அத்தியாயம்-7 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி athyayam-7 : pen: andrum,indrum - narmadha deviஅத்தியாயம்-7 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி athyayam-7 : pen: andrum,indrum - narmadha devi

 

15 மணிநேர வேலை சர்வசாதாரணம்

 

மார்க்ஸின் தனது மூலதனம் நூல் முழுவதிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆலைத் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்பட்டார்கள், தொழிலாளர்களிலேயே பெண் தொழிலாளர்களும், குழந்தைகளும் சந்தித்த கொடூரமான வன்முறை எத்தகையது என்ற விவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். 15 மணி நேர வேலை என்பது அன்றைக்கு சர்வசாதாரணமான விஷயமாக இருந்தது. முதலாளிமார்களின் ‘உரிமை’யாகவே அது பார்க்கப்பட்டது.

 

‘மனிதர்களை மனிதர்கள் இவ்வளவு கொடூரமாக சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகளை, பெண்களை வரைமுறை இல்லாமல் வேலைவாங்குவதை ஏற்க முடியாது’ என்ற கருத்தும் சமூகத்தில் நவீன ஆலை உற்பத்தி தொடங்கிய காலத்திலேயே உருவாகத் தொடங்கியது. இங்கிலாந்து மில் முதலாளி ராபர்ட் ஓவன் தொழிலாளர்களின் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, ஸ்காட்லாந்தில்  செயல்பட்ட தனது மில்லில் 10 மணி நேர வேலையை அமல்படுத்தியும் காட்டினார். ஓவனின் மனிதாபிமானச் செயல், ‘கம்யூனிஸ யுடோப்பியா!’ எனக் கேலி செய்யப்பட்டது.

 

1802 தொடங்கி 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட தொழிற்சாலை சட்டங்களின் பிரதான நோக்கங்களாக, பெண்கள், குழந்தைகளின் வேலை நேரத்தைக் குறைப்பதும், குழந்தைத் தொழிலாளர் வயதை உயர்த்துவ்தும் இருந்தன.  முதற்சட்டமான 1802 சட்டம் முன்வைத்த கட்டுப்பாடு என்ன தெரியுமா? குழந்தைகளை 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக்கூடாது! இரவு ஷிஃப்டுகளில் வேலை வாங்கக்கூடாது! தொழிற்புரட்சியின் தொடக்கத்தில் இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இயற்றிய அதிகபட்ச சீர்திருத்தமே இதுதான்.

 

24 மணிநேரமும் உற்பத்தி

 

‘ஒரு நாளின் 24 மணிநேரமும் வேலை வாங்க வேண்டும் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயற்கையான பண்பாக இருக்கிறது’ எனக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். ஒரே தொழிலாளியின் உழைப்புச் சக்தியை 24 மணிநேரமும் தொடர்ச்சியாகச் சுரண்டுவது என்பது உடல்ரீதியாகச் சாத்தியமில்லை. எனவே, தொழிலாளர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பிரிவு பகல் ஷிஃப்டு, அடுத்த பிரிவு இரவு ஷிஃப்டு என, 24 மணிநேரமும் வேலை வாங்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் முதலாளிகள்.

 

1850 சட்டப்படி அதிகபட்ச வேலைநேரம் 12 மணிநேரம். ‘24 மணிநேர உற்பத்தி’ என்பது ஒரு தொழிலாளியை அதிகபட்ச வேலைநேரத்திற்கும் மேலாக வேலைவாங்குவதற்கான வாய்ப்புகளை ஏராளமாக உருவாக்கித் தருகிறது என்கிறார் மார்க்ஸ்.

 

அன்றைக்கு பருத்தி, ஆடை உற்பத்தித் துறையில் மட்டுமல்ல, உலைகள் நிறைந்த உலோக உற்பத்தித் தொழிற்சாலைகள் கூட 24 மணிநேரமும் செயல்பட்டன. இந்தத் தொழிற்சாலைகளில் 6 நாட்கள் 24 மணி நேரம் வேலை நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையிலும் பெரும்பாலான நேரம் வேலை நடக்கும். மிகக்கடினமான, ஆபத்தான இந்த வேலையை தொழிலாளர்கள் 12 மணி நேரம் செய்ய வேண்டும், அதுவும் இரவிலும் செய்ய வேண்டும் என்ற நிலை. இந்தத் துறையில் இரவுப் பணி உடல் அசதிமிக்கது என்பதால் இன்னும் ஆபத்தானது. ஆனாலும், இரவு ஷிஃப்டுகளில் ஆண்களுடன் இணைந்து பெண் தொழிலாளர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள்.

 

மென்மையானதொழிலும் கொலைக்களமே

 

‘போகட்டும்! உலோகவியல், சுரங்கத் தொழில்கள் என்றாலே கடுமையான தொழில்கள்தான். அதில் வேலை செய்பவர்களுக்கு அப்படி, இப்படி நடப்பது இயல்புதான்’ –மனசாட்சியின் இயக்கத்தை சற்று ஆஃப் செய்துவைத்துவிட்டு, இப்படி சற்று கருதுகிறோம் எனக் கொள்வோம். சரி, மென்மையான உழைப்பைக் கோரும் தொழில்களில் வேலைவாய்ப்பு எப்படி இருந்தது? உதாரணமாக தொப்பி, ஆடைகள், எம்பிராய்டரி, லேஸ் தொழில்கள்? பூ போன்ற ‘மென்மையான’ வேலைகள் அல்லவா இவை? இவற்றைச் செய்ய பெரிய உடல்வலிமை எல்லாம் தேவையில்லை.

 

ஆனால், ‘ஆடை உற்பத்தி மாதிரியான ‘மென்மையான’ தொழில்களில்கூட உயிர்போகும் அளவிற்கு நாங்கள் வேலை வாங்குவோம்!’ என்ற ‘சாதனையை’ முதலாளித்துவம் படைத்திருக்கிறது. இந்த வகையான வேலைகளை அதிகம் பெண்களே செய்தார்கள். இங்கிலாந்தில் 1860களில் இந்தத் துறையில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள், இளையோர், குழந்தைகள்.

 

1850 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் 12 மணி வேலை நேரம் என்றது. ஆனால், வர்க்க சமூகங்களில் சட்டங்கள் என்பவை அன்றும், இன்றும், என்றென்றும் காகிதங்களில் மட்டும்தானே. ‘மென்மையான’ ஆடைத்தொழிலில் என்ன நடந்தது என ஒரு எட்டு பார்த்துவிடுவோம்.

 

“1863ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தின் கடைசி வாரம். ‘எளிமையான- அதிகப்படியான பணியால் நிகழ்ந்த மரணம்’ என்ற ‘பரபரப்பான’ தலைப்பில், லண்டனின் எல்லா தினசரி பத்திரிகைகளும் ஒரு பத்தி செய்தியை வெளியிட்டன. மேரி ஆன் வாக்கர் என்ற தொப்பி செய்யும் தொழிலாளிக்கு 20 வயது. மிகவும் மதிக்கப்பட்ட ஒரு ஆடை உற்பத்தியகத்தில் அவர் வேலை பார்த்தார். எலீஸ் என்ற அழகான பெயர் கொண்ட ஒரு பெண்மணியால் அவர் சுரண்டப்பட்டார். இந்த இளம்பெண் ஒரு நாளில் சராசரியாக 16 ½ மணி நேரம் வேலை வாங்கப்பட்டிருக்கிறார். சீசன் என்றால் இடைவேளை எதுவும் இல்லாமல் வேலை தொடர்ந்து 30 மணி நேரம்கூட நீடிக்குமாம். மேரியின் உழைப்புச் சக்தி காலவதியாகி, நின்றுபோகும் நிலைக்குப் போய்விட்டால், அவருக்கு காப்பியோ, வேறு ஏதாவது பாணங்களோ வழங்கப்பட்டு, அவருடைய உழைப்புச் சக்தி மீட்டெடுக்கப்படுமாம். சீசனின் உச்சகாலம் அது. ‘புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட’ வேல்ஸ் இளவரசியை கௌரவிப்பதற்கான நடனநிகழ்வில், பிரபுக்குலப் பெண்களின் ஆடைகள் ஜொலிஜொலித்து அனைவரின் கண்களையும் பறித்திட வேண்டிய தேவை இருந்தது. எனவே மேரி ஆன் வாக்கர் இடைவேளை இல்லாமல் 26 ½ மணி நேரம் வேலை செய்தார். 60 பெண்களுடன் இரண்டு சிறிய அறைகளில் காற்றோட்டம் இல்லாமல் அவர் வேலை பார்க்க வேண்டி இருந்தது.

 

தூங்க வேண்டும் எனில் அட்டை வைத்து தடுக்கப்பட்ட பொந்துகளைப் போன்ற இடத்தில் இரண்டு பெண்கள் படுத்து உறங்க வேண்டும். லண்டனிலேயே மிகச் சிறப்பான தொப்பி வடிவமைப்பு நிலையம் இதுதான் என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். வெள்ளிக்கிழமை உடல்நிலை குன்றிய மேரி, ஞாயிறு அன்றைக்கு இறந்துபோனார். அவரைப் பணியில் அமர்த்திய அந்தப் பெண்மணி எலீஸுக்கு துளி அதிர்ச்சி ஏற்படவில்லை. மேரி மரணப்படுக்கையில் இருந்தபோது, வெகு தாமதமாக அழைக்கப்பட்ட மருத்துவர் பின்னர் நீதிமன்றத்தில், “நீண்ட நேரம் காற்றோட்டம் இல்லாத நெருக்கமான பணியிடத்தில் வேலைசெய்துவிட்டு, காற்றோட்டம் இல்லாத மிகச்சிறிய படுக்கை அறையில் உறங்கியதால், மேரி ஆன் வாக்கர் மரணம் அடைந்தார்” என சாட்சி சொன்னார்.

 

மூலதனத்தின் முதல் பாகத்தில் ‘மென்மையான’ ஆடை உற்பத்தித்துறையில் நடந்த இந்தப் பெண் தொழிலாளியின் கொடூர மரணத்தை மார்க்ஸ் பதிவு செய்திருக்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் ‘கூலி அடிமை’களாகப் பெண்கள் சுரண்டப்படுவது பற்றி விரிவான, ஆழமான ஆய்வுகளை மார்க்ஸ் மேற்கொண்டு, மூலதனத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னுடைய மூலதனம் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

 

தொழிலாளர் படையில் பெண்கள்

 

முதலாளித்துவ முறையின் தொடக்க காலத்திலேயே பெண் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வீட்டை விட்டு வெளியே தொழிற்சாலைப் பணிகளுக்குச் சென்றார்கள். அன்றைக்கு இருந்த தொழிற்துறைகளிலே ஆடை உற்பத்தித்துறைதான் மிகப்பெரியது, அதில் வெறும் 27 சதவிகிதத்தினர் மட்டுமே ஆண்கள். மிச்ச தொழிலாளர்கள் எல்லோரும் பெண்கள். இரும்புத்தொழில் ஆடைத்தொழிலைக் காட்டிலும் அன்றைக்கு சிறிய தொழில்தான். என்றாலும் இந்தத் தொழிலில்கூட பெண் தொழிலாளர்கள் 8 சதவிகிதம் இருந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் வெறும் 11 சதவிகிதமே ஆண் தொழிலாளர்கள். மூலதனம் நூலில் மார்க்ஸ் அளித்திருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது நகரப் பகுதிகளின் உற்பத்தித்துறைகளில், ஆண் தொழிலாளர்களைக் காட்டிலும் பெண் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் அன்றைக்குப் பணிபுரிந்ததாகத் தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

 

இங்கிலாந்தில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில், திருமணமான பெண்களில் ஏறத்தாழ 60 சதவிகிதத்தினர் வெளிவேலைக்குச் சென்றார்கள், அவர்கள் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். ஆண்களைக் காட்டிலும் பாதி, அல்லது ஆண்களின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குதான் அவர்கள் சம்பாதித்தார்கள் என்றாலும், சம்பாதித்தார்கள். 19-ஆவது நூற்றாண்டின் மத்திவரை ஆடைத்தொழில் பெண்களின் உழைப்பே புதிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிக உபரியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

 

ஆண்களைக் காட்டிலும் பெண்களை வேலைக்கு எடுத்தால் கூலி குறையும் என்றால், பெண்களை வேலைக்கு எடுப்பார்கள்; பெண்களைக் காட்டிலும் குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் கூலி இன்னமும் குறையும் என்றால், குழந்தைகளை வேலைக்கு எடுப்பார்கள் – இதுதான் முதலாளித்துவம். இங்கிலாந்தில் குதிரைகளைப் பராமரித்து வேலை வாங்குவதைவிட பெண்களை வைத்து வேலை வாங்குவது சிக்கனம் எனக் கருதி, வெட்கமில்லாமல் குதிரைக்குப் பதிலாகப் பெண்களை வேலைக்கு அமர்த்தினார்கள் என மார்க்ஸ் மூலதனம் நூலில் குறிப்பிட்டிருப்பார்.

 

பிரட் வின்னர்ஹோம் மேக்கர்

 

‘பெண்கள் வெளிவேலைக்குச் செல்லத்தொடங்கியதால், அதுவும் 15 மணிநேரமெல்லாம் வேலை செய்துவிட்டு, இரவு 8 மணிக்கு மேலே வீடு திரும்பியதால், அவர்களால் குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை’ ‘குடும்ப அமைப்பை நவீன ஆலை உற்பத்தி முறை சிதைக்கிறது’ என்ற கோபாவேசம் அன்றைய இங்கிலாந்து சமூகத்தில் எழத்தொடங்கியது.

 

உண்மைதானே! பெண்கள் அடுப்பு பற்றவைத்தால் தான் சாப்பாடு என்ற நிலைதானே காலங்காலமாக இருக்கிறது. திடீரெனப் பெண்கள் வீட்டிற்கு வெளியே நெடுநேரம் வேலைக்குப் போனால் குடும்பங்கள் என்னாகும்? பாட்டாளி வர்க்கத்திற்குக் குடும்பமே இல்லை எனும் அளவுக்கு சூழல் போய்க்கொண்டிருந்தது.

 

பெண்கள் வெளி வேலைக்குச் சென்று 15, 18 மணி நேரம் வேலை பார்த்தால், முதலில் அவர்களுக்கு வாழ்க்கை இல்லை; அடுத்து அவர்களுடைய குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் வாழ்க்கை இல்லை. அன்றைக்கு ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தில் யாருக்குத்தான் வாழ்க்கை இருந்தது? ‘வாழ்தல்’ என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு அன்றைக்கு இல்லவே இல்லை. அதிகபட்சம் பிழைத்திருப்பதே கடினம் என்ற நிலை. (இன்றைக்கும் அப்படித்தான்) உற்பத்தியில் ஈடுபட்டு, உபரியை அதிகரித்து, மூலதனத்தை அசுரவேகத்தில் பெருக்குவதற்காக வாழ்கையைத் தொலைத்துப் பிழைத்துக் கிடந்தது அன்றைய பாட்டாளி வர்க்கம். பெண்களின் நிலையோ படுமோசம். ‘வீட்டில் அடிமை’, ‘வெளியில் அடிமைகளிலேயே மிகவும் தாழ்த்தப்பட்ட அடிமைகள்’. எனவே மிகக்கொடூரமாக வேலைவாங்கப்பட்டார்கள்.

 

இந்நிலையைச் சரி செய்ய என்ன செய்யலாம்? ‘தொழிற்சாலைகள் பெண்களை வேலைக்கு எடுப்பதைத் தடுத்துவிட்டால், அவர்கள் குடும்பத்திலேயே அடைபட்டு முன்பு போலக் குடும்பங்களைக் கவனிப்பார்கள்.’ ‘சம்பாதித்து குடும்பங்களைக் கவனிக்கும் பொறுப்பை ஆண்கள் கவனித்தால் போதும் என்ற கட்டுப்பாடுகளை மறைமுகமாக கலாச்சார ரீதியாக விதிக்கலாம்.’ ‘குழந்தைகளும், பெண்களும் வேலைக்கு செல்லக்கூடாது, அவர்களை வேலைக்கு எடுக்கக்கூடாது எனச் சட்டம் இயற்றலாம்.’ ‘அல்லது இவர்களின் வேலை நேரங்களைக் குறைத்து சட்டம் இயற்றலாம்.’ இப்படிப் பல்வேறு விஷயங்களை யோசிக்கலாம்.

 

குழந்தைகளை வேலைக்கு எடுக்கக்கூடாது என்ற சட்டத்தை நிச்சயம் இயற்ற வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனால், பெண்கள் வெளி வேலைக்குச் செல்வதையே கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களைக் கொண்டுவருவது என்பது மோசமானது. பெண்கள் வீட்டைவிட்டு தனிப்பட்ட நபர்களாக வேலைக்குச் செல்வது என்பது, முதலாளித்துவத்தின் லாபவெறி தாகத்தால் விளைந்த ஒரு முன்னேற்றம். ஆனால், நடந்த இந்த மாற்றத்தை முற்போக்கான வளர்ச்சியாக மாற்றாமல், பெண்களை வீட்டுக்குத்  திருப்பி அனுப்பவே அன்றைக்கு முயற்சிகள் நடந்தன.

 

வேலையில்லாப் பட்டாளத்தில் பெண்கள்

 

’18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுக்கக்கூடாது! 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வயது வந்தவர்கள்! வயதுவந்தோரை 60 வயது வரை  வேலையில் பணியமர்த்தலாம்! அனைத்துத் தொழிலாளர்களையும் அதிகபட்சம் 8 மணிநேரம்தான் வேலை வாங்க வேண்டும்! குறைந்தபட்சக் கூலி இவ்வளவு கொடுக்க வேண்டும்!’ இப்படியான பார்வை அடிப்படையில் முறையான தொழிலாளர் நலச் சட்டங்கள் கொண்டுவந்தால் பாலினப் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் வேலைக்கு எடுப்பார்கள் முதலாளிகள்.

ஆனால், அன்றைய சட்டங்கள் வயதுவந்த ஆண்களையும், பெண்களையும் சமமாகப் பார்க்கவில்லை. பெண்களை ஆண்கள் பராமரிப்பில் இருக்க வேண்டியவர்களாக, வலிமையற்ற பாலினமாகவே பார்த்தன.

அன்றைய இங்கிலாந்தில் ‘ஆண்கள்தான் சம்பாதித்து குடும்பத்துக்கு கஞ்சி ஊத்தும் பிரட் வின்னர்கள்’ என்ற அடிப்படையில் தொழிலாளர் நலச்சட்டங்களை இயற்றத் தொடங்கினார்கள்.

 

பெண்களுக்கு அதிகபட்சம் 12 மணி நேரம், ஆண் தொழிலாளர்களுக்கு அப்படியான நேர வரம்பு கிடையாது, 15 மணி நேரம்கூட ஆண்களை வேலை வாங்கலாம் என்றால் என்னவாகும்? கூடுமானவரை ஆண் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு, தேவைப்பட்டால் பெண் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பார்கள். வேலையிலிருந்து அகற்றப்படும் பெண்கள், வேலைதேடும் தொழிலாளர் பட்டாளத்தில் இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம். ‘ரிசர்வ்ட்’ நிலையில் பெண் தொழிலாளர்களை வைத்திருக்கலாம்.

 

வேலையில்லாத, வேலைதேடும் பட்டாளம் எப்போதும் முதலாளித்துவமுறைக்குத் தேவை. அப்போதுதான் ‘நீ இந்தக் கூலிக்கு வேலைக்கு வராவிட்டால், இதைவிடக் குறைவான கூலிக்கு வருவதற்கு உன்னைவிட சிறந்த அடிமை தயாரா இருக்கு!’ இப்படிப் பேரம் பேசி கூலியைக் குறைத்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க முடியும். பெண்கள் அப்படியான பட்டாளத்தில் இருப்பார்கள்.

 

இங்கிலாந்தில் 1833 தொடங்கி வரிசையாக வரத்தொடங்கிய தொழிலாளர் நலச் சட்டங்கள் பெண்களையும், குழந்தைகளையும் அதிக நேரம் வேலை வாங்கக்கூடாது என்பதற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. பெண்களைக் குழந்தைகளைப் பணியில் அமர்த்துவதில் கட்டுப்பாடுகளை சமூகம் விதிக்கத் தொடங்கியபோது, செலவு-பயன்பாடு அடிப்படையில் பெண் தொழிலாளர்களைத் தவிர்க்கத் தொடங்கியது முதலாளித்துவம். 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் 60 சதவிதம் அளவிற்குத் திருமணம் ஆன பெண்கள் வேலைக்குச் சென்றார்கள் என்பதைப் பார்த்தோம். அதுவே 1911 கணக்கெடுப்பில் திருமணமான பெண்கள் வேலைக்குச் செல்லும் விகிதம் இங்கிலாந்தில் 10 சதவிதமாக குறைந்திருக்கிறது.

 

முந்தைய நிலவுடைமைச் சமூகத்தில் குடும்ப அளவில் செய்யக்கூடிய தொழில்களும், அவற்றிற்கான உடைமைகளும் நவீன முதலாளித்துவ ஆலை உற்பத்தி முறை வந்ததும் அழிந்தன. எனவே, பாட்டாளி வர்க்க மனைவி, வெளி வேலைக்குப் போகவில்லை என்றால் ‘ஹவுஸ் வைஃப்’. ‘வீட்டு மனைவி’. நாகரிக மொழியில் ‘ஹோம் மேக்கர்’. ‘இல்லத்தரசி’. பாட்டாளி வர்க்க ஆண் ‘பிரட் வின்னர்’. முதலாளித்துவ முறையில் தோன்றிய புதிய சொற்கள் இவை.

 

பெண்களின் வீட்டு உழைப்பு என்பது தொழிலாளர்களைப் பெற்றெடுத்து, பராமரித்து பாட்டாளி வர்க்கத்தை உற்பத்தி செய்யும் அடிப்படை வேலை. முதலாளித்துவ முறையின் முன்தேவை இது. ‘அதைச் செய்யாமல் நீ வேலைக்கு வரக்கூடாது’, என இங்கிலாந்து சமூகம் பெண்களை அன்றைக்கு நிர்பந்தப்படுத்தியது. எனவே, பாட்டாளி வர்க்கப் பெண், வீட்டைப் பராமரிக்கும் பணிகளை முதற்கடமையாகச் செவ்வனே நிறைவேற்றிட வேண்டும். அதன் பிறகே முதலாளித்துவ முறைக்குத் தேவைப்பட்டால், குடும்பம் அனுமதித்தால் வெளிவேலைக்குச் செல்லலாம். வெளிவேலைக்குப் போனாலும், ஒட்டுமொத்த வீட்டுப் பராமரிப்பும் பெண்கள் தலையில்தான்.

 

– தொடரும்…

 

ஆதாரங்கள்:

1.The Capital, Karl.Marx, Volume 1 (available at marxists.org)

  1. Women, Nature, and Capital in the Industrial Revolution, John Bellamy Foster & Brett Clark, Monthly Review, January 2018
  2. Women’s Labour Force Participation and the Transition to Male Breadwinner family, Sara Horrell, Jane Humphries, Economic History Review 48, no 1, 1995
  3. Women Workers in the British Industrial Revolution, Joyce Brunette, (available at eh.net)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *