பகத்சிங்- சுகதேவ்- ராஜகுரு| போராளிகள்|Bhagatsingh- Sugadev- Rajaguru

இளம் புரட்சியாளர்களின் நாயகனாக போற்றப்படும், தெளிந்த சிந்தனையும்,தீரம் மிக்க போர்குணமும் கொண்ட தோழர் பகத்சிங் அவர்கள், சுகதேவ்,ராஜகுரு என்ற தனது தோழர்களுடன் தூக்கு கயிற்றை முத்தமிட்ட நாள் இன்று.

அப்போது அவருக்கு வயது 24.

இன்றைய.பாகிஸ்தான்,லைலாபூர் மாவட்டம்,பங்கா எனும் கிராமத்தில், கிஷண்சிங்,வித்யாபதி என்ற பெற்றோருக்கு 28.9.1907 ல் பிறந்தவர் நமது தோழர் பகத்சிங்.

கம்யூனிச இலக்கியங்கள் கிடைக்கப்பெறாத காலகட்டமான தனது கல்லூரி நாட்களிலேயே மார்க்சிய தத்துவத்தை முறையாக உள்வாங்கியிருக்கிறார் தோழர் பகத்சிங்.

10,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட , 1919 ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத்சிங் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.அப்போது பகத்சிங் வயது 11.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்த பகத்சிங், 1922ல் காந்தி அந்த இயக்கத்தை நிறுத்தியதால் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார்.

1924 ல் இந்துஸ்தான் குடியரசு கழகத்தில் சேர்ந்தார்.பிறகு 1926 ல் சுகதேவ்,பகவதி சரண் வேரா ஆகியோருடன் இணைந்து “நவ் ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை தொடங்கினார்.

1928 ல் நடந்த போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தாக்கியதில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் மரணமடைந்தார். பகத்சிங் அரசியல் முன்னோடியான சித்தப்பா அஜித் சிங் லாலா அவர்களின் நெருங்கிய தோழர்தான் லஜபதிராய்.

அந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவானார் பகத்சிங்.

போராட்ட அரசியல் பாதையில் பகத்சிங் நாயகனாக வரித்துக்கொண்டது சர்தார் சிங் சாராபா அவர்களைத்தான். இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ‘கத்தார்’ கட்சியை சேர்ந்தவர்.

கத்தார் என்றால் அநீதியை எதிர்த்து கலகம் செய்வது என பொருள்.

மதவாதமும்,தீண்டாமையும் வேரறுக்க வேண்டும் என்பது கத்தார் கட்சியின் கொள்கை. இக்கட்சி விவசாயிகளையும்,ராணுவ வீரர்களையும் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்திட வற்புறுத்தியது.

ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்ததால் இக்கட்சியின் நூற்றுக்கணக்கான தோழர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது பிரிட்டிஷ் அரசு.

கத்தார் கட்சியை தலைமை வகுத்தவர்கள் சர்தார் சிங் சரபா மற்றும் விஷ்ணு கணேஷ் பிங்களே. இவர்கள் இருவரும் 16.11.1915 அன்று தூக்கிலிடப்பட்டனர்.அப்போது சர்தார் சிங் வயது 20. தனது அரசியல் நாயகனான சாராபாவின் புகைப்படம் பகத்சிங்கிடம் எப்பொழுதும் இருந்தது. 1929 ல் பகத்சிங் கைதானபோதும் அந்த புகைப்படம் பகத்சிங்கிடம் இருந்தது.

‘நவ ஜவான் பாரத் சபா’ தொடங்கியபோதும் சாராபாவின் படத்திறப்புடன்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சராபாவின் படத்தை வைத்திருப்பது குற்றம் என அரசு ஆணை பிறப்பித்தித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.

இந்த பின்னணியில்தான் பகத்சிங் தன் தோழர்களுடன் கொல்லப்படுகிறார்.

பகத்சிங் வாழ்க்கையை வெறுமனே இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்று மட்டுமே பார்க்கக்கூடாது.

பகத்சிங் சாதி,தீண்டாமை,மத,பெண்ணடிமை ஒழிப்பு நாத்திக போராளி!

பகத்சிங் ஒரு சோசலிச சித்தாந்தவாதி!

பகத்சிங் ஒரு மார்க்சிய,லெனினிய மாணவர்.

ஏகாதிபத்தியத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு ஆகியோருக்கு நமது செம்மார்ந்த வீரவணக்கங்கள்!

 

எழுதியவர் 

இரா. திருநாவுக்கரசு

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *