எல்லார்க்கும் முன்
கலைந்துவிடுகிறது அவன் உறக்கம்
ஒரு கை அரிசியள்ளி
முற்றத்தில் வீசுகிறான்
ஆறேழு குருவிகள் விருந்தாளிகளாகின்றன
தூக்க முடியாமல் தடுமாறி
ஒரு பாத்திரத்தைத் தண்ணீருக்குகிறான்
குட்டி குட்டி பூச்செடிகளோடு
உறவாடியபடி தாகம் தீர்க்கிறான்
சிறு கிண்ணமொன்றில்
அவன் வைக்கும் தண்ணீருக்கு
பிரியமாக வந்து போகின்றன
பக்கத்து வீட்டு கோழிகளும்
ஓய்ந்த பொழுதில்
யாரிடமோ வாங்கிவந்த
விதைப் பந்துகளை
வேலிகளில் வீசிப்போகிறான்
புன்னகையோடு
அவனைத்தான்
ஒரு மதிப்பெண் குறைவென்று
மூன்றாம் வகுப்பில்
பெயிலாக்க வேண்டுமென்கிறீர்கள்
நன்றி –
கல்விக் கொள்கைக்கு எதிரான கவிஞர்களின் குரல்களாக ஒலிக்கும் தமுஎகச கவிதைத் தொகுப்பான
“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்”