெற்றி பெற்று இயக்குனரான சிலரில் மிக முக்கியமானவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் ஏதாவது ஒரு அரசியல் மக்கள் பிரச்சனைகளை, கார்ப்பரேட்டுகளின் லாப வெறிகளை எடுத்துரைக்கும் விதமாக இருக்கும் அவரது முதல் திரைப்படம் தான் கனா கண்டேன். நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் வேதியியல் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் தனது ஆய்வு கண்டுபிடிப்பின் மூலம் கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையை துவங்க உதவி கேட்டு அரசு அலுவலகங்களையும், அரசியல்வாதிகளையும் அணுகி தொற்றுப்போய் இறுதியில் ஓர் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் நபரிடம் சிக்கி எப்படி மீண்டு வந்தாரா, வெற்றி பெற்றாரா? என்பது தான் கதை. இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும் இப்படத்தில் ஸ்ரீகாந்த் உடன் பிரித்விராஜ், கோபிகா, விவேக் ஆகியோர் நடிக்க சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கத்தி
ஆண்டாண்டு காலமாக மக்களுக்கு எளிமையாக கிடைத்து வந்த தண்ணீரை வியாபாரம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட்டின் கொடூர கோர முகத்தையும், அதில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அசுர அரசியல், அப்பாவி ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது போல் நடித்து அவர்களது விவசாயத்தின் ஆதாரமான நிலங்களை பிடுங்குவது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அல்லது விவசாயத்தை விட்டுவிட்டு வேறு ஏதேனும் பிழைப்பு தேடி வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக, அத்து கூலிகளாக குடும்பங்களை விட்டு பிரிந்து சென்று சந்தித்து வரும் இன்னல்களையும், பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கடனாக பெற்றுக் கொண்டு நாட்டை விட்டும் ஓடும் தொழிலதிபர்களை அரசும், வங்கிகளும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது, அதோடு பிண்ணிப்பிணைந்த இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களின் கொடூர கோர முகங்கள் உள்ளிட்டவற்றை கமர்சியல் ஹீரோவான விஜய்யை வைத்து பேச வைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் ஹீரோக்காக சில மிகப்படுத்தப்பட்ட வசனங்களும் காட்சிகளும் கமர்சியல் தன்மையில் அமைக்கப்பட்டிருந்தாலும், அப்படம் பேசிய அரசியல் இந்தியாவில் தமிழகத்தில் மிக முக்கியமான ஒன்று. அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஒரு கமர்சியல் தன்மையோடு இருந்தாலும் கூட இன்றைய இளைஞர்களுக்கு பிடித்து போனது.
அறம்
ஆற்று நீர் பாசனம், குளத்து நீர் பாசனம், கிணற்று நீர் பாசனம், வாய்க்கால் நீர் பாசனம் பொய்த்து போய் விவசாயம் இன்று நிலத்தடி நீரை நம்பி தமிழகத்தில் உள்ள பல வட மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆழ்துளை கிணற்று நீர் விவசாயம். அத்தகைய ஓர் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருக்க அதில் சிக்கி தவிக்கும் குழந்தையை மீட்கும் ஒரு துணிச்சல் மிக்க மாவட்ட ஆட்சியர் கதை தான் அறம். நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி நாயனார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. இத்திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பராமரிப்பின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் மூடப்படாமல் இருக்கிற ஆள்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்படவும், புதிய கிணறுகள் தோண்ட அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் உள்ளிட்ட நிலையை உருவாக்கியது. இதில் குறிப்பிட்ட நிகழ்வு போல், திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் சுஜித் என்ற இளம் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
கேணி
1956 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து கேரள மாநிலம் உருவானபோது நிகழ்வது போல் எடுக்கப்பட்ட கதைதான் கேணி. கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள ஒரு நகரத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளான குளம், ஏரி உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் தவிக்கும் அந்நகரத்தின் இரு மொழி பேசக்கூடிய மக்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு மற்றும் மோதலை மையமாக வைத்து நகர்கிற திரைக்கதை இது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான திரைப்படம். மேலும் இது தமிழில் கேணி எனவும், மலையாளத்தில் கினார் எனவும் பெயரிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு இயக்குனர் எம்.எ. நிஷாத் இயக்கத்தில் வெளியான இத்திரைபடத்தில் ஜெயப்பிரதா ரேவதி, அர்ச்சனா, அனுஹாசன், பார்த்திபன், பார்வதி நம்பியார், நாசர், பசுபதி என பலர் நடித்துள்ளனர்.
பூமராங்
இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விவசாயம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்போது பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் இத்திரைப்படம் சிக்கலை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் சொல்லி வந்திருக்கிறது. கால்பந்து விளையாட்டு வீரராக வரும் சிவா தீ விபத்தில் சிக்கியாதால், முகம் எரிந்து விட முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் புதிய முகம் பெறுகிறார். அந்த புதிய முகத்தால் அவருக்கு பல்வேறு சிக்கல்கள், உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. தன்னை கொல்ல துரத்தும் கும்பலிடம் நான் அவன் இல்லை என சொல்லி பின் அதற்கான காரணத்தை அறிந்து அதனை சரி செய்யும் கதை தான் இத்திரைப்படம். இதில் மேகா ஆகாஷ், இந்துஜா ரவிச்சந்திரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் மகேந்திரன் முன்னிட்டு பலர் நடித்துள்ளனர்.
சர்தார்
தண்ணீர் மாபியாக்களின் லாப வேட்கை, “ஒரே நாடு, ஒரே குழாய்” மற்றும் தண்ணீர் தனியார்மயபடுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் தெளிவாக விளக்கும் உளவாளி கதை தான் சர்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ஜாலியான போலீஸ் இன்ஸ்பெக்டர், சீரியசான உளவாணி என இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார் கார்த்திக். இன்றைய இணையதளத்தின் மூலம் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து “இரும்புத்திரை” மற்றும் இளம் அறிவியல் கண்டுபிடிப்புகளை முடக்கி அவர்களை கொல்ல துடிக்கும் “ஹீரோ” படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தான் இத்திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பாட்டில் தண்ணீரை சுத்திகரிக்கப்படாத முறையில் தொடர்ந்து குழந்தைகள் குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இத்திரைக்கதை பேசி இருக்கிறது. மேலும் இப்படம் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் மற்றும் பொலிவியா நாட்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் குறித்த வரலாற்றைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, எச்சரிக்கையும் செய்கிறது.
குறிப்பாக இப்போது கோவை குடிநீர் விநியோகம் தனியார் மையமாக்கப்பட்டு விட்டது. குடிநீர் விநியோக உரிமை பிரான்சு நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகத்தால் சுமார் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு தரை வார்க்கப்பட்டுள்ளது. சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டது. சூயஸ் நிறுவனம் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்க இயலாது என்று தனது முகநூலில் கருத்து தெரிவித்திருந்ததாக கோவையைச் சேர்ந்த ஒருவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஆனால் இதுநாள் வரை சூயஸ் நிறுவனமோ, மாநகராட்சியோ 24 மணிநேரமும் எந்த அடிப்படையில் குடிநீர் வழங்கும். நாள் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு குடிநீர் வழங்கும். அதற்கான நீர் ஆதாரம் இருக்கிறதா? அதற்கான கட்டணம் என்ன? என்பது குறித்து தெளிவாக கூறவில்லை. மேலும் 24 மணிநேரமும் தண்ணீர் கொடுப்பதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லாத நிலையில் தொடர்ந்து சூயஸ் நிறுவனம் மக்களிடம் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக காவல் துறை சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக கேள்வி எழுப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்ற செய்தி கூட தீக்கதிர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விலை போகாத நாளிதழ்களில் மட்டுமே வெளியான நிலை என்று தான் மாறுமோ?.
எழுதியவர்
சுரேஷ் இசக்கிபாண்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.