யார் அதிகம் பாவம் செய்தவர்கள்? சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா
“அம்மா! நான் உனக்கு செஞ்ச பாவத்த எல்லாம் மன்னிச்சிடுமா! என்ன காப்பாத்துமா!” என மூளை கட்டியால் பீடிக்கப்பட்டு , தான் பிழைத்து எழுவோமா? எனும் பெரும் வினாவுடன் போராடும் “ஈஸ்வர்” தன் தாயிடம் பாவ மன்னிப்பு கோரிய வண்ணம், தினமும் தன் மனைவியுடன் பெற்ற தாயாம் “சின்னம்மா பாட்டியை” 108முறை வலம் வந்து வேண்டி வணங்கி நிற்கிறான்.

மருமகள் மோகுவும் கண்ணீர் சிந்தியபடி”என்ன மன்னிச்சி மடிப்பிச்சை போடுங்க அத்த!” என வேண்ட…

அந்த தாயோ அழுது அரற்றி “உங்களுக்கு ஒண்ணும் ஆகாது! கண்ணுங்களா! நான் கோவத்துல குடுத்த சாபம் எதுவும் சத்தியமா பலிக்கவே பலிக்காது! கோழி மிதிச்சி குஞ்சி சாகாதுடா ராசா! தீவுனூர் புள்ளியாரப்பா! மொளச்சூர் ஐநாரப்பா! ஈசுபரா! ஈசுபரி!
என் குழந்தை உயிரை காப்பாத்து! இந்த முண்டச்சி உயிரை எடுத்துக்கிட்டு என் புள்ளைய நல்லாக்கிடு! நைனா நீ நூறு வருசம், ராசா மாரி வாழ்வடா! நீ இல்லன்னா எனுக்கு யாருடா கொள்ளி போடுவாங்க!” என தான் கோபத்தில் விட்ட மொத்த சாபனைகளையும் அழுதவாறே திரும்பப் பெறுகிறாள் அந்த தாய்!

ஏன் அந்த குடும்பத்தில் இத்தனை சோகம்,… இந்த சிறுகதையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், அருங்குணம் எனும் குக்கிராமத்தில், ஐந்து அண்ணன்மார்களுடன் கடைக்குட்டியாய்ப் பிறந்தாள்
“சின்னம்மா பாட்டி”. அக்கால வழக்கப்படி பூப்பெய்துவதற்கு முன்னரே, தன் ஒன்பதாவது வயதிலேயே, திண்டிவனம் தாண்டி
“நைனார்பாளயம்” எனும் பட்டிகாட்டு கிராமத்தை சேர்ந்த “துரை” என்பவருக்கு பால்யவிவாகம் செய்துவைக்கப்பட்டார். துரைக்கும் சின்னம்மாவுக்கும், 12வயது வித்தியாசம்!

அக்காலகட்டத்தில் கடும்பஞ்சம் நிலவியதால், அவர்கள் பஞ்சம் பிழைக்க “மதரஸா” பட்டணம் வந்து, கடும் ஏழ்மையில் துன்பப்பட்டு, ஒருவாறு, தெருத்தெருவாக கிருஷ்ணாயில் (மண்ணெண்ணெய்) விற்கும் கடினமான தொழிலை மேற்கொண்டு, பீட்டர்ஸ் தெருவில் ஒண்டுக் குடித்தனம் அமைத்தனர்., மணமாகி 18 ஆண்டுகள் கழித்து, தவமாய் தவமிருந்து, “மயிலை கபாலீஸ்வரர்” அருளால், ஆண்மகவு பெற்று “ஈஸ்வரன்” என பெயரிட்டு, அந்த வறுமையிலும், செம்மையாய் செல்லமாய் வளர்த்துவர, 10ஆண்டுகள் கழித்து ஒரு பெண்ணும் அவளுக்குப் பிறக்கிறது!

கணவனுக்குத் துணையாக,வீட்டுச் செலவை ஈடுகட்ட வேர்க்கடலை உரிப்பது, மந்தார இலை தைப்பது …போன்ற சிறு சிறு தொழில்கள் செய்து மூன்று வேளையும் பட்டினியின்றி குடும்பம் ஓட உதவினாள் சின்னம்மா!

அந்த கஷ்ட ஜீவனத்திலும், பிள்ளையை, பணம் கட்டி புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்து, ஃபோர்த் ஃபார்ம் (9வது வகுப்பு) வரை படிக்க வைத்தனர். அக்காலத்தில் அது இன்றைய பி. ஏ படிப்புக்கு சமம்! மகனுக்கு 18வயது, நெருங்கியதும், திருமணம் செய்ய முடிவு செய்து பெண் தேடுகின்றனர். நீண்ட அலசலுக்கு பிறகு “யானைகவுனி”எனும் ஊரை சேர்ந்த, “சொக்கன்” என்பவர் மகள் “மோகு” என்பவளை, தங்கள் பூர்வீக சொத்தான சொற்ப நிலபுலன்களை விற்று திருமணம் முடிக்கின்றனர்.

அப்போதுதான் சிக்கல் துவங்குகிறது. மோகுவின் அப்பா இரண்டு வீடுகளுக்கு சொந்தக்காரர், ஆனாலும் சொத்தின் மீது ஏகப்பட்ட
கடன் சுமையால் பாதிக்கப்பட்டு, நொடிந்து போன, வாழ்ந்து கெட்டவர் ! அவரால், அப்போது மகளுக்கு சரியான சீர் செனத்தி செய்ய முடியாத நிலை! அதனால்தான் என்னமோ, அவர் “அன்னாடம் காய்ச்சி” மாப்பிள்ளைக்கு பெண் கொடுத்தார் போலும்!

மணமகன் சிகப்பாக அழகாக இருந்ததால் மோகு அவரை விரும்பி மணம் செய்து கொள்ள, வழக்கம் போல் மாமியார் மருமகள் பிரச்சினை ஆரம்பித்தது . மோகு வசதியான வீட்டு பெண் என்பதால் அந்த புதிய குடும்பச் சூழ்நிலைக்கு மாற இயலாமல் துன்பித்து, “ராங்கிக்காரி” எனும் அவப்பெயருக்கு ஆளானாள்! மாமியாருக்கும் மருமகளுக்கும், நாளொரு சண்டை ,பொழுதொரு யுத்தம் என வீடு நிம்மதி இழக்கிறது. மாமியாரின் சொந்தங்கள் அவளை, மலடி பட்டம் வேறு சூட்டி, இழிவு படுத்தி ஆபாச வசவுகள் பேசி, சித்ரவதை செய்கின்றனர்

துயரம் தாங்காது மோகு தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்று, உயிர் பிழைக்கிறாள்! ஈஸ்வர் தன் பங்குக்கு வாழ்க்கையே
வெறுத்துப்போய் பாழும் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்று, சிலபல காயங்களுடன் காப்பாற்றப்படுகிறார்!
அந்த இளசுகளின் மணவாழ்க்கை, சின்னம்மாவின் சில்மிஷத்தாலும் சில்லாவலிதனத்தாலும், தகாத வார்த்தை பிரயோகத்தாலும் சின்னாபின்னமாகிறது. இந்த கவலை தாங்காது, உத்தமர்களான மோகுவின் தந்தையும், ஈஸ்வரின் தந்தையும், அடுத்தடுத்து இறைவன் அடி சேர்கின்றனர்!

அதிர்ஷ்ட வசத்தால் ஈஸ்வருக்கு, அரசு ரேஷன் கடையில் வேலையும் கிடைத்து, அவர்கள் வழங்கிய குவாட்டர்சும் கிடைக்கிறது!,
தன் மனைவியின் “அதிர்ஷ்டமே” இதற்கு மூலக்காரணம் என முழுமையாக நம்பிய ஈஸ்வர், தாயைத் தவிக்க விட்டு தனிக்குடித்தனம் செல்கின்றான்!

இப்போது மருமகள் கை ஓங்கியதால், மாமியாரை கொடுமை செய்ய துவங்குகிறாள் மோகு! சின்னம்மாவுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இருந்ததால், அவள் உறவினர் வீட்டில் தங்கி “சுண்டல்” விற்று ,வீட்டுவேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார்!

ஈஸ்வருக்கு நல்ல சம்பளம் மற்றும் அரசு வசதிகள் கிடைத்ததால், அவர் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார்!, மனைவிக்கு சீதனமாக மற்றொரு வீடும் கிடைக்கிறது! வசதியாக அவர்கள் வாழ துவங்குகின்றனர்!

மாமியாரை, மருமகள் பழிவாங்க துவங்குகிறார். மகனின், ஆதரவு பாசம் பற்று , என அனைத்தும் இழந்து பரிதவிக்கிறாள் சின்னம்மா! ஊரார் பஞ்சாயத்து பேசியதால், மாதா மாதம் ஒரு சொற்ப தொகையை மகன் தாய்க்கு வழங்குகிறான்! காலம் ஓடுகிறது! ஈஸ்வர் தன் மூத்த மகனுக்கு “ஜாம் ஜாம்” என, ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் செய்கிறார். ஆனால் தாயோ உதாசீன படுத்தப்பட்டு, உரிய மரியாதை இன்றி அவமானப் படுத்தப்படுகிறாள்!

ஈஸ்வர் ,50வயது நிரம்புகையில், தாயின் சாபமோ என்னவோ தெரியவில்லை, மூளையில் கட்டி வந்து, துன்பப்பட ஆன்றோர்கள் யோசனைப்படி தன் தாயை வலம் வந்து மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார்! ஆனாலும், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்! ஆண்டவர் பாவக்கணக்கில் இருந்து எவராலும் தப்ப முடியாது, என நிரூபணம் ஆகும் வகையில், நோயால் தீரா துயருற்று, ஒரிரு மாதங்களில் “இறப்பு” எனும் விடுதலை பெறுகிறார்! அடுத்த ஆண்டே கணவன் பிரிவு தாங்காமல் மோகுவும் கணவனிடம் போய் சேர்ந்துவிடுகிறாள்..

இறுதியில் சின்னம்மா பாட்டி பேரன்களிடம் தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு குற்றேவல் செய்து, சிலபல ஆண்டுகள் கழித்து மாண்டு போகிறாள்! பிள்ளையை பாடுபட்டு வளர்த்து, காப்பாற்றி காடு கழனி விற்று படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த போதிலும்,
தன் மருமகளை, மாமியார் என்ற ஸ்தானத்தில் இருந்துகொண்டு ஏனோ தன் தீய குணத்தால் அதீத கொடுமை செய்த சின்னமா பாட்டி,..!

என்னதான் கொடுமை செய்து இருந்தாலும்,.. தன் கணவரை பெற்ற முதியவள் அவள், என்பதை நினைத்து பார்த்து, அவள் செய்த கொடுமைகளை மறந்து மன்னித்து அரவணைத்து செல்லாமல் , பழிக்கு பழி வாங்கிய மருமகள்!

தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்வித்த தாயின்,நன்றி மறந்து, “மனைவி சொல்லே மந்திரம்”என தாயை விலக்கி வைத்து, அவமதித்து, துன்பப்படுத்தி, அவள் சாபனைக்கு ஆளான மகன்.

இந்த மூவரில் யார் அதிகம் பாவம் செய்தவர்கள்?
என்ற முடிவான தீர்ப்பை இதை படித்து முடிக்கும் வாசகர்களாகிய உங்கள் வசமே சமர்ப்பிக்கிறேன்!

-மரு உடலியங்கியல் பாலா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.