நூல் அறிமுகம்: ராதிகா விஜய்பாபு
ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்..
வெளியீடு : பாரதி புத்தகாலயம்….
விலை – ரூ. 180/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com
தனது எளிமையான எழுத்து நடையின் மூலம் குழந்தைகளின் மெல்லிய உணர்வுகள், மனிதர்களின் அந்தரங்க எண்ண ஓட்டங்கள் ஏன் ஒரு நாயின் மனநிலையை கூட சிறுகதை மூலம் நம் கண் முன்னே காட்டியுள்ளார்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி ரா என்றால் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள் சிறிய தந்தையாக விளங்குவார். அந்த அளவிற்கு அங்கு வாழும் மக்களின் உணர்வுகளையும், வாழ்க்கை முறையையும், பேச்சு வழக்கத்தையும் சிறுகதை மூலம் வெளி உலகத்திற்கு எடுத்துரைத்துள்ளார்.
இதில் மொத்தம் 32 சிறுகதைகள் உள்ளன. சில சிறுகதைகள் தனித்தனியாக இருந்தாலும் ஒரு கதை இன்னொரு சிறுகதை உடன் தொடர்புடையதாக உள்ளது .
முதல் கதையான பாவனைகள் சிறுகதையில் குதிக்கால் இட்டு உட்கார்ந்தாலும் சம்மணமிட்டு உட்கார்ந்தும் எப்படி உட்கார்ந்தாலும் பசிக்கிறது என்று வறுமையின் வலியை வேறு எப்படி விளக்க முடியும். தீப்பெட்டி ஆபீஸ் வரை சென்றுள்ள அம்மா வருவதற்குள் ஒட்டி முடிக்க வேண்டும் என்று தீப்பெட்டி கட்டுகளை ஒட்டும் அண்ணன் தெருவில் விளையாடும் தம்பி தம்பியின் பசி அழுகையை போக்குவதற்கு அரிசியை வாயில் போட்டு அனுப்புகிறான். தெருவில் மிக்சர் வண்டிக்காரன் வந்ததும் குழந்தைகள் எல்லாம் அந்த வண்டி பின்னாலே செல்வதும் கண்ணாடி வழியாக அப்பலங்காரங்களை கண்களாலேயே ருசிப்பது அந்த கண்ணாடியை கையால் வேகமாக பட்டதும் வண்டிக்காரன் அனைவரையும் விரட்டும் பொழுது தம்பி அகப்பட்டு அடி வாங்குவதும் அவன் அழுகை சுவரத்திற்கு ஏற்றது போல அவன் மனநிலையை கூறுவது சிறப்பு.
தன் அப்பா அம்மாவை வசவு சொற்களால் பேசுவது வருத்தப்படும் அண்ணன், அப்பாவின் பிள்ளை சிறுகதையில் கல்லூரி படிப்பை முடித்து முதல் நாள் வேலைக்குச் சென்று நாள்முழுவதும் ஓயாமல் வேலை பார்த்து வந்து அம்மா கதவு திறக்கும் நேரம் ஆனதும் தன் அப்பாவைப் போலவே கோபமாக பேசுவதை நினைத்து அதிர்ந்து போகிறான்.
அசோக வனங்கள், வெயிலோடு போய் இரண்டு சிறுகதைகளும் தனித்தனியாக இருந்தாலும் மாரியம்மாவை பற்றியதுதான், தீப்பெட்டி கம்பெனிக்கு கிளம்புவது தனது மச்சான் தங்கராசு நினைத்து கற்பனையில் மூழ்கி கணக்குப்பிள்ளை இடம் திட்டு வாங்கி அவமானப்பட்டு இரவு தூங்கும் பொழுது ஏற்படும் மனக் குழப்பத்துடன் கதை முடிகிறது . வெயிலோடு போய் கதையில் தான் பிறந்ததே தங்கராசு மாமாவிற்கு காக தான் என்ற மாரியம்மா வின் கனவு கனவாகவே போய் வேறு ஒருவருக்கு வாக்கப்பட்டு மச்சான் தங்கராசு மனைவியுடன் வந்திருப்பது தெரிந்து வேகாத வெயிலிலும் தாய் வீட்டிற்கு வந்ததும் மச்சானைப் பற்றி விசாரிப்பது சென்று பார்ப்பதும் பரிதாபமாக உள்ளது. தங்கராசுவின் மனைவி மச்சானே வெறுப்புடன் கையாள்வதை பார்த்து மனம் உடைந்து அழுவது எத்தனை இறுக்கமான உளவியலை வெளிப்படுத்தும் கதை.
மீடியம் கதையும் உபரி கதையும் சுயபரிசோதனை கதையாக விளங்குகிறது 400 ரூபாய் சம்பாதித்தும் 10 ரூபாய்க்கு உள்ளாடையை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை வெளிப்படுத்துகிறது மீடியம் கதை. செலவு போக 60 ரூபாய் எப்படி மீந்துபோனது என்று குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது உபரி கதை.
இதில் வரும் பல கதைகள் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் பல சவால்கள் எண்ண ஓட்டங்கள் பிரச்சனைகள் என நம் கண்முன்னே காட்டியுள்ளார்.
கருப்பு சாமியின் ஐயா சிறுகதை மகன் பிறந்து 7 வருடம் கழித்து வீட்டிற்கு வருகிறார் இசக்கிமுத்து ஒரு வெள்ளந்தியான மனிதர் ஊருக்குள் ஒரு ஏமாளியாக இருக்கிறார் பொது மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பிழைக்கத் தெரியாதவர் அவரது மனைவி தன் அன்பு வார்த்தைகளால் எப்படி மாற்றுகிறார் அவருக்கும் வேறு வழி இல்லை என்பது போன்ற கதை.
குதிரை வண்டியில் வந்தவன் கதையில் பிடிக்காத ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அவளது கனவு உலகத்திற்கு நேரெதிரான ஒரு கணவன், அந்த கணவன் பார்வையிலிருந்து மனைவியை மிகவும் சந்தோஷமாக வைத்திருப்பதாக வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் மனைவியின் பார்வையிலிருந்து வேறுபடுவது அழகாக விளக்கியுள்ளார்.
ஏவாளின் குற்றச்சாட்டுகள் கதையில் சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒருவன் தவறு செய்தவன் போலவே மனைவியால் சந்தேகப் படுகிறான். அதற்கு ஏற்றாற்போல் பல ஆதாரங்கள் அவனை குற்றவாளி ஆக்குகிறது. அவன் எதை செய்தாலும் மனைவியின் சந்தேகம் அதிகரிக்கிறது இறுதியில் மனைவியுடன் சேர்ந்து சமாதானம் போவதை எண்ணி அசரீரி உடன் சேர்ந்து எங்களுக்கும் சிரிப்பு வந்தது.
வெளிரிய முத்தம் கதையில் காதல் திருமணம் புரிந்து கொண்ட அம்சாவும் பாஸ்கரும் திருமணத்திற்குப் பின் மனைவிக்கு ஏற்படும் பொஸசிவ் அதனால் பாஸ்கர் படும் கஷ்டம் குழந்தை பிறந்த பிறகு காதல் குறைந்து போட்டி மனப்பான்மை அதிகரித்திருப்பதை படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. 12B படத்தில் வருவதுபோல அம்சாவும் பாஸ்கரும் பிரிந்திருந்தால் கதை இப்படி அமைந்திருக்கும் என்பது போல தாமதம் சிறுகதை அமைந்துள்ளது.
ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காத எனக்கு என்று தன்னை மிக நல்லவனாக கற்பனை செய்துகொண்டு மனைவி அம்சாவை முன்னாள் காதலன் பாஸ்கர் உடன் தொடர்புபடுத்தி சந்தேகப்பட்டு குடித்துவிட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் பாத்திரமாக பாண்டியன், இருவரும் நல்ல ஒரு வாழ்க்கையை சேர்ந்து வாழ ஆசைப்படுவார்கள் இறுதியில் இருவரின் மனபாரம் குறைந்து பாண்டியனுடன் இணங்குவது போல முடியும்.

அவரவர் தரப்பு கதையில் திருமணம் முடிந்து முதல் மாதம் கணவனும் மனைவியும் இடையில் உள்ள புரிதல் அன்னியோன்யம் கணவன் தான் சொல்வதைக் கேட்கிறான் என்ற பெருமை, தனக்கு தெரியாமல் சிகரெட் குடிக்கிறான் என்று தெரிந்ததும் ஏற்படும் இடைவெளி வாழ்க்கையில் தொடர்வது அவள் பார்வையில் சிகரெட் தானே விட்டால் என்ன என்ற எண்ணமும், அவனது பார்வையிலும் அதே சிகரெட் தானே….
இரு வேறு துருவங்கள் இணைப்பதுதான் திருமணம் என்றால் எந்த ஒரு புள்ளியிலும் எப்பொழுதும் இணைந்தே இருப்பதுமில்லை விட்டு விலகுவதுமில்லை என்பதாகப் பல கதைகள் உணர்த்தியுள்ளது.
தந்தையை இழந்த குழந்தைகள் குடும்ப பாரத்தை சுமக்கும் கொடுமையான கதைகளாக சுப்புத்தாய் கதையும் பின்னணி இசை இன்றி கதையும் அமைந்துள்ளது.
சுப்புத்தாய் தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்கு செல்வாள் தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தன் தாயுடன் குட்டி தம்பியையும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அழைத்துச் சென்று பணம் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி தாய் அங்கு காத்திருக்கும் சமயத்தில் கணக்குப்பிள்ளை தொல்லை கொடுப்பதை எண்ணி தந்தையை நினைத்து தாய் கண்ணீர் வடிப்பதை பார்க்கும்பொழுது படிப்பதற்கே கொடுமையாக உள்ளது .
பின்னணி இசை இன்றி கதையில் வரும் காளியப்பன் திரையரங்குகளில் முறுக்கு விற்பதும் அந்த வேலை போனதும் ஹோட்டலில் வேலை செய்வது பின் டாக்டர் வீட்டில் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்வது என தன் வேலை பார்த்து ஓய்ந்து தன் வீட்டு பாயில் படுத்து தன் அப்பாவை நினைத்து வருந்துவது உடன் கதை முடிகிறது.
இந்தக் கதைகளில் வரும் குழந்தைகள் அவர்களது பால்ய வயதை தொலைத்து குழந்தை தனத்தை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கும் பல குழந்தைகளை நினைவு கூறுவதாக உள்ளது.
மற்றும் மைனாக்கள் கதையில் தாய் தந்தை இருந்தும் அவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் பார்த்துக் கொள்ள முடியாமல் சித்தப்பா வீட்டிலும் பின் வீட்டிற்குச் செல்லும் ஒரு குட்டி குழந்தை ரமேஷின் கதை அந்த குழந்தையின் மனநிலையை அழகாக விளக்கி இருப்பார்.
வார்த்தை கதையில் சோலை பள்ளியில் சுற்றுலா செல்வதற்காக தினமும் கனவு காணும் இன்னும் ஏழு நாட்கள் உள்ளன இரண்டு நாட்கள் உள்ளன என்று சுற்றுலா செல்வதற்கான ஏற்பாட்டிலேயே இருப்பான். சுற்றுலா செல்ல வேண்டிய நாள் வந்ததும் பணம் புரட்ட முடியாமல் அவனது பெற்றோர்கள் படும் கஷ்டமும் பணம் இல்லாததால் அவன் சுற்றுலா செல்லாமல் அழும் அழகையும் கொடுமையானது.
ஏழாம் திருநாள் கதை குழந்தைகள் வீட்டில் உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு வேலையும் ஓடாது அதுபோல ஒரு கதை களம்.
பதிமூன்றில் ஒன்னு கதையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் படிப்பதற்காக படும் கஷ்டங்களை விலகியுள்ளது, கணக்கு பாடத்தில் பாஸ் ஆவதற்காக பிள்ளையாரை கும்பிடுவதும் ஆங்கில படத்திற்காக இயேசு நாதரை வழிபடுவதும் தன் தாய் குலதெய்வத்திற்கு சுடலை மாடனுக்கு கடாய் வெட்டுவதும் என படிப்பும் பத்தியமாக நகர்கிறது, ஒன்பதாம் வகுப்பு பாஸாகி பத்தாம் வகுப்பு பள்ளியில் சேர்வதற்கு அவன் படும் கஷ்டங்கள் தாய் மாமாவின் உருதுணையையும் அழகாக விளக்கியுள்ளார்.
இதேபோல அலுவலகம் சார்ந்த, பூர்வீக சொத்து குறித்த, ஜாதி கலவரத்தை மையமாக வைத்து என பல கதைகளை சிறப்பாக படைத்த தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பெங்களூரில் இருந்து
ராதிகா விஜய் பாபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி
Pingback: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம் - Book Day