அற்றவைகளால் நிரம்பியவள்
பிரியா விஜயராகவன்
 வீடுகளின் வாசல் படியைத் தாண்டி வெளியேற முடியாத கொரானா சூழலில் நம்மை காத்தருளும் கவசமாக யாம் கருதுவது புத்தகங்கள்… புத்தகங்கள்… புத்தகங்கள் மட்டுமே.
வாசிப்பு நிலையானது மட்டுமல்ல …
நிலையாமையை எதிர்கொள்ளும் எழுத்துக்களின் ஆதி நிலமும் கூட.
இந்த நிலத்தில் வாசிப்பின் வழியே எழுத்து விதைகளை மனதுக்குள் விதைக்கும் போது நம்பிக்கைகள் பூத்து மலர்வதை யாரேனும் மறுக்க முடியுமா என்ன ?
ஆமாம்..
தமுஎகசவின் 2018 ஆம்  ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசை பெற்ற
ப்ரியா விஜயராகவன் அவர்களின் முதல் நாவலான “அற்றவைகளால் நிரம்பியவள்” .
712 பக்கமுள்ள இந்த நாவலை மூன்று நாட்களில் நான் வாசித்தேன்.
இந்த மூன்று நாட்களும் கூட அதிகம்தான் என்றே கருதுகிறேன்.
ஏனெனில் ஒரு வாழ்வின் நதியில் நீங்கள் எதிர் நீச்சல் அடிப்பதற்கும் …நதி அதன் போக்கில் உங்களை அழைத்துச் செல்வதற்கும்  வேறுபாடு இருக்கிறதுதானே..
இந்த நாவலின் எழுத்துக்கள் நம்மை அழைத்துச்செல்லும் நீர்மையின் இயல்பு.
ஆப்ரிக்காவின்  “செய்செல்ஸ்” தீவுக்கூட்டத்தின் பேசெயின்ட் ஆன்ஸ்  பேருந்தின் சன்னலோர காற்றுக்காக ஏங்கும் மனதோடு துவங்கும் அஞ்சனா வின் அருகாமையில் நம் வாசக மனம் பயணிக்கத் துவங்கி..  தோஹா வின் விமான நிலையத்திலிருந்து சென்னை வந்திறங்க துவங்கும் பயணம் வரை துணை வருகிறது அஞ்சனாவுடன்.
எப்பேர்ப்பட்ட விரிந்த பயணம்….ஆனால் சிறகுகள் இல்லாமல்…
விவரணைகள்…ஒவ்வோரு அனுபவத்தையும் மற்றொன்றுடன் இணைக்கும் செய் நேர்த்தி.
சாதி இருக்கின்றென்பானும் இருக்கின்றானே !
என்ற பாரதிதாசனின் வெறுப்பான வியப்பை அஞ்சனா வின் மனம் மட்டுமல்ல வாழ்வனுபவமும் தேச எல்லைகள், வாழ்வின் வசதிகள், தான் வகிக்கும் மருத்துவர் தகுதி இவையாவற்றை தாண்டியும் உணரும் வாசிப்பின் தருணங்கள் நம்மை மேலும் துயருரச்செய்கிறது.
ஆனால் அஞ்சானவை அல்ல.
அஞ்சனா அவற்றையெல்லாம் தம் அறிவினால் கடக்கிறாள். நம்மையும் கடந்து செல்ல நிர்பந்திக்கிறாள்.
வேதனைகளை நம்பிக்கைகளோடு
 எதிர்கொள்வோம் என்கிறாள்.
இந்த பெரும் நிலப்பரப்பின் ஒவ்வொரு துகளிலும் பெண்ணெணும் நம் சக மனுசியை, அவளின் துயரங்களை..அவள் விழுங்கிய அல்லது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட கொடும்  விசத்தை  …நம் கண்களின் வழி உள்ளிறக்கும் அனுபவங்களா அல்லது நிலை குலைவுகளா ?
இவைகளை இந்நாவலை வாசித்தேதான் நாம் நிச்சயமாக உணர முடியும்.
கடலும் அலைகளும் அஞ்சானாவின் தோழர்களாக உடன் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்பனுவங்களை எழுதிப்பார்க்கும் போதுதான் நம்மோடு உடன் வந்த ஒவ்வொரு உயிரின் முக்கியம் அல்லது முக்கியமின்மைகளை உணர முடியுமோ என்னவோ..!
அஞ்சனாவுடன் பயணிக்கும்…அவளது அப்பா நினைவாகவே இறுதிவரை தொடர்ந்தாலும் அவரது சொற்கள் தான் அவளை வழி நடத்துகிறது.. பின்பு அம்மா ..அவர்களின் அலைபேசி குரலோ எல்லாவற்றையும் உன்னால் எதிர்கொள்ள முடியும் என்றே நம்புகிறது.
ஒவ்வொரு தோழிகள் அவர்களின் வாழ்க்கை குறித்த விவரிப்புகள் அதில் நுகர்ந்த வாசங்கள், விழுங்கிய கசப்புகள் …ஏ அப்பா…ஒரு வாசகனாக நாம் மிரள்கிற தருணங்கள் மட்டுமல்லாமல் அவர்களின் நல் வாழ்விற்காக நாம்  துடிப்பவர்களாகவும் மனமிணைகிறோமே !
அதுவே இவ்வெழுத்தின் வலிமை தோழர்களே.
காலங்காலமாக ஆண் ..அவனின் அதிகாரம்…அன்பின் பேரால் காட்டும் அலட்சியம்..
இந்த அழுக்குகளை  நாம் எந்த புனித நீரால் கழுவ முடியுமென தெரியவில்லை.?
அன்பு ..காதல்…தாய்மை.. யாவற்றுக்கும் உலகம் சொல்லும் நியதியும்… ஒரு பெண்ணாக உணரும் நிஜத்தின் நியதிக்குமான வேறுபாடுகள் தான் எத்தனை? எத்தனை ?
இவை அத்தனையையும்.. கண்மணி ..சூர்யா …காவியா என்ற பெண்களின் வாழ்வினோடு அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறாள் அஞ்சனா.
அதே போல். உடல் என்கிற இந்த சதைக்குவியலை அர்த்தப்படுத்திக் கொள்ள வாழ்வில் நாம் பூணும் வேடங்களை எல்லாம் ஏளனமாக பார்த்துச் சிரிக்கிறாள் அஞ்சனா மட்டுமல்ல அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் பார்த்த பிராஷாந்த் அல்லது பிராஷாந்தினி.
இலங்கையின் போர்முனைகளில் ரத்தச் சகதியானது  அந்நாட்டின் நிலம் மட்டுமல்ல..
எங்கள் பிறப்புறுப்புகளும் தான் என்று அமிர்தினியின் கதறும் சொற்களோடு நம் கண்களிலும் கண்ணீர் கதறுகிறது.
சோமாலியா தேசத்தின் ” சுன்னா ” என்கிற பெண் குறியறுப்பு சடங்கு குறித்து…டஹபோ என்கிற டீயும்…
இரானிய தேசத்தின் ரொக்ஸனா வின் பால்ய விவாக திருமண கொடுமையும் …
” எங்கெங்கோ பெண்ணென்ற காரணத்தால் , மிதிபட்டு , நசுங்கித்தான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம். எப்படி உலகம் முழுக்க பெண்கள் மதம், மொழி, கலாச்சாரம், அரசியல் என்று வெவ்வேறு பெயரால் அசிங்கப்படுத்தவும் , ஆராதிக்கவும் படுகிறார்கள் ? “
இது இந்த நாவலின் மையமான , வலிமையான கருத்தாக நிச்சயமாக நம்மால் உணர முடியும்.
அதே போல்…
இந்த நாவல்  ஆண் பெண் உறவுகள் குறித்த  முதிய எண்ணங்களோடு விவாதித்துப்பார்கிறது.
ஈஸ்வர் , டேமியன் , ஜெஃப், மாறன், இன்னும் பலரோடும் பயணிக்கும் அஞ்சனா வின் கேள்விகளுக்கு அல்லது அனுபவங்களுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாக நாமாகிறோம்.
இது புதிர்களுக்கான பதில்களல்ல..நம் கருத்தியல் வாழ்விற்கான விடைகளாகலாம் !!
அஞ்சனா வின் இசையறிவு…வாசிப்பறிவு…திரைப்படங்கள் குறித்த நுட்பம்.. நம்மை நிச்சயமாக ஏக்கமுறச்செய்யும்.
கூகூள் டிரென்ஸ்லேட்டர் தரவிறக்கிக் தான் நாவலின் பல ஆங்கில பதிவுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது..
அந்த வகையில் ஆங்கிலம் படிக்கவும் ஆர்வம் தூண்டுகிறாள் நம் அஞ்சனா.
” வாழ்க்கையில் பிறந்தது முதல் , உயிரோடு இருக்கும் ஒவ்வோரு நொடியும் மனதுக்குள் எத்தனை பாரம் சுமக்கிறோம். நம் பாரங்கள் பலவகைப்பட்டாலும், உயிருக்குள் அமர்ந்திருக்கும் ஆன்மாவை கருமையாக்கி கொன்றுவிடும் பெரும் ஆற்றல் படைத்தது குற்றவுணர்வும்,  அவமான உணர்வும்.
காரணம் எதுவாக இருந்தாலும், இவையிரண்டையும் நிமிர்ந்து நின்று பார்த்து,  நடந்ததை கூட்டாமல் குறைக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு,  நம்மை நாமே மன்னிக்காது போனால் வாழ்க்கையில் அன்பை உணரவே முடியாது போய்விடும்.”
நாவலின் 673 வது பக்கத்தில் அஞ்சனா தனக்குள் தானே விவாதித்து , தனக்குள் தானே நெகிழ்ந்து , தன்னைத்தானே மன்னித்து கரைந்து போவதாக ப்ரியா விஜயராகவன் எழுதுகிறார்.
இந்த சொற்களை வாசக மனம் உள்வாங்கி
பெண்களுக்கு எதிரான குற்றங்களை..நாம் செய்யும் அவமானங்களை , இழிவுகளை நிறுத்திவிட்டு சக உயிரின் அன்பைப்பெற  அஞ்சனாவின் கண்கொண்டு பயணித்து
” அற்றவைகளால் நிரம்புவோம் “.
— அ. இலட்சுமி காந்தன்
நூல்: அற்றவைகளால் நிரம்பியவள்
ஆசிரியர்: பிரியா விஜயராகவன்
வெளியீடு: கொம்பு பதிப்பகம்
விலை: ரூ.408

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *