திட்டமிட்டு பழுது ஆக்குதல்! தினம் புதிய பொருள் தேடல்!
முனைவர். பா. ராம் மனோகர்
சமீபத்தில் ஒரு நாள் எனது உணவு மேசையில், ஒரு புதிய பாத்திரத்தில் சாம்பார்! ஆனால் அது புதிய பாத்திரம் அல்ல, எனது தாய் நாங்கள் சிறு வயதாக இருந்த போது பயன்படுத்திய ஒன்று, என என் மனைவி கூறிய பின்பு அந்த பாத்திரத்தின் பாரம்பரிய பெருமை உணர முடிந்தது. பழைய பொருட்கள் பாதுகாப்பு, அதன் சிறப்பு புரிந்து கொண்டு, பல நல்ல பாரம்பரிய நினைவுகள் தொடர்ந்து வருவது, உண்மை அல்லவா!?. ஆனால் “இன்று புதிதாய் பிறப்போம் pirappom” மற்றும் “பழையன கழிதலும் புதியன புகுதலும் “என்ற சொற்றோடர்கள் புதிய, நவீன முற்போக்கு எண்ணங்களை தூண்டி விடவே நாம் பயன்படுத்தி வருவது அறிந்ததே! ஆனால் “இன்று புதிதாய் வாங்குவோம்!”என்ற மனப்பான்மை நம் சமுதாயத்தில் அதிகம் எழுந்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை இத்தகைய செயல்பாடுகளை முன்னெடுத்து, பெருமை கொண்டும் திகழ்கிறது. உலக மயமாக்கலுக்கு பிறகு நம் பொருளாதாரம், உயர்ந்த நிலையில் “நுகர்வோர் கலாச்சாரம் “பெருகியது., தொடர்ந்து இதனால் சுற்று சூழல் பாதிப்புகள், கழிவுகள் மிகுதியான தற்போதைய நிலை, அதிர்ச்சியினையும், வருத்தமும் அளிக்கிறது. எதிர்காலத்தினை எண்ணி அச்சம் கொள்ள வைக்கிறது.
நுகர்வோர், பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி குவிப்பது ஒரு புறம்! வாங்கிய பொருட்கள், கருவிகள், ஆகியவற்றில் சிறு குறைபாடு, தொழில் நுணுக்க குறைபாடு தீடீர் என்று ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட பொருள், கருவி குப்பையாக்கி விடுகின்ற மனநிலை நம்மில் மேலோங்கிவிட்டது. அப்பொருட்களை சீர் செய்ய நாம் மறுப்பதும் வழக்கம் ஆகிவிட்டது. இந்த சமுதாய நிலை புரிந்து கொண்ட பெரும் தொழில் நிறுவனங்கள், பெரும்பான்மை கருவிகளை, குறிப்பாக மின்னணு நுகர்வு பொருட்கள், செல் போன்கள், கணினிகள் ஆகியவற்றை ஒரு முறை, அவை பழுது ஆகிவிட்டால், அவற்றை “மீண்டும் சீர், சரி செய்ய இயலாது” என்ற நிலையில் வடிவமைக்க படுவதாக அறியப் பட்டுள்ளது.
திட்டமிட்டு இவ்வாறு பழுது ஆக்குதல் அல்லது பழைய பொருட்கள் ஆக்குதல் நிலை உருவாக்கி, நுகர்வோர் வாடிக்கையாளர்கள் மீண்டும் தெரிந்தோ, தெரியாமலோ புதிய பொருட்கள் வாங்க, தூண்டும் மனநிலை பெற ஏதுவாகிறது. இந்த கோட்பாடு 1928 ஆம் ஆண்டில் அமெரிக்க வணிக சந்தை வல்லுநர் ஜுஸ்டஸ் ஜார்ஜ் பிரெட்ரிக் என்பவர் உருவாக்கியது ஆகும். இவர் நுகர்வோர் புதிய பொருள் வாங்க வைப்பதை விட, அந்த பொருள் குறைந்த காலத்தில் பயன்படுத்தி, வீண்ஆக வைத்து புதிதாக அவர்களை வாங்க செய்து வணிகம் பெருக செய்யும் யுக்தி என குறிப்பிடுகிறார்.
மின்னணு பொருட்கள், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இத்தகைய திட்டமிட்டு வழக்கு ஒழிதல் என்ற நிலையில் நுகர்வோர் ஈடுபாடு அதிகரிக்க பல வழிகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் வணிகம் பெருகும், ஆனால் நுகர்வோர் ஏமாற்றம் அடைவது, மின்னணு கழிவுகள் அதிகம் தவிர்க்க இயலாது. வன்பொருட்கள் (Hardwares ) தரக்குறைவாக, உற்பத்தி பொருட்களில் அமைத்து அப்பொருட்களின் வாழ்நாட்களை 2 அல்லது மூன்று ஆண்டுகள் ஆக குறைக்கும் ஒரு குரூர வணிக தந்திரத்தினை அனைத்து நிறுவனங்கள் பின்பற்றி வருவதும் அறியப்பட்டுள்ளது. மேலும் பழுதான மின்னணு பொருட்களை, சீர் செய்ய அதன் செயல்பாட்டு, உட்பகுதியினை எளிதில் திறக்க இயலாத நிலையிலும், கருவிகளின் சிறப்பு இணைப்பு திருகுகள், மிக கடினமாக சாதாரண ஸ்குரு டிரைவர் மூலம் திறக்க முடியாத அளவில் அமைக்கும் படி பொருட்கள் உள்ளன. மேலும் புதிய பயன்பாட்டு செயல்முறைகள் ( Programming Applications )பழைய கருவிகள் ஏற்காத வண்ணமும் அவை உருவாக்கப்படுகின்றன. இதனால் கருவிகள் செயல்பட்டாலும், நவீன பயன்பாடுகள் அதில் கொண்டு வர இயலாது.
இவ்வாறு திட்டமிட்டு கருவிகளை பழுது அல்லது வழக்கம் ஒழிய செய்வதால் இயல்பாக மின்னணு குப்பை கழிவு அதிகரிக்க வழிகள் உருவாக்கிவிட்டது. புதிய பொருட்கள் வணிகம் விரைவாக ஆகி , உற்பத்தி மிக அதிகரிப்பு தவிர்க்க இயலாமை ஆகிவிட்டது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மென்பொருள் பொறியாளர் மற்றும் இளைஞர்கள் புதிய கணினி, செல்போன் போன்றவற்றை (வீட்டில் இருந்து பணிகள் செய்தபோது)மீண்டும், மீண்டும் வாங்கும் நிலை ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் இந்திய மின்னணு பொருள் வன்பொருள் உற்பத்தி உலக அளவில் 3% ஆக இருந்த நிலை பொருளாதாரம் உயர்ந்த பொழுதும், மின்னணு கழிவு அதிகம் ஆகிவிடும் நிலை ஒரு சுற்று சூழல் சவால் ஆக உள்ளது.
2019 ஆண்டு தேசிய மின்னணு கொள்கைப்படி உலக அளவில் மின்னணு பொருள் வடிவமைப்பு, உற்பத்தியில் ஒரு சிறப்பு நிலை அடைய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் இந்த வணிகம் ரூபாய் 1,90,366₹ கோடி ஆக இருந்த நிலை உயர்ந்து 2019-20 ஆம் ஆண்டு ரூபாய் 5,33,550₹ கோடியாக ஆகியது உண்மை. இந்த 23% ஆண்டு உயர்வு என்பது வணிக வளர்ச்சி தான்!
பல்வேறு இந்திய அரசின் மின்னணு திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி பெருக, நிறைய ஊக்க தொகை, மானியம் நிதியுதவிகள் கொண்டு அமைந்துள்ளன.2019-20 ஆம் ஆண்டில் 4-6%உற்பத்தி ஊக்கத்தொகை பல நிறுவனங்கள் பெற்றன. மின்னணு பகுதி பொருட்கள், செமி காண்டக்டர்கள், மொபைல் போன், போன்றவை உற்பத்தியில், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களுக்கு 25% நிதி மானியம் அளிக்கப்பட்டது.
மத்திய மின்னணு, தகவல் தொடர்பு அமைச்சகம் குறிப்பாக ஏழு வகை நுகர்வோர் மின்னணு உற்பத்தி பொருட்கள், தொழில் மின்னணு கருவி, கணினிவன்பொருள், செல்போன் ராணுவ மின்னணு கருவி, ஒளி உமிழ் டையோடு உற்பத்தி ஊக்குவித்தது.
ஆனால் முரண்பாடாக மின்னணு கழிவுகளை இரண்டு பெரும் வகையில் மட்டும் பிரித்து வைத்துள்ளது. 21 மின்சார, மின்னணு கருவிகள்மட்டும் 2016 ஆம் ஆண்டு மின்னணு கழிவு சட்டத்தின் படியும் (முதல் அட்டவணை)அமைத்து பட்டியல் உள்ளது. இதில் தகவல் தொழில் நுட்ப கருவி மற்றும் நுகர்வோர் மின்னணு வீட்டு உபயோக பொருட்கள் அடங்கியுள்ளது. பகுதி பொருட்கள் கழிவு இல்லை என்பது வருத்தமே.
மின்னணு கழிவுகளின் மிகப்பெரிய பிரச்சனை செல்போன்கள் தான்!ஏனென்றால் நம் இந்திய நாடு மட்டும் செல்போன் உற்பத்தி அதிகம் செய்யும் நாடு ஆகும்.2014-15ஆம் ஆண்டு 60 மில்லியன் கருவிகள் ஆக இருந்து வந்த நிலை உற்பத்தி உயர்வு பெற்று 2019-20 ஆம் ஆண்டு 330 மில்லியன் ஆக, நம் நாட்டு தேவையினை விட அதிகம் ஆகியது. உபயோகிப்பாளர் எண்ணிக்கை அபரிமிதம் ஆகி விட்டது.
மொபைல் போன்கள் அனைத்தும் மிக குறுகிய வாழ்நாள் கொண்டவை ஆகும். இதனால் வெகு விரைவில் அவை குப்பைகளாய் மாறி விட்டு, நவீன புதிய தொழில் நுட்பம் கொண்டு விளங்கும் போன்கள் விற்பனை அதிகம் ஏற்பட்டது.குறிப்பாக செல்போன் வாழ்நாள் தோராயமாக 5 மடங்கு குறைவு ஆகியதாக,தெரிகிறது. குறுகிய வாழ்நாட்கள் கொண்ட மின்னணு பொருட்கள் உற்பத்தியால் ஏற்படும் சூழல் “கரிம காலடி தடம் “(CARBON FOOT PRINT), அவற்றை உபயோகிப்பதால் ஏற்படுவதை விட அதிகம் (85-95%) என்று 2018ஆம் ஆண்டு ஹாமில்டன் நகரில் உள்ள, மாக் மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கருவிகள் அடிக்கடி மாற்றும் நடத்தையினால், சூழல் மாசு அதிகரிக்கும்.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் GREEN PEACE என்ற அமைப்பு, இத்தகைய திட்டமிட்டு, வழக்கழிதல், பொருள் கழிவு ஆக்குதல் பல நாடுகளில், சந்தை அபரிமிதஉற்பத்தி உச்ச நிலை அடைந்துள்ளதாகக் கூறுகிறது. அடிக்கடி வடிவமைப்பு மாற்றம், சீர் செய்தல் போன்றவற்றால் மீண்டும் புதிதாக பொருள் வாங்கும் நிலை, கழிவு அதிகம் ஆக காரணம் ஆகிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில், சீர் செய்வது என்ற நிலை சிரமம் இல்லை. ஆனால் இந்த பாரம்பரிய பண்பு மாறிவிடும் நிலை உள்ளது. இளைய தலைமுறை வாழ்க்கை முறை மன மாற்றம், அதிக தனி நபர் வருமானம், பொருட்கள் மாறும் நவீன வடிவமைப்பு, ஆகியவை மட்டும் அல்லாமல் வாழ்நாள் குறைவு போன்றவை பழைய பொருட்கள் கழிவாகி சுற்று சூழல் மாசாக ஆக விடுகிறது.
பல ஐரோப்பியா நாடுகளில் கட்டாய பொருள் சீர் செய்யும் உரிமை என்ற நிலை 2021 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் கட்டாயமாக உற்பத்தியாளர்கள் பொருட்கள் சீர் செய்யும் தகவல் பொருட்களில் அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்வீடன் பொருள் சீர் செய்யும் வரிகளை 50%குறைத்து சட்டம் உருவாக்கியுள்ளது.
மின்னணு கழிவுகள் பிரச்சனை சவால் ஆக உள்ள நிலையில் நம் நாட்டிலும், தீர்வு கண்டறிதல் அவசியம் ஆகும். விழிப்புணர்வு, அரசு கொள்கை மாற்றம், தொழிற்சாலை உற்பத்தி கட்டுப்பாடு, பொருள் நீண்ட வாழ் நாள் உறுதி, புதிய பொருள் வாங்காமல் பயன்படுத்தி வருவோருக்கு ஊக்க தொகை, ஆகியவை பரிசீலிக்கப்பட வேண்டும். மின்னணு கழிவுகள் நம் மண்ணுக்கு மாசு, மனித குல தீங்கு என்பது உணர்வு பூர்வமாக அறிவோமா?!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *