மன்மோகன் சிங்கின் முதல் கால கட்ட ஆட்சி சிறப்பானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது ஆனால் இரண்டாம் கால கட்ட ஆட்சியில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளாகும். காலம் தவறிய பருவ மழை, சில மாநிலங்களில் வறட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் – மே 2014ல் நடைபெற்ற தேர்தலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற உறுதிமொழிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. இதன் பலன் இக் கூட்டணி 336 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி நாட்டின் 16வது பிரதமராக மே 26, 2014ல் பிரதமராகப் பதவி ஏற்றார். முழுமையாக ஐந்து ஆண்டுகள் 2019வரை பிரதமராக ஆட்சி செய்தார்.

இந்தியாவில் மோடிக்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் சுயச்சார்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்களின் ஆட்சி சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு துவக்கத்தில் தனித்துவமான கொள்கைகள் எதையும் முன்னெடுக்கத் திட்டமிடவில்லை. ஆனால் தேசிய அளவில் பல பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மாற்ற முனைந்தது. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம், இயற்கை சூழலைக் கொண்ட நாடு. இதற்கான முக்கியத்துவம் இவற்றின் இயல்பிற்கு ஏற்ப கொடுத்து வந்தநிலையில் ஒரே நாடு ஒரே கொள்கை என்பதை மோடி அரசு பின்பற்றியது.

இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கச் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு மார்ச் 15, 1950ல் அன்றைய பிரமர் நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழு 12 ஐந்தாண்டு திட்டங்களைத் தந்தது. இது கலைக்கப்பட்டு ஜனவரி 1, 2015ல் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அரசுக்கு (ஒன்றிய, மாநிலங்கள்) உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது திட்டக்குழு போல் அல்லாமல் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆனால் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமற்றதாக இருக்கும், பகுதி நேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளும் என்ற இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்து பட்டு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்தியது. மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு நடவடிக்கைகளும் பெருமளவிற்குப் பொருளாதாரத்தின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியது.

நவம்பர் 8, 2016ல் 86 விழுக்காடு பண சுழற்சியைக்கொண்ட உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 பணங்களை மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இதன் வழியாகக் கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் நீர்மப் பணம் புழக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது உழவுப் பணிகள் துவங்குகிற காலம் எனவே அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கட்டுமானத்துறை, சிறு, குறு தொழில்கள் பெருமளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 விழுக்காடாக வேலையின்மை 2017-18ல் காணப்பட்டது.

காலம் காலமாக ஒன்றி, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதித்து வந்த நிலையில் இதனை முறைப்படுத்த ஒரே நிலையிலான வரியினை நாடு முழுவதும் விதிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபின்பு இதனைச் சட்டமாக்கி ஜூலை 1, 2017ல் 17 மறைமுக வரிகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தியது. இது ஐந்தடுக்கு முறையில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என்ற வழிகளில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையினால் நுகர்வோர் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. உண்மை நிலையில் இதனால் அரசுக்கான வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் நுகர்வுப் பொருட்களின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் பெருமளவிற்கு ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களின் சொந்த வரி மூலம் பெறப்படும் வருவாய் குறைந்தது. ஜி.எஸ்.டி வழியாகப் பெறப்பட்ட வருவாயையும் ஒன்றிய அரசு சரியாக மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பல சிறு, குறு தொழில்கள் இவ் வரியினால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டது.

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை மேம்பாட்டிற்கான உறுதி மொழி, வாசகங்கள் (slogam), புதிய திட்டங்கள், நடவடிக்கைகள், ஏதும் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இந்திய உணவுக் கழகம் திறம்படச் செயல்பட வைப்பது, விவசாயிகள் மேம்பட புதிய தொழினுட்பங்களைப் புகுத்துவது, தேசிய வேளாண் சந்தை அமைப்பது, மக்களின் பழக்கங்களோடு தொடர்புடைய வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துவது, விலை நிலைப்பு நிதியை உருவாக்குவது, வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது, மண் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வேளாண் இழப்பினைச் சரிசெய்யக் காப்பீட்டை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண்மை சார்ந்ததாக இருந்தது.

மோடியின் முதல் கட்ட ஆட்சிக்காலமான 2014-15 முதல் 2018-19வரையில் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள், 1) நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா 2015ல் தொடங்கப்பட்டது. 2) பிப்ரவரி 2016ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக 2022க்குள் அதிகரிப்பது. 3) நிதி ஆயோக்கால் மார்ச் 2016ல் மாதிரி நில குத்தகைச் சட்டம் வடிவமைக்கப்பட்டுக் குத்தகைச் சட்டத்தை மேம்படுத்தி குத்தகை தாரர்கள் பயனடையச் செய்யப்பட்டது. 4) ஏப்ரல் 2016ல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற விரிவான பயிர்க் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 5) வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை படுத்துதல் (மேம்பாடு மற்றும் வசதியளிப்பு) சட்டம் 2017 நடைமுறைப்படுத்தப்பட்டது (ஏப்ரல் 2017ல்). இதன்படி மாநிலங்களில் இனம்கண்டுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருமுகப்படுத்துதல், தனியார் சந்தை, நுகர்வோர் சந்தை, நேரடிச் சந்தைப் படுத்துதல் போன்றவை அமைத்தல், கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் சந்தை முற்றமாகப் பிரகடனப் படுத்துதல், சந்தை கட்டணம், முகவர் கட்டணம் போன்றவற்றில் நியாயமான முறையினைப் பின்பற்றுதல், மின்னணு வர்த்தகத்திற்கு ஒருநிலையிலான அனுமதி, சந்தைக் கட்டணங்கள் ஒரு நிலையில் மட்டும் விதிப்பது, கிராமிய சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களை வாங்க வழி செய்தல் போன்றவை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

6) ஆகஸ்ட் 2017ல் தண்ணீரை உச்ச அளவிற்குப் பயன்படுத்த நுண்ணீர் பாசன முறையினை ஊக்குவிக்க ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ (per drop, more crop) என்ற முறை முன்னெடுக்கப்பட்டது. 7) ஏப்ரல் 2018லிருந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை 2022-23ல் இரட்டிப்பாக்குதல். 8) பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikaas Yojana) மார்ச் 2018ல் தொடங்கப்பட்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 9) பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mandri Annadata Aay Sanrakshan Abhiyan) செப்டம்பர் 2018ல் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையை வேளாண்மை விளைபொருட்களுக்கு உறுதி செய்வதாகும். 10) டிசம்பர் 2018ல் ‘வேளாண் ஏற்றுமதிக் கொள்கை’ வெளியிடப்பட்டது இதன்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல், இந்திய விவசாயிகளை ஒன்றிணைப்பது, வேளாண் விளைபொருட்களை உலகளாவிய மதிப்பு சங்கிலத் தொடரை உருவாக்குவதாகும். 11) குறு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உறுதிசெய்யும் விதமாகப் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்டது. 12) வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் யூரியாவினைப் பாதி அளவாக்க 2022-23 குறைத்தல்.

இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகள் வளர்த்தல் வழியாக மொத்த வருவாயில் 2002-03ல் 50.1 விழுக்காடு பெற்றிருந்தனர் இது 2015-16ல் 43.1 விழுக்காடாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் கூலி வழியாகப் பெறும் குடும்ப வருமானமானது 38.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது (Ashok Gulati 2021). பிப்ரவரி 28, 2016ல் பெல்லாரியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022ல் இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017ல் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்கு அதிகரிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் ஏப்ரல் 2016ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் இக் குழு அறிகையினை அரசுக்கு அளித்தது. இதன்படி 2012-13ல் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.17862 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வருமானத்தை 2015-16 மற்றும் 2022-23 இடையில் உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வள ஆதாரங்களைத் திறனாகப் பயன்படுத்துவது, வேளாண் உற்பத்திக்குத் திறனான பணமதிப்பினை உருவாக்குவது, இரண்டாம் நிலையிலான வேளாண் நடவடிக்கைகளின் பரவலை ஏற்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.

உணவு தானிய மேலாண்மை முறையினை அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தியது. இதன்படி அரசு நெல், கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அளித்து கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை 5 லட்சம் நியாய விலைக் கடைகள் வழியாகப் பொது விநியோக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2013ல் பொது விநியோக முறையானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தது. இதனை இந்திய உணவுக் கழகம் ஒருங்கிணைப்பு முகவராக இருந்து செயல்படுத்துகிறது. இதன்படி ஆண்டுக்கு 61.4 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் 8.13 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினர் இதனால் பயனடைந்தனர். பொதுவாக உணவுக்கான அதிகபட்ச மானியம் 2001-02முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2016-17 மற்றும் 2017-18ல் இதற்கான மானியம் ரூ.1.1 லட்சம் கோடி, ரூ.1.0 கோடி என்று முறையே வழங்கப்பட்டது. 2017-18லிருந்து 2018-19ல் மானியமானது 71 விழுக்காடு அதிகரித்தது. 2001-02லிருந்து அடுத்து வந்த 17 ஆண்டுகளில் 10 மடங்கு உணவுக்கான மானியம் அதிகரித்திருந்தது.

உணவு தானிய மேலாண்மை முறையில் கிடங்குகள் பற்றாக்குறை, போக்குவரத்தில் முறையற்ற மேலாண்மை, கசிவுகள், போக்குவரத்து வழியாகப் பரிமாற்றம் செய்யும்போது தானியங்கள் சிந்துதல், இந்திய உணவுக் கழகம் திறனற்று இருப்பது போன்றவற்றால் அதிக செலவுகள், விரயங்கள் ஏற்படுகிறது எனவே இதனைச் சரிசெய்ய மோடி அரசானது சாந்த குமார் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது ஜனவரி 2015ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி 1) நடைமுறையில் உள்ள உணவு தானிய வழங்கலைக் குறைத்து அதற்குப் பதில் ரொக்கப் பண மாற்றத்தை அனுமதிப்பது, 2) இந்திய உணவு கழகம் நடைமுறையினைச் சரிசெய்து புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் கொள்முதல் வழியாக உணவுப் பொருட்களைத் தகுந்த விலைகொடுத்து வாங்குதல், 3) தேசிய உணவுப் பாதுகாப்பினால் பயனடையும் 67 விழுக்காடு மக்களின் பங்கை (மொத்த மக்கள் தொகையில்) 40 விழுக்காடாக்கக் குறைத்தல், 4) மாநில மற்றும் தனியார்த் துறையினை ஈடுபடுத்தி வெளிப்புற நடவடிக்கைகளின் வழியாக உணவு தானிய இருப்பை அதிகரிப்பது, 5) அதிக அளவிற்கு விளைபொருட்களைக் கையாள வினியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, கணினி மயமாக்குவது, அதிக அளவிற்கு உழலுக்கு வழி வகுக்கும் உணவு தானியம் கையாளும் முறையினை ஒழிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.

மார்ச் 31, 2018ன்படி இந்தியாவில் 6676 முறைப்படுத்தப்பட்ட மொத்த விலைச் சந்தைகள் இயங்கிவந்தது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவில் இச் சந்தை இல்லாததால் அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக வேளாண் சந்தைகளைத் தொடங்கியது. வேளாண்மை மற்றும் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதல் சட்டம் 2017, 2018-19ல் கிராம வேளாண் சந்தை, 2016ல் தேசிய வேளாண்மைச் சந்தை, 2018ல் பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம், 2018ல் வேளாண் ஏற்றுமதி கொள்கை, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண் மற்றும் சேவைச் சட்டம் 2018, 2016ல் சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்தை விலக்கிக் கொண்டது போன்றவை வழியாக வேளாண் சந்தைப் படுத்துதலை மேம்படுத்தியது.

குறைந்த பட்ச ஆதார விலையை 2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குழு (APMC) என்பதை ஏற்றுக்கொண்டு பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒப்பந்த மற்றும் நேரடிச் சந்தை படுத்துதலுக்குத் தனியாரை அனுமதித்ததால் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பல மாநிலங்களில் குறைந்த அளவிலே சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது. பொதுவாக வேளாண்மைச் சந்தையானது திறனற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும், முற்றுரிமை உடையதாகவும் இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே ஏப்ரல் 2017ல் வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடைகளைச் சந்தைப் படுத்துதல் (APLM) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் ஒத்த நிலையிலான சந்தைகளைப் பிரகடனம் செய்தல், தனியார்ச் சந்தைகளை அமைப்பது. விவசாயி-நுகர்வோர் சந்தைகளை உருவாக்குதல், நேரடிச் சந்தையை ஏற்படுத்துவது, கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைச் சந்தை முற்றமாக அறிவிப்பது, நியாயமான சந்தைக் கட்டணம் மற்றும் முகவர் கட்டண விதிப்பு, மின் சந்தை அமைப்பது போன்றவை உருவாக்கப்பட்டது.

மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் 2018ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கும் வாங்குபவருக்கும் இடையே நேரடி ஒப்பந்த முறை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்றுப் பணம் பெறலாம் என்பதால் இழப்புகள் தவிர்க்கப்படும். வாங்குபவர்களும் குறிப்பிட்ட காலத்தில் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் இடைத் தரகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் லாபம் பெற இயலும் (Pavneet Kauris et al 2018).

கிராமப்புற வேளாண் சந்தைகள் 2018-19ல் 22941 இருந்தன இதில் 22000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. 10000 கிராமப்புறச் சந்தைகள் வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு நிதியினைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டது. வேளாண் நுட்ப உள்கட்டமைப்பு நிதியின் வழியாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜூலை 1, 2015ல் தேசிய வேளாண்மைச் சந்தை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14, 2016ல் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அதிக அளவில் வாங்குபவர்களை அந்த அந்த மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கித்தருவது போன்றவையாகும். மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையானது மூன்று முக்கிய முன் தேவைகளைக் கொண்டது. இதன்படி 1) மாநிலம் முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே உரிமத்தை உறுதிசெய்வது, 2) மாநிலம் முழுவதும் ஒரே முனையத்தில் கட்டணம் விதிப்பது அல்லது மாநிலம் முழுக்க கட்டணமற்ற சந்தையினை அளிப்பது. 3) மின்னணு முறையில் ஏலம் நடத்துவது போன்றவையாகும். இத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 585 வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் குழுக்கள் இணைக்கப்பட்டது. இதனால் 1.66 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதே சமயம் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் கட்டணமற்ற முறை பின்பற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றது, விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்குப் பணம் செலுத்த மின்னணு பரிமாற்றம்; பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் கால காட்டத்தில் 2014ல் வறட்சி ஏற்பட்டது, அடுத்து 2015ல் கடுமையான வறட்சி நிலவியது இதனால் உணவு தானிய உற்பத்தி 13.03 மில்லியன் மெட்ரிக் டன், 0.5 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவு குறைந்தது. பருப்பு உற்பத்தி 2.1 மில்லியன் மெட்ரிக் டன், 0.8 மில்லியன் மெட்ரிக் டன் எனக் குறைந்தது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது. பருப்பிற்கான நுகர்வோர் விலையானது 2016ல் முதல் பாதியில் 33 விழுக்காடு அதிகரித்தது. உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாகப் பருப்பு விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பருப்பிற்கானக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அதிகரித்தது, பருப்பு இறக்குமதி செய்தது இதனால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை நன்றாக இருந்ததால் பருப்பு உற்பத்தி அதிகரித்தது. இந்த நிகழ்வுகளால் பருப்பு விலையானது 2017-18ல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதுபோன்ற நிலையே எண்ணெய்வித்திலும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனைப் போக்க அரசு பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் மூன்று உபதிட்டங்கள் இடம் பெற்றிருந்தது. 1) விலை ஆதரவு திட்டம்: இதன்படி ஒன்றிய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராகச் செயல்பட்டுப் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொப்பரை போன்றவற்றுக்குத் தகுந்த விலையினை அளித்தது. இந்திய உணவுக் கழகத்தை இதில் ஈடுபடச் செய்தது. 2) விலைப் பற்றாக்குறையைச் செலுத்தும் திட்டம் (PDPS): இதன்படி இனம்காணப்பட்ட வேளாண் சந்தையில் பதியப்பட்ட விவசாயிகளுக்குத் தங்களின் விளைபொருட்கள் விற்பனையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கும் உண்மையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டு விலைப் பற்றாக்குறையினை அறிந்து விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்துவதாகும். மேலும் வெளிப்படையான ஏலச் சந்தையினை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவதாகும். 3) தனியார்த் துறை அனுமதி: கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அரசானது தனியார்த் துறையினை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்ய முன்னோட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. ஆனால் மாநில அளவில் இதற்கான தகுந்த வரவேற்பு இல்லை. பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கமானது சிறு, குறு விவசாயிகளிடையே சென்றடையாததால் இத் திட்டம் வெற்றிபெற இயலவில்லை.

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாக விலை அளிப்பதாக அறிவித்தது. இதன்படி 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையை A2 + FL என்ற அடிப்படையில் விலை தீர்மானம் செய்து அத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் C2 என்ற செலவினை கணக்கில் கொள்ளாமல் இவ்விலை அளிக்கப்பட்டதால் A2 + FL வானது C2 வைவிட 38 விழுக்காடு குறைவாக இருந்தது. அதே சமயம் இவ் விலை அறிவிக்கப்பட்டபோது பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இவ் குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை காரணம் அரசு கொள்முதல் செய்யப்படும் கொள்முதல் மையங்களில் மட்டுமே இது பின்பற்றப்பட்டது. மேலும் இவ்விலை அறிவிக்கப்பட்டபோது எற்கனவே நடப்பில் இருந்த குறைந்த பட்ச ஆதரவு விலையைனைத்தாண்டி எந்த பெரிய மாற்றமும் எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது மொத்த வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடையவற்றுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருந்தது. இக் குறைந்த பட்ச ஆதரவு விலையானது மிகக்குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே பலனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி வேளாண் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இயற்கையைச் சார்த்திருக்கிறது. நீர்ப்பாசனம் அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா என்ற திட்டம் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குச் செயற்கை நீர்ப்பாசன வசதி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்குச் சொட்டுநீர் பாசனம், விவசாயப் பண்ணைகள் அமைப்பது, போன்றவற்றை இத்திட்டம் நிறைவேற்ற முனைந்தது. இதன்படி 99 முதன்மையான நீர்ப்பாசன திட்டங்களை இனம்கண்டு நீர்ப்பாசன வசதியை 2019க்கு முன்பு மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது ஆனால் பிப்ரவரி 2019ல் 4 திட்டங்கள் மட்டுமே முடிவுறும் தறுவாயில் இருந்தது, 51.4 விழுக்காடு திட்டங்கள் டிசம்பர் 2019ல் முடிவுபெறும் தறுவாயில் இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இருந்ததை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்று பெயர் மாற்றம் செய்து 2016ல் இவ் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இப் புதிய திட்டம் விவசாயிகள் செலுத்தவேண்டியப் பிராமியத்தினை குறைத்துச் செலுத்த வழிவகுத்தது மட்டுமல்ல சில கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. 2015-16ல் இத் திட்டமானது மொத்த விளைநிலப் பரப்பில் 22 விழுக்காடு நிலங்களை உள்ளடக்கியிருந்தது, 2017-18ல் இது 29 விழுக்காடாகவும், 2018-19ல் 29.33 விழுக்காடாகவும் அதிகரித்தது. இதனால் 1.56 விவசாயிகள் பயனடைந்தனர். இக் காப்பீட்டில் பயனடைய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் முழு அளவிற்கு விவசாயிகளுக்குப் பலன் சென்றடையவில்லை. நெசவாளர்கள் இத்திட்டத்தின் வழியாகக் கடன்பெற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனால் இதில் பல முறைகேடுகள் காணப்பட்டது, மாநில அரசு கால வரையறைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் காப்பீட்டுத் தொகை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் தாமதப்படுத்திக் காப்பீட்டுத் தொகையை வழங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமாக இந்த திட்டத்தால் லாபம் அடைந்தது. தோட்டக்கலை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த காப்பீடு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அக்டோபர் 1, 2018ல் அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து (தாமதமாக வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்குதல், சராசரி நகர்விற்குக் கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது, விவசாயிகளுக்குக் காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் அளிப்பது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணக்கில் கொள்வது) நடைமுறைப்படுத்தியது. ஆனால் திறனற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற நிலை, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டாதது போன்ற பின்னடைவுகள் இத் திட்டத்தில் காணப்பட்டது.

இந்தியாவில் குறு, சிறு விவசாயிகள் (2 ஹெக்டேர் நிலத்திற்குக் கீழ் வைத்திருப்பவர்கள்) 2015-16ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு உள்ளனர். இவர்கள் தங்களின் வேளாண் பணியினை மேற்கொள்ள முறைசாராக் கடன்களை அதிமாகப் பெறுவதால் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். NCRBயின் தரவுகளின்படி 1995முதல் 2016ஆம் ஆண்டுவரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012-13ஆம் ஆண்டு தரவுகளின்படி பெரிய விவசாயிகளின் குடும்ப வருமானம் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தைவிட 5.6 மடங்கு அதிமாக உள்ளது. பெரிய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.46307 வருவாய் ஈட்டுகின்றனர் ஆனால் சிறு விவசாயிகள் ரூ.44345 மட்டுமே ஈட்டுகின்றனர். விவசாயிகளின் மொத்த வருமானத்தில் 47.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மை சாகுபடியினால் கிடைக்கிறது (Suijit Mistra et al 2021). இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாறுபாடு போன்றவற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிக இழப்பினை எதிர்கொள்கின்றனர். இதன்பொருட்டு ஒன்றி அரசானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை 2019ல் நடைமுறைப்படுத்தி குறு, சிறு விவசாயிகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடுமின்றி ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2019-20ல் இத் திட்டத்திற்கு ரூ.75000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையினை ஏப்ரல் 1, 2019ல் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. மார்ச் 7, 2019ன் படி 2.2 கோடி விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். இத்திட்டமானது நில உடைமையாளர்களுக்கும், பயிரிடப்படக்கூடிய நிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அரசு ஊதியம் பெறுபவர்கள், குத்தகை தாரர்கள், நிலமற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. மேம்படுத்தப்படாத நில ஆவணங்கள், விவசாயிகளிடையே வங்கிப் பழக்கமின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை. அத்திமான அளவிற்கு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதால் (ஜி.டி.பியில் 0.4 விழுக்காடு) அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்தி வேளாண் தொழில் முனைவோர்களை ஈடுபடச் செய்யவும், வேளாண் வணிகத்திற்கு நிதி உதவியினைச் செய்யவும், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டத்தை 2018-19ல் தொடங்கப்பட்டது. இதுபோன்று வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண் கழிவுகளால் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது எனவே இதனைக் கையாள்வதற்கு நிதி உதவி மற்றும் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டமும், வாடகைக்கு இயந்திரங்கள் அளிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை அறியவும் மாற்று நடைமுறையினைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும் அவற்றை அதிகரிக்கவும் ராஷ்டிரிய கோகுல் திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது. பிரதான மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற திட்டம் ரூ.6000 கோடி செலவில் 2016-2020க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி உணவுப் பூங்கா அமைத்தல், முன்னோக்கி-பின்னோக்கிய தொடர்புகளை உருவாக்குவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பை அமைப்பது, சங்கிலித் தொடர் குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துதல், வேளாண்-செயல்பாட்டுத் தொகுதிகளுக்குக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Source: Pulapre Balakrishnan 2022.

மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது நிதிப் பற்றாக்குறையானது 2013-14ல் 4.4 விழுக்காடாக இருந்தது இது அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து 3.4 விழுக்காடாக 2018-19ல் இருந்தது. பணவீக்கம் பொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கமானது 2013-14ல் 9.5 விழுக்காடாக இருந்தது 2018-19ல் 3.4 விழுக்காடாகக் குறைந்தது (Pulapre Balakrishnan 2022). இதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பணவீக்கம் குறையவில்லை என்றும் எரிபொருள் (பெட்ரோல்-டீசல்) விலை பன்னாட்டு அளவில் குறைவது என்பது பணக் கொள்கைக்கு அப்பாற்பட்ட புறக் காரணியாகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி 2013-14லிருந்து 2016-17 வரை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் 2017-18ல் 1.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இது மேலும் 2018-19ல் 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதுமாகும். இதன் விளைவு வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது (வேலையின்மை 2015-16ல் 5 விழுக்காடும், 2017-18ல் 6.1 விழுக்காடும், 2018-19ல் 5.8 விழுக்காடுமாக இருந்தது). இத்துடன் தொழிலாளர் பங்கேற்பு ஆற்றலும் குறையத் தொடங்கியது. மோடி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கடைப்பிடித்த “குறைந்த பட்ச அரசு” என்ற உத்தியைப் பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிச் சிக்கலிருந்து பல நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாததால் இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண்மையின் வளர்ச்சியானது பூஜ்யத்திற்குக் கீழ் சென்றது. வெளிநாட்டு முதலீடு வரத்து குறைந்தது, தேவை குறைந்தது. உற்பத்தியாளர்கள் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி இருந்தனர்.

வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் சராசரியாக 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடைந்ததைவிட (4.3 விழுக்காடு) குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வேளாண் துறையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவமழையினை சார்ந்திருப்பதாகும். 49 விழுக்காடு விளைநிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. பருவமழையானது 2002ல் -19.2 விழுக்காடு குறைவான மழையும், 2004ல் -13.8 விழுக்காடும், 2009ல் -21.8 விழுக்காடும், 2014ல் -12 விழுக்காடும், 2015ல் 14 விழுக்காடு குறைவாக மழையினைப் பெற்றுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியானது இக்கால கட்டங்களில் குறைந்திருந்தது. இந்தியச் சுதந்திரம் அடைந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வறட்சியினை 1965 மற்றும் 1966லும், 1986 மற்றும் 1987லும், 2014 மற்றும் 2015லும் எதிர் கொண்டுள்ளது. மோடி ஆட்சியில் இத்தகைய தொடர் இரண்டு ஆண்டுகள் வறட்சியினை சந்தித்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதைத் தவிர உள்நாட்டில் விலையில் எற்றத் தாழ்வு நிலவியதும், உலகளாவிய அளவில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (e-NAM) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer Producer Company) போன்றவற்றால் வேளாண்மையின் லாபம் பாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகள் நிறைவேற்றாமல் இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நீர்மமாகப் பணம் பயன்படுத்த முடியாமல் போனது போன்றவை வேளாண்மை வளர்ச்சிக்கான தடைகளாக இருந்தது. இதன் காரணமாக மோடி ஆட்சியின் முதல் கால கட்டத்தில் வேளாண் வளர்ச்சி குறைந்ததற்கான முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.

அசோகா குலாட்டி, ஸ்வேதா சைனி மற்றும் ரஞ்சனா ராய் (2021) என்பவர்களின் ஆய்வுப்படி A2 செலவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நெல்லின் லாப விளிம்பானது (விழுக்காட்டில்) 2012-13 108 ஆக இருந்தது 2015-16ல் 90 ஆகக் குறைந்துள்ளது, கோதுமை 183லிருந்து 155 ஆகக் குறைந்துள்ளது, கரும்பு 183லிருந்து 153ஆகக் குறைந்துள்ளது, சோளம் 101லிருந்து 79ஆகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் மட்டும் அதிகரித்துள்ளது. இச்செலவுடன் சொந்த உழைப்பிற்கான பணமதிப்பு, சொந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த மூலதனத்திற்கான வட்டியும் சேர்த்துப் பார்த்தால் லாப விளிம்பானது எதிர்மறையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சா குமாரின் (2019) ஆய்வின்படி வேளாண் பயிர்களில் புதிய பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவது, அதிக களைகள் உருவாகுவது, மண்ணின் வளத் தன்மை குறைந்து வருவது, ரசாயன உரத்திற்கு மாற்று நடைமுறையில் பயன்படுத்த முன்வராத நிலை, இடுபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது, மானியம் மற்றும் கடன் நிவாரணம் தொடர்ந்து அதிகரித்திருப்பது போன்றவை அன்மைக் காலங்களில் வேளாண்மையில் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (Richa Kumar 2019).

சுக்பால் சிங்கின் (2013) ஆய்வுப்படி 2003ஆம் ஆண்டு தரவுகளின்படி 40 விழுக்காடு இந்திய விவசாயிகள் வேளாண் தொழிலை விருப்பமின்றி தொடர்வதாகவும், இதற்கு முக்கியக் காரணம் குறைவான லாபம், அதிகமான இடர், வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் சமூகத்தில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நல்வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர், அவ் வாய்புகள் அமையப்பெற்றால் வேளாண்மையிலிருந்து வெளியேறத் தயாராக உள்ளனர் என்கிறார். மற்றொரு வகையில் வேளாண்-வேளாண் சாரா வருமானத்தின் இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. 1980களின் இடையில் இவ் இடைவெளியானது 1:3 என்று இருந்தது, 1990களின் மத்தியில் இது 1:4.8 என அதிகரித்தது, 2011-12ல் இது 1:3.12 என்று மாற்றமடைந்தது. வேளாண்மையில் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் என்று புள்ளிவிவர ஆதாரங்களுடன் இவ் ஆய்வு தெரிவிக்கிறது (Sukhpal Singh 2018 2018).

இந்தியா இத்துவரையில்லாத காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, விவசாயிகள் லாப விளிம்புநிலை குறைந்து வருவது என்பது வேளாண்மையின் இந்திய தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது. இந்தியாவில் சராசரி சாகுபடிப் பரப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது இதற்கு முக்கியக் காரணம் குடும்ப அமைப்பின் பிரிகையால் நிலம் துண்டாடப் படுவதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விவசாய வருமானம் மேலும் குறையும். தற்போது அதிகரித்திருக்கும் வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனை மேலும் அதிகரிக்க அரசு அடிப்படையாக வேளாண் துறையுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை உணர்ந்து இடுபொருட்களை மாற்றிப் பயன்படுத்தவேண்டும். இந்திய விவசாயிகள் வேளாண் செயல்பாடுகளில் எவ்வித திறன் மேம்பாட்டையும் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

-பேரா.பு.அன்பழகன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *