இப்போது போலவே, பதினைந்தாம் நூற்றாண்டிலும் சூரியன் தினமும் காலையில் உதித்து, இரவில் மறைந்து கொண்டிருந்தது. அதன் முதல் கிரணங்கள் பனியை முத்தமிட்டபோது, பூமி விழித்தெழுந்தது. மகிழ்ச்சி, பரவசம், நம்பிக்கையின் கூச்சல்களால் காற்று நிறைந்தது.  இரவில் அதே உலகம் நிசப்தமாகி, இருளில் மூழ்கியது. சில சமயங்களில் மழை மேகங்கள் திரளும். கோபமாய் இடி முழங்கும். அல்லது ஒரு நட்சத்திரம் தூங்கி வழிந்து, வானிலிருந்து கீழே விழும். அல்லது வெளிறிப்போன ஒரு துறவி மடாலயத்திற்கு அருகில் ஒரு புலியைப் பார்த்ததாக தனது சகோதரர்களிடம் சொல்வார். அவ்வளவுதான். பின்னர் மீண்டும்,  பகல்பொழுதுகள் மற்ற பகல்பொழுதுகள் போலவே கழியும். இரவுகளும், மற்ற இரவுகளைப் போலவே.

துறவிகள் வேலை செய்தார்கள். பிரார்த்தனை செய்தார்கள். அவர்களது தலைவரான வயது முதிர்ந்த துறவி, லத்தீன் கவிதைகள் இயற்றுவார். அவற்றிற்கு இசையமைப்பார். அவற்றை ஆர்கன் கருவியில் இசைப்பார். அருமையான அந்த முதிர்ந்த துறவி மிகவும் திறமைசாலி. அவர் ஆர்கனை இசைக்கும் போது, வயது முதிர்வினால் கேட்கும் திறனை இழந்தவரும்,   மடத்தின் மிக மூத்தவருமான, முதிய துறவி ஒருவர் தன்னையறியாமல் கண்ணீர் உகுப்பார். தலைமைத் துறவி பேசும் போது –   மரங்கள், விலங்குகள், கடல் என்பது மாதிரி சாதாரண விஷயங்களைப் பற்றிப் பேசும்போது கூட -,  அதைக் கேட்பவர் புன்னகைக்காமலோ, அல்லது கண்ணீர் விடாமலோ கேட்க முடியாது. அவரது ஆர்கனில் அதிரும் அதே சுவரங்கள் அவரது ஆன்மாவிலும் அதிர்வது போலவே இருக்கும். துன்பத்தினாலோ, அல்லது மட்டற்ற மகிழ்ச்சியினாலோ, அவர் உணர்ச்சிவசப்படும் போது, பயங்கரமான அல்லது சிறந்த விஷயங்கள் பற்றி பேசும் போது, ஒரு உணர்ச்சிகரமான உத்வேகம் அவரை ஆட்கொள்ளும். பளிச்சிடும் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருகும். முகம் சிவக்கும். குரல் இடி போல் முழங்கும். அதைக் கேட்கும் துறவிகள் அவரது பரவச நிலையால் தம் ஆன்மா ஆட்கொள்ளப்படுவதாக உணர்வார்கள். இந்த அற்புதமான கணங்களில் அவரது சக்தி எல்லையற்றதாக இருக்கும்.  அந்த நேரத்தில், அவர் தன்னைவிட மூத்தவர்களை கடலில் போய் விழுமாறு கேட்டுக் கொண்டாலும், அவர்கள் சிறிதும் யோசிக்காது ஓடிப்போய் விழுந்துவிடுவார்கள்.

அவரது இசை, அவரது குரல், ஆண்டவரைத் துதிக்கும் அவரது கவிதைகள் எல்லாமே துறவிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தன. சிலசமயங்களில் எந்த மாறுதலுமற்ற அவர்களது வாழ்க்கை முறையால், மரங்கள், பூக்கள், வசந்த காலம் எதைப் பார்த்தாலும் சலிப்பாக இருக்கும். கடலின் ஓசை எரிச்சலைத் தரும். பறவைகளின் இன்னிசை நாராசமாய் இருக்கும். ஆனால் அவர்களது தலைமைத் துறவியின் திறமைகள், உணவு போல் அவர்களின் அன்றாடத் தேவையாக இருந்தன.

இப்படி பல ஆண்டுகள் சென்றன.  பகல்பொழுதுகள் மற்ற பகல்பொழுதுகள் போலவே கழியும். இரவுகளும், மற்ற இரவுகளைப் போலவே. காட்டு விலங்குள. பறவைகள் தவிர வேறு எந்த ஜீவராசியும் மடாலயத்திற்கு அருகில் வரவில்லை.  மனிதர்கள் வசிக்கும் படியான ஊர்  மடாலயத்திற்கு மிகவும் தொலைவில் இருந்தது. நூற்றியைம்பது மைல் நீள பாலைவனத்தைத் தாண்டினால்தான் அந்த ஊருக்குச் செல்ல முடியும்.  அதனால், இந்த மடாயலயத்திற்கு யாரும் வரமாட்டார்கள்.



ஆனாலும், துறவிகள் வியப்படையும் வண்ணம் ஒரு நாள் இரவு நேரத்தில் ஒருவன் மடாலயத்தின் கதவைத் தட்டினான்.  அந்தப் பக்கத்து ஊரைச் சேர்ந்த, வாழ்க்கையை நேசித்த மிக எளிய பாவி அவன் ! பிரார்த்தனை செய்து, துறவிகளின் ஆசியைக் கோருவதற்கு முன்பாகவே உணவும், மதுவும் கேட்டான் அந்த மனிதன். நகரத்திலிருந்து அந்த பாலைவனத்தைக் கடந்து எப்படி வந்தாய் ? என்று துறவிகள் கேட்டார்கள்.  வேட்டையாடக் கிளம்பினானாம். அளவுக்கு மீறி, குடித்து, வழி தவறி, பாலைவனத்தில் திரிந்து இந்த மடாலயத்திற்கு வந்திருக்கிறான்.  நீ துறவியாய் மாறி, உன் ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளேன் என்று துறவிகள் ஆலோசனை சொன்ன போது, அவன் புன்னகையுடன், “நான் உங்கள் நண்பனல்ல,” என்றான்.

திருப்தியாக மது அருந்தி, உணவுண்ட பின், தனக்கு உணவளித்த துறவிகளை தீர்க்கமாகப் பார்த்து, நிந்திப்பது போல் தன் தலையை ஆட்டிக் கொண்டான். ”துறவிகளான நீங்கள் எதுவும் செய்வதில்லை.  உங்கள் வயிற்றுப்பாடு பற்றிய கவலை மட்டும்தான் உங்களுக்கு. இதுதான் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியா? யோசித்துப் பாருங்கள். நீங்கள் இங்கே சாப்பிட்டுக் கொண்டு, குடித்துக் கொண்டு,  ஆசீர்வதிக்கப்படுவது பற்றி கனவு கண்டு கொண்டு நிம்மதியாக இருக்கிறீர்கள். உங்கள் சக மனிதர்கள் அங்கே நரகத்திற்கு சபிக்கப்பட்டு, நாசமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். நகரத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் ! சிலர் பட்டினியால் சாகிறார்கள். வேறு சிலர், தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்,  அதை தீய வழியில் செலவிட்டு, தேனில் விழுந்த ஈ போல் அழிகிறார்கள். மனிதர்களிடையே நம்பிக்கையோ, உண்மையோ இல்லை. அவர்களைக் காக்கும் பொறுப்பு யாருடையது? காலையிலிருந்து இரவு வரை குடித்துக் கொண்டே இருக்கும் என்னுடையதா? இந்த நான்கு சுவர்களுக்குள் சும்மா உட்கார்ந்திருக்கத் தான் ஆண்டவர் உங்களுக்கு நம்பிக்கையையும், அன்பையும், நல்லிதயத்தையும் தந்திருக்கிறாரா?” என்றான்.

நகரத்திலிருந்து வந்திருந்த அந்த குடிகாரனின், இழிவான, தகாத பேச்சு தலைமைத் துறவியை மிகவும் பாதித்துவிட்டது.  அந்த முதியவரும், மற்ற துறவிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர், தலைமைத் துறவி, ” சகோதர்களே ! இவர் சொல்வது சரிதான் ! அறிவின்மையாலும், பலவீனத்தாலும், துரதிருஷ்டவசமான மனித இனம் அவநம்பிக்கையிலும், பாபத்திலும் விழுந்து அழிகிறது என்பது உண்மைதான்.  நாமோ, இது நமக்கு சம்பந்தமில்லாதது என்று இந்த இடத்தை விட்டு நகருவதில்லை. நான் ஏன் அவர்களிடம் செல்லக் கூடாது? அவர்கள் மறந்து போன அந்த ஏசு கிறிஸ்துவை அவர்களுக்கு நினைவூட்டக் கூடாது?“ என்றார்.

நகரத்தானின் வார்த்தைகளால் முதியவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.  மறுநாள், தனது சகோதரர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது கைத்தடியை ஊன்றியபடி நகரத்தை நோக்கி நடந்தார்.  இவ்வாறாக, துறவிகளுக்கு அவரது இசையும், பாடல்களும், போதனைகளும் இல்லாமல் போனது.

 ஒரு மாதமானது. இரண்டு மாதமானது. இன்னும் பெரியவர் வரவில்லை. கடைசியாக, மூன்றாம் மாத இறுதியில் அவர்களுக்கு பரிச்சயமான அந்த கைத்தடியின் தட் தட் ஓசை கேட்டது.  துறவிகள் அவரைப் பார்க்க வாசலுக்கு ஓடினார்கள்.  பல கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவரோ, இவர்களைப் பார்த்ததும், மகிழ்ச்சியடையாமல், தேம்பி அழ ஆரம்பித்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. மூன்று மாத காலத்திலேயே, மிகவும் வயதானவராக மாறிவிட்டார்.  அவரது முகத்தில் களைப்பும், ஆழமான சோகமும் தெரிந்தன.  அழுதபோது, மிகவும் மோசமான அடிபட்ட ஒரு மனிதராக அவர் தென்பட்டார்.



இப்போது துறவிகளும் கண்ணீர் விட்டார்கள். ‘ஏன் இப்படி அழுகிறீர்கள்? உங்கள் முகவாட்டத்திற்கு காரணம் என்ன?‘ என்றார்கள். அவர் பதில் சொல்லாமல், தனது அறைக்குச் சென்று, உள்ளே தாளிட்டுக் கொண்டார். ஐந்து நாட்களுக்கு அவர் உண்ணவில்லை. உறங்கவில்லை. ஆர்கன் இசைக்கவில்லை.  துறவிகள் கதவைத் தட்டி அவரை அழைத்தார்கள். உங்கள் துக்கத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சினார்கள். மௌனம்தான் அதற்கு பதிலாகக் கிடைத்தது.

கடைசியில் அவர் வெளியே வந்தார். அழுதழுது சிவந்த முகத்தோடும், மிக வேதனையான பாவத்தோடும் கடந்த மூன்று மாதங்களில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை சக துறவிகளிடம் சொல்ல ஆரம்பித்தார். நகரத்திற்கு மேற்கொண்ட பயணம் பற்றி சொன்ன போது அவர் குரல் அமைதியாக இருந்தது. கண்கள் புன்னகைத்தன. செல்லும் வழியெங்கும் பறவைகள் பாடின. ஓடைகள் வரவேற்றன. ஒரு இனிய, புதிய நம்பிக்கை மனதில் தோன்றியது. உறுதியான வெற்றியை நோக்கி, போர்க்களம் செல்லும் போர்வீரனைப் போல் தான் உணர்ந்ததாக அவர் சொன்னார். மனதிற்குள் பல கனவுகளுடன், புதிய பாடல்களைப் புனைந்தவாறு நகரத்தை அடைந்தார்.

நகரத்தைப் பற்றியும், அதன் மனிதர்களைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்த போது, அவரது குரல் நடுங்கியது. கண்கள் மின்னின. அவருள் கோபம் கொப்பளித்தது. நகரத்தில் அவர் கண்ட காட்சிகளை அவர் இதற்கு முன், ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லது அவற்றைக் கற்பனை செய்தது கூட இல்லை. அங்குதான், அந்த முதிர்ந்த வயதில்,  சாத்தானின் வலிமையை தனது வாழ்வில்  முதன் முறையாக அவர்,  பார்த்து, உணர்ந்தார். ஒரு கெடுவாய்ப்பாக, அவர் நுழைந்த முதல் வீடே பாபத்தின் இருப்பிடமாக அமைந்துவிட்டது. அங்கே சுமார் ஐம்பது பணக்காரர்கள் முடிவே இல்லாமல், குடித்துக் கொண்டு, விருந்துண்டு கொண்டு இருந்தார்கள். அதன் தாக்கத்தால், அவர்கள் பாட்டுப் பாடினார்கள். கடவுளுக்கு அஞ்சும் எவனும் கூற பயப்படும் பயங்கரமான, அதிர்ச்சிகரமான வார்த்தைகளை மிக தைரியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லையற்ற சுதந்திரத்தோடு, மகிழ்ச்சியாக, தைரியமாக இருந்தார்கள். கடவுளுக்கோ, சாத்தானுக்கோ, மரணத்திற்கோ, எதற்கும் அஞ்சவில்லை. மனதில் இருந்ததை பேசினார்கள்.  தம் ஆசைகளால் செலுத்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்றார்கள்.  அந்த மது. நிச்சயமாக  தாங்கமுடியாத அளவிற்கு சுவையானதாக, மணமுள்ளதாக இருக்க வேண்டும். ஏனெனில் அதை அருந்தியவர்கள் எல்லோருமே, கட்டற்ற மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். திரும்பவும் குடிக்க விரும்பினார்கள்.  தனது இனிமையில் என்னவொரு பைத்தியக்காரத்தனமான மயக்கம் இருக்கிறது என்று அது தெரிந்து வைத்திருந்தது போலும். அது புன்னகைக்கு பதிலாக புன்னகையைத் தந்தது. சந்தோஷமாக ஒளிர வைத்தது.



எப்போதையும் விட கோபத்தில் கொதித்துக் கொண்டு, அழுதுகொண்டே, தான் பார்த்தவற்றை மேலும் வர்ணித்தார் அந்த முதியவர். விருந்தினர்களுக்கு மத்தியில் இருந்த மேஜையில் ஒரு அரை நிர்வாணப் பெண் நின்றிருந்தாள். அவளைவிட  வியக்கத்தக்கதான, மயக்கும்படியான வேறு எதையும் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. இளமையாக, நீண்ட கூந்தலுடன், கரிய விழிகளும், தடித்த உதடுகளும் கொண்டவளாக இருந்தாள்.  அந்த இழிந்த புழு, பனி போன்ற தன் வெண்பற்களைக் காட்டி, ‘ நான் எவ்வளவு அழகு, நான்  எவ்வளவு இழிந்தவள், பாருங்கள், ‘ என்று சொல்வது போல் சிரித்தது.  ஜரிகைப் பூ வேலை செய்யப்பட்ட மென்மையான பட்டுத் துணி அவள் தோளிலிருந்து சரிந்து விழுந்தது. அந்த ஆடைக்குள் அவளது அழகை மறைத்து வைக்க முடியாது.  வசந்த காலத்தில் பூமியிலிருந்து இளம் துளிர் வெளியே தலைகாட்டுவது போல, அந்தத் துணிகளின் மடிப்புகளிலிருந்து, அவளது அழகு வெளிப்பட்டது. வெட்கங்கெட்ட அந்தப் பெண் மது அருந்தினாள். பாடல்களைப் பாடினாள். அந்த விருந்தினர்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டாள்.

மிக வேதனையோடு தன் கைகளை ஆட்டியபடி அந்த முதியவர் தாம் பார்த்த கேளிக்கை கொட்டகைகள், காளை மாட்டுச் சண்டைகள், நாடக அரங்குகள், இளம் பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து ஓவியம் வரையும், சிற்பம் செதுக்கும் கலைஞர்களின் கலைக் கூடங்கள் பற்றியெல்லாம் விரிவாகச் சொன்னார்.  கண்ணுக்குத் தெரியாத ஒரு இசைக்கருவியை வாசிப்பதைப் போல, அவர் மிக விரிவாக, உத்வேகத்தோடு உரக்கப் பேசினார்.  துறவிகள் அவரது வார்த்தைகளை ஆர்வமாகக் கேட்டு, அப்படியே பரவசமானார்கள்.  சாத்தானின் அத்தனை தந்திரங்களையும், தீமையின் அழகையும், பெண்உருவத்தின்  மயக்கும் நளினத்தையும் வர்ணித்த அந்த முதிய துறவி, சாத்தானை சபித்து விட்டு, தனது அறைக்குத் திரும்பினார்.

மறுநாள் காலையில் அவர் அறையிலிருந்து வெளியே வந்த போது, மடாலயத்தில் ஒரு துறவியும் இல்லை. எல்லோரும் நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.



One thought on “தலைப்பில்லாத ஒரு கதை – ஆன்டன் செகாவ் | தமிழில் – ச.சுப்பாராவ்”
  1. செகாவின் இந்தக் கதையை இப்போதுதான் வாசிக்க வாய்த்தது. தமிழில் எழுதப்பட்டது போன்ற பெயர்ப்பு.வாழ்த்துகள் தோழர்சுப்பாராவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *