வில் ஸ்மித் (Will Smith) கிங் ரிச்சர்ட் (King Richard) - Venus Williams and Serena Williams

 

டென்னிஸ் வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்சின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் தன் மகள்களை எவ்வாறு பயிற்றுவித்தார், என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தனர் என்பதை விறுவிறுப்பாக சித்தரிக்கும் அமெரிக்க திரைப்படம். 2021இல் வெளிவந்து தற்போது ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

கலிஃபோர்னியா மாநிலத்தில் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்கள் அதிகம் வாழும் காம்ப்ட்டன் எனும் பகுதியில் கறுப்பு இனத்தை சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்ஸ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பகலில் தன் பதின்பருவ மகள்களுக்கு டென்னிஸ் பயிற்றுவிக்கிறார். இரவில் காவலாளி பணி செய்கிறார். தாய் ஆர்சீன் பிரைஸ் தாதியாகப் பணி புரிகிறார். இரன்டு மகள்களையும் உலக முன்னணி வீராங்கனைகளாக கொண்டுவர வேண்டும் என்பதில் ரிச்சார்ட் மிகுந்த முனைப்பு கொண்டுள்ளார். அவர்களிடம் அதற்கான திறமை இருப்பதில் நம்பிக்கை கொள்கிறார். முதலில் வீனஸ் வில்லியம்சுக்கு அதிக கவனம் கொடுக்கிறார். அந்தப் பகுதியிலுள்ள இளைஞர்கள் இந்த சிறுமிகளை கிண்டல் செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ரிச்சார்டை அடித்து காயப்படுத்துகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாது மகள்களை பயிற்றுவிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.

பிரபல பயிற்றுவிப்பவர்களிடம் வாதாடி வீனசை அவர்களிடம் பயிற்சி எடுக்க வைக்கிறார். அவர்கள் ஜூனியர் போட்டிகளில் வீனஸ் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை ரிச்சர்ட் மறுக்கிறார். பயிற்சியாளர்கள் என்னென்ன குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள் என்பதை அறிந்து மகள்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; சிறந்த ஆட்டம் கைவரப் பெற்ற பின்னே பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார். இதில் அவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருகிறது. ரிச்சார்டே எல்லா முடிவுகளையும் எடுப்பதாக பிரஸ் குற்றம் சாட்டுகிறார். வீனஸும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். இறுதியாக மிகவும் இள வயதிலேயே தன்னை விட மிகவும் சீனியரும் உலக முதல் நிலை ஆட்டக்காரருமான சான்செஸ் விக்காரியோவுடன் மோதுகிறார். முதல் செட்டை வென்ற பின் இரண்டாவது மூன்றாவது செட்டுகளில் தோற்கிறார். மனமுடைந்து வெளிவரும் அவரை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள்.

படம் முழுக்க ரிச்சார்டின் பாத்திரம்தான் முதன்மையாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த வீனஸும் செரீனாவும் சரியான சித்திரத்தை கொடுத்துள்ளதாக கூறினர். படத்தில் ரிச்சார்ட் மற்றும் அவரது மனைவி தாங்கள் கறுப்பினத்தவர் என்பதால் அனுபவித்த அவமானங்களை பிள்ளைகளிடம் அடிக்கடி கூறி அதிலிருந்து விடுபட்டு அவர்களது திறமையால் உலகே புகழும் இடத்திற்கு போக வேண்டும் என்று கூறும் இடமும் அப்பா வீனசை மட்டுமே கவனிப்பதால் வருத்தமடையும் செரீனாவிடம் ‘அவளை உலகின் முதல் நிலை ஆட்டக்காரியாக ஆக்குவதும் உன்னை உலகிலேயே இதுவரை இல்லாத சிறந்த ஆட்டக்காரியாகவும் ஆக்குவதே எனது இலட்சியம். இதில் முதலாவது அவளையும் பின்னர் உன்னையும் கவனிப்பதே என் திட்டம்’ என்று விளக்கும் இடமும் சிறப்பு. விளம்பரதாரர்களின் வலையில் விழாமல் உடனடி ஆசைக்கு ஆட்படாமல் ரிச்சர்ட் இருக்கிறார். 2 மில்லியன் 3 மில்லியன் வரை ஒரு காலணி நிறுவனம் தர முன்வருவதும் பின்னர் இன்னொரு நிறுவனம் 10, 12 மில்லியன் தருவதும் முதலாளித்துவ வணிக நிறுவனங்களின் விளம்பர தந்திரங்களை காட்டுகின்றன. இந்த செலவெல்லாம் நுகர்வோர் தலையில்தானே வைக்கப்படும்? ஊக்க மருந்து கொடுத்து வீரர்களின் உடல் நலத்தை பாதிக்கும் பயிற்சியாளர்களின் மோசமான முறைகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. ரிச்சார்ட் தன் மகள் மீது செலுத்தும் அதிகாரம், அது அவளது நன்மைக்கே என்றாலும் சரியா என்கிற விவாதம் எழுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையோ வளமையோ எல்லா சூழலிலும் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பது மிகச் சிறப்பாக காட்டப்படுகிறது. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட தன் வரலாற்றுப் படங்களில் சற்று மாறுபட்ட படம்.

ஆஸ்கார் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளது. வெளிவந்த முதல் மூன்று நாட்களில் 7 இலட்சம் வீடுகளில் பார்க்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள் 20 இலட்சம் நபர்கள் கண்டு களித்தனர்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *