Writer Appa (அப்பா) Short Story Mudiyathavaikal (முடியாதவைகள் சிறுகதை) Synopsis Written by Ramachandra Vaidyanath.



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதையில் மாய ஜாலம்  செய்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முடியாதவைகள்

அப்பா

இன்று  கடை அடைப்பு.  வெயிலும் உச்சிக்கு எறிக்கொண்டிருந்தது.  விசிறியை எடுத்துக் கொண்டு வெளித் திண்ணையில் வெறும் மேலோடு பாக்கியநாதன் உட்கார்ந்தார்.  இடுப்பில் வேட்டியும் மடியில் துண்டும் கிடந்தன.  நாற்பது வயதுங்கறது வாழ்க்கைல ஒரு உன்னதமான காலம்.  உயர்வான நிலை.  நிறைவான வாழ்க்கைய அனுபவிக்கிற கட்டம். நாற்பது தாண்டி அம்பது ஆயிட்டா நெலமையே வேற, அந்த நெலமைல எதுவுஞ் செய்றதவிட செய்யாம இருக்கிறதே நல்லது.  

முதுகு நசநசத்தது. விசிறிக் காம்பை திருப்பிப் பிடித்து சொறிந்து கொண்டார். சரியான நமைச்சல். துண்டை முதுகில் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்.  வேப்பங்காற்று சுகமாக வீசியது. முருங்கையும் ஆடியது. சிட்டுக்குருவிக்கும் சிறிதாக கருப்பாக ஒரு குருவி. பெயர் தெரியவில்லை உட்கார்ந்து முருங்கப் பூவை கொத்திக் கொத்திக் கீழே தள்ளிக் கொண்டிருந்தது.

பாக்கியநாதனுக்கு தெருவில் மதிப்பு அதிகம்,  கல்லூரிப் படிப்பு, வேலைக்காக ஊர் ஊராய் அலைந்த அனுபவம், உலகைப் புரிந்து கொண்ட ஞானம்.  இப்படி உருவாகி வேலை எதுவும் கிடைக்காமல் வீடு திரும்பி, மிஞ்சி நின்ற நிலத்தை விற்று கடை வைத்தார். வியாபாரம் பிடித்தது. இவரும் ஊர் சுற்றுவதை நிறுத்தி ஊரில் நிலைத்தார். ஊரும் இவரைப் புரிந்து மதிப்பு வைத்தது.  

இப்போதெல்லாம் எதற்கும் பாக்கியநாதன்தான். நல்லது கெட்டதிற்கு யோசனை கேட்பதிலிருந்து, குடும்பச் சண்டை தெருச்சண்டை வரை வந்தார்கள். நாலு இடங்களுக்குப் போவது நாலு மனிதர்களிடம் பேசுவது என்று ஆகிவிட்டது. நல்ல மாப்பிள்ளை சிக்கினால் சொல்லச் சொல்லி பெண் வைத்திருப்பவர்கள் சொல்வார்கள். உள்ளூர் படிப்பு முடித்து வெளியூர் படிப்பிற்கு யோசனை கேட்பார்கள். படித்தது போதும் என்றோ குடும்பக் கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ ஏதாவது வேலைக்கும் வேறு சொந்த முயற்சிக்கும் வருவார்கள். இவரும் அப்படி நடந்தவர்தான். நடந்து நடந்து பார்த்துச் சலித்தபோதுதான் பக்கத்து வீட்டுப் பாட்டி கேட்டாள்

“ஏண்டாப்பா பாக்கியம் படிச்சியே வேலக்கிப் போகலயா?”

“போகணும் பாட்டி, இன்னும் வேல கெடடைக்கல!”

“வேல கெடைக்கலயா ஏண்டா ? படிச்சதுக்கு வேல போட மாட்டாங்களா?”

“அவங்களாப் போட மாட்டாங்க, நாமதான் வேல தேடணும்.  ரெண்டு வருசமாக அதுக்குத்தான் அலையிறேன்.”

“அலயிறயா, அப்படி என்னாத்தடா படிச்ச?   வேலை கெடைக்கறதாப் பாத்து படிக்காம.”

“எல்லாப் படிப்பும் இப்படித்தான் பாட்டி.  எதப்படிச்சாலும் வேல அதாக் கெடைக்காது.  நாமதான் தேடணும்”.

“என்னடா இது அக்கரமா இருக்கு.   பின்ன எதுக்குப் படிக்கணும்?  நகையவித்து, நாட்டவித்து, கருமாதிப்பட்டு ஒங்க ஆத்தா  ஒன்னைப் படிக்கவச்சது எனக்கில்ல தெரியும்.”

“என்ன செய்றது பாட்டி!”

“என்னா செய்றதா? நகையவித்த பணத்துல ஒரு கட வைக்கலாம். நெலத்த விக்காம இருந்தா பாடுபடலாம். என்ன செய்றதுங்கறியே நல்ல பயடா..”

பாக்கியநாதன் சிரித்துக் கொண்டார்.  அந்தப் பாட்டியை மறக்க முடியாது.  போன வருடம் இறந்து விட்டாள்.  அதுவரையிலும் இப்படி விசாரிக்காமல் இருக்க மாட்டாள்.  இப்போதுள்ள இளைஞர்கள் மாறிவிட்டாலும் அந்த நிலைமைகள் மாறவில்லை. அது அதிகமாகி இருக்கிறது. இவரது அனுபங்களை எல்லாம் சொல்வார்.  கனவு உலகிலிருந்து அவர்களை மீட்டு இந்த உலகுக்கு கொண்டு வருவார். நம்பிக்கையை ஊட்டி புது முயற்சிகளுக்கு யோசனை சொல்வார்.

“ஏங்க, திண்ணைல ஒக்காந்த என்ன செய்றீங்க?”  வீட்டுக்குள்ளே இருந்து மனைவி கலாவதியின் குரல் வந்தது.

“ஏன்? என்ன செய்யணும்?”

“இல்ல, மரத்துல முருங்கக்கா கெடந்துச்சு புடுங்கிக் குடுத்தீங்கன்னா சாம்பாரு வைக்கலாம்னு பாக்றேன். வேற காயுமில்ல.”

எட்டிப் பார்த்தார்.  நாலைந்து காய்கள் தொங்கின.  

“உள்ள தொரட்டிக் கம்பு இருக்கு எடுத்துக் குடு.”

துண்டை திண்ணையில் போட்டுவிட்டு எழுந்து நின்றார். இப்போது ஐந்தாறு காய்களும் ஏழெட்டுப் பிஞ்சுகளும் தெரிந்தன. கலாவதி தொரட்டியை நீட்டினாள்.  

பக்கத்தில் தொங்கிய காயை தொரட்டியில் மாட்டி விசுக்கென்று இழுத்தார். இரண்டு காய்கள் விழுந்தன. அடுத்த இரண்டும் உச்சியில் இருந்தன. எட்டவில்லை.  எக்கி எக்கிப் பார்த்தார். எட்டவில்லை. ஒரு குச்சியை கட்ட வேண்டும்.  வேப்ப மரத்தடியில் ஒரு முழக்குச்சி கிடந்தது. தொரட்டிக் கம்பில் வைத்து சரடு போட்டு கட்டினார். இப்போதும் எட்டவில்லை. பார்ப்பதற்கு ஒரு அடி எட்டாததுபோல்தான் தெரிந்தது. கொஞ்சம் எக்கிப் பார்த்தார். முருங்கைக்காயின் நுனியில் தொடுவது போல் தெரிந்தது. காற்றுக்கு ஆடி அதுவும் ஒதுங்கி விட்டது. இவ்வளவு சிரமப்பட்டு அதை பிடுங்காமல் விடுவதா?

இன்னொரு குச்சியை தேடி எடுத்து இரண்டாவது ஒட்டுப் போட்டார். இப்போது தொரட்டி நேராகவே நிற்கவில்லை. வளைந்து நன்றாகச் சாய்ந்து விட்டது. கையும் ஆட ஆரம்பித்து விட்டது. திண்ணைக்கு  வந்து துண்டை எடுத்து முகத்தை துடைத்தார். மூச்சு வாங்கியது. வெறுப்பாக இருந்தது. அந்தச் சாம்பாரும் கூட்டும் அதன் மணமும் ருசியும் இப்போது மறந்துவிட்டது. இன்னும் ஒரு அடி இருந்தால் போதும். ஆனால் குச்சி கட்ட முடியாது. மரத்தில் லேசாக கொஞ்சம் ஏறினால் விசுக்கென்று பிடுங்கிவிடலாம்.  அடிமரத்தில் காலை வைத்து ஒரு கொப்பை பிடித்து இன்னொரு காலை உயர்த்தினார்.  சடக்கென்ற சத்தம் வந்தது. இந்த நாற்பது வயதில் ஏறினால் அது தாங்குமா?  இவருக்குள்ள மதிப்பிற்கு முருங்கை முறிந்து இவர் கீழே விழுந்தால் எப்படி இருக்கும்?

“டுர். . ர். .  டுர். .  ர் ..” என்று பஸ் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் வந்து சடன்பிரேக் போட்டு நிறுத்தி வண்டியை ரிவர்சில் எடுத்துக் கொண்டிருந்தான். இவனை மரத்தில் ஏற்றிவிட்டால் பிடுங்கி விடுவான். ஆனால் அது தோல்வி போல் ஆகிவிடும். சின்னப் பையனிடம் போய் உதவி கேட்பதா? பையன் ரிவர்சில் போய்க் கொண்டிருந்தான். இவர் மனதும் சலனப்பட்டது. இந்த விஷயத்தில் போய் கௌரவம் பார்ப்பதா?  வயதைப் பொருத்து விசயத்தைப் பொருத்துத்தான் காரியத்தை செய்ய வேண்டும். முடியும் என்று நினைத்துவிட்டால் மட்டும் முடிந்துவிடுமா என்ன? முடியாத காரியமே இல்லையா?

“என்னாங்கடா ஒங்க படிப்பு, வேல கெடைக்காத படிப்பு” என்று பாட்டி கேட்டது நினைவிற்கு வந்தது, அதுவும் முடியாத காரியம்.

யோசித்துப் பார்த்தால்  வேலையும் படிப்பும் போல் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன. குடும்பமும் நிம்மதியும் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் கிராமமும் வசதியும் குழாயும் தண்ணீரும் பதவியும் நேர்மையும் வேலையும் கூலியும் திறமையும் சாதனையும் யோசிக்க யோசிக்க வந்து கொண்டிருந்தன,

இவைகள் எல்லாம் முடியாதவைகள் தானா?

ஏன் முடியாது? அந்தச் சிறுவனை மரத்தில் ஏற்றி தொரட்டியை கொடுத்தால் காய்கள் விழுந்து விடுமே!  இவ்வளவு சிரமும் எற்படாதே. அவனோடு ஒத்துப் போக ஒன்றுபட மனம் வரவில்லை. தற்பெருமை தனியாக இருக்கிறது. இது என்ன பெருமை? பையனைத் தேடினார். அவன் ரிவர்சிலேயே போய் முக்கில் திரும்பிக் கொண்டிருந்தான். வண்டியை இன்னும் திருப்பவில்லை. திருப்பி விட்டால் பறந்துவிடுவான். இனி யோசிக்க நேரமில்லை,

“டேய்.. ய்..” உற்சாகமாய் கத்தினார்,

@ செம்மலர், ஜூலை 1988

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *