அறிவியல் மட்டுமே தீர்வு:
கோவிட்-19க்கு எதிரான போரில் அறிவியலுக்கு மாற்றாக எதுவுமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கான தலைவர் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறார்.
ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி கோவிட் -19 குறித்த தனது மூன்றாவது உரையை ஆற்றினார். மக்களின் மன உறுதியை அதிகரிக்கின்ற வகையில், மெழுகுவர்த்திகள், அகல் விளக்குகள், டார்ச்லைட்கள் மற்றும் மொபைலில் உள்ள ஒளிரும் விளக்குகளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளிரச் செய்யுமாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அவரது உரை நிகழ்த்தப்பட்ட பின்னர், இந்த ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவேற்ற வேண்டிய பிரதமரின் வேண்டுகோளுக்குப் பின்னால் உள்ள செயலின் ‘அறிவியல்’ குறித்து விளக்குகின்ற வீடியோ குடிமக்களுக்கான இந்திய அரசின் தளத்தில் ட்வீட் செய்யப்பட்டது. பிரதமரின் இந்த கோரிக்கை, யோகாவின் ‘கூட்டு உணர்வு நிலை’ கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கூறியிருந்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட மாட்டோம் என்று மக்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக நினைத்தால், அவ்வாறு நடைபெறுவதை அவர்களின் கூட்டு உணர்வு உறுதி செய்யும் என்று விளக்கிய அந்த மருத்துவர், பிரதமரின் கோரிக்கை ‘குவாண்டம் கொள்கையை’ அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியிருந்தார். விரைவிலேயே அந்த ட்வீட் நீக்கப்பட்டு விட்டது என்றாலும், இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவின் பொது சுகாதாரக் கொள்கையை இத்தகைய போலி அறிவியல் செய்திகள் எந்த அளவிற்கு ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதையே அந்த சம்பவம் நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
அறிவியல் மனப்பான்மைக்கான தேவை
பொது சுகாதாரத்தை நுண்ணுயிரிகள் எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை, இந்திய நவீன வரலாற்றில் இதற்கு முன்பாக ஒருபோதும் இந்திய மக்களுக்கு ஏற்பட்டதில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் கோவிட்-19 நோயின் பரவல் மற்றும் தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் தெரிவிக்கின்ற கருத்துக்கள் நமது நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. தேசிய அளவிலான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்த தருணத்தில், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மாற்று எதுவும் அறிவியலிடம் ஏன் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இந்தியாவின் உயர்மட்டத் தலைவருக்கு இருக்கிறது.
விநாயகர்
எந்த அளவிற்கு இவ்வாறான அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பவராக மோடி பணியாற்றி இருக்கிறார்? அதிநவீன அறிவியலை மகாபாரதம் உட்பட இந்திய புராணங்களுடன் இணைக்கும் வகையில் இரண்டு கூற்றுக்களை 2014 அக்டோபரில் பிரதமர் முன்வைத்தார். கர்ணனின் பிறப்பு ஸ்டெம் செல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் விளைவாக நடந்தது என்று அவர் ஹிந்தியில் ஆற்றியிருந்தார். யானையின் தலையை கடவுளின் உடலுன் ஒட்ட வைத்ததன் மூலமாக, உலகிலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை விநாயகரிடம் செய்யப்பட்டது என்று மும்பையில் மருத்துவமனை ஒன்றைத் திறந்து வைக்கும் போது, இதுபோன்றதொரு கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.
மகாபாரத வழிபாடு
இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி, தேசிய அளவிலான ஊரடங்கை அமலுக்கு வந்து ஒரு நாள் கழித்து, வாரணாசியில் வசிப்பவர்களுடன் மோடி உரையாடினார். மீண்டும் மகாபாரதத்தை தன்வசம் எடுத்துக் கொண்ட மோடி, 18 நாட்களில் மகாபாரதப் போர் வெல்லப்பட்டதாகவும், வைரஸுக்கு எதிரான இந்தப் போரை 21 நாட்களில் இந்தியா வெல்லும் என்றும் அப்போது கூறினார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள பிபெக் டெப்ராய், மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அளவிலான போர் நடந்தது, அதில் அதிசய ஆயுதங்களும் ரதங்களும் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து சந்தேகம் உள்ளது என்று தான் எழுதியிருக்கும் மகாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியலையும், புராணங்களையும் கலந்து 2014ஆம் ஆண்டு பிரதமர் வெளியிட்ட கருத்துக்கள், ’நமது காவியங்கள் வரலாற்று உண்மைகள்; அந்த காவியங்களில் உள்ள கற்பனைகள் நமது பண்டைய சாதனைகளின் பதிவுகள்; அவற்றில் அடங்கியுள்ள, நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ள அந்த ‘அறிவு’ நம்மிடையே இருப்பதால், அந்த பூர்வீக ஞானத்தின் மூலம் வாழ்க்கை அறிவியல் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்’ என்ற செய்தியையே மக்களுக்குத் தந்தன. இந்த 2020 ஆம் ஆண்டில் உருவாகியிருக்கின்ற உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான போரை வென்றெடுப்பதற்கான அவரது திட்டத்தை, அவரது 2014ஆம் ஆண்டு கருத்துக்களை நம்பியவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது குறித்து ஒருவரால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
மோடி வெளியிட்ட அந்த 2014ஆம் ஆண்டு கருத்துக்களுக்குப் பிறகு, பல மத்திய, மாநிலத் தலைவர்களும், அவரது கட்சியைச் சேர்ந்த ஆட்சியாளர்களும் வாழ்க்கை அறிவியலின் முதுகெலும்பை முறிக்கின்ற போலி அறிவியல் கூற்றுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2017 – 18ஆம் ஆண்டில், பரிணாமக் கோட்பாடு ‘அறிவியல் பூர்வமாக தவறு’ என்று கூறிய அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்யபால் சிங், அந்தக் கோட்பாடு பள்ளி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ‘பாரம்பரிய’ அறிவியல் என்ற போர்வையில் இவ்வாறான கருத்துக்கள் மறைமுகமாக வளர்ந்து வருவதற்கான சூழல் இருப்பதையே இவர்கல் முன்வைக்கின்ற கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாறான சூழல் நீண்ட காலமாக இருந்து வருகின்ற போதிலும், சமீப காலத்தில் அது வலுப்பெற்றுள்ளது. முதலமைச்சர்கள், மத்திய,மாநில அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், திரைப்பட பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சாமியார்கள், பொது மக்களின் ஆதரவைக் கொண்ட பிரபலமானவர்கள் இதுபோன்ற போலி அறிவியல் அறிக்கைகளை பலமுறை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற கருத்துக்களைப் பரப்புவதற்கு அறிவியல் கூட்டங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல் சார்ந்து பேசக் கூடியவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இருளை விரட்ட
எனவே சமீபத்தில் ஒலி அதிர்வுகள் வைரஸைக் கொல்லும் என்ற ‘கோட்பாடு’ அதிக எண்ணிக்கையிலானவர்களைச் சென்றடைந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கைகளைத் தட்டுதல், மணியை ஒலித்தல், உலோகத்தாலான சாப்பாட்டுத் தட்டுகளைத் தட்டுதல் போன்ற செயல்களால் நாட்டில் அத்தியாவசிய சேவை வழங்கி வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தது குறித்து மூர்க்கத்தனமான விளக்கத்தைத் தருவதற்கு, அறிவியல் முகமூடி அணிந்து வருகின்ற இத்தகைய புராணக்கதைகளைத் தவிர வேறொன்றும் இருக்கப் போவதில்லை. மார்ச் 22 அன்று மாலையில் ‘ஜனதா ஊரடங்கு உத்தரவை’ கொண்டாடுவதற்காக பல குழுக்கள் தெருக்களில் வலம் வந்தன.
கொண்டாட்டமான பிரதமரின் வேண்டுகோள்
உலோகத்தாலான பாத்திரங்களை பலமாகத் தட்டிக் கொண்டு அவர்கள் அதீத மகிழ்ச்சியுடன் சமூக நெருக்கத்தைக் கடைப்பிடித்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் சமூகத்தில் வைரஸ் பரவுவதற்கான ஆபத்தை அதிகரிக்காதா? அவ்வாறு ஆபத்தை அதிகரிக்காது என்றால், பலரும் ஊரடங்கு உத்தரவைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று மறுநாள் பிரதமர் ஏன் ட்வீட் செய்ய வேண்டும்? தெருக்களில் குவிந்து பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துமாறு மோடி மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை என்றாலும், தற்போது இருக்கின்ற அறிவியலுக்கு எதிரான சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவர் விடுத்த செய்தியை அவ்வாறு விளங்கிக் கொண்டதாலேயே அது நடந்தது என்று சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இந்த சூழலில் தொற்றுநோய்க்கான தீர்வுகளாக ஏராளமான போலி அறிவியல் தீர்வுகள் சொல்லப்படுகின்றன. மோடியின் வெள்ளிக்கிழமை காலை அறிவிப்பிற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒளியின் வலிமை குறித்த கூற்றுக்கள் பரவத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழல் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரதமருக்கு அதிகாரம் உண்டு. அவர் அவ்வாறு செய்திருந்தால் கோவிட்-19 க்கு எதிரான போரில் நாம் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்போம்.
நம்முன் இருக்கின்ற சவால்
போலி அறிவியலில் நம்பிக்கை கொண்டிருக்கின்ற இந்த அமைப்பிற்குள், அறிவியல், தொழில்நுட்பத்தால் மட்டுமே எதிர்த்து நின்று போராடக்கூடிய தொற்றுநோயை நாம் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம். தாராளவாத சமூகங்களில் போலி அறிவியல் என்பது மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்ற வாதத்தை 20ஆம் நூற்றாண்டின் அறிவியல் தத்துவஞானிகளான கார்ல் பாப்பர் மற்றும் இம்ரே லாகடோஸ் ஆகியோர் முன்வைத்துள்ளனர். இந்த நெருக்கடியான தருணத்தில் இந்த போலி அறிவியல் இந்தியாவின் பொது சுகாதாரத்தை மீளமுடியாத வகையில் பாதிக்காது என்று மட்டுமே இப்போதைக்கு நம்மால் நம்ப முடியும்.
அதுல் மிஸ்ரா, இணைப் பேராசிரியர், சர்வதேச உறவுகள் துறை, சிவ் நாடார் பல்கலைக்கழகம்.
2020,ஏப்ரல் 04, தி ஹிந்து ஆங்கில நாளிதழ். – – – தமிழில் பேரா.சந்திரகுரு.