Aatru Manal Ootru Short Story by Puthiya jeeva Synopsis 83 Written by Ramachandra Vaidyanath. புதிய ஜீவாவின் ஆற்று மணல் ஊற்று சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்




மறுக்கப்பட்ட வாழ்க்கைக்குள் எளிய மக்கள் உருவாக்கி வைத்துள்ள மனித நேயம் நம்மை பெரிதும் பிரமிக்க வைக்கிறது. 

ஆற்று மணல் ஊற்று
                    – புதிய ஜீவா

“அண்ணே, எப்பண்ணே எழுதப்போறோம்?”  இதுவரை நான்கைந்து தடவை பாண்டி கேட்டு விட்டான்.

சோமு சிரித்தான்.  “பகல்ல எல்லாம் எழுத முடியாதுடா பாண்டி.. வீட்டுக்காரன் பார்த்தான்னா, அவன் வீட்டுச் சுவர்ல விளம்பரம் எழுதினதுக்காக நம்மள அடிச்சே கொன்னுடுவான்… யாருக்கும் தெரியாம ராத்திரிதான் எழுதணும்…”

மத்தியாணம் பன்னிரெண்டு மணிக்கே அந்த ஊருக்கு அவர்கள் வந்துவிட்டனர்.  பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு குருவி பல்பொடி ஏஜெண்டின் அட்ரஸை ஆங்காங்கே விசாரித்து கடைசியில் கண்டுபிடித்தனர்.   கன்னங்கரேலென்று இருந்தார்.  பற்களும் கைவிரல்களில் இருந்த மோதிரங்களும் மட்டுமே பளிச்சென்று தெரிந்தன.

“எனக்கும் பல்பொடி கம்பெனியில் இருந்து போன் பண்ணிச் சொன்னாங்க. எத்தனை இடம் எழுதறீங்களோ அத்தனைக்கு கணக்குப் பண்ணி காசுதரச் சொல்லியிருக்காங்க.  இன்னிக்கு நைட் எழுதி முடிங்க.. காத்தால காசு வாங்கிக்கங்க.” 

திரும்பி நடந்தார்கள்.  கம்மியான வாடகையுள்ள லாட்ஜில் ரூம் பிடித்துக் குளித்து முடித்தார்கள்.  சாப்பிட்டுவிட்டு ரூமுக்குத் திரும்பினார்கள்.  பாண்டியை ரூமில் விட்டுவிட்டு எங்கெல்லாம் எழுதலாம் என்று பார்த்துவர சோமு மட்டும் தனியாக கிளம்பினான்.

பாண்டிக்கு இது எல்லாம் புதுசு.  பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுத்து பாஸ் பண்ணியும் மேலே படிக்க முடியவில்லை.  பெரிய அக்காவுக்கு அந்த நேரம்தான் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது.  அப்பா அதுக்கே நிறைய கடன் வாங்கிவிட்டு முழிச்சிக்கிட்டிருந்தார்.  பிளஸ் ஒன் சேர்க்க பணம் இல்லாமல் போச்சு.  அடுத்த வருஷம் சேர்க்கலாம்னு அப்பா சொல்லிட்டார்.  அதுவரைக்கும் வீட்டுல சும்மா இருக்க வேண்டாம்னுட்டு சோமு அண்ணன் கிட்ட வேலைக்கு சேர்த்துவிட்டார்.

அந்த ஊர் திரையரங்கில் பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார்ந்து படம் பார்த்தார்கள்.  படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியே வந்து மேற்கு நோக்கி நடந்தார்கள்.  ஊர் அடங்கியிருந்தது.  ரோட்டை ஒட்டிய தெருக்களில் கயிற்றுக் கட்டிலிலும் தரையிலும் பாய்விரித்து ஜனங்கள்  படுத்துக் கிடந்தனர். கூடவே நாய்களும்.

“எங்க இருந்து ஆரம்பிக்கலாம்ண்ணே?” பாண்டி கேட்டான்.

“ஆற்றுப் பாலத்துக்கு வடக்கேயிருந்து, நீ எல்லாம் எடுத்துகிட்டியா? பட்டை பிரஸ் குண்டு பிரஸ் எல்லாம்?”

பாண்டி தலையாட்டினான்.  பாண்டியின் கையில் இருந்த மை டப்பாவை சோமு வாங்கிக் கொண்டான்.  சோமுவின் தோளிலும் ஒரு பை இருந்தது.  எங்காவது எழுதும்போது தப்பாகப் போனால் சரி பண்ண வெள்ளைக் கலர். சிறிதும் பெரிதுமாக நிறைய பிரஷ்கள்.  கலரைக் கலக்கத் தண்ணீர் பாட்டில்கள்.  ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும் பாண்டி ஆரம்பிக்கலாமா என்பது போலப் பார்த்தான்.  பாண்டிக்கு தனியே எழுதவராது.  பெரிய சைஸ் எழுத்துக்களுக்கு சோமு அவுட் லைன் போட்டுக் கொடுத்துவிட்டால் பாண்டி சின்ன பிரஸ்ஸை வைத்து உள்ளே கலர் அடைப்பான்.

உங்கள் பற்கள் பளிச்சிட வேண்டுமா?

வாங்கி உபயோகியுங்கள்!

குருவி பல்பொடி!

சிறிய எழுத்தில் இரண்டு லைன், பெரிய எழுத்தில் ஒரு லைன்,  அவ்வளவுதான்.  ஒரு இடம் முடிந்தது.  எழுத ஆரம்பித்தார்கள்.

“கீழே பார்த்து கால் வைடா பாண்டி, பூச்சி கீச்சி  இருக்கப் போவுது” மெதுவாகச் சொன்னான்

“அண்ணே, பாம்புண்ணே”  

“எங்கே?”

பாண்டி காட்டிய இடத்தில் ஐந்தடி நீளத்திற்கு மேலாக பெரிய சாரைப்  பாம்பு ஒன்று சரசரன்னு போய்க் கொண்டிருந்தது.

“பயந்துட்டியா?” சோமு சிரித்தான்.  “அது ஒண்ணும் செய்யாது, சாரைப் பாம்பு பார்க்கப் பெரிசாக இருக்கும்”.

பெருச்சாளிகள் காலுக்கடியில் ஓடின.  எலிகள், மூஞ்சூறுகள்… ஒவ்வொரு தடவையும் பாண்டி பயந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.  வீட்டின் பின்பக்கம் எழுதும்போதுதான் பெரும் பிரச்சினை.  பெரும்பாலும் சாக்கடைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் சொதசொன்னு.  செருப்பு சகதியில் மாட்டிக் கொண்டது.  ஒரு வீட்டுக்குள் லைட் போடுவது பூட்டியிருந்த ஜன்னல் இடுக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது.  யாரோ விழித்து விடடார்கள்.  சோமு எழுதுவதை நிறுத்திவிட்டு நின்றான்.  பாண்டிக்கு நெஞ்சு படக் படக் என்று துடிக்க ஆரம்பித்தது.  வீட்டிலிருந்து வெளியே வந்து அடித்து விடுவார்களோ?   பயத்தினால் உறைந்து போய் நின்றான்,  மீண்டும் விளக்கு அணைக்கப்பட்டது.  நிம்மதியானான்.  திரும்பவும் ஆற்றுப் பாலத்தைக் கடந்து தெற்கு நோக்கி நடந்தார்கள்.  நிலா வெளிச்சத்தில் புடவைக்குத் தங்கச் சரிகை பார்டர் போட்ட மாதிரி ஆற்றின் ரெண்டு ஓரங்களிலும் சாக்கடை நீர் தெரிந்தது.  பாண்டி செருப்பில் ஒட்டியிருந்த சகதியைத் தரையில் தேய்த்துத் தேய்த்து நடந்தான்.

“ஒரு தடவை நூத்தம்பது இடத்துக்கு மேல எழுதிட்டன்டா பாண்டி.. மறுநாள் காலைல வந்து பார்த்தா எழுதினது மேல எவனோ போஸ்டர் ஒட்டிட்டான்.”

“அப்புறம்..?”

“அப்புறம் என்ன?  இன்னொரு வாட்டி எழுதினேன்.  ஒரு வேலைக்கு ரெண்டு வேலையாப் போச்சு.”  

இன்னும் இரண்டு மணி நேரத்தில் விடிந்து விடும்.  அதற்குள் எழுதி முடிக்க வேண்டும்.  ஊரில் மூத்த பையன் தூக்கத்துக்கு நடுவில் ஒண்ணுக்கிருக்க முழிச்சிருப்பான்.  சின்னது ரெண்டையும் தூக்கிவிடணும்.  இல்லேன்னா  பாயிலேயே போயிடும்.  மூத்தவனை இந்த வருஷம் ஸ்கூலிலே சேர்க்கணும்.  ஸ்கூல் பஸ் எல்லாம் விட்டிருக்கான்.  அந்த ஸ்கூல் படிக்கிற பசங்கள் எல்லாம் மணிமணியா இங்கிலீஸ் பேசுதுங்க.  மொத்தமா வருஷ ஆரம்பத்துல அந்த ஸ்கூலில் இரண்டாயிரம் மூவாயிரம் ரூபாய் கட்டணும்.  அப்புறம் மாசாமாசம் ஃபீஸ்.  எப்படியும் பிள்ளைங்களைப் படிக்க வைச்சிடணும்.  பையனை ஸ்கூல்ல சேர்க்கணுமே ரூபாய்க்கு என்னடா பண்ணறதுன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.  நல்ல வேளை இந்த பல்பொடி விளம்பர ஆர்டர் கிடைத்தது.  சோமுவுக்கு வீட்டு யோசனையாய் இருந்தது.

பாண்டி சோர்ந்து போய் இருந்தான்.  சோமு ஒரு சாப்பிட்டுவிட்டு பீடியைப் பற்ற வைப்பதற்குள் அந்த டீக்கடைப் பெஞ்சில் படுத்து பாண்டி அப்படியே தூங்கிப் போனான்.  பாவம் குழந்தைப் பையன்.  படிக்கிற வயதில் நம்மகிட்ட வந்து கஷ்டப்படுது.  பாண்டியை எழுப்பி விட்டான்.  தூக்கம் தெளிய கொஞ்ச நேரம் ஆனது.  

தெற்குப் பக்கம் எழுதிக் கொண்டே வந்தார்கள்.  

“ஏன்டா பாண்டி, நூத்தம்பது எழுதியிருப்போமா?”

“நூத்தி தொண்ணுத்தி நாலு அண்ணே!”

“அட பரவாயில்லையே இன்னும் ஆறு இடம் எழுதினா இருநூறு”.

ஆற்றுப் பாலத்தை ஒட்டி ரோட்டுக்கு அருகில் பெரிய நீளமான சுவர் இருந்தது.  பஸ்ஸில் வருகிறவர்களுக்குப் பளிச்சென்று தெரியும்.  பெரிய நீளமான சுவரில் பெரிய எழுத்தில் எழுத பாண்டி கலர் அடைத்துக் கொண்டு வந்தான்.

அப்போது ரோட்டோரம் ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.  பெரிய மீசை வைத்து யூனிஃபார்ம் போட்ட போலீஸ் அதிகாரி.  இன்னும் ஓர் எழுத்து பாக்கியிருந்தது.

“யார்டா அது?  என் வீட்டுச் சுவருல எழுதறவன்?  இங்க வாடா” குரலே பயமுறுத்துவதாக இருந்தது.

சோமு தயங்கியபடியே மெதுவாக அருகே போனான்.  சோமுவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.  கன்னத்தில் சூடு வைத்தது போல இருந்தது.  தலை சுற்றியது.  கழுத்து ஒடிந்து விழுவது போல அடித்த அடியில் முகம் திரும்பியது.  நிலை குலைந்து போனான் சோமு.  

“சார், நான் வெளியூருங்க சார், வீடுன்னு  எனக்குத் தெரியாது.  தெரிஞ்சா எழுதியிருக்கமாட்டேன்”.

“என்னடா தெரியாது”?

சோமுவின் கையில் இருந்த கலர் டப்பா பிடுங்கப்பட்டது.  தலையில் கலர் ஊற்றப்பட்டது.  கலர் சோமுவின் முடி நெற்றி காது கண் என முகம் முழுக்க  வழிந்து சட்டையின் தோற்பக்கம் சொட்டச் சொட்டாக வழிய ஆரம்பித்தது.  

“ரெண்டு மணி நேரம் கழிச்சு வருவேன்.  அதுக்குள்ளார சுவருல வெள்ளை அடிச்சு சுத்தமா அழிச்சு வச்சிருக்கணும்.  இல்லேன்னா எங்கே போனலும் விட மாட்டேன்.  கொன்னுபுடுவேன்.”  பைக் தடதடத்துக் கிளம்பியது.

சோமு கண்ணுக்கு மேல் வழிந்த கலரைக் கைகளால் வழித்தான்.  பாண்டி துணியைத் கொடுத்தான்.

“அழாதீங்கண்ணே” பாண்டி சொன்னது கேட்டது.

“அண்ணே, வெள்ளையடிச்சுக் கொடுக்கணுமா அண்ணே?”

“அட நீ வேற, இவன மாதிரி எவ்வளவு பேரைப் பார்த்திருப்பேன்.  இவனுக்கெல்லாம் பயந்தா உலகத்திலே பிழைக்க முடியாது.”

பாண்டி பயத்துடன் நின்று கொண்டு ரோட்டின் இருபக்கமும் மாறி மாறி பார்க்க சோமு பாக்கி இருந்த அந்த ஓர் எழுத்தையும் எழுதி முடித்தான். ஊருக்குப் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது அடிபட்ட விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என ஒரு நூறு தடவையாவது பாண்டியிடம் சொல்லியிருப்பான் சோமு.

ஊருக்கு வந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே தனம் சொன்னாள்  “பாண்டியோட அப்பா நீங்க வந்திட்டீங்களா வந்திட்டீங்களான்னு நாலைஞ்சு தடவை கேட்டுட்டுப் போனார்”.

அவர் எதுக்கு வந்திருப்பார் என யோசித்துக் கொண்டே சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினான் சோமு.

பணத்தை எடுத்து தனத்திடம் கொடுத்தான்.  “பத்திரமா வை.  மூத்தவனை ஸ்கூலில் சேர்க்கிறதுக்காக இந்தப் பணம் ஜாக்கிரதை”.

வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மூத்தவன் அப்பா வந்ததும் வேகமாக ஓடி வந்து ஒரே குதியாய்க் குதித்து கழுத்தில் தொற்றிக் கொண்டான். 

வீட்டு வாசலில் யாரோ வரும் நிழல் தெரிந்தது.  பாண்டியின் அப்பா.  பையனைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு சோமு எழுந்து நின்றான்.

“வாங்க, வாங்க”

பாண்டியின் அப்பா தயங்கி நின்றார்,

“சொல்லுங்க” என்றான் சோமு.

“பாண்டிய இந்த வருஷம் ப்ளஸ் ஒன்ல சேர்க்கலாம்னு இருக்கேன்.  ஃபர்ஸ்ட் குரூப் தர்றேன்னு ஸ்கூல்ல சொல்றாங்க” என்றவர் மெல்லிசான குரலில் “நீங்க ஒரு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா..” இழுத்தார்,

“கொஞ்சம் இருங்க” வீட்டிற்குள் போனான்.  தனத்திடம் பணத்தை வாங்கி வெளியே வந்தவன் பாண்டியின் அப்பாவிடம் கொடுத்தான்.

பாண்டியின் அப்பா போய்விட்டார்.

தனம் சோமுவின் முகத்தைப் பார்த்தாள்.  மூத்தவனுக்கு கேள்வி முகத்ததில் எழுதியிருந்தது.  சுவரைப் பார்த்து திரும்பிக் கொண்டே சோமு சொன்னான் “இன்னொரு ஆர்டர் கிடைக்குதா பார்க்கலாம்!”

தனம் அமைதியாக இருந்தாள்.  அவள் முகத்தைப் பார்த்துச் சொன்னான் “பாவம், பாண்டியும் படிக்க வேண்டிய புள்ளைதானே?”

சோமுவின் கை அனிச்சையாகக் கன்னத்தைத் தடவியது.  காதுக்குக் கீழே இன்னும் வலித்தது.

@

இனிய உதயம் – 2004 

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *