J Baby Movie-Urvashi and Attakathi Dinesh ( ஜே.பேபி திரைவிமர்சனம் - ஊர்வசி )

வயதான தாயைத் தொலைத்துவிட்டு இறுதியில் தேடி கண்டடையும் பிள்ளைகளின் நெடுந்தொலைவு பாசப்பயணம்தான் இப்படத்தின் மையக்கதை.

உண்மை சம்பவத்தின் அடைப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திரையாக்கத்தில் உயிருள்ள கதையாக நீள்கிறது.இது ஓர் உயிருள்ள சினிமா.இந்தப் படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் மாரி  அவர்களின் விரல்களுக்கு என் அன்பின் முத்தங்கள்.

பேரன்பு மிக்க பெரிய தாயாக தன் ஆகச்சிறந்த நடிப்பின் மூலம் அவதாரம் எடுத்திருக்கும் ஊர்வசி அவர்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன். சினிமாவின் உயரிய விருதுகளை இப்படத்தின் மூலம் அவர்கள் சூடிமகிழ வேண்டும்.

இந்த நல்ல திரைப்படத்தை பார்க்காமல் இருப்பதே கலைக்கு நாம் செய்யும் பெரிய துரோகம். இன்று நான் விசும்பியும் அழுதும் சிரித்தும் மலைத்தும் வியந்தும் உருகியும் கதறியும் பார்த்த படம்.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் இந்தப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தோடு இந்தப் படம் முடியும்போது இருக்கையிலிருந்து எழ மறுத்து கண்ணீரைத் துடைத்தப்படி அமர்ந்திருந்த பல நூறு முகங்களை இன்று திரையரங்கில் கண்டேன்.

மகளிர் தினத்தில் வெளியாகிறது 'ஜெ பேபி'

சென்னையில் தொலைந்து கல்கத்தாவில் கண்டெடுக்கப்படுகிறாள் ஒரு தாய். மன அழுத்தத்தின் காரணமான மனப்பிறழ்ச்சி அடைந்து ஞாபக மறதியோடு வாழும் எத்தனையோ அம்மாக்கள் குடும்பத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குறியீட்டை கல்கத்தா காளி திருவிழாவில் பல்லாயிரம் பேர்கள் முன்னிலையில் கடலில் வீசப்படும் காளி உருவ பொம்மை சடங்கின் மூலம் இயக்குநர் தொட்டிருக்கும் நுட்பம் நேர்த்தியானது.

வறுமை இருக்கும் இடத்தில் பணம் இல்லாமல் இருக்கலாம் பாசத்திற்கு பஞ்சமில்லை என்பதை ஒவ்வொரு கதாபாத்திரமும் நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

இக்குடும்பக் கதைக்கான கதாபாத்திர தேர்வு மிக மிக கச்சிதமாக செய்யப்பட்டிருக்கிறது. கதையோடு வாழ்கிற ஒவ்வொரு கதாபாத்திரமும் கனகச்சிதம்.

உண்மைக் கதையில் வரும் ராணுவ நண்பர் கதாபாத்திரத்தை படத்திலும் நடிக்கவைத்து (வாழவைத்து) கெளரவம் செய்திருக்கிறது படக்குழு.

இந்த எளிய கதை மிதிவண்டி, பைக், ஆட்டோ, பேருந்து, தொடர் வண்டி, படகு என்று எல்லா வாகனங்களிலும் ஏறி பயணப்பட்டிருக்கிறது.நமக்கும் பயண அனுபவத்தை மிக நெருக்கமாக ஏற்படுத்துகிறது.

சண்டைகாட்சிகள் இல்லை, பாடல் நடனம் இல்லை, நகைச்சுவை டிரேக் இல்லை, நட்சத்திர கதாபாத்திரங்களும் இல்லை.நல்ல கதையும், நல்ல திரைக்கதையும், நல்ல இயக்கமும் இருப்பதால் படம் வென்றிருக்கிறது.

மனநோக்கான முதல் மருந்தே அன்புதான் என்பதை இப்படம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.

 

எழுதியவர் 

போ மணிவண்ணன்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *