சிறுவன் வணக்கம் தன்னுடைய அம்மா போதும் உடன் பண்ணையார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். நண்பன் கும்பிடறஞ்சாமி எதிரில் வந்து கொண்டு இருந்தான்.

“என்னடா வணக்கம், ஆத்தாவோட போற, பள்ளிக்கு வரலையா?” என்றான் கும்பிடறஞ்சாமி.

வணக்கம், கும்பிடறஞ்சாமி இருவரும் வளையாம்பட்டு அரசு பள்ளியில் சென்ற வருடம் இரண்டாம் வகுப்பு முடித்து இந்த வருடம் மூன்றாம் வகுப்பு போய் உள்ளார்கள்.

“இல்லடா” என்றான் வணக்கம் தனது வேர்க்கும் கண்களை துடைத்தபடி.

“ஏன்டா?” என்றான் ஏக்கத்தோடு நண்பன் கும்பிடறஞ்சாமி.

“மூன்றாம் வகுப்பு புத்தகம் வாங்க காசு இல்லடா. அதான், ஆத்தாவோட பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு போறேன்” என்றான், வணக்கம்.

“சரிடா நான் வாத்தியாராண்ட சொல்லிடுகிறேன்…” என பொத்தன் இல்லாமல் கழன்று விழும் கால் சராயைப் பிடித்து கொண்டு பள்ளிக்கு ஓடினான் கும்பிடறஞ்சாமி.

“ஆத்தா நானும் பள்ளிக்குப் போறேன் என வணக்கம் கேட்டது காதில் வாங்காமல் வேகமாக நடந்து கொண்டு இருந்தாள் ஆத்தா போதும்.

போதும், திருமணம் முடித்து வணக்கம் பிறந்தவுடன் குடிகாரக் கணவன் இசக்கி பரலோக பதவி அடைந்து விட்டான். மகன் வணக்கம் பசியும் பட்டினியோடு இருப்பதை சகிக்க முடியாமல் தான் ஒரு வேளை நல்ல சோறு சத்துணவு கூடத்தில் பள்ளியில் கிடைக்கும் என அனுப்பி வைத்தாள். ஆனால் புத்தகம் வாங்க முடியாத நிலை அவனை இன்று வேலைக்காரனாக பதவி ஏற்க அழைத்து சென்று கொண்டு இருக்கிறாள்.

களத்து மேட்டில் பண்ணையார் இராமசாமி தேக்கு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது சகாக்களோடு பேசிக்கொண்டு இருந்தார். போதும் அவரைப் பார்த்து “வணக்கம் சாமி.” என்றாள்.

“உம்.”

“என் பையனுக்கு வேலை ஏதாச்சும் கொடுங்கள் சாமி” என கேட்டாள்.

“என்னது வேலையா? ”

“ஆமாம் சாமி..”

அவளை உற்றுப் பார்த்தார். அவளின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு பின்னால் நின்று கொண்டு இருந்த அவளின் மகனைப் பார்த்தார்.

“ஏய் இங்க வா… ‘

வணக்கம் விழித்தபடி நிற்க, ” இங்க வாடா….. ,உன் பெயர் என்ன? ” என்று கேட்டார் பண்ணையார்.

“வணக்கம்…. ”

“வணக்கம், உன் பெயர் என்ன? ”

“வணக்கம்…. ”

“வணக்கமெல்லாம் சரிடா, உன் பெயர் சொல்லு…. ”

“வணக்கம்… ”

“முதலாளி, அவன் பெயர் வணக்கம்… என்றாள், போதும்.

“‘ஓ அப்படியா… டேய் இனி உன் பெயர் இசக்கி, சரியா.. இங்கேயே கூடவே நில்லு….” என்றார்.

போதும் தனது மகனைப் பார்த்து “ராசா ,முதலாளி பேச்சு கேட்கணும். ஆத்தா சாயங்காலம் போகும் போது கூப்பிட்டு கொண்டு போறேன்.. சரியா யா…. ” என வேலைக்கு சென்றாள்.

அவள் மனம் ஏனோ கனத்தது. தனது மகனைப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக ஆளாக்க வேண்டும் என்ற அவளது கனவு சுக்கு நூறாக உடைந்து போனது. நாட்கள் கடந்து கொண்டு இருந்தது. இசக்கி என்கின்ற வணக்கத்திற்கு முதலாளிக்கு கை பிடித்து விடுவது தான் வேலை….

ஒரு நாள் முதலாளி சென்னையில் இருந்து வந்துள்ள மகன் செந்திலுக்காக ஆடு, கோழி வாங்கி சமைக்கச் சொல்லி விட்டுப் பஞ்சாயத்துக்குச் சென்றார். அந்த இடைவெளியில் படிக்கட்டில் அமர்ந்தபடி இரண்டாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து படித்து கொண்டு இருந்தான் நமது வணக்கம்.

செந்தில் அவனைப் பார்த்தவுடன் புத்தகத்தைப் பின்புறம் மறைத்துக் கொண்டான்.

“வணக்கம், இங்கே வா… ”

“இல்லண்ணா நான் இனி படிக்க மாட்டேன், அய்யா கிட்ட சொல்லிடாதீங்க” என அச்சத்தோடு நிற்க., அதே நேரம் வேலை முடித்து வந்த போதும் இதைப் பார்த்து விட்டாள்: “தம்பி எசமான் கிட்ட சொல்லிடாதிங்க. எனக்கு தெரியாமல் புத்தகத்தை எடுத்து வந்துட்டான்” என்றாள் பதட்டத்தோடு.

“அக்கா பதறாதீங்க . இங்கே வாங்க என்ன நடந்தது என எல்லாம் கேட்டு அறிந்து கொண்டான்.

“சரிக்கா நீங்க போங்க, நான் பார்த்துகிறேன், என்றான் செந்தில்.

“எசமான் கிட்ட சொல்லிடாதீங்க தம்பி… ”

“இல்லக்கா நீங்க போங்க!” என்று சொல்லி அம்மா, பிள்ளை இருவரையும் அனுப்பி வைத்தான்.

அவன் நினைவுகள் சற்றே பின்னோக்கிச் சென்றது. செந்தில் தமிழ் பட்டதாரி. முற்போக்குவாதி. இவையெல்லாம் தோழன் அமர் நட்பினால் கிடைத்த மாற்றம். ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் பிற்போக்குக்குச் சொந்தமான தனது கிராமத்தில் விதைக்க முடியவில்லையே என ஆதங்கம் அவனை சென்னைக்கு அனுப்பியது.

சென்ற வாரம் தோழன் அமரின் அழைப்பின் பெயரில் அவன் தலைமை ஏற்று இருக்கும் முற்போக்குப் படைப்பாளிகள் மாநாட்டிற்கு சென்று இருந்தான். அங்கு “புத்தக அலமாரி” என்ற ஒரு நிகழ்வு அவனுள் பல மாற்றங்களை உண்டு செய்தது. அனைவராலும் அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியாது. நூலகம் செல்ல இயலாதவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தோழர்கள் அவர் அவர் படித்த புத்தகங்களை அந்த புத்தக அலமாரியில் வைத்து விட்டு படிக்காத புத்தகங்களை எடுத்து செல்லலாம். பண்டமாற்று முறை. அனைவராலும் அனைத்து புத்தகங்களை விலை கொடுத்து வாங்க முடியாத நிலை, இந்த புத்தக மாற்றுமுறை அனைவருக்கும் பயன் தரும். அந்தச் செயல் அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அன்றே செந்தில் முடிவு செய்து விட்டான். நம்மால் முடியாததை புத்தக வாசிப்பு நிச்சயமாக உண்டு செய்யும். புத்தக பக்கங்கள் மட்டுமே புரட்டபடவில்லை வாசகர்க்ளும் தான். அது மட்டுமல்ல தனது தொடர் செயல் தான் மாற்றத்தை தனது கிராமத்தில் ஏற்படுத்த முடியுமென .

“தம்பி, என்னப்பா ஏதோ யோசனையா இருக்கே?” என்ற அப்பாவின் குரல் அவன் நினைவுகளை மீட்டு எடுத்தது.

“ ஒன்றுமில்லை அப்பா வெளியே போய்விட்டு வந்து விடுகிறேன்” என நேராக தலைமை ஆசிரியரை பார்க்க சென்றான்.

மறுநாள் மூன்றாம் வகுப்பில் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு ஏடு எடுத்துக் கொண்டு இருந்தார்.

“சண்முகம்…. ”

“உள்ளேன் அய்யா”

“கும்பிடறஞ்சாமி,…. ”

“உள்ளேன் அய்யா”

“வணக்கம்…. வணக்கம்”

புத்தக அலமாரியில் இரண்டாம் வகுப்பு புத்தகத்தை வைத்து விட்டு மூன்றாம் வகுப்பு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வேகமாக ஆசிரியர் முன் சென்று “உள்ளேன் அய்யா” என்றான், வணக்கம்.

– சாந்தி சரவணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *